Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 409 🆕  (Read 222 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின்  ஒளிபரப்பின்பொழுது (சனிக்கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால்   திங்கள்கிழமை   உங்கள் கவிதைகளை பதிவு செய்யப்படும் வகையில் (உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது) இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 409

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 49
  • Total likes: 246
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
உன்னை வயிற்றில் சுமந்த ‎பத்து மாதங்கள்
உன் ‎ஒவ்வொரு இதயத்துடிப்பை ‎கேட்டேன்
‎உன் அசைவை ரசித்தேன்
‎என் குழந்தை நலமாக
பிறக்க வேண்டும் என்பதே
‎என் ஒரே வேண்டுதல்..

‎உலகம் காணா உன்னை
ஆயிரம் முறை
‎என் கற்பனைகளிலேயே
‎கண்டேன்
‎உன் கைகள் எப்படி இருக்கும்
‎உன் சிரிப்பு எப்படி இருக்கும்
‎உன் கண்கள் யாரைப் போல இருக்கும் என்று விரிந்தது
‎என் கற்பனை 

‎நீ இந்த உலகத்தை பார்த்த
‎முதல் நாள்
‎உன் கண்களில்
‎இருந்த பயத்தை விட
‎என் கண்களில் இருந்த
‎மகிழ்ச்சி அதிகம்
‎உன் முதல் அழுகை
‎மருத்துவமனை சுவர்களில்
‎ஒலித்த போது மீண்டும்
‎ஒருமுறை பிறந்தேன் நான்
ஆனந்த கண்ணீரோடு

‎உன்னை அள்ளி எடுத்து
என் மார்போடு
சேர்த்தணைத்தபோது சந்தோஷப்பட்டேன்
‎என் உயிரே என்று..
‎உன் மூச்சுக்காற்று
‎என் கழுத்தில் படும்போது
‎தென்றல் காற்றை விட
‎இனிமையை உணர்ந்தேன்
‎உன் சிறிய விரல்கள்
‎என் சேலையை இறுக பிடிக்கும் ஒவ்வொரு முறையும்
‎என்னை விட்டுப் போகாதே
‎என்று சொல்லும்
‎உன் மௌன மொழியை
‎புரிந்து கொண்டேன்

‎உன் பசி போக்கி
‎உன்னை உறங்க வைக்கவே
‎முதன் முதலில்
தாலாட்டு பாடினேன்
என் மார்பில் முகத்தை புதைத்து தூங்கும் உனக்கு
என் இதயத் துடிப்பே
தாலாட்டு
தூங்கு என் மகனே
என் மடியே உன் முதல் உலகம்
என் அணைப்பே உன் பாதுகாப்பு
‎நீ உறங்கும் நேரத்தில்
‎நானும் உறங்கினேன்

‎நீ விழுந்தால் முதலில்
‎ஓடி வருவது என் கால்கள்
‎நீ அழுதால் முதலில்
‎கலங்குவது என் கண்கள்
‎நீ சிரித்தால் முதலில்
‎மலர்வது என் முகம்

அம்மா என்ற முதல்
அழைப்பை கேட்ட
அந்த நொடி என் கண்களில் வழிந்தது கண்ணீர் அல்ல ஆனந்தம் நிறைவு
அம்மா என்ற பெயர்
எனக்கு கொடுத்த பெருமை

‎என் செல்லமே
‎நாளை நீ வளர்ந்து
‎என் கைகளை விட்டு
‎உன் வாழ்க்கை
‎பாதையில் நடந்தாலும்
‎என் வேண்டுதல்
உன்னை தொடரும் நிழலாக

‎காலங்கள் மாறி
‎நீ எவ்வளவு உயரம் போனாலும்
‎என் கண்களில் மட்டும்
‎நீ என்றும் என் மார்பில் முகம் புதைத்து உறங்கிய
‎அந்த சின்னஞ்சிறு
குழந்தை தான் ‎
அன்பு மகனே....

Offline Rahmathulla


   மாற்றான் தாய்



விழிகள் முழுவதும் கண்ணீர்..

அம்மா என்று  கூப்பிட  மனம் ஏற்க மறுக்கிறது..

எனக்கு அவள் மாற்றான் தாய்..

சிறு வயதில் இழக்க கூடாத முதல் சொத்து  அம்மா..
என் அம்மாவை நான்  பேசி பழகும் பொழுதே இழந்தேன்..

அவள் புண்ணியவதி  என்னை பெற்றெடுத்து விட்டு.. நோயில் அவதி பட்டு என்னை விட்டு விட்டு.என் அம்மா சொர்கம் சென்று விட்டால்..

என் அம்மாவை இழந்து  வீடு ஈரம் கூட காயவில்லை..
அப்பாவிற்கு மறுமணம் முடிக்க பெரியோர்களின் நிர்பந்தனைக்கு  தள்ள பட்டார்..

இந்த பிஞ்சு  நெஞ்சம் என்ன பாவம் செய்ததோ அம்மாவை தேடி தேடி  கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுகையில் அலைபாய்யுது தாயின் அரவணைப்பு தேடி...

என் அம்மா எங்கே இருக்கிறாள் என்னை விட்டு எங்கே சென்றால் என்று அழுது புலம்பியும் அம்மா என்னை காண வரவில்லை..

அந்த பிஞ்சு நெஞ்சதுக்கு தன் அம்மா இவ்வுலகை விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டால் என்று கூட தெரியவில்லை...

ஏக்கம் கலந்த  சொல்லு அம்மா அம்மா  என்று. அந்த சொல்லில் தான் இந்த பிஞ்சு மனம் அம்மாவை தேடி தேடி ஏங்குகிறது..

நாட்கள் கடந்தன..
அப்பாவவிற்கு தன் மனைவி மேல் இருந்த சோகமும் மறைந்து விட்டது..

 அப்பாவின் வாழ்க்கைக்கு  இன்னொரு பெண் விளக்கு ஏற்ற  திருமண ஒப்பந்ததில் கையொப்பமிட்டு...

கோலாகலாமாய் 
 வீடும் வந்து சேர்ந்தால்..

மாற்றான் தாய் என்னை அழைக்கிறாள்...

எங்கே என் மகன் என்று!!!

அருகில் இருந்த உற்றார் உறவினர்கள் அவனை ஏன் நீ அழைக்கணும் என்று
 கேலியுடன் கலந்து ஏளன பேச்சுடன் புன்னகை செய்தார்கள்..

மாற்றான் தாய் அதை காதில் கேளாமல்..
என்னை ஆர தழுவி இந்த பிஞ்சு நெஞ்சதுக்கு கன்னத்தில் முத்தமிட்டாள்..

இந்த பிஞ்சு நெஞ்சே தோளில் சுமந்து கொண்டு  இனி என் மகனை தாய் இல்லாதவன் என்று யாரும் சொல்ல வேணாம் என்றால்...

அந்த நிமிடமும் கூட என்னை விட்டு போன என் அம்மாவின் ஏக்கம் தான்   என் கண் முன் வந்தோடின

இந்த  இளம் பிஞ்சு  வயதில்  எதை இழக்க கூடாதோ அந்த தாய் சொர்க மடியை இழந்தேன் தவித்தேன்...

எத்தனை முறை உன்னை அம்மா அம்மா என்று அழைத்திருப்பேன்..
ஆனால்  இன்று செவி கொடுத்து  கேட்டும் என் கண்களில் கண்ணீர்
 வருவதை  உணர்த்தும்  அம்மா உன்னை காணவில்லையே..


இந்த பிஞ்சு நெஞ்சம் தன் அம்மாவை நினைத்து ஏங்குவான் என்று அந்த மாற்றான் தாயின் உள்ளத்தில்  விதைத்து என்னை மகன் என்றால்...

Online Luminous

"போரின் சாம்பலில் பூத்த தாய்மை"

போர்...
அது வெறும் துப்பாக்கி சத்தம் அல்ல...
ஒரு குழந்தையின் முதல் சிரிப்பை முதல் அழுகையாக்கும் கொடுமை...
ஒரு பெண்ணின் தாலியை நினைவாக மாற்றும் சாபம்...
ஒரு குடும்பத்தின் வரலாற்றையே ஒரே நொடியில் சாம்பலாக்கும் மனிதநேயத்தின் தோல்வி...

இன்று...
என் கைகளில் ஆயுதம் இல்லை...
ஆனால்...
என் மார்பில் சாய்ந்திருக்கும் இந்த ஒரு சிறிய உயிர்தான் என் உலகம்...

நேற்று வரை...
"மனைவி" என்ற அடையாளத்தோடு வாழ்ந்தேன்...
"மருமகள்" என்று அழைக்கப்பட்டேன்...
"அக்கா"... "தங்கை"... "மகள்"... எத்தனையோ உறவுகளின் நடுவில் சிரித்துக் கொண்டிருந்தேன்...

இன்று...
எல்லா உறவுகளும் ஒரே குண்டு வெடிப்பில் புகையாகிப் போய்விட்டன...
வீடு இல்லை...
வாசல் இல்லை...
சொத்து இல்லை...
சொந்தம் இல்லை...

ஆனால்...
என் கையை இறுகப் பிடித்திருக்கும் இந்தச் சிறிய விரல்கள் மட்டும் "அம்மா... நீ இருக்கிறாயே... அது போதும்..." என்று சொல்லாமல் சொல்கின்றன...
என் கண்களில் வழியும் கண்ணீர் என் தோல்விக்காக அல்ல...
இந்த உலகம் மனிதநேயத்தை இழந்துவிட்டதே என்பதற்காக...

இன்று நான் அழுகிறேன்...
ஆனால்...
இந்த அழுகை நிரந்தரமல்ல...
இந்தக் கண்ணீரை நாளைய வெற்றிக்கான விதையாக மாற்றுவேன்...
என் குழந்தைக்கு வெறுப்பை கற்றுக்கொடுக்க மாட்டேன்...
அன்பைக் கற்றுக்கொடுப்பேன்...
பழிவாங்கச் சொல்ல மாட்டேன்...
மனிதனாக வாழச் சொல்லிக் கொடுப்பேன்...

ஏனெனில்...
இன்னொரு போரை உருவாக்குவது எளிது...
ஆனால்...
ஒரு அமைதியான உலகத்தை உருவாக்குவது தான் உண்மையான வீரம்...
இன்று நான் அகதியாக இருக்கலாம்...

நாளை...
என் குழந்தையின் கனவுகளில் ஒரு புதிய நாட்டைக் கட்டுவேன்...
போரால் இடிந்த வீட்டை மீண்டும் கட்டலாம்...
எரிந்த வயலை மீண்டும் விதைக்கலாம்...
இறந்தவர்களை மட்டும் திரும்பக் கொண்டு வர முடியாது...

அதனால்...
அவர்களின் கனவுகள் இறந்து விடக்கூடாது...
அதை உயிரோடு வைத்திருப்பதே என் வாழ்க்கையின் அடுத்த போராட்டம்...

நான் பலவீனமான பெண்ணல்ல...
என் கண்ணீரை ஆயுதமாக்கிய தாய்...
என் வேதனையை வலிமையாக்கிய வீரப்பெண்...
என் குழந்தையின் எதிர்காலத்திற்காக உயிரையே கவசமாக அணிந்திருக்கும் ஒரு சாதாரண தாய்...
இந்த உலகம் என்னை அகதி என்று அழைக்கலாம்...

ஆனால்...
என் குழந்தை என்னை "அம்மா" என்று அழைக்கும் வரை...
நான் தோற்றுப் போனவள் அல்ல...
ஒரு தலைமுறையை மீண்டும் உருவாக்கப் பிறந்த வீரத் தாய்...!

Luminous 💯😇💙💛💚💜
« Last Edit: July 13, 2026, 10:11:26 PM by Luminous »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 1569
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
ஆணிவேர் அற்ற மரத்தை
தாங்கி கொண்ட என் சல்லிவேரே...
எதை சொல்லி உன்னைத் தேற்ற...

அப்பாவின் அன்பின் நிழலில்
உனது இளைப்பாறுதல் குறைந்த
காலமாவது கிடைத்ததைச் சொல்லியா?
இல்லை உறவின் போலியான
நிழல் உன்னை தாக்காமல்
இருப்பதைச் சொல்லியா?

கார்மேகமாக பல துயர்கள்
வந்தபோதும் மனதை தேற்றிய
திடத்தைச் சொல்லியா? இல்லை
இன்றளவும் மூழ்கிவிடாமல் எதிர்நீச்சலைப்
பழக்கும் சூழ்நிலையைச் சொல்லியா?

எதை சொல்லி உன்னைத் தேற்ற...

வற்றாமல் வழிந்தோடும் கண்ணீரிலும்
சிரிக்க கற்றுக் கொண்ட
தனிமையின் பாடத்தைச் சொல்லியா?
இல்லை உன் கனவு
மெய்படும் வரை உறைந்திருக்கும்
உயிரின் தவிப்பைச் சொல்லியா?

மேலும் மேலும் நெஞ்சைப்
பிளக்கும் காயத்தைத் தாங்கிக்கொள்ளும்
யுத்திகளைப் பற்றியா? இல்லை
போராடி போராடி பழகி
போன காலத்தைப் பற்றியா?

எதை சொல்லி உன்னைத் தேற்ற...
என் கண்ணே எதைச் சொல்லி
உன்னை தேற்ற...

பெண்மையில் ஆண்சாயல் பூசிக்கொண்ட
கோலம் எதனால் என்று சொல்லியா?
இல்லை தந்தையின் இடத்தை நிரப்ப
தத்தளிக்கும் அசாதாரண சூழல் பற்றியா?

காயத்தை ஆற்றும் காலம்
நெஞ்சின் வடுவை மட்டும்
பன்மடங்கு அதிகரிக்கும் என்ற
உண்மையை மறைத்து உன்னை
நான் தேற்றவா? அல்லது
நீயும் இதை கடந்துவிடு
என்று உண்மையை உணரவிடவா?

எதைச் சொல்லி உன்னை
நான் தேற்ற...
என்னை தேற்றும்
என் சல்லிவேரே...
எதைச் செய்து உன்னை
நான் தேற்ற

நீரினால் ஏற்படும் சலசலப்பைக்
காட்டிலும் மனதின் சலசலப்பு
உயிரின் ஓட்டத்தை குறைத்துவிடும்
என்ற கசக்கும் உண்மையை
மறைத்து உன்னை நான் தேற்றவா? இல்லை
சலசலப்பின் ஓசையை நீயும் கேட்டிடு
என்று உண்மையை உணரவிடவா?

மன அழுத்தத்தில் எழும்
கடுஞ்சொற்கள் உன்னை சுட்டிட
என்னையோ அது எரித்திட...
மனநிலையை நிலைப்படுத்த தத்தளிப்பதை
உன்னோடு பகிர்ந்துடவா? இல்லை
தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ளும் வார்த்தையாக
அதையும் மாற்றி உன்னை தேற்றிடவா?

எதைச் சொல்லி உன்னை
நான் தேற்ற...
என்னை தாங்கும்
என் சல்லிவேரே...
எதைச் சொல்லி உன்னை
நான் தேற்ற...

மன அழுத்தத்தைப் போக்க
இணையத்தின் வழி மனதைத் திருப்ப
சிற்சில தடுமாற்றத்தில் வடுவின்
சுவடும் அதிகரிக்க...
மாயவலையில் முகமூடி அணிந்திடவா? இல்லை
மாறும் இந்நிலையும் என்று
ஒளியென உன்னை ஏந்திடவா?

எதைக் கொண்டு இருளை அகற்றிடுவேன்...
என் ஒளியே நீ ஒளிர்ந்திட
திரியென என்னை மாற்றிடுவேன்...
« Last Edit: July 13, 2026, 10:17:50 PM by Yazhini »

Offline Thenmozhi

 "அம்மாவின் அரவணைப்பில் நான்"

உலகின் முதல் சொர்க்கம் - என்
"அம்மாவின் அரவணைப்பே!"
அம்மாவின் நெற்றியில்
மிளிரும் குங்குமம்,
காலைச் சூரியனின்
சிவந்த கதிர்களைப் போல
என் வாழ்வில்  விதைக்கிறது
தன்னம்பிக்கையை..

நிலவின் மென்மையும்
விண்மீன்களின் அழகும்
ஒன்றாகக் கலந்திருக்கும்
அம்மாவின் மூக்குத்தி
சிந்தும் ஒளியில்....

அம்மாவின் கைகளில்
குலுங்கும் வளையல்கள்
எனக்காக இசைக்கும்
அன்பின் சங்கீதம்...
அச்சமும், கவலையும்
எங்கோ மறைந்துவிடும்
அந்த ஒலி கேட்டாலே...

அம்மாவின் நீண்ட கரிய கூந்தல்,
என் கனவுகளின் மேகம்...
அது என் கன்னத்தை வருடிய
ஒவ்வொரு நொடியும்
என் மனதில் சொர்க்கம் ...

அம்மா அணிந்திருக்கும் சேலை,
வெறும் ஆடை அல்ல
என்னை அரவணைக்கும்
அன்பின் வானவில்...
சேலையின் முந்தானை
என் சிறுவயதின்
பாதுகாப்புக் கோட்டை!

குழந்தையாக நான் அழுதபோது,
என்னை மெதுவாக தூக்கி,
தன் தோளில் சாய்த்துக் கொண்டு,
இனிய தாலாட்டு பாடிய
அந்த நொடிகள்...
என் வாழ்வின் பொக்கிஷங்கள்!
அவளின் குரலில் ஒலித்த
ஒவ்வொரு ராகமும்
என் இதயத்தில் என்றும்
அழியாத நினைவுகள்....

அம்மாவின் தோளில்
சாய்ந்தவுடன் உலகத்தின்
எல்லா சுமைகளும்
பனித்துளிபோல் கரைந்து
விடுகின்றன எனக்கு....

நான் விழுந்த போதெல்லாம்
கை நீட்டி எழுப்பியவள் அம்மா!
நான் தோற்ற போதெல்லாம்
"மீண்டும் முயற்சி செய்" என்று
துணிவை விதைத்தவள் அம்மா!

என் கண்ணீரை தன் சிரிப்பால்
துடைத்தவள் அம்மா!
என் வெற்றியை தன்
வெற்றியாகக் கொண்டாடியவள்!

இறைவன் எங்கும்
இருக்க முடியாததால்
அம்மாவை படைத்திருக்கிறான்
என்ற உண்மையை
உணர்கிறேன் ஒவ்வொரு நாளும் !

இந்த உலகத்தை விட்டு ஒருநாள்
நான் விலகினாலும்,
உன் அன்பு மட்டும்
என்றும் என் இதயத்தில்
நிலைத்திருக்கும் அம்மா !

இன்று நான் வளர்ந்துவிட்டேன்
உன் கைகள் தொட்ட
பாதையை விட்டு
தொலைவில் நடந்தாலும்,
என் மனம் இன்னும் உறங்குகிறது
உன் சேலையின் நிழலில்தான்!

என் வாழ்வின் முதல் தெய்வம்,
முதல் ஆசான்,முதல் தோழி
என்றென்றும் என்
உயிரின் அழியாத கவிதை
என் குழந்தைப் பருவத்தின்
உயிரோவியம் – என் அம்மா!


« Last Edit: Today at 02:46:27 AM by Thenmozhi »

Offline Shreya

  • Jr. Member
  • *
  • Posts: 76
  • Total likes: 374
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
                                     என் மார்பில் மீண்ட உயிர்

ஆம்புலன்ஸ் கூச்சலில் என் அகிலமே நடுங்க,
உறைந்து தான் போனது என் உயிரின் துடிப்பும்..
ஐம்பதே நாட்களே ஆன என் பச்சிளம் பூவுக்கு,
NICU அறைக்குள் ஏனிந்த அக்னிப் பரீட்சை?

​பத்து மருத்துவர்கள் உன்னைச் சுற்றி நிற்க,
வலியால் நீ அழ உன் பிஞ்சு நரம்பைத் தேடினர்..
ஊசி முனைகள் உன் சதைக்குள் பாய்ந்த போதெல்லாம்,
துளைக்கப்பட்டது கண்ணே, என் நெஞ்சமன்றோ!

​விழி இமைகள் இரண்டும் ஒரு நொடியும் மூடவில்லை,
உன் மூச்சின் அசைவில்தான் என் ஜீவன் இருந்தது..
தொண்டைக் குழிக்குள் ஒரு பருக்கையும் இறங்கவில்லை,
என் பசியெல்லாம் உன் உயிர் பிழைக்கும் துடிப்பானது!

​உதிரம் சிந்தி உன்னைப் பெற்ற பிரசவ வலி கூட,
இந்த மரண பயத்திற்கு முன்னால் ஒன்றுமில்லை..
பெற்ற வதையை விடப் பெரும் ரணமிது,
பிள்ளையைக் காக்க அன்றே நான் செத்துப்போனேன்!

​"விதியின் தண்டனைகள் யாவையும் எனக்கே கொடு,
என் ஆயுளைக் குறைத்து என் பிள்ளையைக் காத்துவிடு."
கதறி அழுது நான் கையேந்திய கணங்களில்,
உன் மூச்சைத் திரும்பப் பெற நான் மண்டியிட்ட கணங்களது!

கொதித்த அழுகையால் என் உடலும் வறண்டு போக,
வற்றிப் போனதடி என் மார்பில் சுரந்த பாலும்..
அமுதப் பாலுக்குப் பதில் என் விழிகள் அங்கே,
வார்த்தைகள் இன்றி செங்குருதியாய் உருகி நின்றது!
 
"இன்றாவது என் பிள்ளையை அறைக்கு மாற்றாரோ?" என,
ஒவ்வொரு நொடியும் என் நெஞ்சம் ஏங்கியது..
அந்த மூடிய கதவின் வெளியினில் நின்றபடி,
காயம்பட்ட பறவையாய் நான் தவித்துக் கிடந்தேன்!

​என் கண்ணெதிரே உதிர்ந்த மற்ற பிஞ்சுகளின் மரணம்,
என்னை மொத்தமாகப் பிணமாய் உலுக்கியது..
காலனின் நிழல் அந்த அறையினில் ஆடும்போதெல்லாம்,
பயத்தில் என் மூச்சும் நின்று நின்று போனது!

​உலகமே எதிர்த்து வந்து உன்னைப் பறித்தாலும்,
விடமாட்டேன் என உன்னை மார்போடு புதைத்துக் கொண்டேன்..
என் கைகளால் உனக்கொரு பாதுகாப்பு கோட்டை கட்டினேன்!

​என் இதயத் துடிப்பையே உனக்குச் சுவாசமாக்கி,
அந்தப் பத்து நாள் நரகத்தை நாம் வென்றெடுத்தோம்..
என் மார்பில் நீ சாய்ந்திருக்கும் இந்த ஒரு நொடியே,
போராட்டம் ஓய்ந்து என் மார்பில் பூத்த பேரமைதியின் நிம்மதி!!

Offline SweeTie

பச்சை குழந்தை  அவன்
பாவம் ஒன்றும்  அறியான்
பாதையில்  கிடத்திவிட்டு அந்த
பாதகத்தி  எங்கு  சென்றாள்?

சேற்றில்  மிதித்தாளோ இல்லை
செஞ் சோற்று கடன்  தீர்த்தாளோ
பாவத்தின் சின்னம் என  எண்ணி
தெருவில் பரிதவிக்க  விட்டாளோ

பிள்ளை வரம் வேண்டி கோவில் குளம் சென்று
பல வருஷம் காத்துநின்றும்
பலனில்லை எனும் முடிவில்
பரிதவித்து  அவள்   நிற்கையிலே

தெருவோரக் குழைந்தை
தேம்பி அழும்  சத்தம் ….  அவள்
செவிகளில்  இடிபோல்  ஒலிக்க
செய்வதறியாது சென்று வாரி அனைத்திட்டாள்

வண்ணத்து பூச்சி ஒன்று சிறகடிக்க
வானத்து தேவதைகள் மலர் சொரிய
சிறு விரல்கள்  சித்திரம்போல் அசைய
அகன்ற அவள் விழிகள் அசையாமல் நிற்க

பத்து மாதம் சுமக்கவில்லை
பத்தியமும்  காக்கவில்லை 
பகல் இரவு கண்விழித்து 
பாலன்  உன்னை  பெறவுமில்லை

பெற்றால்  மட்டுமே தாயகலாமா?
நல்லதை சொல்லி வளர்ப்பவள் யாரோ?
நல்லவன்  ஆவதும் கெட்டவன் ஆவதும்
அன்னை வளர்ப்பினிலே ?

கண்ணே மணியே  கற்கண்டே உன்னை
காத்திடுவேன் கண்மணிபோல்
பொன்னே பூமணியே   பூந்தளிரே இப்
பூமியிலே  வாழ்த்திடுவாய்  சீரோடு

பெற்றவர்கள்  தவறு  செய்தால்
பிள்ளை இவன் என்ன  செய்வான் ?
குற்றம் புரிபவர்கள்   ஏன்  இவனுக்கு
தண்டனை  கொடுக்கிறீர்கள்?

பெற்றவர்கள் ஊர்  பெvயர் தெரியாது
பிறந்ததே  சாபம் என என்னனுபவர்
மற்றவர் வாழ்க்கை  எதுவெனத் தெரியாது வாழும்
கடவுளின் குழந்தைகள் இவர்கள்


 

Offline Kavii

  • Jr. Member
  • *
  • Posts: 56
  • Total likes: 311
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கருவறைத் தஞ்சம்
பெய்து ஓயாத பெருமழை அது,
சுற்றி சுழன்றடிக்கும் சூறைக்காற்று அது.
உலகமே மிரண்டு ஓடும் வேளையிலும்,
உன் சிறு உலகம் என் மார்பில் அடங்கியது.

பயத்தில் நடுங்கிய உன் பிஞ்சு விரல்கள்,
என் கழுத்தைக் கட்டிக் கொண்ட போது,
என் கருவறைக்குள் நீ இருந்த
அதே சுகம் மீண்டும் உயிர்த்தது.

என் கைகளில் இருப்பது உன் உடலல்ல,
என் உடலை விட்டு வெளியே உலவும் என் உயிர்.
நெஞ்சோடு உன்னை நான் இறுக்கி அணைக்க,
நெருங்கி நின்ற மரணமும் தள்ளிப் போனது.

உன் மூச்சுக்காற்று என் கழுத்தில் படர,
என் வியர்வைத் துளிகள் உன்னை நனைக்க,
வார்த்தைகள் அற்ற அந்த மௌனத்தில்,
வளர்ந்து நின்றது நம் பிரபஞ்சக் காதல்.

சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை,
யாரோ பேசும் சத்தங்கள் காதில் விழவில்லை.
என் மார்பின் சூடும், உன் இதயத்தின் துடிப்பும்,
ஒன்றோடொன்று பேசிக் கொண்டன.

கண்ணே... என் கண்மணியே...
தாயின் மடி உனக்கு என்றும் சிம்மாசனம்.
இந்தத் தூரிகை தீட்டிய சித்திரத்தில்,
வண்ணங்களை விட நம் பாசமே அதிகம்.

காலம் மாறலாம், காட்சிகள் மறையலாம்,
உன் வயது கூடி நீ தூரம் போகலாம்.
ஆனால், இந்தத் தாயின் நெஞ்சில்
உன் அணைப்பின் தடம் என்றும் அழியாது.

இடி விழுந்தாலும், புயல் அடித்தாலும்,
உன்னைத் தாங்க என் கைகள் உண்டு.
உயிரே... நீ பயப்படாதே,
உன் தாயின் இதயம் உனக்கான புகலிடம்!

உன் சிறு இதயம் வேகமாகத் துடிப்பதை நான் உணர்கிறேன்,
ஆனால் அது என் மார்பில் அமைதியடைகிறது.
உன் மௌனமே என் காதுகளுக்கு இசையாகிறது,
வார்த்தைகள் தேவையில்லை.

இந்த நொடி நீண்டு கொண்டே இருக்கட்டும்,
இந்த அணைப்பு என்றும் அழியாத ஓவியமாகட்டும்.
நீ என் மடியில் உறங்குவது போல்,
நான் உன் நம்பிக்கையில் உறங்குகிறேன்.

Offline Ashik

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 77
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அன்பு தாயே !! என்னை மன்னித்து விடு !! நயமாய் பேசி நடித்து என்னை அவளிடம் ஈர்ததாள் !! சுயமாய் சிந்திக்க நீ சொல்லி கொடுத்த என் அறிவை !!சூழ்ச்சியால் அவள் வென்றுவிட்டாள் !! இயல்பாய் இருந்த எனக்கு !! இன்ப நதியாய் இருப்பாள் என்று நம்பினேன் !! அவளோ மனல் நிறைந்த பாலைவனமாய் என்னை மாற்றிவிட்டாள் !! அன்பு தாயே என்னை மன்னித்து விடு !! காதலை மட்டுமே அவளிடம் எதிர்ப்பார்த்த எனக்கு !! காலம் கடந்தாலும் ஆறாத காயங்களை மட்டுமே கொடுத்து விட்டு சென்றுவிட்டாள் !! பழகிய மனிதர்களில் இவள் இணியவள் என்று எண்ணினேன் !! ஆனால் நான் பார்த்தவர்களில் இரக்கமற்ற இதயம் கொன்டவள் என உனர்த்திவிட்டு சென்றுவிட்டாள் !! அன்பு தாயே என்னை மன்னித்துவிடு!! அவளின் நினைவால் தூக்கம் மறந்து உனவு மறந்து உன் அன்பை மறந்து அலைந்த எனக்கு !! இணி மறக்கவே முடியாத துயரங்களை பரிசளித்துவிட்டாள் !! வார்த்தைகளில் தேனாய்  என்னிடம் பேசியவள் !! நடத்தையில் துரோகத்தால் என்னை வீழ்த்திவிட்டாள் !! அன்பு தாயே என்னை மன்னித்துவிடு!! வாழ் நாள் எல்லாம் அவளுக்காக இருக்க நினைத்த எனக்கு !! ஒவ்வொரு நொடியும் !!அவளின் நினைவாய்  அருவருப்பை என்னுள் விதைத்து விட்டாள் !! அவளின் கனவுகளுடன் கர்வமாய் இருந்த என்னை !! கசக்கிய குப்பையாய் தூக்கி எறிந்து விட்டாள் !!அன்பு தாயே என்னை மன்னித்துவிடு !! பென்கள் எல்லோரும் தாய் போல என்று நீ் சொன்ன கூற்றை அவள் மாற்றிவிட்டாள்!! முதல் முறை பென்னென்றும் பாராமல் என் இழி சொற்களை அவள் மீது உமிழ வைத்துவிட்டாள்!! நான் மட்டும் கானும் கனவாய் என் விழிகளில் வாழ்நதுவிடு என்றேன் !!அவளோ உலகமே ரசிக்கும் திரைபடமாய் இருப்பதில் தான் தனக்கு பெருமை என்று என்னை நடைபினமாய் மாற்றிவிட்டாள்  !! மாதம் பத்து என்னை பாரமாய் சுமந்தாலும் இன்முகமாய் இருந்த உன் முகத்திற்கு முன் இந்த வேடமனிந்த மனித மிருகத்தை நம்பி வாழ்க்கையை தொலைத்த என் முகத்தை எப்படி காட்டுவேன் !! அன்பு தாயே என்னை மன்னித்து விடு !! உயிர் கொடுத்த உண்ணிடம் ஒரு வரம் வேண்டி எழுதுகிறேன் !! இன்னொரு வாழ்வு நமக்கிருந்தால் உன் கருவில்  நான் உன்னால் மீண்டும் சுமக்க பட வேண்டும் !! உன் மகனாய் மட்டும் இந்த மன்னில் வலம் வர வேன்டும் !! துரோகங்களை எண்ணி அனு அனுவாய் சாவதை விட !! ஒரே நொடியில் என் வாழ்வை முடித்து கொள்ள விழைகிறேன் !! நிழலை நிஜம் என்று நம்பி !! துரோகத்தை புனிதமாய் எண்ணி !! வாழ்வில் தோற்ற என் பிரிவால் துயரங்களை சுமந்து நீ வாழ வேண்டியதில்லை !! என்னை மறந்து உன் வாழ்வை நீ நலமாய் வாழ வேண்டும் !! நான் வாழ்வில் தோற்றவன் !! நாயவஞ்சகத்தால் வீழ்ந்தவன் என்  வாழ்வை இங்கே முடிக்கிறேன் !! மீன்டும் நீ என்னை பெற்றெடு என் தாயே!! சுகமாய் உன் தோளில் உறங்க வேண்டும் உன் மகனாய் !! இந்த உலகை ஆள வேண்டும் வெற்றியாளனாய் !! அது வரை நம்பிக்கை வைத்தவளின் துரோகத்தால் வீழ்நதவன் இங்கே புதைந்து இருக்கிறான் என்று பொறிக்கப்பட்ட இந்த கல்லரையில் யாருக்கும் என் முகம் காட்டமல் புதைந்து காத்திருக்கிறேன் !! அன்பு தாயே என்னை மன்னித்து விடு !!
« Last Edit: July 13, 2026, 11:20:07 PM by Ashik »