ஆராத அன்பு
தொடங்கும் போதே முற்றுப்புள்ளி வைக்கும்
நம் முதல் சந்திப்பு..
இதுதான் நமக்கான கடைசி நொடியா?
இதயம் சொல்லத் துடிக்குது புதிராக!
ஆயிரம் வார்த்தைகள் தொண்டையில் முட்ட
அழுகை மட்டும் முந்திக் கொள்ளுதே!
விக்கித் திணறி நான் விம்மி நிற்க
துடைப்பது நீ என் கண்ணீரை அல்ல..
உன் தீண்டல் தரும் அந்த பாதுகாப்பு
இனி ஒருபோதும் எனக்கு கிடையாதோ?
நீதான் எனக்கு எல்லாமே,
என் உயிர் மூச்சின் ஆதாரமே,
சொல்லாமலே என் துயர் அறிவாய்,
என் சிரிப்பை கண்டே மனம் நிறைவாய்!
என் மௌனம் கண்டு தவிப்பவன் நீ,
என் சுவாசத்தின் அதிர்வை உணர்பவன்,
கனவில் மட்டுமே என்னைத் தாங்கியவன்,
நேரில் இன்று ஏனோ மாயம் செய்கிறாய்!
தவறுகள் செய்தால் கண்டிப்பாய் தாயாய்,
தவறிப் போகாமல் காத்திடுவாய்,
என் குறும்புத்தனம் தாளாமல் போனாலும்,
அதை ரசிப்பதில் உனக்கு ஈடு இல்லை!
என் குறைகளையும் அழகாய் நேசிப்பாய்,
என் திமிரையும் கூட அழகாய் ரசிப்பாய்,
அன்பால் என் பிடிவாதம் உடைப்பாய்,
என் மீது உனக்கு அத்தனை பொறாமை,
அவன் மட்டுமே வேண்டும் என்ற பேராசை!
செல்லக் கோபம் கொண்டு முகம் திருப்புவாய்,
மறுநொடி பாசத்தில் என்னை உருக்குவாய்,
காலம் நம்மை சோதித்த போதும்,
என்னை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாய்!
தீராத காதலை நெஞ்சில் சுமந்து,
என்னை முழுதாய் உணர்ந்தவன் நீ,
சிந்திக்க வைத்து எனை செதுக்கியவன்,
என்னை எனக்கே உணர்த்திக் காட்டியவன்!
தூரங்கள் நம்மை பிரித்தாலும்,
கோபங்கள் மௌனமாய் நின்றாலும்,
எனக்காகவே பிறந்த என் அன்பன் நீ,
என் பிறவியின் அர்த்தமானவன்!
கரம் கோர்த்த காலங்கள் முடிந்து போக
கண்ணீரைத் துடைத்து விடைபெறுகிறாய்..
உன் அணைப்பிலேயே நான் செத்து மடிய
விதி செய்த சதியில் உறைகிறேன் இன்று!
உயிர் மட்டும் உடலில் எஞ்சியிருக்க
என் உயிரான நீயோ விலகி போகிறாய்..
கடைசி தீண்டல் முடிந்த அந்த நொடி
என் வாழ்வின் அஸ்தமனம் தொடங்கிடுதே!
இறுதி சந்திப்பின் இந்த ஒரு துளி
மரணத்தை விடவும் கொடியது..
நீ போன பின் எஞ்சியிருப்பது நானல்ல,
நீ துடைத்து எறிந்த என் இதயத்தின் சிதறல்கள்!!!