/"சங்கிலி உடைத்த சுடரொளி"
அன்று:
அடுப்பங்கரைச் சிறையில்,
அடிமைச் சங்கிலி பூண்டு,
அச்சம், மடம், நாணம் என,
அறைக்குள் முடங்கியவள்!
சாளரத்துக்குள் சுருங்கிய உலகம்,
சாதனையைக் கனவிலும் நினைக்காத சூழல்,
அவள் திறமைக்கு சங்கிலி போட்ட
அமைதியின் ஆணைகள்.
கண்ணீரைச் சேமித்து,
கனவுகளைப் புதைத்து,
கடமை என வாழ்ந்த,
காகிதப் பூ அவள்!
ஆனால் —
கண்ணீரோடு காலத்தைக் கழித்தவள்
கணினியோடு காவியம் படைக்கிறாள் இன்று
அண்டவெளியை அளக்கிறாள்,
ஆயுதம் ஏந்தி காக்கிறாள்,
கல்வி, கலை, கணினி என
சாதனை படைக்கிறாள்!
ஆணுக்குச் சமமெனக் கேட்ட காலம் போய்,
ஆண்மைக்கு நிகரென சாதிக்கிறாள்!
சமையலறை முதல் விண்வெளி வரை
சாதனை படைக்கும் புயலாய்,
தன்மானத்துடன் நிமிர்ந்து நிற்கும்,
சம உரிமைப் பெண் அவள்!
குடும்பத்தையும் சுமந்து கொண்டு,
உலகத்தையும் ஆளுகிறாள்,
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடன்!
அடிமையாய் இருந்த நிலை மாறி,
அதிகாரம் கையில் ஏந்தி,
பெண்மையின் வலிமை காட்டி,
இன்று சமதர்மம் நிலைநாட்டி !
அனைத்திலும் சாதனை படைக்கும் பெண்மையைப் போற்றுவோம்,
நாளைய உலகை வடிவமைக்கும் அவள் எழுச்சியை கொண்டாடுவோம்;
உலகை ஒளிரச் செய்யும் வீரப்பெண்ணுக்கு
எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துகள் பெருமையுடன்!