"விவசாயம் இந்த உலகின் முதுகெலும்பு"
மக்களின் பசி பட்டினியைப் போக்கும்
விவசாயிகள் கடவுளே!
மண்ணில் விவசாயிகள் கால்கள் படுவதால்,
சோற்றில் கை வைக்கின்றோம் நாம்!
காளைகளில் ஏர்,கலப்பை பூட்டி !
கழனியை உழுது ,மண்ணைப் பதப்படுத்தி!
கால போகம் பார்த்து விதை விதைத்து!
கழனியை சுற்றி வரம்புகள் கட்டி!
இயற்கை சேதனப் பசளைகளை
பயிர்களுக்கு உரமாக்கி!
இன்புற்று செழித்துப் பயிர்கள் வளர
நீர்ப்பாசனம் பாய்ச்சி!
இன்பமாய் களைப்பை போக்க
பாடல்கள் பாடும் விவசாயிகள்!
வெயில் ,மழை பாராது வியர்வை சிந்தி
உழைப்பவர்கள் விவசாயிகள்!
பயிர்கள் செழிப்புற வளர்ந்ததும்
அறுவடை செய்து ,சூடு மிதித்து!
தங்கள் கஷ்டத்துக்கு சிறந்த விலை மதிப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள்!
மானியம் வாங்கி ,நகை அடகு வைத்து, விதைத்தவன் பெறுவது சிறிய சன்மானமே!
வர்த்தகர்கள் தங்கள் சாமர்த்தியத்தால்
பெருந்தொகையை ஈட்டிடுவார் கஷ்டமின்றி!
கடன் இருந்தும் விவசாயிகள் மனதில்
எல்லையில்லா சந்தோசம்
மக்கள் பசியை போக்கிவிட்டோம் என்று!
இயற்கை விவசாயம் இப்போ பெரும்பாலும்
செயற்கை விவசாயம் ஆகிறதே!
விஞ்ஞான வளர்ச்சி விவசாயத்தில் கூட
இயந்திரமயமாகிவிட்டதே!
விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு
சூழலை மாசுபடுத்துகிறதே!
செயற்கை அசேதன பசளைகள் மனித
ஆரோக்கியத்தை கெடுக்கின்றதே!
சீக்கிரமாக விளைச்சலை பெற்று, சந்தைப்படுத்தும் நோக்கத்தில் ,
இயற்கை விவசாயத்தை
அழிக்கின்றான் மானிடன்!
ஆறறிவு படைத்த மானிடனுக்கு புரியவில்லை அவன் ஆயுட்காலமும்
சீக்கிரமாய் முடிகின்றது என்பது!
அன்று உடலை வலுப் பெறச் செய்தது
இயற்கை விவசாயம்!
இன்று உடல் வலுப் பெற பணம் செலுத்தி
உடற்பயிற்சிக் கூடங்கள்!
கழனியில் வேலை செய்பவனை
கேவலமாகவும்,
கணனியில் வேலை செய்பவனை
கெளரவமாகவும் ,
கண்டுகொள்ளும் மானிடனே!
புரிந்து கொள் வலைத்தளத்தில்
அரிசியை விளைவிக்க முடியாது
என்ற உண்மையை!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்!வளரும் குழந்தைகளுக்கு விவசாய
அறிவினையூட்டுவோம்!
விவசாயிகளுக்கு ஏற்ற சன்மானத்தை
வழங்குவோம்!
"விவசாயம் இந்த உலகின் முதுகெலும்பு"
என்பதை உரக்கச் சொல்லுவோம்!
விவசாயிகள் இல்லையேல்
நாங்கள் இல்லை!
பொங்கலுக்கு மட்டும் தான்
உழவர் திருநாள் இல்லை !
எல்லா நாளும் உங்கள் திருநாளே!
உலகில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் நான் தலை வணங்குகின்றேன்!