ஒருநாள் மாறும் இந்த வாழ்க்கை
நமக்குப் பிடித்தாற்போல்
மட்டும் அல்ல தங்கையே,
அனைவருக்கும் பிடித்தாற்போல்
நம் வாழ்க்கை மாறும்
ஒரு நாள்…
தாய் இல்லா வெற்றிடத்தில்,
மது நாற்றம் சூழ்ந்த
ஒரு வீட்டில்,
அன்பும் அரவணைப்பும்
கல்வியும் இன்றியே
வளர்ந்தோம் நாம்.
குடித்துக் குடித்தே
உயிரை கரைத்த தந்தையும்
ஒரே அடியாய்
நம்மை விட்டு போனார்…
ஆனால் தங்கையே,
இனி
அந்த கடந்த காலமே
நம் அடையாளம் அல்ல.
“அண்ணா…
பயமா இருக்கு”
என்று நீ சொன்ன அந்த வார்த்தை
என் நெஞ்சை
உலுக்கியது.
ஆம்…
பயம் எனக்கும் உண்டு,
இந்த சமூகத்தில்
எப்படி வாழ்வோம்
என்று…
ஆனால் தங்கையே,
பயந்தபடியே முன்னே நடப்பதுதான்
தைரியம்.
இந்த சமூகத்தில்
நாம் வாழ்ந்தே ஆக வேண்டும்...
தலைநிமிர்ந்து,
நிம்மதியாக,
சந்தோஷமாக.
அதற்கான ஒரே வழி...
நம் கல்வி.
ஆம்…
கல்விதான்
கைகளில் விளக்காய்,
கண்களில் கனவாய்,
வாழ்க்கையில் வழிகாட்டி.
என் கையில் இருந்த
தந்தையின் கசப்பான நினைவாய்
அந்த மது பாட்டிலை
இன்று
தூக்கி வீசுகிறேன்.
அதற்குப் பதிலாக
உன் கையிலிருக்கும்
புத்தகப் பையை
எடுக்கிறேன்.
இனி நாம்
சமூகத்திற்கான
ஒரு எடுத்துக்காட்டாய் இருப்போம்...
“குடிகாரனின் பிள்ளை
குடிகாரனாகவே
மாற வேண்டியதில்லை
படித்தால்
உயர்ந்த நிலை அடையலாம்”
என்று.
அப்போது இந்த சமூகத்திற்குச்
சொல்வோம்....
குடிப் பழக்கம்
ஒரு தீர்வு அல்ல,
அது ஒரு வீழ்ச்சி என்று.
அந்த நாளுக்காக
நாம் இன்று
விழிப்போம்.
எழு தங்கையே…
எழு…
உன் கனவுகளை
முதுகில் சுமந்து,
உன் கல்வியை
ஆயுதமாக்கி,
உன் முயற்சியை
அடையாளமாக்கி..
இந்த உலகிற்கு
நாம் யார் என்பதை
சொல்ல…
நமக்குப் பிடித்தாற்போல்
மட்டும் அல்ல,
அனைவருக்கும் பிடித்தாற்போல்
நம் வாழ்க்கை மாறும்.
அந்த நாளை
நாமே
உருவாக்குவோம்.
LUMINOUS 💜💛🧡💚😇