ஒரு கூட்டத்தில்,
ஒரு அவசரத்தில்,
ஒரு போக்குவரத்து நெரிசலில்,
குழலறலாக வெளிப்படும்
ஓர் மனம்பிறழ்ந்தவளின் குரல்
தலை திரும்பாமலேயே
அலட்சியப்படுத்தப்படுக்கிறது.
'ம்மா, ம்மா' என கையேந்துபவரின்
மன்றாடும் முகம்
உதாசீனப்படுத்தப்படுகிறது
ஒரு கையசைவில்.
அறுத்தெரியப்பட்ட ஆட்டின் கண்கள் மிக மிக வசதியாக
புறக்கணிக்கப்படுகிறது.
விரல் பிடித்து
'இத வாங்கிக்கோங்க க்கா'
என கண்களால் இறைஞ்சும்
சிறு பிள்ளைகளின் விரல்கள்
உதறப்படுக்கின்றது.
கடவுளின் காணிக்கை தட்டுகளில்
எண்ணி எண்ணி
சில்லறைகளை இட்டு நிரப்பி
புண்ணியம் தேடிக் கொள்வேன் நான்!