Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-001 (ரயில் பயணங்கள்)  (Read 173 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 ஒவ்வொரு திங்கட்கிழமை இரவு
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-001 (ரயில் பயணங்கள்)

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“ரயில் பயணங்கள்”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் வியாழக்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்


Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 419
  • Total likes: 1952
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
"என் நினைவலைகள்"

சிறு வயதில் வீட்டின் அருகில் ரயில் போகும் சத்தம் கேட்டு நேரத்தை கணித்த நாட்களும் உண்டு... தனியாக பயந்து பயந்து வேறு வழியின்றி ரயிலில் பயணித்த நாட்களும் உண்டு.... அப்போதெல்லாம் நினைத்ததில்லை அந்த நினைவுகளை ஒரு நாள் எண்ணி பார்க்க நேரிடும் என்று...

காலத்தின் கட்டாயமாய் சில தருணங்களில் தனிமையை துணையாக்கி ரயிலில் பயணிக்க நேர்ந்தது... அப்படி ஒரு முறை சென்னையை நோக்கிய ஒரு பயணத்தின் நினைவலைகள் இங்கே....

பணிக்காக சிலர்... புகுந்த வீட்டிற்கு செல்ல சிலர்... படிப்புக்காக சிலர்... இப்படி எண்ணற்ற கனவுகளை சுமந்த பலரை காண முடிந்தது.... இவ்வாறான இந்த ரயில் பயணத்தில்...பலரின் வாழ்க்கையை தொடங்கி வைத்த கதைகளும் உண்டு... சிலரின் வாழ்க்கையை முடித்து வைத்த கதைகளும் உண்டு..

சொந்த கதையை மறந்து இப்பயணங்களில் நான் ரசித்த இயற்கையும் இந்த ரயில் வண்டியும் வாழ்க்கையின் பல எதார்த்தங்களை யோசிக்க வைத்தது...

இயற்கையை ரசித்து மனம் இலகுவான தருணத்தில்..முன்னோக்கி சென்ற பயணத்தில்.. வெளியே இயற்கை அனைத்தும் பின்னோக்கி சென்ற காட்சி... இப்படி தானே என்ன நடந்தாலும் நம் வாழ்க்கை பயணம் முன்னோக்கி நகர்கிறது என்று மனது மௌன மொழியில் சொல்லாமல் சொன்னது....

இணைய மாட்டோம் என்று தெரிந்தும் பலரது பயணத்தை இனிமையாக்க உதவும் தண்டவாளங்கள்... ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு மாறினாலும் அந்த மாற்றத்தை பயணிப்போற்கு உணர்த்தாமல் தொடரும் பயணம்...
 
கரடு முரடான பாதயோ.. கும்மிருட்டான குகை வழிப்பாதையோ... மலைப்பிரதேசமோ.. எதுவாக இருந்தாலும் எந்தச்சலனமும் இன்றி முன்னேறிச்செல்லும் பயணம்..

சுற்றி இருந்த கூட்டத்தின் கூச்சலில் என் கனவுலகை விட்டு நினைவுலகிற்கு வந்தேன்... குடும்பமாக வந்த கும்பலில்.. கட்டு சோறு பரிமாற்றம்... வாசனை மூக்கை துளைக்க...கொஞ்சமா சாப்புடு கண்ணுன்னு குடும்ப தலைவி கூற... பயணத்தில் தெரியாத நபர் ஏதும் சாப்பிட குடுத்தால் வாங்கதீங்க ன்னு எங்கயோ எப்போதோ கேட்ட நினைவு.. இல்லீங்க அம்மா வேண்டாம் னு சொல்லிட்டு மீண்டும் இயற்கையை ரசிக்க தொடங்கினேன்... பாலத்தின் மீது பயணிக்கயில் வேகமும் குறைந்தது சத்தமும் மாறுபட்டது... இந்த பாலத்தை எப்படி கட்டி இருப்பாங்கனு என் மனது யோசிக்க தொடங்கியது...

அருகில் இருந்த இளைஞர் கூட்டம்... சங்கீத மழையில் நனையத் தொடங்கினர்... சிலர் பாடவும் சிலர் ஆடவும்.. சிலர் அதை ரசிக்கவும் என ஒரே கூச்சலும் கும்மாளமும்... இளையராஜா மெட்டமைத்த பாட்டுக்களை அவர்கள் பாட கூடவே என் உதடும் புன்முருவலுடன் அந்த பாட்டுகளை முனுமுனுத்தது..

இரவு நெருங்க அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்... எனக்கும் தூக்கம் சொக்கிய வேலையில்.. தனியா போற பத்திரமா இரு... கொண்டு போற பொருட்களை பத்திரமா பாத்துக்கோன்னு அம்மா சொன்னது நினைவில் வர... வந்த தூக்கத்தை சற்று பொறு என்று கூறி.. எவ்வளவோ முயன்றும் என்னை அறியாமல் அயர்ந்து உறங்கி போனேன்..


சலசலப்பாய் பல குரல்கள் ஒலிக்க அய்யயோ தூங்கிட்டோமே என்று அதிர்ச்சியில் எழுந்த நேரம்... அடுத்து சென்னைன்னு யாரோ சொல்ல.... எனக்கு என்ன காத்துட்டு இருக்கோ அடுத்தது என்ற கேள்வியோடு... மனதில் தேங்கி இருக்கும் பல நினைவுகளுடன் இந்த பயண நிகழ்வுகளையும் சேர்த்துக்கொண்டு ரயிலுக்கு பிரியாவிடை கொடுத்து இறங்கி செல்ல ஆயத்தமானேன்.....
« Last Edit: December 25, 2025, 10:41:43 PM by VenMaThI »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 273
  • Total likes: 1085
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
ரயில் பயணங்கள்...
   என் மனசுக்கு மிக மிக நெருக்கமான ஒரு இனிமையான பகுதி. நண்பர்கள் கூட்டம் ன்னு கூட சொல்ல முடியாது ஒரு பட்டாளமே கிடைச்ச அட்டகாசமான நாட்கள்...

      காலையில 6 மணி இருக்கும் கோழி கொக்கரக்கோன்னு கூவும் போது நாங்க ரயில்ல இருப்போம். பயண நேரம் காலையில 2.30 மணி நேரம் ( விரைவு ரயில் என்பதால்) மாலை 3 மணி நேரம்... தனியா பேருந்து பயணம் வேற உண்டு... பல மைல் தூரத்த தாண்டி தான் வேலை. ஆனாலும் இந்த ரயில் பயணம் எங்க எல்லோருக்குமே ஒரு குட்டி கல்லூரி காலம்னே சொல்லலாம். இதுல ஆட்டம் உண்டு, ஆரவாரம் உண்டு, குரங்கு சேட்டைகளும் உண்டு. மனசோர்வோ உடல் சோர்வோ நண்பர்கள் கூட்டத்துல காணாமலே போய்டும்....

அரக்க பறக்க ரயில பிடிக்க ஓடினா சில சமயம் tata காட்டிட்டு ரயில் ஓடிடும்...
சில நேரம் நிறுத்தி கூட ஏறிய அனுபவம் உண்டு.

ஒரு தடவை அப்படி தான் வழக்கம் போல நேரம் ஆகிடுச்சு... Train முன் பக்கம் தான் ஓடி போனேன்... ரயில் நகர்ந்து ரெண்டு பெட்டி என்னை தாண்டியும் போயாச்சு... ஆனாலும் அங்க இருந்த porter அண்ணா ஒருத்தங்க ரயில நிறுத்த guard கிட்ட signal காட்ட ரயில் வேகத்த கொஞ்சம் குறைச்சுடாங்க... அவங்களுக்கு தான் வேகம் கம்மி... எனக்கோ இன்னைக்கு ஒரு சம்பவம் நமக்கு இருக்குன்னு மனச  சாகசத்துக்கு தாயார் செஞ்சு எனக்கு வேகமா தெரிஞ்ச ரயில, ஒரு பெட்டியில ஒரே தாவு... நல்ல வேல நா வெளிய விழல.... புரிஞ்சுருக்கும்... ஆமாங்க விழுந்தது ரயில் உள்ள தான்... ஆனா வழக்கமா ஏறுரா பெட்டி இல்ல.... நமக்கு முக்கியம் விழாம இருக்கிறது கூட இல்ல... Close friends பாத்துட கூடாது.... அப்பாடா ன்னு எழுந்தா ஒரு நண்பர்... அவ்வளவு தான்.. அன்னைக்கு ரயில தலைப்பு செய்தி நான் தான்... மானம் போச்சு மரியாத போச்சு... சரி இதுவும் நம் வீர வரலாறு ன்னு எடுத்துகிட்டாசு...

இது எப்பவாது நடக்குற சாகசம் - ன்னா எப்பவும் நடக்குற சாகசம் ஒண்ணு இருக்கு.... அதுதான் நண்பர்களுக்கு இடம்பிடிக்குற தலையாய (தலை போற) சாகசம். அந்த ரயில்நிலையத்துல ஏறுறவர்களுக்கு இடம் பிடிச்சா பரவால்ல.. நாங்க தான் அடுத்த ரயில் நிலையத்துல ஏறப்போற எங்க நண்பர்களுக்கு இடம் பிடிப்போம்ல.... வழக்கமா வரவங்களுக்கு இவங்க இப்படி தான்னு ஓடிடுவாங்க... ஆனா புதுசா வரவங்ககிட்ட சண்டைபோட்டு இடத்த தக்க வைக்கிறது இருக்கே.... குழாயடி சண்டையில தண்ணீ பிடிக்குறதுக்கு சமம்...

    இவ்வளவு இரணங்களத்துளையும் ஒரு குதூகலம் - ன்னு அப்போ அப்போ festival mode க்கு வேற போய்டுவோம்... பொங்கலோ, தீபாவளியோ கிறிஸ்துமசோ ராம்சனோ.... யார் யார் எத நல்லா சமையல் செய்வோமோ அத கொண்டு வந்து சோறு சோறு - ன்னு ஒரே கொண்டாட்டமா போகும்....

     ஆக மொத்ததுல என் ரயில் பயணங்கள் பல இனிமையான நினைவுகளோடு நிறைச்சு இருக்கு. இன்று வரை எங்க பயணம் நிக்காம whatsapp ல ஓடிக்கிட்டே இருக்கு

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 235
  • Total likes: 772
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
பணி நிமித்தமா , நண்பர்களோட சுற்றுலானு பலமுறை ரயில் பயணங்களை மேற்கொண்ட போதும், மனசுல இப்பவும் பசுமரத்தாணி போல நிக்கிறதுனா அது பள்ளி கால ரயில் பயணங்கள் தான். அம்மா அப்பா அரசாங்க ஆசிரியர்கள இருந்தனால ,வருஷத்துக்கு 3 முறை கிடைக்கிற  railway warrant புண்ணியத்துல என்னோட பல தொலைதூர பயணங்கள் ரயில் மூலம் தான்
.
எப்பவுமே கையில புத்தகத்தோடு பயணிக்கிற அப்பா, ஏறினதுல இருந்து இறங்குற வரைக்கும் நிறுத்தாம food supply பண்ற அம்மா , headset கு சண்டை போட்டு என்னோட மல்லுக்கட்டும்  தங்கச்சி , கரி கோச்சி (ஸ்டீம் engine)ல இருந்து observation coach வரைக்கும் தன வித விதமான ரயில் பயணங்களை சுவாரசியமான கதையா சொல்ற அம்மம்மா இல்லாத பயணங்களே இருந்ததில்லை.

மலைநாட்டின் இதமான குளிருக்கு தேவையான நேரத்துல paper cup ல tea விக்கிற தாத்தாவின் தேநீரின் சுவையை என் வாழ்க்கை பயணத்துல எந்த 5 ஸ்டார் ஹோட்டல் தேநீராலும் இன்னைக்கு வரைக்கும் ஈடு செய்ய முடியல ,

ரசியிலின் தட தட ஓசைக்கு கொஞ்சமும் சந்தம் தவறாம  vade vade isso vade பருப்பு vade னு கூவிக்கொண்டே வடை விக்கிற  தாத்தா வின் வடையை என்னைக்காவது அம்மாக்கு தெரியாம  வாங்கி சாப்பிடணும்ன்றது இன்னைக்கு  வரைக்கும் நிறைவேறாத bucket லிஸ்ட் கனவு . ,

electric guitar உச்சஸ்தாயி ல கதற தமிழை கடித்து குதறும் ஸ்டேஜ் ஷோ பைலா (Baila )பாடல்களை நாராசம் னு நினைக்கிற மனசுக்கு , வெறும் புத்தகமே தபேலாவா உருவகிச்சு தட்டி தட்டி  கொண்டு அண்ணாமார் பாடிட்டு வார வெண்ணிலவே வெண்ணிலவே  , வாடா  மாப்பிளை பாடல்கள் கூட ரசனையான  தான் இருந்துது. 

மொழியறியா தேசத்திற்கு இயற்கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்டு பயணிகள் நம்ம நாட்டு மலையும்  , அருவியும்  கொண்ட கொள்ளை அழகை சிலாகித்து பேசி புகைப்படம் எடுக்கும் போது,  சொந்த மண்ணின் பெருமையையும் ,வாழ்வை ரசிச்சு வாழறதுனா என்னனு அந்த வயசுல புரிய வச்சுது , ஓட்டை English ல அவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்லி பேசும்போது , கூட்டிட்டு போன English  elocution class எல்லாம் வீணா போகலானு பாட்டியோட பெருமிதம் கலந்த பார்வை இப்ப நினச்சா சிரிப்பு வருது.  .

அம்மாவின் முழுக்கவனமும் எங்கள் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தைச் சுற்றியே இருக்கும் என்றால், அப்பாவின் சிந்தனையோ இந்தப் பயணத்தின் மூலம் எங்களுக்கு எதைக் கற்றுத் தரலாம் என்பதிலேயே இருக்கும். ஒரு 'ஸ்டீம் என்ஜின்' (Steam Engine) இயங்கும் விதத்தை, எட்டு  வயது சிறுமிக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்கிக் கூறும் வித்தை என் அப்பாவுக்கு மட்டுமே கைவந்த கலை.

இன்னைக்கு நினைச்சாலும் காலச்சக்கரம் பின்னோக்கி சுழலாதா ? ஓடி போய் அந்த நாளை ஒரு தடவையாவது  வாழ்ந்துட்டு வந்துட மாட்டமானு நினைக்கிற நினைவுகள்ல இந்த ரயில் பயணங்களுக்கு எப்பவும் முதலிடம் உண்டு
« Last Edit: December 25, 2025, 11:00:58 PM by Madhurangi »

Offline mandakasayam

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 911
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாதும் ஊரே யாவரும் கேளீர்
          நண்பனுடன் சென்ற முதல் இரயில் பயணம் . சின்ன வயசுல இரயிலை பார்த்து டாட்டா காட்டி துள்ளி குதிச்சேன்  . அது ஒரு சந்தோசம் . சரக்கு வண்டியோட 60 பெட்டிய பாத்து அடேங்கப்பா இவ்ளோ பெரிய இரயிலானு ஆச்சரியப்படேன் .. நாம இதே போல போகும்போது இரயில் டிரைவர் பெட்டில உக்காந்து வேடிக்கை பாப்போம்னு நினைச்சேன் ...  அது ஒரு சிறிய நிலையம்.
நண்பனுடன் பேசி மகிழ்ந்து கட்டணசீட்டை வாங்கி எந்த பக்கம் வரும்னு காத்துகொண்ட நினைவுகள் இப்பவும் மறக்கமுடியாது   

இது என் முதல் ரயில் பயணம் . தூரத்தில் ஒலி எழுப்பி கொண்டே பயங்கர சத்தம் நெருங்கி வந்தது
இரும்புச் சக்கரங்கள் தடத்தில் தட்டும் சத்தம்,காற்றை கிழித்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்தது அளவில்லா மகிழ்ச்சி.  ஆனாலும்

முதல் விசில் ஒலித்ததும்
உடம்பெல்லாம்  லேசாக நடுங்கியது.அடேய் இதுக்கா எப்படி பயப்படுற என்ன ஆம்பள புள்ளையோ அப்படினு நண்பன் சொன்னா சரி  விடுடானு  சிரிச்சுட்டே பெட்டியில ஏறிட்டோம்
“பயணம் தொடங்குகிறது; என்று
இரயில் மட்டும் இல்லை
என் மனமும் படபடத்தது

சிறிய இடைவெளி சிறு வியாபாரிகளின் குரல். அங்கே
டீ,காபி - ல இருந்து சாப்பாடு வரை கொண்டு வந்தாங்க மக்களும்   பேரம் பேசாமல் வாங்கினாங்க  .  பல வகையான உணவுகள் இது எல்லாமே அந்த சிறிய இடைவெளியில் விருவிருப்பாக நடந்தது ...

இரயில் புறப்பட தயாரானது 
அந்த குலுங்களுடன்

அருகில் இருந்தவர் பேச்சு கொடுக்க அடுத்த நொடியே வாழ்க்கையில் இலக்குதான் முக்கியம் என்று அவருடைய அனுபவத்தை பகிர்ந்து அறிவுரையும் சொன்னார். ..

ஜன்னலின் வெளியே ஓடிச்செல்லும் மரங்கள்
சக பயணிகளின் சிரிப்பு,
எங்கோ தொலைவில் கரைந்துபோகும்
நிலையப் பலகைகள்—
ஒவ்வொன்றும் நினைவுகளாய் பதிந்தன.....

இயற்கையின் மடியில்
ஒரு இசை போல ஒலித்தது.இரயிலில் லேசான அந்த தாலாட்டில் ...

ஜன்னல் வழியே
குளிர்ந்த காற்று நுழைந்தது,
மண் வாசனை, ஒவ்வொரு ஊர்களின் நில அமைப்பு, இயற்கை கொடுத்த உழவு பூமி, கால்நடைகள்,
பச்சை பச்சையாக விரிந்த வயல்கள்,நெற்பயிர்கள் இதையெல்லாம்  கன்னத்தில் கையை வைத்தபடி அழகான காட்சிகளை இரசித்த படி சென்றேன்  அற்புதமான அந்த முதல் பயணத்தில். நான் மட்டுமா சகபயணிகளும் தான்.

தூரத்தில் மலைகள் ஆள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காடு. இரயில் ஒலி எழுப்பி வேகத்தை அதிகப்படுத்தி போனது. சட்டென  வளைவான பாதையில் மெதுவாக போனது வெளியே அவசரமாக ஓடிச்சென்று பார்த்தேன் முதல் பெட்டியில் இருந்து கடைசி பெட்டி வரை,  வளைந்து செல்லும் இரயிலின் கண்கொள்ளா காட்சி ..

ஒரு சிறிய ஆறு. அதன் மீது பாலம்.
ரயில் கடக்கும் போது பயத்தோடு  நண்பனுடன்  கடந்த அந்த அனுபவம் வார்த்தைகளால் சொல்ல முடியாது .
ஒவ்வொரு சந்திப்பிலும் பலதரப்பட்ட மக்கள் மற்ற பயணங்களை  விட வேறுபட்டது தான் இரயில் பயணம் ..

மரங்கள்
கை அசைத்து வழியனுப்பின.
பறவைகள்
இரயிலோடு  போட்டி போட்டு பறந்தன.
அந்த நிமிடத்தில் இரைச்சலான
நகரத்தின் சத்தங்கள் எல்லாமே
எங்கயோ  மறைந்துவிட்டன.

சூரியன் மறையும் மாலைப்பொழுதில்
வானம்  இளஞ்சிவப்புமாக
வண்ணம் பூசப்பட்டது.அந்த வானத்தை நோக்கி பயணித்த இரயில் அழகான பயணமாய்
அந்த நிறங்களில்
என் மனமும் கலந்தது.

       இரயில் பயணங்கள் வெறும் இடமாறுவது இல்லை அது மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும். நெடுந்தூர பயணம் அமைதியை கொடுக்கும். பல நினைவுகளை அழகாக்கும்.  அதுபோல தான் வருடங்கள் பல கடந்தாலும் நெஞ்சில் நீங்காத நினைவலையாக இந்த இரயில்  பயணித்து கொண்டே இருக்கிறது .. 
« Last Edit: December 25, 2025, 10:54:49 PM by mandakasayam »

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1442
  • Total likes: 3039
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
இரயில் பயணம் என்றலே எதிர்பாராத அனுபவங்களைத் தரும் ஒரு பயணிப்பு தானே. என் வாழ்க்கையிலே  நான் சற்றும் எதிர்பாராத ஒரு நீண்ட பயணம் , புது பயணம் , இன்னும் தொடரும் ஒரு பயணம் , பல நினைவுகளைத் தரும் பயணம் இந்த FTC  பயணமே. 

🚆 அரட்டை அறையில் ஒரு இரயில் பயணம் 😄
அரட்டை அறைன்னா அது சும்மா ஒரு இணைய தளம் கிடையாது நண்பர்களே…

என்னை பொறுத்த வரையில் அது ஒரு முடிவே இல்லாத இரயில் பயணம்! 🚆

கம்ப்யூட்டர் ஸ்கிரீன்ல ஓடுற எழுத்துகள்தான் அந்த இரயிலோட பெட்டிகள்.
நிக் நேம்கள்தான் பயணிகள்.

DP இல்லாத முகங்கள், ஆனா நிறைய கேரக்டர்ஸ்.! 😄
இந்த அரட்டை இரயில், ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிற்கும்…
ஒவ்வொரு ஸ்டாப்பும் ஒரு ஊர் மாதிரி.

அங்கிருந்து புதுசா சிலர் ஏறுவாங்க

👉 Hi all
👉 Good morning
👉 Any girls?
👉 Silent readers
👉 Admin irukkaara?
என சிலர் பயணத்தைத்  தொடங்குவார்கள்.

சிலர் ஜன்னல் ஓரத்துல சும்மா  நிக் பார்க் போட்டுக்கிட்டு எனக்கென்ன என்று  உட்கார்ந்திருப்பாங்க.

சிலர் ஏறின 2 நிமிஷத்துல முழு பெட்டியையும் கலகலப்பாக்குவாங்க.

சிலர் நலம் விசாரிச்சிட்டு இறங்கிடுவாங்க .

சிலர் ஏன் ஏறினோம் என்கிற குழப்பதிலே கடைசி வரை இருப்பாங்க .

சிலர் ஆஸ்தான பயணிகளாகப்  பல வருடமாய்  இதே பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டுப்  பயணிக்குறாங்க   .
பலரின் பயணத்தை அழகான பயணமா மாற்றுவதில் இந்த பயணிகளின் பங்களிப்பு அளப்பரியது.
 
என்னுடைய இந்த FTC  இரயில் பயணத்தில் நான் பலவகையான மனிதர்களைச் சந்தித்துள்ளேன் .


மேதைகள்
எல்லாம் தெரிஞ்ச அறிவாளிகள்
உபதேச ஞானிகள்
காமெடி பீசுகள்
வேடிக்கை அளிப்பவர்
சும்மா வம்பு இழுக்க வந்த ரவுடிகள்
தப்பை சரியாய் புரிந்து கொண்டவர்கள்
சரியை தவறாகப் புரிந்து கொண்டவர்கள்
பாசத்தின் அதிபதிகள்
இசை பிரியர்கள்
சில CCTV என இங்க எல்லா ரக மனிதர்களும் உண்டு.


ஒரு கமெண்ட்  போட்டா,
அதுக்கு 10 மீம்ஸ்,
20 பதில்  கமெண்ட்ஸ்,
3 சண்டை,
1 பிளாக் 😜
என சிரிப்பும் கலாய்ப்பும் இங்க டிக்கெட் இல்லாம கிடைக்கும்!

சில சமயம் இந்த பயண பெட்டியில் சில நேரம் வம்பு வரும்…

“அதை அப்படி சொல்லல”
“நான் அப்படி நினைக்கல”
“நீ புரிஞ்சுக்கல”

உடனே நம்ம TTR  அவர்களை தனியே வேறு பயணப்பெட்டிக்கு அழைத்து தீர்வு வழங்கி அனுப்பி வைக்கும் வழக்கமும் உண்டு 😆

ஆனா அதுக்குள்ளேயே உதவி, ஆதரவு, ஊக்கம் எல்லாம் இலவசம் .

அது மட்டுமா , திறமைசாலிகளின் கிடங்கு எங்க  இந்த அரட்டை இரயில்.

ஒருத்தர் கவிதை எழுதுவார் ✍️
ஒருத்தர் கதை சொல்லுவார் 📖
ஒருத்தர் பாடுவார் 🎤
ஒருத்தர் RJ மாதிரி அரட்டை அடிப்பார் 😄

பிறந்தநாள் வந்தா…
முழு அரட்டை அறையும் கல்யாண வீடு மாதிரி! குதூகலமடையும் . 🎂🎉

இங்க காதலும் வரும் 💕
பெயரும் முகமும் தெரியாம,
“typing…”லேயே மனசு இணையும் அதிசயம்!
சில நட்புகள் ஒரு ஸ்டாப்பிலேயே இறங்கிடும்…
சில நட்புகள் கடைசி ஸ்டேஷன் வரைக்கும் கூடவே வரும் . ❤️💛💜

இந்த அரட்டை இரயில்,
ஒரே இடத்துல வாழ்க்கையோட எல்லா கேரக்டர்களையும் சந்திக்குற இடம்.
சிலர் ஏறுவாங்க,
சிலர் இறங்குவாங்க…

ஆனா அந்த நினைவுகள் மட்டும் மனசுக்குள்ள Always Online 😌

நம்ம வாழ்க்கையைப் புரிய வைக்குற ஒரு அழகான பயணம்! என்னுடைய இந்த FTC இரயில் பயணம் 🚂

வேதனிஷா AR.

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 71
  • Total likes: 477
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நான் என் அம்மாவின் கருவில் இருக்கும் போதே என் ரயில் பயணம் ஆரம்பித்தது.தூர இடங்களுக்கு செல்லும்போது அம்மா ரயிலில் தான் பயணித்தார்.ரயில்வே அலுவலகத்தில் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு,அந்தக் கடவையில் டிக்கெட்டை touch பண்ணார்.கடவை திறக்கப்பட அம்மாவும் உள் நுழைந்தார்.அறிவித்தல் பலகையில் எத்தனையாவது platform என அம்மா நோக்கமிட்டு, "ஐயோ ரயில் வர 5 mins இருக்கே" என்று கூறியவாறு platform ஐ நோக்கி ஓடினார்.
   
    அம்மா ஓடும் போது அம்மா வயிற்றில் இருந்து நான் குதூகலத்தில் அங்கு இங்கும் புரண்டுகிட்டிருந்தேன்.ஆஹா நான் ரயிலில் போகப் போறேனே என்ற சந்தோசம் என் மனதில் துளிர்விட்டது.அறிவிப்பு ஒன்று என் காதுகளில் விழுந்தது "இன்னும் சற்று நேரத்தில் ரயில் platform ஐ நெருங்க உள்ளது".சூ-சூ என்று  விசில் எழுப்பியவாறு பெரிய ஒரு உருவம் என் கண்முன்னே!
     "என்னடா இது இவ்வளவு பெட்டிகள் இருக்கு வளைந்து வளைந்து போகுதே? பெட்டிக்குள்ளே டிரைவரை காணோம். வா அம்மா ஓடிடலாம்" என்று நான் பயந்து அலறுவது என் அம்மாவுக்கு கேட்கவில்லை.அம்மாவின் கால்கள் ரயில் பெட்டியை நோக்கி விரைந்தன.பெட்டியின் கதவுகளில் இருந்த open button press பண்ண கதவு திறக்கப்பட்டது.அம்மா இருக்கையில் அமர, அம்மாவுக்குள் நான் அமர்ந்து இரசித்தேன்.

    தண்டவாளங்களில் சக்கரங்களின் "கிளிக்-கிளாக் "ஒலியும்,ரயில் விசிலின் "சூ-சூ" ஒலியும் என் செவிகளில் இசை விருந்து அளித்து.சீக்கிரம் அம்மா வயிற்றில் இருந்து வெளிவந்து அந்த இருக்கையில் அமர்ந்து இரசிக்க ஆசைப்பட்டேன் .என் ஆசை சீக்கிரம் நிறைவேறியது.

     நான் பூமிக்கு அவதரித்து கூட அந்த இருக்கையில் அமர முடியவில்லை.health & safety என்று சொல்லி குழந்தைகள் இருக்கைகளில் அமர்வதற்கு தடை.stroller இல் அமர்ந்து இயற்கையை இரசித்து வந்தேன்.நாள் ஒரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து ஐந்து வயதை அடைந்து விட்டேன்.அந்த வயதில் அப்பாவுடன் ரயில் பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்பினேன்.
 
   மனதில் எழுந்த கேள்விகள் அனைத்தையும் அப்பாவிடம் கேட்டு விட்டேன்."அப்பா இவ்வளவு பெட்டி இருக்கே ஒரு பெட்டிக்குள்ள தானே டிரைவர் இருக்கிறார்?"அப்போது அப்பா சொன்னார் "பெட்டிகள் அனைத்தும் இரும்பு வடங்களால் பொருத்தப்பட்ட தானேமா இருக்கு பயப்படாதே என்று" அப்பா "வளைந்து வளைந்து போகும் போது எதிலும் முட்டிக்காதா?" . "இல்லம்மா அதுக்கு ஏற்பதான் தண்டவாளம் பொருத்திருப்பாங்க"."கண்ணாடி வழியே பார்க்கும் போது ஏன் அப்பா எதிர் திசையில் மரங்கள் ,கட்டடம் எல்லாம் வருது"."அது சார்பு இயக்கம் தேனு"

      "ஐயோ என்னப்பா இது இருட்டா இருக்கு. எதுவும் தெரியல பயமா இருக்கு" "இது ரெயின் underground இல்  போகுதம்மா" சூப்பரா இருக்கு அப்பா.எடுத்துட்டு வந்த ஸ்நேக்ஸ் தாங்கப்பா சாப்பிட்டுகிட்டே இரசிச்சுக்கிட்டு வாரேன்.ஆஹா ரெயின்ல ஸ்நேக்ஸ் சாப்பிடுவது எவ்வளவு சந்தோஷம்.

  அப்பா என்னது எதிர்ப் பக்கம் இன்னொரு ரெயின் வருது.ஐயோ முட்டிக்க போகுதே!இல்லம்மா தண்டவாளம் track change ஆகும் பாரு .தேனு அந்த ரெயின் இல் ஏதும் வித்தியாசம் பார்த்தியா?ஆமா அப்பா.driver இல்லை அப்பா.மேலே பாரு ஒரு electric cable la train touch பண்ணிட்டே போகுதல்லவா?இது automatic electric train.

நானும் அண்ணாவும் ரெயில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஓடி திரிந்து விளையாடினோம்.பல விதமான மனிதர்கள் பல்வேறு தேவைகளுக்காக அந்த ரெயிலில் பயணித்தனர்.அப்பா நானும் train ட்ரைவரா வர போறேன்.என் அண்ணா "யாரும் உயிரோட இருக்கிறது பிடிக்கலையா உனக்கு" என கிண்டல் பண்ணான்.எனக்கு ரெயில் பயணம் ரொம்ப பிடிச்சிருக்கு.

  அம்மா ,அப்பா ஆரம்பித்து வைத்த ரெயில் பயணம்..... தொடர்ந்து நண்பர்களுடன் சுற்றுலா செல்ல,... பல்கலைக்கழகம் செல்ல,...என் பணிக்கு செல்ல,...அயல்நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள ...
என் வாழ்வில் ரயில் பயணம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.இந்த உலகில் நான் அதிகம் விரும்பும் பயணம் ரயில் பயணம்.

« Last Edit: December 25, 2025, 10:40:04 PM by Thenmozhi »

Offline Luminous

நான் சின்ன வயசுல ரொம்ப train-ல போனதில்ல… ரேர்-ஆ தான் போவோம்.
ஒரு தடவை family-யோட கும்பகோணம் போகும்போது நடந்த சம்பவம் இது.
எதிர்ல ஒரு family உட்கார்ந்திருந்தாங்க. அப்பா, அம்மா, இரண்டு பசங்க, ஒரு பையன், ஒரு பொண்ணு. என் age-தான் இருக்கும், height-உம் same. அப்போ எனக்கு வயசு சுமார் 6 இருக்கும். நான் அப்போ ரொம்ப சேட்டை…
ஒரு நிமிஷம் கூட அமைதியா இருக்க மாட்டேன்.
எதையாவது பேசிட்டே இருப்பேன், இங்க ஓடுவேன், அங்க ஓடுவேன்…
என்னை சமாளிக்குறது mummy-க்கு ரொம்ப கஷ்டம். எப்பவும் திட்டுறது தான்,
சில நேரம் அடி கூட விழும் 😄 ஆனா எதிர்ல இருந்த அந்த family-யை பாருங்க…அவங்க பசங்கள ஒருபோதும் அடிக்கல, திட்டல. ரொம்ப அன்பா பார்த்தாங்க. நிறைய snacks கொடுத்தாங்க, என்னோடையும் பேசிட்டு, விளையாடிட்டு வந்தாங்க.
அதைப் பார்த்து எனக்கு ஒரே feeling…
அந்த family-யோட mummy ரொம்ப பிடிச்சு போச்சு.
Daddy-கிட்ட போய்,
“நாம அந்த mummy-யை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?”
ன்னு சொல்லி அழுதேனாம் 😆
Daddy, mummy எல்லாம் என்னை சமாதானம் பண்ண முயற்சி பண்ணினாங்க.
இப்போ கூட அந்த incident-ஐ
Daddy-கிட்ட சொல்லுவேன்.
அப்பவே அந்த mummy-யை கூட்டிட்டு போகலாம்னு சொன்னேன்,
இந்த mummy-யை train-லேயே விட்டுடலாம்னுன்னு சொல்வேன்.
அவர் சிரிச்சுக்கிட்டே,
நான் கேக்கல, அது என் தப்புதான் பாப்பான்னு சொல்வார்.
அதை நினைச்சாலே இன்னைக்கும் சிரிப்பு வருது.Mummy-கிட்ட சொன்னா,
அவங்க சிரிச்சுக்கிட்டே,
அந்த train-லேயே என்னைத் தொலைச்சிருந்தா,
நீ ரொம்ப happy-யா இருந்திருப்பாளாம்...
ன்னு சொல்லுவாங்க.
அதை கேட்டு நானும், எதுவுமே சொல்லாம
சிரிச்சுக்கிட்டே ஓடிப்போவேன் 😄
இதுல இருந்து பெரிய கருத்து எல்லாம் எதுவும் இல்ல.
ஆனா என் life-ல இது ஒரு super fun moment.
Daddy-mummy fight வந்தாலே,
இந்த story-யை எடுத்துச் சொன்னா போதும்
உடனே சிரிச்சு சமாதானம் ஆகிடுவாங்க.
அதனால்தான்…
என் வாழ்க்கையில இருக்குற  நல்ல, positive-ஆன incident
இங்க share பண்ணினேன்.
படிச்ச எல்லாருக்கும் thanks 😊
LUMINOUS 💚🧡💛💜😇

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1813
  • Total likes: 2299
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
     எனது முதல் ரயில் பயணம்   எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நெடும் தூரம் ரயிலில் பயணம் செய்தது இல்லை. என் முதல்  பயணமே நான் கல்லூரி முடித்து  வேலைக்குச் சென்று மூன்று வருடங்களுக்கு பின்பு தான் .அப்பொழுதும் எனக்கு சிறிது மனதில் பதற்றம் கலந்த அச்சத்துடனே  இருந்தேன்.

     எனது நண்பர் அவரின் வீட்டிற்கு அழைத்து செல்ல என் முதல் பயணம் தொடங்கியது. ரயிலில் முன்பதிவு மற்றும் முன்பதிவு ஸ்லீப்பர் ஆக  ரயில் பெட்டிகள்  நிறைய நிறைய இருந்தது .அதெல்லாம் புரியாமலே சென்ற நாள் அது .எங்களுக்கு  ரயில் மாலை 5:30  .எங்களுக்கு  அலுவலகம்  4  மணிக்கு  செல்வதற்கு அனுமதி வழங்கியது.

நாங்கள் பேரூந்தில் சென்றால் தாமதம்  ஆகும் என்று எண்ணி ,மோட்டார் சைக்கிளில் சென்றோம். தாமதம் ஆக  கூடாது என்று ஆர்வத்தில்  என் நண்பர் முன்பதிவு செய்த டிக்கெட்  எடுத்து தன் கரங்களில் வைத்து இருந்தார்.எனக்கு முதல் தடவை என்பதால் எனக்கு எந்த தடம் என்பதும் தெரியாது.

    நாங்கள் மோட்டார் சைக்கிளை எழும்பூர் ரயில் நிலையத்தில் வாகனம்  நிறுத்தும் இடத்தில்  நிறுத்திவிட்டு  கிளம்பலாம் என்று  பார்த்தால், பார்க்கிங் வாகனங்களால் நிரம்பி விட்டது. பார்க் பண்ண முடியாது னு சொல்லிட்டாங்க .உடனே பைக்கை எடுத்து மெட்ரோ பார்க்கிங் ல போட்டோம்.

    நேரம் இப்போ 5 .10 ஆகியது .உடனே ரயில்வே  ஸ்டேஷனில் எங்கே ரயில் னு எந்த ப்ளட் போரம் னு  தேடிட்டு இருந்தோம்.  டிக்கெட் ல பிளாட்போம் 5  என இருந்தது.ஆனால்  டிஸ்பில்  அந்த ரெயில் இல்லை .அறிவிப்பிலும் வரவில்லை நேரம் 5:18 ஆகியது. நான் டிக்கெட் காட்டுங்க னு என் நண்பரிடம் கேட்டேன் .அவரு கொடுத்தார் .நான் பார்த்ததும் ஷாக் ஆனேன் என மச்சி இதுல சென்னை செண்டரில் டு ஈரோடு னு போட்டு இருக்கு. எழும்பூர் ல இருக்கோம் னு கேக்க அவர் சொன்னாரு மச்சி நான் திருச்செந்தூர் போற ஞாபகத்தில் இங்க வந்தேன் னு .

   நேரம்  5.20 ஆகிவிட்டது. என்ன பண்ணலாம் பைக் வேற பார்க்கிங்கில் போட்டோம். அது எடுத்து எழும்பூரில்  இருந்து சென்றால் கூட ரெயில  பிடிக்க முடியாது. லோக்கல் ரெயில் பிடிக்கலாம் என்று  பார்த்தால்  எப்படியும் லேட்டா ஆகிடும். உடனே யோசிச்சோம் மெட்ரோல போய்டுவோமானு .அவரும் போவோம் என்று  சொன்னாரு .மெட்ரோ கு பொய்  டிக்கெட் வாங்கி 5 நிமிடத்தில் மெட்ரோ ரயில் வந்த உடனே "இரு ஓடு ஓடு ஓடு "னு ஓடி 5:30 க்கு ரெயில  பிடித்த உடனே புறப்பட்டது.  ரயில் பயணம் மறக்கவே முடியாது என் நண்பனுக்கும் எனக்கும் சிரிப்பு. என்னடா பண்ணி வச்சிருக்கா? இதுக்கு மேல உன்ன நம்பி வருவேனா? ரெயில நினைத்த படி இனிதே சென்றது முதல் ரயில் பயணம்...

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால