"உன்
கயல்விழிப் பார்வையில் மயங்கி
அன்பெனும் மழையில் நனைந்து
காதலெனும் கடலில் மூழ்கி
கண்டெடுத்தேன் முத்தாக உன்னை
சரி என்று சொல்லடி பெண்ணே
சாகும் நொடி வரை
சந்தோஷமாய் உன் கரம் பிடித்து
என் கண் போல காப்பேன்" என்றவன்
மணம் முடித்து மக்களை பெற்ற பின்
சிறு சிறு அலையெல்லாம் ஒய்ந்து
சீரிப்பாயும் சுனாமியாய் உருவெடுத்து
கடைசியாய் கேட்ட வார்த்தை
"எப்ப வந்ததடி உனக்கு இவ்வளவு திமிர்?"
ஒரு நொடியும் தயங்காமல்
பட்டியலிடத்தொடங்கினேன்
மணம் முடித்த நாள் முதல் தேக்கி வைத்த
என் மனக் குமுறல்களை..
கண் போல காப்பேன் என்று கூறி
கடுஞ்சொற்களை கூர் வாள் போல வீசினாயே
அன்று முதல்
கலங்கி நின்ற நெஞ்சமதை
தேற்ற யாருமின்றி அனாதையாய் நின்றேனே
அன்று முதல்
சாகும் நொடி வரை காப்பேன் என்றதை கேட்ட இச்செவி
செத்துத்தொலை என்ற உன் வார்த்தையையும் கேட்டதே
அன்று முதல்
அழாமல் காப்பேன் என்றவனே
என் அழுகையின் காரணமானானே
அன்று முதல்
என் வேதனைகளை கூறி அழ
அதை செவிசாய்க்க ஒருவரும் இல்லை என அறிந்த
அன்று முதல்
இப்படியாய்
என் வேதனையை நானே தேற்றி
என் கண்ணீரை நானே துடைத்து
எனக்காய் இனி நான் மட்டுமே என உணர்ந்து
இவ்வுலகை எதிர்த்து என் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நொடியில்
'என்னால் முடியும்" என்ற எண்ணம் என் கரங்களை பற்றிக்கொண்டது
இதை திமிர் என்று நீ கோறினால்
அது என் திமிராகவே இருக்கட்டும்.....