Author Topic: பாரதியார் இறப்பில் உள்ள உண்மை காரணம்...  (Read 6 times)

Offline MysteRy


தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம் செப்டம்பர் 11. நினைவு நாள் விழாக்களில் பேசும் பலரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தாக்கியதில் பாரதியார் இறந்தார் என்று சொல்வது வழக்கம். ஆனால் பாரதியார் யானை தாக்கி இறக்கவில்லை.

யானை தாக்கிய சம்பவம் 1921 ஜூன் மாதத்தில் நடந்தது. அதன் பின்னர் பாரதியார், சுதேசமித்திரன் அலுவலக வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதுடன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அது பற்றி கட்டுரையும் கொடுத்துள்ளார். திருவல்லிக்கேணி கோயிலில் இருந்த அர்ஜுனன் என்ற யானைக்கு பாரதியார் எப்போதும் பழம் கொடுப்பது வழக்கம். அவ்வாறே அந்த சம்பவ நாளிலும் பழம் கொடுத்தார். மதம் பிடித்திருந்த யானை, அவரை தன் காலடியில் இழுத்துப் போட்டுக் கொண்டது. பாரதியார் யானையின் காலுக்கு அடியில் கிடந்தார். நெருங்கி செல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை. செய்தி கேட்டு ஓடி வந்த குவளைக்கண்ணன், யானை கட்டப்பட்டிருந்த இடத்தின் கம்பி வேலியைத் தாண்டி சென்று பாரதியை தூக்கிக் கொண்டு வந்தார். யானை இழுத்துப் போட்டதில் பாரதியாருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. மண்டயம் சீனிவாச்சாரியார் மற்றும் சிலர் பாரதியாரை ஒரு வண்டியில் வைத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள். சில நாட்கள் வலியால் அவதிப்பட்ட பாரதியார் வழக்கம்போல தனது பணிகளை செய்ய தொடங்கினார்.

1921 செப்டம்பர் ஒன்றாம் தேதி பாரதியாருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அது மேலும் கடுமையாக மாறியது. வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த பாரதியாரை உடன் இருந்து கவனித்துக் கொண்டவர்கள் பரலி சு.நெல்லையப்பர், நீலகண்ட பிரம்மச்சாரி லட்சுமண ஐயர் ஆகியோர். செப்டம்பர் 11ஆம் தேதி இரவு இவர்களுடன் பேசிய பாரதியார் ஆப்கானிஸ்தான் மன்னர் அமானுல்லா கான் பற்றி ஒரு கட்டுரை எழுதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியதாக நீலகண்ட பிரம்மச்சாரி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த நாளில் திருவல்லிக்கேணியில் பாரதியின் வீட்டிலிருந்த செல்லம்மாள் பாரதியும், மகள் சகுந்தலா பாரதியும் எழுதிய பதிவுகளே பெரிதும் முதல்நிலையில் கொள்ளத்தக்கனவாகும். இவர்கள் நூல்களுள்ளும் செல்லம்மாள் பாரதி பெயரிலான நூல் அவர் சொல்லக் கேட்டு மூத்த மகள் தங்கம்மாள் பாரதி எழுதியதாகும். சகுந்தலா பாரதி எழுதிய நூலில் உள்ளவையே நேரடிப் பதிவுகள் என்று கொள்ளத்தக்கனவாகும்.

அந்த நிகழ்ச்சியை சகுந்தலா பாரதி பின்வருமாறு விவரித்திருக்கின்றார்:

சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்த என் தந்தை ஒரு நாள் யானைக்குப் பழம் கொடுக்கப் போனார். யானைக்கு மதம் பிடித்திருந்ததால் நான்கு கால்களுக்கும் சங்கிலி போட்டுக் கட்டப்பட்டிருந்தது. ஜனங்கள் கம்பி வேலிக்குப் புறம்பே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

என் தந்தை வழக்கம் போல வாழைப்பழத்தை யானையின் அருகில் சென்று கொடுத்தார். துதிக்கையை நீட்டி பழத்தை வாங்கிய யானை, அவரைத் துதிக்கையால் கீழே வீழ்த்திவிட்டது. யானையின் நான்கு கால்களுக்கும் இடையில் விழுந்துவிட்டார். கீழே பாறாங்கல் பரவிய தரை. என் தந்தை எழுந்திருக்கவில்லை. முகத்தினின்றும் இரத்தம் பெருக்கெடுத்துவிட்டது. யானை தன் நண்பனுக்கு தீங்கிழைத்துவிட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல, அசையாமல் நின்றுவிட்டது. அது தன் காலை ஒருமுறை அசைத்திருக்குமானால் அத்துடன் பாரதியார் கதை முடிந்திருக்கும். சுற்றி நின்றிருந்த ஜனங்கள் திகைத்துவிட்டார்கள். உள்ளே நுழைந்து அவரைத் தூக்க ஒருவருக்கும் தைரியம் இல்லை. அந்த வேளையில் எங்கிருந்தோ வந்தான் குவளைக் கிருஷ்ணன். தன் உயிரைத் திரணமாக மதித்து உள்ளே குதித்து என் தந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தான். பின்னர் கேட்க வேண்டுமா? ஜனங்கள் அவரைத் தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்திற்குக் கொண்டு வந்தார்கள். எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீனிவாஸôசாரியாருக்கு விஷயம் எட்டியது. அவர் ஓடிவந்து ஒரு வண்டியில் என் தந்தையைப் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனார். குவளைக் கிருஷ்ணனும் கூடவே போனான்...

மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால் ஏற்பட்ட காயம். தலையில் நல்ல பலமான அடி. மண்டை சிதைவுற்று இருந்தது. நல்ல காலமாக, அவரது பெரிய தலைப்பாகை இருந்தபடியால் தலை தப்பிற்று.