Author Topic: கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள்...  (Read 85 times)

Offline MysteRy


காடுகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு காட்டு யானைகள் எப்போதும் ஒரு தொந்தரவாகவே இருக்கும். வயல்கள் அழிப்பதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் அவைகளின் வாடிக்கையாக இருக்கிறது. இவற்றை விரட்ட மனிதன் பலவகை முயற்சிகளை செய்து வருகிறான். அந்த முயற்சிகள் பலவற்றில் யானைகள் காயம் அடைந்தன. மனிதர்கள் இறந்தனர். யானைக்கும் மனிதனுக்குமான இந்த போராட்டத்தை சுமுகமாக மாற்றுவதற்கு வனத்துறை ஒரு வழியைக் கண்டுபிடித்தது. அதுதான் யானையை வைத்தே யானையை விரட்டுவது.

சரி, நாம் வளர்க்கும் கோயில் யானைகளை வைத்து விரட்டலாமே என்றால், அது முடியாது. கோயில்களில் இருக்கும் யானைகள் எல்லாமே பெண் யானைகள்தான். அது மட்டுமல்ல, பிறந்ததில் இருந்து மனிதர்களை பார்த்தே வளர்வதாலும், ஒரே இடத்தில் கட்டிப்போட்டு இருப்பதாலும் அவைகள் பலம் குறைந்து மென்மையாகி விடுகின்றன. காட்டு யானைகளை நேரில் பார்த்த மாத்திரத்திலேயே இவைகள் கதி கலங்கி போய்விடும்.

அந்த நிலையில் உருவானதுதான் காட்டு யானைகளை வைத்தே காட்டு யானைகளை விரட்டுவது என்ற திட்டம். இதற்காக காடுகளில் அடிபட்டு கிடக்கும் யானைகளைக் கொண்டு வந்தார்கள். அவற்றிற்கு மருத்துவம் செய்து பழக்கப்படுத்தி, அதிலிருந்து பலசாலி யானைகளை தேர்ந்தெடுத்தார்கள். அவற்றை 'கும்கி' என்று அழைத்தார்கள்.

கும்கிக்கு ஆண் யானைகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். நல்ல வாட்டசாட்டமான ஆண் யானைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றுக்கு நீளமான தந்தம் இருக்கும். தந்தம் என்பது யானைக்கு தனி கம்பீரத்தை கொடுப்பது. நீண்ட பெரிய தந்தம் கொண்ட யானையைப் பார்த்து மற்ற யானைகள் பயம் கொள்ளும்.

இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கும்கி யானைகள் முழுவதுமாக குணமடைந்தபின், அவற்றுடன் பாகன்கள் நெருங்கிப் பழகத் தொடங்குவார்கள். ஆரம்பத்தில் அவர்களை பக்கத்தில் வரவிடாமல் யானை விரட்டியடிக்கும். அதையும் மீறி மெல்ல மெல்ல அருகே செல்வார்கள். முதலில் இனிப்பான கரும்புத் துண்டுகளை கொடுத்து பழக்கப்படுத்துவார்கள். காட்டில் கரும்பு கிடைக்காது. முதன்முதலில் இனிப்பை சுவைக்கும் யானை அந்த சுவைக்கு மயங்கும். அடிமையாகும். தொடர்ந்து வெல்லம் கொடுப்பார்கள். இப்போது இன்னும் கொஞ்சம் மயக்கம் கொள்ளும். ஆனாலும் காட்டு யானைகள் சாமானியப் பட்டவைகள் அல்ல. அவ்வளவு எளிதில் மனிதனுக்கு வசப்படாது.

பின் எப்படி வசப்படுத்துகிறார்கள்?

பிடிபட்ட காட்டு யானைகளுக்கான பயிற்சிகள் மிகக்கடுமையாக இருக்கும். யானைகளுக்கான முதல் பயிற்சியாக அதன் துதிக்கையில் ஒரு குச்சியைக் கொடுத்து பாகனுடன் நடந்து வர பழக்குவார்கள். பின்னர், காலை மடக்குவது, முட்டி போடுவது போன்ற பயிற்சிகள் இருக்கும். காதை தும்பிக்கையால் பிடித்துக் கொண்டு இடது, வலது என சுற்ற வைக்கும் பயிற்சியும் உண்டு. யானை சின்னதோ, பெரியதோ, குட்டியோ, வயதானதோ, வா, போ, முட்டி போடு, இதைத் தூக்கு என்று ஒருமையில் மட்டுமே பாகன்கள் அதை அழைப்பார்கள். வயதான பெண் யானையாக இருந்தால் அடிப்படை பயிற்சியோடு சில கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும். காரணம் பெண் யானைகளுக்குப் புத்திக்கூர்மையும், நுண் உணர்வுகளும் அதிகம். பாகன்களுடன் நெருங்கிப்பழகும் குணம் அவற்றுக்குண்டு. பிடிபட்டது ஆண் யானை என்றால், அது பருவமடைந்த பிறகுதான் பயிற்சிக்கு அனுப்பப்படும். அப்போதுதான் வேகமும், மூர்க்க குணமும் நிறைந்ததாக விளங்கும்.

பயிற்சி கொடுக்கும் பாகனின் உத்தரவுதான் யானையைச் செயல்படத்தூண்டும். மற்ற நேரங்களில் அமைதியாகவே இருக்கும். குரல் கட்டளைகளின் முதல் பாடம், 'ஜமத்'. தன் காலில் கட்டியிருக்கும் இரும்புச்சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் கட்டளையே இது. பாகனிடமிருந்து இந்தக் குரல் வந்ததும் உடனே சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும். மரங்களை இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துவரும்போது சங்கிலிக்குக் கொடுக்கும் இறுக்கம்தான் மரங்கள் தவறி கீழே விழாமல் காக்கும். அதற்காகத்தான் இந்தப் பயிற்சி. அடுத்ததாக வெட்டப்பட்ட மரங்களை கீழே சாய்ப்பதும், அதைத் தூக்குவதும், நகர்த்துவதும், இழுத்துவருவதுமாகவே இருக்கும். அதற்கான கட்டளைகளைப் பாகன்கள் சொல்லிக்கொடுப்பார்கள். இப்படிக் கொடுக்கப்படும் அனைத்து அடிப்படியான பயிற்சிகளுமே பாகனுக்குக் கீழ் படிதல் மற்றும் மரங்களுடன் தொடர்பு படுத்துவதாகவே இருக்கும்.

காட்டுயானைகளைப் பிடிக்கும் பயிற்சி வேறு விதமாக இருக்கும். அவை இன்னும் கடுமையானவை. இந்தப் பயிற்சியில் பாகனின் பங்கு அதிகம். ஒவ்வொரு கட்டளையும் யானையை உற்சாகப்படுத்தி வேகமாக செயல்படவைப்பதாக இருக்கும். குறிப்பாக, 'நிர்கே' என்ற கட்டளை. காட்டு யானைகளை மடக்கிப் பிடிக்கும்போது அவை அதிக மூர்க்கமாக இருந்தலோ அல்லது பிடிபடாமல் தப்பிச்செல்ல முயன்றாலோ, பாகன் நிர்கே என்று சொல்வார். அதைக் கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் எதிரே நிற்கும் காட்டு யானையை முட்டித் தள்ளி கீழே சாய்த்துவிடும்.

'கும்கி' என்ற வார்த்தை இந்தி மொழியிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு சில முரட்டு காட்டு யானைகள் சிறிதும் அச்சமின்றி கும்கி யானைகளை தனது தந்தத்தால் குத்த ஆக்ரோஷத்துடன் ஓடி வரும். அப்படி வரும் யானைகளை இரும்புச் சங்கிலி மற்றும் மரக்கட்டையால் திருப்பித் தாக்கும் டெரர் பயிற்சியும் கும்கிகளுக்கு உண்டு. கும்கி பயிற்சி, தினமும் இருவேளை என்று 15 முதல் 30 தினங்கள் வரை கொடுக்கப்படும். பயிற்சி முடிந்ததும் யானையை முகாமில் வைத்து ஒத்திகை நடக்கும். தமிழகத்தில் முதுமலை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில் மட்டுமே கும்கிகள் உள்ளன. நமது நாட்டில் மிகச் சிறந்த கும்கி யானைகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன. அபிமன்யூ, அர்ஜூனன், கஜேந்திரன் போன்ற கும்கி யானைகள் இந்திய அளவில் பிரபலமானவை. வேட்டைக்கு புறப்பட்டுவிட்டால் வெற்றி மட்டுமே முடிவாக இருக்கும். தென் இந்தியாவில் இருந்து வட மாநில காட்டு யானைகளையும் அடக்க இவை அழைக்கப்படுமாம். இப்படி வெற்றி டேட்டாக்களுக்கு இடையில், களத்துக்குச் சென்ற கும்கி யானையும், அதன் பாகனும் காட்டு யானைகளால் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறன.

காட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.

ஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.

தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவரை தன் மீது அமர அனுமதித்துவிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கத் தொடங்கிவிடும். சரியான பயிற்சியால் அத்தனை பெரிய பலம் பொருந்திய யானை ஓரு சாதாரண மனிதனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கும்.

யானைகளைப் பழக்கப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாருமில்லை. அதிலும் குரும்பர்கள் எனப்படும் பழங்குடியினர், யானைகளின் மொழி தெரிந்தவர்கள். அவற்றின் மனநிலையைப் புரிந்தவர்கள். அதனால் முரட்டுத்தனமான இந்த கும்கி யானைகளை குறும்பர்கள் மட்டுமே அடங்குவார்கள்.

ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் இருப்பார்கள். ஒருவர் குரு பாகன். மற்றவர் சிஷ்யப் பாகன். பாகன்களின் குரு சிஷ்ய உறவு பெரும்பாலும் தந்தை - மகன் அல்லது அண்ணன் - தம்பி உறவாகவே வரும். குரு பாகன் இல்லாத போது யானையை கவனித்துக் கொள்வது சிஷ்யப் பாகன்தான்.

ஒரு யானை 50-60 ஆண்டுகள் வரை உயிரோடு வாழும். ஒரு பாகனின் வாழ்க்கை அந்த யானையோடு முடிந்து போகும். யானைக்கும் பாகனுக்குமான உறவு விவரிக்க முடியாத ஒரு பாசப்பிணைப்பு. பாகனுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் யானை காப்பாற்றும்.

ஒருமுறை யானையைக் குளிப்பாட்டக் கூட்டி சென்ற பாகன் நன்றாக குடித்துவிட்டு போதையில் காட்டுக்குள்ளே விழுந்துவிட்டான். நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே சுற்றி சுற்றி வந்தது யானை. மாலை நேரம் முடிந்து, இருள் கவ்வத் தொடங்கியது. பாகன் எழுந்திருப்பதாக இல்லை.

இருட்டிய பிறகு காட்டுக்குள் இருப்பது ஆபத்து. எந்த விலங்கும் பாகனைக் கொன்று விடலாம் என்பதை உணர்ந்த யானை, மண்டியிட்டு குனிந்து தனது நீண்ட இரண்டு தந்தங்களையும் பாகனின் உடலுக்கு கீழே கொடுத்து அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு பத்திரமாக அவனது வீட்டில் கொண்டு போய் சேர்ந்தது.

தன் கண்முன் பாகனை யாராவது துன்புறுத்தினால் யானையால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒருமுறை பாகன் ஒருவன், ஒரு தாதாவிடம் கடன் வாங்கியிருந்தான். அதைக் கேட்க வந்த தாதா பாகனை அடிக்கத் தொடங்கினான். தாதா அடித்ததுமே அவனுடன் சேர்ந்து வந்திருந்த அடியாட்களும் சேர்ந்து பாகனை அடிக்கத் தொடங்கினார்கள். இதை தூரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த கும்கி யானை பார்த்துக்கொண்டே இருந்தது. அதனால் பாகன் அடிபடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இங்கும் அங்குமாக திமிறியது. சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவர முயன்றது. பிளிறியது. ஆற்றாமையால் அழுதது. இறுதியாக பின்னங்காலில் கட்டியிருந்த சங்கிலி அறுந்தது. வேகமாக ஓடிவந்த யானை, மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது.

பாகனை அடித்து முடித்துவிட்டு சற்று தொலைவில் நடந்து போய் கொண்டிருந்தவர்களை நோக்கி வேகமாக ஓடியது. துதிக்கையால் அவர்களை தூக்கி வீசியது. வீடுகளை அடித்து நொறுக்கியது. ஆத்திரம் தீர்ந்ததும், மீண்டும் தனது இருப்பிடம் திரும்பியது. வேதனையோடு சோகமாக அமர்ந்திருந்த பாகனிடம் வந்து படுத்துக் கொண்டது. இப்படி நூற்றுக்கணக்கான கதைகள் முதுமலையில் இருக்கிறது.

பாகன்களும் பாசத்தில் சளைத்தவர்கள் அல்ல. அந்த யானைக்கு எல்லாமே அவர்கள்தான். ஒரு யானையை நீரோடையில் படுக்க வைத்து குளிப்பாட்ட கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு கனமான இரும்பு கம்பிகள் கொண்ட பிரஷ்ஷால் யானையின் உடல் முழுவதும் அழுத்தித் தேய்ப்பார்கள். ஒரு அழுக்கு இல்லாமல் எடுத்துவிடுவார்கள். கை வலி பின்னி எடுக்கும். மணிக்கட்டும் தோள்பட்டையும் கழன்று போவதுபோல் வலிக்கும். ஆனாலும் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது யானைக்கு மசாஜ் செய்வது போல் சுகமாக இருக்கும்.

கும்கி யானையை பகலில் கட்டிப்போட்டு வைத்திருப்பாரக்ள். இரவில் கட்டவிழ்த்து விட்டு விடுவார்கள். அந்த யானை காட்டுக்குள் சென்று வரும். காட்டு யானைகளுடன் சேர்ந்து திரியும். சில சமயம் பெண் யானைகளுடன் உறவும் கொள்ளும். ஆனால், காலை விடியும் முன்னே மணியடித்தாற் போல் பாகன் வீட்டின் முன்னே வந்து நின்றுவிடும்.

இப்படி பாகனை தேடி வருவதற்கு காரணம், பாகனின் அன்பு மட்டுமல்ல. தினமும் கிடைக்கும் கரும்பு, வெல்லம். பின்னர் மசாஜ் போல் சுகமான குளியல். இதில்தான் யானைகள் மயங்கி விடுகின்றன. காட்டில் இந்த சுகமும் ருசியும் கிடைப்பதில்லை. அதனால்தான் கும்கிகள் பகலில் நாட்டு யானைகளாகவும், இரவில் காட்டு யானைகளாகவும் வாழ்கின்றன. விளைச்சல் நேரத்தில் காட்டு யானைகள் உணவுக்காக ஊருக்குள் வரத் தொடங்கும். அப்போது அவைகளை கும்கி யானை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடிக்கும். நன்றாக பயிற்சி பெற்ற கும்கி யானை எப்படிப்பட்ட காட்டு யானையையும் அடித்து துரத்திவிடும். கும்கி யானைகள் தங்களின் பாகன்களைத் தவிர வேறு யாரையும் அருகே நெருங்க விடாது." என்று கூறி முடித்தார் ஆர்.செந்தில்குமரன்.