Author Topic: மௌனம் என்றால் என்ன ? 🀄🀄  (Read 66 times)

Offline MysteRy

மௌனம் என்றால் என்ன ? 🀄🀄
« on: October 21, 2025, 08:04:41 AM »

காற்றுக்கு இலைகள் அசைகின்றன;
மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை.

அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.

சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான். மௌனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.

பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப்பெரியது. அதனால்தான் ஞானிகளும் பெரிய மேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மௌன விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

மௌனம் ஒரு மகத்தான கலை. அது தெய்வீகக் கலை.

பிரஞ்சு மொழியில் ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் உண்டு.

ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வரும்.

தமிழ் வார்த்தையில் நாலைந்து அர்த்தங்கள் வரும்.

ஆனால், மௌனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.

பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன். பேசிக் கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.

ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களை விட, ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள், உலகத்தைக் கவர்ந்து விட்டது. காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது.
நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.

ஆரோக்கியத்திற்கும் மௌனம் மிக அவசியம்.

மனிதர்களைவிட, பல மிருகங்களுக்கு அதிக வயது.

அவற்றைவிட மரங்களுக்கு அதிக வயது.

அவற்றைவிட மலைகளுக்கு அதிக வயது.

காரணம் அவை பேசாமலும், அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே.

மௌனத்தின் சக்தியை உணர்ந்துதான் தவம் புரிந்தார்கள்; நிஷ்டையில் அமர்ந்தார்கள்; மௌன விரதம் மேற்கொண்டார்கள்.

நீண்ட நாள் பேசாமல் இருப்பது என்பது, ஒருவகை நிர்வகல்ப சமாதி;
அதை மேற்கொண்டவன் ஞானத்தைத் தேடினால் அது கிடைக்கும்.