Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
இது ஓட்ஸ் அரசியல்! 🍜🍜
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இது ஓட்ஸ் அரசியல்! 🍜🍜 (Read 5 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225610
Total likes: 28433
Total likes: 28433
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
இது ஓட்ஸ் அரசியல்! 🍜🍜
«
on:
Today
at 08:38:30 AM »
உணவு உற்பத்தியைப் பெருக்குவதும், முறையாக உணவைப் பகிர்ந்து தருவதும் அரசின் தலையாய கடமை. இதற்கு உற்பத்தி மற்றும் விநியோக முறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், இன்று நடப்பது என்ன?
உணவு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், தன்னிறைவு பெறுவதே தங்களின் நோக்கம் என்று ஒரு காலத்தில் அரசாங்கம் முழக்கமிட்டது. இன்று விவசாயிகளைப் பார்த்து, ‘ஏன் விவசாயம் பார்க்கிறீர்கள்… விட்டுவிட வேண்டியதுதானே?’ என்று கேட்கும் நிலையை அரசே உருவாக்கி உள்ளது. விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்களும் உர நிறுவனங்களின் கொள்ளைக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளும் ஒன்றுசேர்ந்துதான் இன்று உணவுப் பிரச்னையாக வெடித்திருக்கிறது.
உணவுப் பொருளை உற்பத்தி செய்கிற விவசாயியை, பணப் பயிர்களை மட்டுமே உற்பத்தி செய்பவனாக மாற்றியது இன்றைய வேளாண்மை. அத்துடன் விவசாயி உற்பத்தி செய்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதுடன், தரகு வணிகர்களின் ஆதாயத்துக்காக சந்தையை சூதாட்டக் களமாக்கியது. கடுமையான விலைவாசி உயர்வு, நில மோசடி, விவசாயக் கடன் சுமை என்று உணவுப் பிரச்னையின் வேர்கள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன.
மரபான காலை உணவுக்கு மாற்றாக ஓட்ஸ் சாப்பிடுங்கள்; செரல் சாப்பிடுங்கள் என்று விளம்பரங்கள் கூறுகின்றன. செரல் சாப்பிட்டால் அழகான பொலிவான உடல் கிடைக்கும் என்று இளம்பெண்கள் பொய்யாக நம்புகின்றனர்.
காலை உணவுச் சந்தையைக் கைப்பற்ற இன்று வணிக நிறுவனங்களுக்குள் பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. காரணம்… காலை உணவு என்பது பெரும்பாலும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது; அவசரமாகத் தயாரிக்கப்படுவது. அந்தச் சந்தையைக் கையகப்படுத்திவிட்டால் கோடி கோடியாக அள்ளலாம் என்பது கணக்கு. இதற்காகப் புதிது புதிதாகக் காலை உணவுகள் முளைக்கின்றன.
இந்தியாவில் பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்காகச் செலவிடப்படும் தொகை ரூ.16,300 கோடி. இதில் உணவு விளம்பரங்கள் மட்டும் ரூ.4,500 கோடி. உணவு நிறுவனங்கள் தங்களின் உணவு ஆராய்ச்சிக்காக செலவிடுவது வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே. 48 சதவிகிதத் தொகை, விளம்பரத்துக்காக செலவிடப்படுகிறது. ஒரு ஓட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்ற ஆண்டு இந்தியா முழுவதுமான அதன் விளம்பரத்துக்காகச் செலவிட்ட தொகை ரூ.416 கோடி. இவ்வளவு விளம்பரம் செய்து ஏன் ஓட்ஸை சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள். நம் உடல் நலத்தின் மீதான அக்கறையால் இல்லை. இந்தச் சந்தையை உருவாக்கிவிட்டால் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்பதுதான் நோக்கம்.
2000 வருஷங்களுக்கு மேலாகவே ஓட்ஸ் பயிரிடப்பட்டு வந்தாலும், அது பெருமளவு கால்நடைகளுக்கான உணவாகவே அறியப்பட்டது. 90 சதவிகிதம் குதிரைகளுக்கான உணவாக விநியோகம் செய்யப்பட்டது. ஓட்ஸின் தமிழ் பெயர் ‘காடைக்கண்ணி’ ஆகும்.
குளிர்ப் பிரதேசங்களில்தான் ஓட்ஸ் விளைகிறது. குறிப்பாக ரஷ்யா, கனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, பின்லாந்து, போலந்து போன்ற நாடுகளில் ஓட்ஸ் அதிகம் விளைகிறது. 1513-ல் அமெரிக்காவுக்கு வந்த ஸ்பானியர்கள் வழியாக ஓட்ஸ் அங்கு அறிமுகமானது. அதுவும் ஸ்பானியர்களுடன் வந்த ஆப்பிரிக்க மூர்களே இதை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அப்போது குறைவான அளவிலே ஓட்ஸ் பயிரிடப்பட்டது. அதுவும் குதிரைக்கான உணவாகவே பயிரிடப்பட்டது. கடலோடியான கேப்டன் பார்த்தலோமியோ மூலம் 1602-ல் அறிமுகமான ஓட்ஸ், அமெரிக்காவின் எலிசபெத் தீவில் பயிரிடப்பட்டது. 1786-ல் ஜார்ஜ் வாஷிங்டன் 580 ஏக்கரில் ஓட்ஸ் பயிரிட்டிருக்கிறார். கடந்த 200 வருடங்களில் அது அமெரிக்காவில் பிரபலமான தானியமாகிவிட்டது. இன்று 1,80,000 ஏக்கர் பரப்பளவுக்குப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் இமயமலைப் பகுதியிலும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார் பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது.
கால்நடை உணவாக இருந்த ஓட்ஸ் எப்படி மனிதர்கள் சாப்பிடும் உணவாக மாறியது? குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகம் தேவை. அதே நேரம் குறைவான உணவால் அதிக சத்தைப் பெற வேண்டிய நிலை அடித்தட்டு மக்களிடம் இருந்தது. அப்படித்தான் அது உணவாக மாறியது. அத்துடன் அதன் வைக்கோல் குதிரை, மாடுகளுக்கு உணவாகிறது. ஓட்ஸில் இருந்து மதுபானங்கள் தயாரிப்பதும் தொழிலாக மாறியிருக்கிறது.
18-ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்தில் ஓட்ஸ் சாப்பிடுவதைக் கேவலமாகக் கருதினர். அத்துடன், அது ஸ்காட்லாந்துகாரர்கள் சாப்பிடும் உணவு; இங்கிலாந்தில் குதிரைகள் மட்டுமே ஓட்ஸ் சாப்பிடும் என்றுபரிகாசம் செய்தனர். இதற்குப் பதிலடி தரும்விதமாக, ‘ஓட்ஸ் சாப்பிடுவதால்தான் இங்கிலாந்தில் நல்ல குதிரைகளும், ஸ்காட்லாந்தில் நல்ல மனிதர்களும் வசிக்கிறார்கள்’ என்று ஸ்காட்லாந்து மக்கள் மறுமொழி தந்தனர். ஓட்ஸை பிரதான உணவுப் பொருளாக விற்பனை செய்வதற்கு ஒரு அமெரிக்க நிறுவனம் 1870-ல் மிகப்பெரிய விளம்பர வேலையைத் தொடங்கியது. அவர்களின் ஓட்ஸ் பாக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு இலவசப் பரிசு பொருட்களைக் கொடுத்தனர். முதன்முதலாக தொலைக்காட்சியில் இடம்பெற்ற பகட்டான உணவு விளம்பரம் ஓட்ஸ் விளம்பரமே. அத்தோடு ஓட்ஸ் சாப்பிடுவர்களுக்கான போட்டி, இலவச ஓட்ஸ் விநியோகம், இலவச சுற்றுலா என மாறி மாறி சலுகைகளை அறிவித்து அந்த நிறுவனம் கடந்த 140 வருடங்களில் அமெரிக்காவின் முக்கிய சந்தையைக் கைப்பற்றியது.
இந்தியாவிலும் ஆதிகாலத்தில் குதிரைகளுக்கு உணவாகவே ஓட்ஸ் தரப்பட்டது. ஆனால் ஓட்ஸ் கஞ்சி குடிப்பது வட இந்தியாவின் சில பகுதிகளில் இருக்கிறது. 1994-ல் ஒரு பன்னாட்டு நிறுவனம் காலை உணவாக ஓட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அன்று அவர்கள் முன்பிருந்த சவால்… சூடான காலை உணவை சாப்பிட ஆசைப்படுகிற இந்தியர்களை எப்படி குளிர்ந்த பாலில் ஊறவைத்த ஓட்ஸ் சாப்பிட வைப்பது என்பதே. இதற்காக நிறைய விளம்பரங்களை உருவாக்கினார்கள். முழு பக்க விளம்பரம் கொடுத்தார்கள். விளையாட்டு போட்டிகளை ஸ்பான்சர் செய்தார்கள். ஆனால், மக்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதன் அடுத்தகட்டமான ஓட்ஸ் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரிய மருத்துவமனைகளைத் தங்களின் நுழைவு வாயிலாக பிடித்துக்கொண்டார்கள். மருத்துவர்களுக்குப் பரிசுகளை அள்ளிக்கொடுத்தார்கள். அத்துடன் ஓட்ஸில் உள்ள எளிதாகக் கரையும் நார்ச்சத்தான பீட்டா குளுகோன் இதயத்தைப் பாதுகாக்கக் கூடியது; புரோட்டின், வைட்டமின் ஈ உள்ளது; ஆகவே ஆரோக்கியத்துக்கு நல்லது எனக் கூறி டாக்டர்களைப் பரிந்துரை செய்யச் சொல்லி தங்களின் விற்பனையைத் தொடங்கினார்கள்.
இதற்காக இந்தியா முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும் இவற்றை முதன்மைப்படுத்தின. விளைவு… ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது என்ற முழக்கம் நாடெங்கும் உரத்துக் கேட்க ஆரம்பித்தது. ஆரோக்கியத்தை விற்பனைப் பொருளாக்கி இந்திய சந்தையைக் கைப்பற்றியது ஓட்ஸ். 2006-ல் 2,22.4 கோடியாக இருந்த ஓட்ஸ் விற்பனை 2011-ல் 7,515 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த விற்பனை மேலும் அதிகரித்தபடியே உள்ளது. இது 2016-ம் ஆண்டில் 1,565 கோடியை எட்டும் என்று கூறுகிறார்கள். இன்றும் கிராமப்புற மக்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை விரும்பவில்லை. அதற்கு முக்கியக் காரணம் பாலில் இதை கலந்து சாப்பிடச் சொல்வதால்தான். இதனால் சூடாக ஓட்ஸ் சாப்பிடுங்கள் என்று புதிய விளம்பர உத்தியை உருவாக்கி உள்ளன அந்த நிறுவனங்கள். காலை உணவாக இதைப் பிரபலப்படுத்துவதற்காக தேன், பழச்சுவை, புதினா, ரெடிமேட் என்று 20 மாறுபட்ட ஓட்ஸ் ரகங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இத்துடன் ஷாப்பிங் மால்களில் இலவச பாக்கெட்டுகளைக் கொடுத்துச் சமைத்துப் பாருங்கள் என்று அள்ளி அள்ளித் தருகிறார்கள்.
ஓட்ஸில் உள்ள பி – குளுக்கான் என்பது கரையக் கூடிய நார்ச்சத்து. இதனால் ஓட்ஸ் ஜீரணமாவதற்கு அதிக நேரம் ஆகிறது. சாதாரண ஓட்ஸ், அரிசியைப் போல 45 நிமிடங்கள் வேக வைக்கப்பட வேண்டியது. ஆனால், துரித சமையலுக்காக இன்ஸ்டன்ட் ஓட்ஸ் மூன்று நிமிடங்களில் வேகும்படி உருவாக்கப்படுகிறது. ஸ்டீல் கட் ஓட்ஸ், ஐரிஷ் ஓட்ஸ், ரோல்ட் ஓட்ஸ் என பலவிதங்களில் வெட்டப்பட்டு ஓட்ஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இவை செயற்கை முறையில் இயந்திரங்களின் அதிக சூட்டில் அவல் ஆக்கப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என்கிறார்கள். இதைச் சந்தைப்படுத்துவதில் பெரும் துணை செய்பவர்கள்… சூப்பர் மார்க்கெட் எனும் பல்பொருள் அங்காடிகள் வைத்திருப் பவர்கள்தான். அவர்கள் முன்வரிசையில் இந்தப் பொருட்களை வைத்து விற்பனை செய்வதன் வழியே அதிக சலுகைகளைப் பெறுகிறார்கள். இதைச் சாப்பிட்டால் இடை மெலியும் என இளம்பெண்களை தன் பக்கம் இழுக்கின்றன இதைத் தயாரிக்கும் கம்பெனிகள். இது வடிகட்டிய பொய்.
இந்திய அளவில் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய மூன்று பெருநகரத்தினர் இதை விரும்பிச் சாப்பிடுவதில் முன்னணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, கேரளாவில் 39 சதவிகிதத்தினர் காலை உணவாக ஓட்ஸை சாப்பிடுகிறார்கள் என்கிறது நீல்சன் புள்ளிவிவரம். இந்தியாவின் காலை உணவாகப் பரவிவரும் ஓட்ஸ் சந்தையை யார் கைப்பற்றுவது என்று ஐந்து முக்கிய நிறுவனங்களுக்கு இடையே பலத்த போட்டி. ஐந்தில் மூன்று அமெரிக்க நிறுவனங்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உற்பத்தியாகும் ஓட்ஸை இந்தியாவின் பிரதான காலை உணவாக மாற்றுவதன் வழியே அவர்கள் கோடான கோடி லாபம் அடைய முடியும். இதற்காக இந்திய சந்தையை கபளீகரம் செய்ய முனைகிறார்கள். பாரம்பரியமாக நமது விளைநிலங்களில் விளைந்த கம்பும் கேப்பையும் உளுந்தும் விலையில்லாமல் முடங்குகின்றன. இந்த விளைச்சலை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. ஆனால் ஓட்ஸ் சந்தையை உருவாக்கி நமது தானியங்களை நாமே குழி தோண்டி புதைக்க தயார் ஆகி வருகிறோம். சிறு தானியம், பயறு வகைகளில் தயாரிக்கப்படும் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சிக்கு சற்றும் குறைவில்லாதது. ஆனால் இதை விளம்பரப்படுத்த யாரும் கோடியாகப் பணம் செலவிடுவது இல்லை என்பதால் எளிதில் புறக்கணித்துப் போகிறோம் என்பதே கண்முன்னுள்ள நிஜம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
இது ஓட்ஸ் அரசியல்! 🍜🍜