Author Topic: எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு இருக்கும் ஆனால், அனுபவத்திற்கு இல்லை எல்லை.  (Read 172 times)

Offline MysteRy


நம் நினைவு இருக்கும் வரை வாழ்க்கையில் அனுபவம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

சிலர் தவறுகளை உணர்ந்து, கிடைத்த அனுபவங்கள் மூலம் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள்.

சிலர் தாம் பெறும் அனுபவங்களை உணராமலே தங்கள் வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள்.

எது நடந்தாலும் அதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்வேன். தவறு இருந்தால் அடுத்த முறை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன்.

இது போல அனுபவம் பெற்றுக்கொண்டே இருந்தாலும் அது வற்றாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது வியப்பை அளிக்கும்.

ஒரு விசயத்தில் இது தான் இறுதி என்று நினைத்தால், அதில் ஏதாவது நடந்து இன்னும் மேம்படுத்தலாம் என்று இன்னொரு அனுபவம் கிடைக்கும். இதை எல்லாம் உணருகிறேன் என்பதே மகிழ்ச்சி.

பதறிய காரியம் சிதறிப் போகும் என்ற பழமொழி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை. எதோ போகிற போக்கில் கூறியது அல்ல.

பதட்டமாக இருந்தாலே எதையும் யோசிக்க முடியாது. நம் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்த முடியாது, அவசரத்தில் தவறான முடிவுகளை எடுப்போம்.

காதலன் படத்தில் ஷங்கர் (பாலகுமாரன்), சந்தோசமோ துக்கமோ ஐந்து நிமிடம் பொறுங்கள் என்று சொல்வாரே அது ஒரு சாதாரண காட்சியாகத் தெரிந்தாலும் பின்னர் கிடைத்த அனுபவங்களில் யோசித்தால் அது எவ்வளவு பெரிய உண்மை என்று உணர முடிகிறது.

நம் பணியில் அனைத்துமே சுமூகமாகப் போகும் என்று கூற முடியாது. உடன் பணி புரிபவர்களுடன் சண்டைகள், வாக்குவாதங்கள் என்று நிறைய இருக்கும்.

சில நேரங்களில் அவமானங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.

இது போலப் பிரச்சனைகள் மின்னஞ்சல்களில் சர்வ சாதாரணமாக வரும். ஏதோ ஒரு காரணத்தால் நம்முடன் பணி புரிபவர் மிகவும் அநாகரீகமாகச் சண்டையிட்டு / நம்மை அவமானப்படுத்தும் படி மின்னஞ்சல் அனுப்பி விடுவார்கள்.

நாம என்ன செய்வோம்.. “மவனே டேய்.. என்னையவே இப்படி கேட்டுடுட்டியா.. இப்ப கொடுக்கிறேன் பார் பதில்” என்று, நாமும் யோசிக்காமல் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் காரசாரமாகப் பதில் அனுப்புவோம்.

கடைசியில் அது அங்கே இங்கே என்று சென்று பெரிய தலைவலியில் முடிந்து விடும். பிறகு “நாம கொஞ்சம் ஓவராத் தான் போயிட்டோமோ” என்று தோன்றும்.

இந்தப் பிரச்சனை அனைவருக்கும் பொருந்தும் என்றாலும், ஐடி துறையில் உள்ளவர்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனை. இது போன்ற சமயங்களில் பொறுமை அவசியம்.

நம் கோபத்தை தூண்டுவதாக ஒரு மின்னஞ்சல் வருகிறது என்றாலே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், வெளியே எங்காவது சென்று வருவது / காஃபி குடிப்பது.

அலுவலக நண்பரல்லாத யாருக்காவது தொலைபேசியில் அழைத்துப் பேசுவது என்று நம் மனதை வேறு விசயத்தில் திருப்புவது தான். கொஞ்ச நேரம் சென்ற பிறகு, திரும்ப வந்து படித்து அதே கோபம் இருந்தால், அதை அப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டு பதில் அனுப்பாமல் இருந்து விட வேண்டும்.

நிதானத்திலேயே சரியான பதில்கள் தோன்றும். பிறகு மனது நிதானத்திற்கு வந்த பிறகு திரும்பப் படித்தால் சிறப்பான பதில் கூற மனதில் புது பதில்கள் தோன்றி இருக்கும்.

அதாவது உடனே அவசரப்பட்டு அனுப்பி இருந்தால் சில முக்கியமான கேள்விகள் நினைவிற்கு வராது, சொதப்பலாகப் பதில் அனுப்பி அசிங்கப்பட்டு இருப்போம்.

அனுப்பிய பிறகு நினைவு வந்து.. அடச்சே இதைக் கேட்டு இருக்கலாமே... விட்டுட்டோமே என்று கடுப்பாகி விடும்.

நிதானத்திற்கு வந்த பிறகு இவை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவிற்கு வரும். எனவே இதன் பிறகு பதில் அனுப்பினால் நச்சுனு இருக்கும். நாமும் சரியான பதிலடி கொடுத்தோம் என்ற திருப்தி இருக்கும்.

அடுத்த முறை உடனே அனுப்பக் கூடாது என்று நினைப்பேன் ஆனால், கோபம் கண்ணை மட்டுமல்ல நம் அறிவையும் மறைத்து விடும். பேருக்குக் கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்துட்டு அனுப்பி பிரச்சனை ஆகி இருக்கிறது. அதைத் தான் மேலே கூறினேன்.

சில நேரங்களில் நமக்கு முன்னரே ஒருவர் பதிலளித்து நாம் பதிலளிக்க தேவையே இல்லாமல் சுமூகமாக முடிந்து இருக்கும்.

தற்போது சமூகத் தளங்கள் நம்மிடையே முக்கியப் பங்கு வகிக்கிறது. ட்விட்டர் ஃபேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் குறைவு. இதில் நாம் உணர்ச்சிப் புலியாக மாறி அவசரத்தில் ஏதாவது ஒரு நிலைத் தகவல் [ஸ்டேடஸ்] போட்டு விடுவோம்.. சில நிமிடங்களிலேயே “கொஞ்சம் ஓவராத் தான் போட்டுட்டோமோ! சரி எதுக்கு வம்பு” என்று அழித்து விடுவோம். இவை எல்லாம் அவசரப்படுவதினால் ஏற்படும் நிகழ்வுகளே.

எனவே, சென்சிடிவான கருத்துக் கூறும் போது கொஞ்சம் தாமதித்து, யோசித்து பின் நிலைத் தகவல் போட்டால் இந்தப் பிரச்சனைகள் வராது. அதோடு போடும் நிலைத் தகவலும் அருமையாக இருக்கும்.

நாம் முன்னர் கூறியது / எழுதியது தவறு என்று தற்போது தோன்றினால், நாம் அனுபவம் பெற்று இருக்கிறோம் என்று அர்த்தம்.

எனவே, செய்த தவறுக்காக வருத்தப்படாமல், நாம் தவறை உணர்ந்து அனுபவம் பெற்று இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளலாம்.

இன்று எழுதிய இக்கட்டுரையை, நான் இன்னும் ஆறு மாதம் / ஒரு வருடம் கழித்துப் படித்தால், எனக்கு இதில் நிறைய திருத்தங்கள் இருக்கும்.

இன்னும் சில முக்கியமானவற்றை கூறி இருக்கலாம், சிலவற்றை கூறாமல் இருந்து இருக்கலாம் என்று தோன்றும். இன்னும் கூறப்போனால் அடுத்த நாளே / வாரமே கூட இதில் திருத்தங்கள் தோன்றும்.

இந்த மாற்றங்களே இடைப்பட்ட காலங்களில் கிடைத்த அனுபவங்கள்.
எனவே, அனுபவம் என்ற ஒன்றை பெறாமல் ஒருவர் இருக்கவே முடியாது ஆனால், அதை நாம் உணருகிறோமா என்பது தான் விசயமே.

இதை உணர்ந்தால் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ளலாம். உணரவில்லை என்றால் காலத்திற்கும் அடுத்தவர்களைக் குறை கூறியே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.