என் அழகனின் வருகை ..
[/color]

என் அழகனின் வருகை ..
முருகன் சந்நிதியில் அலங்கார கந்தனின் வீதி உலா நோக்கி காத்திருந்த ஒரு இராப்பொழுது..
செண்டைமேளங்களும் , குழலொலிகளும் முருகனின் வருகையினை பறை சாற்ற...
நாசி துளைத்த ஊதுபத்தி, காற்றில் கூட தெய்வீகத்தை உணர செய்ய..
தனிமையில் கை கட்டி நின்ற நான் என் பார்வை அயலில் உள்ளவர்களிடம் பதிந்தது ..
வெண்மணலில் வீடு கட்டி சுத்தி ஓடி மகிழும் சிறார் கூட்டம்..
தலை முழுதும் மல்லிகையும் , பட்டுபுடவையுடன் நாணமும் அணிந்து கை கோர்த்து நடை பயிலும் புது மணத்தம்பதிகள்..
விழி வழி பெற்றோர் அறியாமல் காதல் ஜாடைகள் பரிமாறிக்கொள்ளும் நாளைய தம்பதிகள்..
செவ்வண்ண வேஷ்டி அணிந்து இருபுறமும் முருகனுக்கு வழி சமைக்கும் பக்த அடியார்கள்..
முதுமையிலும் வாழ்க்கைத்துணைக்கு வழித்துணையாக கை பிடித்து முருகனை எதிர்பார்த்து காத்திருக்கும் வயோதிகர்கள்..
வாங்கிய கடனுக்கு வட்டியாவது இன்று சேராதா ? என கூவி கூவி வியாபாரத்திற்கு அழைக்கும் பூ விற்கும் அக்காமாரும்,, கச்சான் விற்கும் பாட்டிமாரும்..
தான் பார்க்கும் முருகனை வீடியோ கால் வழி வெளி நாடு வாழ் தன உறவினருக்கு காட்டி மகிழும் உறவினர்கள்..
இளமையின் துடிப்புடனும் , செல்பிகளுக்கான போஸ்களுடனும் ஆங்காங்கே தென்பட்ட இளைஞர் கூட்டங்கள்..
எள்ளு போட்டால் எண்ணெய் ஆகும் அந்த சன கூட்டத்திலும்..
தனிமையின் தாக்கம் என்னை சூழ ....
பக்த அடியார்களின் அரோஹரா கோஷம் காதை பிளக்க.. மாலை காற்றும் என் கந்தனுக்கு வழி விட.. பூமாலை சூட்டி , புன்னகை பூண்டு, தன இரு பாரியார்களுடன்..
நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி பரி ஏறி வந்தான் என் அழகு முருகன்..