Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தந்திரக்கார நரிகள்...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: தந்திரக்கார நரிகள்... (Read 12 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223363
Total likes: 27912
Total likes: 27912
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
தந்திரக்கார நரிகள்...
«
on:
August 07, 2025, 08:44:13 AM »
“ ஒரு ஊரிலே…” என்று ஆரம்பிக்கின்ற அனேகமான சிறுவர் கதைகளில் நரிக்கு கட்டாயம் ஒரு முக்கிய இடமுண்டு. பாட்டி வடை சுட்ட கதையில் வரும் நரியின் தந்திரக் குணத்தை பாலர் பாடசாலையில் கேட்டுப் படித்த ஞாபகம் உங்களுக்கும் இருக்கும். கவிதைகளிலும், பாடல்களிலும் கூட நரி இடம்பெறுகின்றது. அண்மைக் காலமாக “நரி வருது, நரி வருது காக்கா காக்கா பறந்து வா…” என்ற சிறுவர் பாடல் அனேகர் மத்தியிலும் பிரபல்யமடைந்து வருகின்றது. ஒரு காலத்தில் நமது நாட்டிலும் கிராமப் புறங்களில் எல்லாம் நரிகள் பரந்து வாழ்ந்துள்ளன. நமது மூத்த தாத்தா, பாட்டிமாரிடம் கேட்டால் சொல்வார்கள். அந்த அளவுக்கு முன்னைய காலங்களில் மிக இலகுவாக நரிகளை எமது கிராமப் புறங்களில் காண முடியுமாக இருந்துள்ளது. ஆனால் இன்று மிருகக் காட்சி சாலையில் மட்டுமே சென்று பார்க்க முடியுமான அளவுக்கு நரிகள் அழிந்து குறைந்து சென்றுள்ளன. காண அரிதாகிச் சென்றுள்ள நரிகளைப் பற்றியும் அவற்றின் பயன்களைப் பற்றியும் இத்தொடரில் பார்ப்போம்.
நரி நாய் இனத்தைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்காகும். ஊனுண்ணி, பாலூட்டி விலங்கு வரிசையில் நரி இடம்பெறுகின்றது. உலகில் சுமார் 27 வகையான நரியினங்கள் உள்ளன. அவற்றுள் செந்நரி (Golden Jackal), இந்திய நரி (Indian Jackal) குள்ளநரி (Indian fox), பாலைவனக் குள்ளநரி (Desert Fox), செங்குள்ள நரி (Dhole) வங்க நரி (Bengal fox) பெனெக் நரி (Fennec fox) மற்றும் இமாலய நரி என பல வகை நரியினங்கள் காணப்படுகின்றன.
#உடலமைப்பு:
நாய் இனத்தின் மற்ற வகைகளான நாய், ஓநாய் போன்றவற்றைவிட அளவில் சிறியது. அழகிய குள்ளமான உடலமைப்பைக் கொண்டவைதான் நரிகள். நாய்களின் அல்லது ஓநாய்களின் முகச் சாயலை ஒத்திருப்பினும் அவற்றிலிருந்து நுணுக்கமான வித்தியாசத்தை இவை பெற்றிருக்கின்றன. தாடைப் பகுதியை வைத்து இவ் வித்தியாசத்தைக் கண்டுகொள்ளலாம். நீண்ட முகம், கருப்பு நிற மூக்கு, கபில, கருமை நிறக் கண்கள், ரேடார் போன்று எப்போதும் அங்கும் இங்கும் திரும்பியபடி சப்தங்களைக் உற்றுக் கேட்டுக்கொண்டிருக்கும் நீண்ட முக்கோண வடிவிலான இரண்டு காதுகள். ஒல்லியான நான்கு கால்கள், அடர்த்தியான பஞ்சு மேனி, அதேபோன்று நீண்ட அடர்த்தியான மயிர்களைகொண்ட வால் என்ற தோற்ற அமைப்பைக்கொண்டவை தான் இந்த நரிகள். இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50% முதல் 60% வரை இருக்கும்.
இன்னும் சில நரிகள் தோள், காது, கால்கள் போன்றவற்றில் அதிக வெள்ளையும், கருப்பும் கலந்த முடிகளுடன் காணப்படுகின்றன. வேறு சிலவை மஞ்சளும், சிகப்பும், கலந்த சாம்பல் போன்ற மண் நிறத்தில் உள்ளன. நன்கு வளர்ந்த ஒரு நரி சுமார் 9 கி.கி. பாரம் இருக்கும். பெண் நரியைவிடவும் ஆண் நரி பெரிதாக இருக்கும். இவை சுமார் 60-75 செ.மீ (2-2.5 அடி) நீளம் இருக்கும், உயரம் 36 செ.மீ (1 அடி 2 அங்குலம்) இருக்கும். பொதுவாக நடுத்தர நாயின் அளவிலேயே எல்லா வகையான நரிகளும் இருக்கும். ஆனால் பெனெக் (Fennec fox) வகையைச் சேர்ந்த நரி மட்டும் பூனையின் அளவே இருக்கும்.
#வாழிடங்கள்:
நரி இனமானது உலகில் அண்டாடிகாவைத் தவிர மற்றைய எல்லாப் பிரதேசங்களிலும் வாழும் தகவமைப்பெப் பெற்றுள்ளது. கடுங்குளிரான பனிபடர்ந்த ஆர்ட்டிக் முனைப் பகுதிகள் முதல் ஆப்பிரிக்காவின் சுடுநிலமாகிய சகாராப் பாலை வனம்வரை ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா என அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன.
நகரங்கள் அல்லது கிராமங்களுக்கு அருகில் உள்ள தாழ்வான அல்லது ஒதுக்குப் புறமான பகுதிகளில் பதுங்கி வாழ்கின்றன. வயல் வெளிகள், அடர்ந்த காடுகளில், சமவெளிகள், புதர்காடுகள், மலை மேலுள்ள புல்வெளிகள் என பல வகையான இடங்களில் மறைவாக வாழ்கின்றன. காட்டில் உள்ள குகைகளிலும், நிலத்தின் கீழ் அவற்றின் அளவுக்குப் பெரிதான வலைகளை அமைத்தும் வாழ்கின்றன. முன்பெல்லாம் கிராமங்களில் மனிதக் குடியிருப்புகள் காடுகளை அண்டி இருந்ததால் நரிகளைக் காண்பது இலகுவாக இருந்தது. இன்று காடுகள் அழிக்கப்பட்டு ஆங்காங்கே கான்கிரீட் காடுகள் முளைத்து நகரமயமாகியிருப்பதால் பல உயிரினங்களைப்போன்று நரிகளும் காண்பதற்கு அரிதான உயிரின வரிசையில் சேர்ந்திருக்கின்றன.
#வாழ்க்கை அமைப்பு:
நரிகள் கூட்டமாக குடும்பமாக வாழும் இயல்புடையவை. ஒரு நரிக் குடும்பத்தில் வளர்ந்த ஒரு ஆண் நரியும் இரண்டு, மூன்று பெண் நரிகளும் நரிக் குட்டிகளும் இருக்கும். பாதுகாப்பான சமவெளி, புல்வெளி, புதர் போன்ற இடங்களில் விசாலமான, ஆழமான பள்ளங்களைத் தோண்டி அதனைத் தமது வசிப்பிடமாக எடுத்துக்கொள்ளும். ஆண் நரி தமது வசிப்பிடத்தைச் சூழ சிறு நீரால் அடையாளப் படுத்திக்கொள்ளும்.
பருவம் அடைந்த ஆண் பெண் நரிகள் இணப் பெருக்கத்தில் இணையும். இணைந்து இரண்டு மாதங்களில் குட்டிகளை ஈன்றெடுக்கும். ஒரு தடவையில் ஒரு பெண் நரி, இரண்டிலிருந்து ஏழு குட்டிகள் வரை ஈனும். குட்டிகளை ஈனும் முன்பே அவற்றுக்கு சொகுசாக இருக்க இலைகளைப் பரப்பி, விரித்து மெத்தைபோன்று செய்யும். பின்னர் குட்டிகளை தாயும், தந்தையும் சேர்ந்து பராமரிக்கும். சில நேரங்களில் மூத்த சகோதர, சகோதரிகளும் உணவு கொண்டு வந்து கொடுக்கும்.
பகல் நேரங்களில் வசிப்பிடத்தில் குட்டிகளுடன் விளையாடி, படுத்து உறங்கிவிட்டு இரவு நேரங்களில்தான் வேட்டைக்குச் செல்லும். கூட்டமாகவே வேட்டைக்குச் செல்லும். இவை எந்த இடத்தில் வசிக்கின்றனவோ அதையொட்டியே, அவற்றின் வேட்டைப் பிரதேசமும் இருக்கும். வேட்டைக்கு அதிக தூரம் செல்லாது. பௌர்னமி இரவு நரிகளுக்கு மிகவும் விருப்பமான இரவு. அதில் அவை கூட்டமாகக் கிளம்பி மலை, குன்று உச்சிகளுக்கு ஏரி நிலவைப் பார்த்த வண்ணம் ஒன்று மாற ஒன்று ஊளையிட ஆரம்பிக்கும். உண்மையில் கிராமப் புறங்களில் பௌர்ணமியின் நிசப்தமான அந்த இரவுகளில் நரிகளின் ஊளைச் சப்தம் மட்டும் காதுகளில் வீழும்போது இனம்புரியாத ஒரு இனிமை மனதுக்குப் புரியும். முடிந்தால் அனுபவித்துப் பாருங்கள்.
#தந்திர வேட்டை:
நரிகள் தந்திரக் குணத்திற்குப் பெயர்பெற்றவை. அவற்றின் தந்திரம் வேட்டையாடுவதிலும் எதிரி விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதிலும் கூடுதலாகப் பயன்படுகின்றது. பிற விலங்குகளை ஏமாற்றி அவற்றின் உணவைத் திருடிக்கொண்டுவந்து உண்டுவிடும். கிராமப் புறங்களிலில் மனிதர்கள் உறங்கும் இரவு வேலைகளில் கள்ளத்தனமாக வந்து கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடிக்கொண்டு ஓடிவிடும்.
நரிகளுக்கு பூனை, நாய்களைப் போன்றே இரவின் இருளிலும் நன்றாகப் பார்க்க இயலும். அதேபோன்று இதன் செவிகள், பூமிக்கடியில் ஓடும் எலி போன்ற உயிரிகள் எழுப்பும் சப்தத்தையும் கேட்கும் திறன் படைத்தவை. மேலும் வெவ்வேறு வகையான குரல் ஓசைகளையும் பிரித்து அடையாளம் காணக்கூடியவை. மணிக்கு சுமாராக 72 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. இவற்றைப் பயன்படுத்தி இவற்றால் வேட்டையாடவும் தப்பியோடவும் முடியும். தமது வசிப்பிடத்தை அமைக்கும்போதுகூட பல வாயில்களை வைத்துக்கொள்கின்றன. ஒரு வாயிலால் ஆபத்து வந்தால் மற்றைய வாயிலால் தப்பித்துவிடும் தந்திரம்தான்.
#உணவு:
நரி ஊன் உண்ணி விலங்காகும். பிற விலங்குகள் வேட்டையாடித் தின்றுவிட்டு மிச்சம் வைத்துவிட்டுச் செல்லும் மாமிசப் பகுதிகளை இவை உண்ணும். அத்தோடு எலி, பல்லி, பாம்பு, அணில், நண்டுகள், கரையான், முயல்கள், பறவைகள், மயில்கள், பழங்கள் என அனைத்தையும் உண்ணும். இதன் வசிப்பிடம் கடலோரமென்றால் நண்டு, மீன்களையும்கூட வேட்டையாடிச் சாப்பிடும். பருவ கால மாற்றத்திற்கு ஏற்ப என்ன உணவு கிடைக்குமோ அவற்றை உண்ணும் பழக்கமுடையவை. பெரும்பாலும் கிராமப்பகுதிகளின் அருகில் தென்படும் நரிகள் அங்குள்ள கோழிகளையும் அவ்வப்போது பிடித்துச்செல்லும்.
#சூழல் சமநிலை பேணுவதில் நரிகள்:
நமது சூழலில் உள்ள சிறிய விலங்குகளின் துரித வளர்ச்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நரிகள்தாம். வனாந்தரங்களில் சிங்கம், புலி, சிறுத்தை முதலிய விலங்குகள் உணவுச் சங்கிலியின் மேல் நிலை வேட்டை விலங்குகளாக (Predators) விளங்குகின்றன. இவற்றிற்கு முதல் கட்டத்தில் இருப்பவை நரி, குள்ள நரி போன்ற விலங்குகள்தான். நரிகளின் முக்கியமான வேலையே காட்டு எலி, அணில், பல்லி போன்ற சிறிய விலங்குகளையும் மயில் போன்ற பறவைகளையும் வேட்டையாடி அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுதான்.
மயில்களின் முக்கியமான எதிரியாக இருப்பது நரிகள் தான். வயல்வெளிகளை ஒட்டி இருக்கிற இடங்களில் நரிகள் வசித்ததால்தான் மயில்கள் அவ்வளவாக வயல்பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஆரம்ப காலங்களில் வராமல் இருந்திருக்கின்றன. ஆனால் நரிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மயில்களின் எண்ணிக்கை அதிகமாகி விவசாய நிலங்களை சேதப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. அனேக விவசாயிகளுக்கு இப்போது பெரும் தலைவலியாக இருப்பது மயில்கள்தான். பழங்களையும் நரிகள் உட்கொள்வதால் வித்துப் பரம்பலுக்கும் உதவுகின்றது. வயற்புறங்களின் அருகாமையில் சுற்றித்திரியும் நரிகள் அங்குள்ள எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இதனால் எலிக் காய்ச்சல் நோய்கள் பரவுவதும் தடுக்கப்படுகின்றது.
#அழிவின் விளிம்பில் நரிகள்:
காடுகளில் வாழும் நரிகள் பெரும்பாலும் 3 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. எனினும் மிருகக் காட்சி சாலைகளில் பாதுகாப்பாக வளர்க்கப்படும் நரிகள் பத்து முதல் பன்னிரெண்டுக்கும் அதிகமான ஆண்டுகள்வரை உயிர் வாழ்வதுண்டு. இந்தியா மற்றும் இன்னும் சில நாடுகளில் நரி பற்றிய பிழையான மூட நம்பிக்கைகள் உண்டு. நரி முகத்தில் முழித்தால் நல்ல சகுனம், செய்யப்போகும் காரியம் நல்லபடியாக நடக்கும்.
நரியுடைய முடி, பல் வீடில் இருந்தால் நல்ல விடயங்கள் நடக்கும் என்ற எண்ணங்களும் உண்டு. எனவே நரியின் பல், எலும்பு , முடி, தோல் என்பவற்றை விற்பனை செய்யும் சந்தைகளும் சில நாடுகளில் காணப்படுகின்றன. எனவே இதற்காகவே நரிகள் பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. சீனா, கொரியா நாடுகளில் நாய் போன்று நரிகளும் உணவுக்காக கொல்லப்படுகின்றன.
மறைந்து வாழ்வதற்கான மனித சஞ்சாரமற்ற இடம் இல்லாமையும் ஒரு காரணம்தான். வாழிட இழப்பே இவை குறைந்து போனதற்கான முக்கிய காரணமாக அறியப்படுகிறது. உணவிற்காகவும், தோலுக்காகவும், வளர்ப்புப்பிராணிகளைக் கொன்று சாப்பிடுவதால் கண்ணி வைத்தும், விஷம் வைத்தும், வாகனங்களில் அடிபட்டும் நரிகள் பல இடங்களில் கொல்லப்படுகின்றன. இக்காரணங்களாலும் நரிகள் அழிந்து வருகின்றன. உண்மையிலே நரி ஒரு அழகான விலங்கு. மேற்கு நாடுகளில் நரியையும் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் இருக்கின்றனர்.
நாம் நரி முகத்தில் முழித்தால் அது நமக்கு நல்ல சகுனமாக இருக்குமோ இல்லையோ, நிச்சயமாக அது நரிக்கு கெட்ட சகுனம்தான். #பாவம் நரிகள்!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
தந்திரக்கார நரிகள்...