அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக நேரம் உறங்குவதால், அவர்களுக்கு பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பெண்களின் தூக்கத்திற்கும் நோய் பாதிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து வடக்கு கரோலினா பொதுசுகாதார பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வில் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
சராசரி 7 மணிநேர உறக்கம்
50 முதல் 79 வயதுவரை உடைய 93,676 வயதான பெண்மணிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 1994 முதல் 2005 வரை நாடுமுழுவதும் 40 மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளிகள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில் 37.5 சதவிகித பெண்கள் சராசரியக 7 மணிநேரம் உறங்குவதாக தெரிவித்தனர். 26.9 சதவிகித பெண்கள் 6 மணிநேரமும், 8.3 சதவிகித பெண்கள் 5 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதாக தெரிவித்தனர். மேலும் 22.7 சதவிகிதம் பேர் 8 மணிநேரம் உறங்குவதாகவும், 4.6 சதவிகிதம் பேர் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக உறங்குவதாகவும் கூறியுள்ளனர்.
பக்கவாத நோய் பாதிப்பு
இவர்கள் உறங்கும் நேர அளவைப் பொருத்து பக்கவாத நோய் பாதிப்பு கணக்கிடப்பட்டது. 7 மணிநேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருந்தது. 6 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்படுவது 14 சதவிகிதமாக இருந்தது. அதேசமயம் 9 மணி நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாதநோய் பாதிப்பு 70 சதவிகிதமாக இருந்தது தெரியவந்தது. எனவே குறைவாக உறங்குபவர்களை விட அதிக நேரம் உறங்குபவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ரத்தம் உறைந்து விடும்
50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில் தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் தங்களின் ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தூக்கம் கெட்டாலும் நோய் வரும், அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்து சராசரியாக 7 மணிநேரம் உறங்குவதே ஏற்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.