ஹாட்'டா காபி, டீ குடிங்க, 'ஹார்ட்'டுக்கு நல்லது!
டீ, காஃபி பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஆய்வு முடிவு ஒன்று வந்துள்ளது. அடிக்கடி டீ, காஃபி பருகுபவர்களை இதயநோய் தாக்கும் வாய்ப்பு குறைவு என்பதுதான்.
நெதர்லாந்து நாட்டில் டீ, காஃபி குடிக்கும் பழக்கமுள்ள 40000 பேரிடம் கடந்த 13 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிய அறிவியல் ஆதரங்கள் கிடைத்துள்ளன.
இதயநோய் பாதிப்பு
டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு முறை டீ அருந்துபவர்களுக்கு இதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
ஃப்ளேவனாய்டு பாதுகாப்பு
தேயிலையில் உள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் என்ற பொருள்தான் இதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைவதாக கண்டுபிடிக்கப்படவில்லை.
பால் சேர்த்த டீ
நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியாவில் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ தூளைப் போட்டு அருந்துவது வழக்கம். அதிகமான அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை. டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும்.
காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்குத்தான் கிடைக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காபியில் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஆய்வு முடிவு அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் என்ற அமைப்பின் சார்பில் வெளியாகும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் கருப்பு டீ
நம் ஊரில் பண்டைய காலத்தில் கருப்பட்டி காஃபி, பால் சேர்க்காத கருப்பட்டி தேநீர் தான் அதிகம் அருந்துவது வழக்கம். பால் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதற்குப் பின்னர் காபி, டீ யில் அதிக அளவு பால் சேர்க்கத் தொடங்கினர். இந்த ஆய்வு முடிவினை பார்க்கும் போதும், பால் விலை ஏற்றத்தை கவனத்தில் கொண்டும் மறுபடியும் பழைய முறைக்கே மாறினால் இதயத்தையாவது பாதுகாக்கலாம்.