Author Topic: புரிதல்  (Read 138 times)

Offline mandakasayam

புரிதல்
« on: June 25, 2025, 02:31:28 PM »
   இரவு 1 மணிக்கு மேல் ,

நல்ல அயர்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி , தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள்.

பக்கத்தில் கணவர் சுந்தரம் , உறங்காமல் கண்விழித்த படி இருந்தார்.

“என்னங்க , இவலோ நேரம் ஆகியும் தூங்காம இப்படி முழிச்சிட்டு இருக்கீங்க.? என்ன யோசனை ? “ என்று மெதுவாக கேட்டாள்.

அருகில் மகன் முருகன் உறங்கி கொண்டு இருந்தான்.

“ஒன்னும் இல்ல , நாளைக்கு காலைல முருகனுக்கு  ஸ்கூல் பீஸ் கட்டணும். அவன் கவர்மென்ட் ஸ்கூல்ல இருந்து தனியார் ஸ்கூல்ல படிக்கணும்னு ஆசை படறான். அவன் கூட படிச்ச பசங்க எல்லாரும் அங்க சேர்ந்து படிக்க போறாங்களாம். அங்க பீஸ் அதிகமா இருக்கு. நம்ம கிட்ட கைல காசு அவளோ இல்ல. அவன் ஆசை பட்டான் , அத செஞ்சு தரணும்.” என்று சோகமாக சுந்தரம் கூறினார்.

“இதுக்கு எதுக்கு இவலோ கவலையா இருக்கீங்க.? நான் இருக்கேன்ல. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலம்ல !” என்று மீனாட்சி கூறினாள்.

“என்ன சொல்ற மீனாட்சி ? உன்கிட்ட பணம் இருக்கா ? “ என்று சுந்தரம் கேட்டார்.

“என்கிட்ட ஏது காசு , நீங்க கொடுக்கிற காசு வீட்டு செலவுக்கு சரியா போயிருது. மிச்சம் வைக்கிற மாதிரி இருக்காது. பின்ன எப்படி என்கிட்ட காசு இருக்கும் ? “ என்று மீனாட்சி கூறினாள்.

“ பின்ன எப்படி , காசு இருக்கிற மாதிரி பேசுற ? “ என்று மீனாட்சியை நோக்கி கேள்வியை வினவினார் சுந்தரம்.

அதற்க்கு மீனாட்சி சுந்தரத்தை பார்த்து சிரித்தபடி ,

“இதோ இருக்குல , என்கிட்ட இருக்கிற ஒரே ஒரு தங்கம் “ என்று தன் அரைபவுன் தாலி கொடியை காட்டினாள்.

அதனை கண்டு சுந்தரம் கண் கலங்கி , “ வேணாம் , மீனாட்சி. அதுக்கு வெளியில கடன் கூட வாங்கிருவோம். உனக்குன்னு நீ ஆசை பட்டு கேட்ட ஒன்னே ஒன்னு இந்த தாலி கொடி மட்டும் தான். அத வைக்க மனசு இல்ல “ என்று சுந்தரம் கூறினார்.

“என்னங்க , அந்த தங்கத்தை அடகு தான் வைக்க சொன்னேன். விக்க சொல்லல. இருக்கட்டும். என் தங்க புள்ள படிப்புக்கு உதவியா இருக்கட்டுமே. அப்புறம் அவன் படிச்சி நல்ல வேலைக்கு போய் நமக்கு இத விட நெறைய வாங்கி தருவான் “ என்று சிரித்தபடி , அருகில் உறங்கி கொண்டு இருந்த மகன் முருகனின் தலையை கோரி விட்டவாறு கூறினாள் மீனாட்சி.

தற்போதைக்கு இத விட்டா வேற வழி இல்லை என்பதை உண்ர்ந்து சுந்தரமும் இதனை ஏற்று கொண்டார் .

“காலைல தாலியை கொண்டு போய் அடகு வைத்து, பையன் கூட அவன் ஆசை பட்ட ஸ்கூல்ல பீஸ் கட்டிட்டு வாங்க “ என்று மீனாட்சி கூறியதும் , இருவருக்கும் ஒரு மன திருப்தி கிடைத்த மாதிரி இருந்தது. தூங்க சென்றனர்.

காலை 9 மணிக்கு மேல ,

மூவரும் காலை சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.        என்னப்பா , பீஸ் ரெடி பண்ணீட்டீங்களா? “ என்று முருகன் , அப்பா சுந்தரத்தை நோக்கி கேட்டான்.

“ரெடி பண்ணிருவோம். நீ வீட்ல இரு , அப்பா வெளியில பணத்தை ரெடி பண்ணிட்டு ஒரு அரை மணிநேரத்தில் வந்திருவேன். அப்புறமா நாம ரெண்டு பேரும் ஸ்கூல்க்கு போவோம் “ என்று சுந்தரம் கூறி விட்டு , சாப்பிட்ட கையை கழுவி எழுந்தார்.

மீனாட்சியை நோக்கி கண்ணில் சைகை செய்தார். அதனை புரிந்து கொண்டு மீனாட்சியும் சாமிக்கு முன்னாடி சென்று , அந்த தாலி கொடியை கலட்ட முற்பட்டாள்.

“அம்மா என்ன பண்ற. ஸ்கூல் பீஸ் கட்ட , உன் தாலியை விக்க போறியா.? “ என்று மகன் முருகன் கேட்டான்.

அப்பா அம்மா இருவரும் பதில் சொல்ல முடியாமல் தவித்த படி நின்று கொண்டு இருந்தனர்.

“அப்பா என் ஆசையை நிறைவேற்ற உங்களுக்கு சிரமம் தர மாட்டேன். நீங்க உங்க சூழ்நிலையை சொன்னாலே நான் புரிஞ்சுக்குவேன். எனக்குன்னு கொஞ்ச புரிதல் இருக்கு. நான் அந்த தனியார் ஸ்கூல்ல தான் படிக்கணும் சொன்னது , என் ஆசையா கூட இருக்கலாம். ஆனா எங்க படிக்கிறோம் என்பது முக்கியம் இல்ல. எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். எனக்கு படிப்போடு , உங்க அனுபவத்தையும் தினமும் கதையா சொல்வீங்க. அதுல இருந்து கொஞ்ச புரிதல் எனக்கு கிடைச்சிருக்கு.

“நேத்து நைட்டு நீங்க ரெண்டு பேரும் பேசுனது , நான் கேட்டேன். உங்கள அவளோ கஷ்டபடுத்தி விடமாட்டேன். அதனால நான் உங்கள தப்பாவும் நெனைக்க மாட்டேன். எங்க படிச்சாலும் , படிக்கிற என் கைல தான் இருக்கு எல்லாமே. நீங்க ரெண்டு பேரும் எனக்கு சாமிக்கு மேல. சாமிய எப்பவுமே கஷ்ட படுத்த மாட்டேன்.” என்று கூறி இருவரையும் கட்டி அணைத்தான் முருகன்.

  பிளஸ் ஒன் வகுப்பில் சேர அப்பாவுடன் , அரசு பள்ளியை நோக்கி புறப்பட்டான் முருகன். கண்களில் கண்ணீருடன் , தன் மகனை நினைத்து பெருமையோடு வாசலில் மீனாட்சி.

அனைத்து அப்பாக்களும் தான் பட்ட கஷ்டம் , தன் பிள்ளை படக்கூடாது என்று நினைப்பது , சரிதான் என்றாலும் , அவர்களுக்கு கஷ்டம் என்றால் என்ன ? என்பதை புரிய வைக்க வேண்டும்.

குடும்ப சூழ்நிலையை அவ்வபோது எடுத்து கூறினாலே போதும் , அவர்களுக்கென்று ஒரு புரிதல் , தன் குடும்பத்தின் மீதும் , பெற்றோர் மீதும் வந்து விடும். 





   கதையாசிரியர்: மணிராம் கார்த்திக்   
« Last Edit: June 25, 2025, 02:33:54 PM by mandakasayam »

Offline Yazhini

Re: புரிதல்
« Reply #1 on: June 28, 2025, 06:45:29 PM »
பிள்ளைகள் பொறுப்புடன் வளர பெற்றோர் குடும்ப சூழ்நிலையை சிறிதேனும் குழந்தைகளிடம் கூற வேண்டும்.... கதை அருமை janda.. நன்றி பகிர்ந்தமைக்கு...✨