Author Topic: ✨இயற்கை அன்னையின் கடிதம் 📝  (Read 630 times)

Offline Yazhini


நான் உன் இயற்கை அன்னை பேசுகிறேன்.
இதற்கு முன்பும் பலமுறை பேசியிருக்கின்றேன்
நீ அதை உணர்ந்தாயா என்பதை நானறியேன்.

என்னை காப்பாற்ற வேண்டுமென நீ
கூறுவதைக் கேட்டுக் கண்ணீர் வடிக்கின்றேன்
உன் அறியாமையை நினைத்து.
ஆம் என்னை நீ காப்பாற்ற போகிறாயா???

என் மேனியெங்கும் உன்னால் உண்டான
மாசு போக்க எனதொரு சிலிர்ப்பு போதும்...
ஆனால் நீயும் மண்ணோடு மண்ணாகி விடுவாயே...

என் சுவாசக்காற்றில் நீ கலந்த
நச்சுவாயுவை அகற்ற
மேகங்கள் திரண்டு அருவிகளாக பொழிந்தாலே போதும்...
அதில் உன் சுவாசமும் அடங்கி விடுமே...

கடலில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற
எனதொரு ஆழிப்பேரலை போதும்...
அதில் நீயும் மூழ்கடிக்கப் படுவாயே...

எனக்கு ஒவ்வாதவைகளைப் பொசுக்க
காட்டுத்தீ, எரிமலை வெடிப்புக்கள் போதும்...
அதில் நீயும் பொசுங்கிவிடுவாயே...

உன்னை பொருத்தருளும் என் பொறுமைக்கும்
எல்லை உண்டல்லவா? அதனால்தான்
நீ எல்லை மீறும்போது
நில அதிர்வு, ஆழிப்பேரலை, புயல், வெள்ளப்பெருக்கு,
காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு
என பலவாறு உன்னை எச்சரிக்கிறேன்...

என் சொற்களை கவனி, நிதானி
உன்னையே நீ காப்பாற்றிக் கொள்.
பிறர் செய்வதை பற்றி சிந்தியாதே.
மாற்றம் உன்னுள் தொடங்கட்டும்.
உன்னை நான் நேசிப்பதுபோல் நீயும் நேசி.

மரங்களின் அசைவு,
மலர்களின் வாசம்,
மழை பொழிவு
நதிகளின் இசை,
தென்றலின் இனிமை,
கடல் அலைகளின் ஆரவாரம்
இவை என் அன்பின் வெளிப்பாடு.
உணர்வாய். நீடு வாழ்வாய்.
« Last Edit: September 08, 2025, 06:47:43 AM by Yazhini »

Offline Vethanisha

கவிதை அதை
நீங்கள் வாசிக்கும் விதம்
மேலும் அருமை அன்பே