காலையில் வழக்கம் போல் பரபரப்பாக வீடு இயங்கிக் கொண்டிருக்க, அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் இருந்தான் சுந்தர்.
“இந்தாங்க, ஓட்ஸ் மீல்’ என்று சுடச்சுட நீட்டினாள் தாரணி.
“என்ன இது? இவ்வளவு சூடா இருந்தா எப்படிச் சாப்பிட முடியும்? நேரம் ஆகுது பார், நான் நேரத்துக்கு ஆஃபீஸ் போக வேண்டாமா? இன்னிக்கு முக்கியமான மீட்டிங் வேற. இதை ஆற வைச்சு குடிக்கறதுக்குள்ளே நேரமாகாதா?’ என்று எரிச்சல் பட்டான்.
“ஆமாம். சிக்னல்ல பத்து நிமிஷம் வெயிட் பண்ணினதா நினைச்சுக்கக் கூடாதா? அக்கறையாய் கொண்டு வந்தா அதற்குப் போய்...’ என்று இழுக்க ஆரம்பித்தவளின் புலம்பலை நிறுத்துவதைப்போல், அரக்கப்பரக்கக் குடித்துவிட்டுக் கிளம்பினான் சுந்தர்.
“அப்பா, அது கார் சாவியா, வீட்டுச் சாவியான்னு ஒரு தடவை பார்த்து எடுத்துட்டுப்போ. போனவாரம் இப்படித்தான் அவசரத்துல மாத்தி வீட்டுச் சாவிய எடுத்துப் போய் ஒரு நாள் முழுக்க வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதாய் போச்சு’ என்று ஞாபகப்படுத்திய மகனுக்கு பதில் சொல்லமுடியாமல் அவசரமாய் கிளம்பினான்.
“என்ன அவசரமோ? இப்படி கால்ல கஞ்சிய கொட்டின மாதிரி. போகும்போதே இவ்வளவு பரபரப்பாய் இருந்தா ஆஃபீஸ்ல போய் எப்படி வேலை பார்ப்பானோ? நாங்கள்லாம் வேலை பார்க்கும்போது இப்படியா இருப்போம். ம்.... இந்தக் காலமே இப்படித்தான்’ என்று புலம்பிய பெரியவரின் பேச்சை மறுக்க முடியாதவளாய் சிரித்தபடி உள்ளே போனாள் தாரணி.
கொட்டிக் கிடந்த விளையாட்டுச் சாமான்களை அடுக்கி குழந்தைகளை படிக்க வைக்கத் தயாராகும்போது சின்னப் பெண் ஸ்வேதா, “அம்மா பாய்ஸ், டாய்ஸ்’ என்று கூடையைக் கை காண்பித்துப் பிடுங்கினாள்.
“வேண்டாம் செல்லம். அண்ணாவுக்கு எக்ஸாம் இல்லையா? இப்ப எதையும் எடுக்கக் கூடாது. பேசாம நீயும் கலரிங் பண்ணுவியாம்’ என்று நோட் புக்கை எடுத்துக் கொடுத்தாள். அதற்குள் வீட்டுக்கு ஃபோன், “மேடம், சுந்தர் சார் இன்னிக்கு லீவா?’ என்றவரிடம், “இல்லையே கிளம்பியாச்சு... ஒருவேளை கொஞ்சம் தாமதமாக இருக்கலாம்’ என்றாள்.
ஃபோன் அரைமணி நேரம் கழித்து திரும்பவும் “என்ன மேடம் அவரோட செல்ஃபோன் ரிங் போய்கிட்டே இருக்கு. யாரும் எடுக்கவே இல்லை’ இது வேறொருவர்.
“தெரியலையே?’ என்று குழம்பியவளாய் சுந்தர் நம்பரை டயல் செய்தபோது ரிங் போனபடியே இருந்தது. சொல்லத் தெரியாமல் கவலையாக இருந்தது. மீட்டிங்னு சொன்னாரே அதான் சைலன்ட் மோடில் வைத்திருக்கிறார் போல என மனதை தேற்றிக் கொண்டாள்.
ஸ்வேதா, டாய்ஸ் கூடையையே சுற்றச் சுற்றி வந்தவளாய் இருந்து, “அம்மா, அம்மா அப்பா ஃபோன் அப்பா ஃபோன்’ என்று மழலையில் ஏதோ சொல்லியபடி கையை கூடையில் வைத்துக் காண்பித்தாள்.
தாரணி பாடம் சொல்லிக் கொடுத்தபடியே “இப்ப வேண்டாம்மா, அப்பறமா’ என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினாள்.
அலுவலகம் போய்ச் சேர்ந்து ரொம்பநேரம் கழித்த ஏதோ ஃபோன் செய்ய நேர்ந்த சுந்தருக்கு ஒரே அதிர்ச்சி. அவன் கையில் இருந்தது டாய் ஃபோன். காலையில் இருந்த அவசரத்தில் மாற்றாக குட்டிப் பெண்ணின் விளையாட்டு செல்ஃபோனை (பார்ப்பதற்கு அசல் போலவே இருக்கும்) எடுத்து வந்து விட்டான். காலையில் இருந்து ஒரு கால் கூட வராத காரணம் இப்போதுதான் புரிந்தது. சிரிப்பு வேறு. தாரணிக்கு ஃபோன் செய்து விளக்கின போதுதான் ஸ்வேதா விளையாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் கூடையை சுற்றிச் சுற்றி கை காட்டி சொன்னதன் விவரம் புரிந்தது. சிரிப்பு தாங்க முடியாமல் அதை எடுத்து ஆஃப் செய்து வைத்தாள்.
இரவு வீடு திரும்பும்போது எல்லோரும் சொல்லிச் சொல்லி கிண்டலடித்தார்கள். தனது அவசரத்தை நினைத்த வெட்கமானாலும் சுந்தருக்குள் ஒரு சிந்தனை. இன்று முழுவதும் செல்ஃபோன் இல்லாமல் டென்ஷன் இல்லாமல் ஒரு புது அனுபவம். வீடு திரும்பும்போது காரில் பயணிக்கும்போது வழக்கமான செல்ஃபோன் அரட்டை இல்லாமல் மனதுக்குப் பிடித்த பாடலை கேட்டபடியே பயணிப்பதில் தனி இன்பம்.
தெரிந்தோ தெரியாமலோ இந்த செல்ஃபோன் எத்தனையோ விதமான அனுபவங்களையும், அமைதியையும் மறக்கச் செய்து விடுகிறது. காலையில் பெரியவர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. “எங்க காலத்துல நாங்க வேலை பார்க்கும்போது இப்படி ஒரு பரபரப்பு இருக்காது.’