Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் - சாதி, தீண்டாமை, சட்டம்!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் - சாதி, தீண்டாமை, சட்டம்! (Read 1043 times)
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 47
Total likes: 47
Karma: +0/-0
Gender:
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் - சாதி, தீண்டாமை, சட்டம்!
«
on:
April 13, 2012, 04:01:09 PM »
இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை பல்வேறு தலைவர்கள் நடத்தியதாக வரலாறு புனைந்து கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவராக 'காந்தியை' நமது பாடநூல்கள் முதற்கொண்டு பெரும்பான்மை 'பொதுபுத்தி' ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்தார் என்று பாரதியையும், அம்மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், சீனிவாச அய்யங்கார் போன்றோர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாக அடையாளப்படுத்துவோரும் நம் நாட்டில் உண்டு. சனாதனப் படிநிலையை அறிவியல் அமைப்பாக உள்வாங்கிக் கொண்ட காந்தியும், 'ஈனபறையேனும் எம்மில் உண்டடா' என்று பாடிய பாரதியும் இன்னும் சில 'இந்து' மதக் காப்பாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் போற்றுதலுக்குரிய தலைவர்களாக இன்னும் இருந்து வருகின்றனர்.
மேற்கண்ட தலைவர்கள் அனைவரும் சாதியையும், அது தாங்கி நிற்கும் 'இந்து' மதத்தையும் பாதுகாப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்கள் என்பதை நாம் அறிந்து கொளள் வேண்டும். இவர்களுடைய 'தீண்டாமை ஒழிப்பு' சிந்தனை என்பது 'சனாதன தர்மத்தை' மறுநிர்மாணம் செய்வதற்கு மட்டுமே பயன்பட்டது. தீண்டாமைக்குக் காரணமான சாதியையும், இந்து மதத்தையும் அடியோடு அழிப்பதன் மூலம் மட்டுமே இங்கு பஞ்சமர்களும் அவர்களை ஒடுக்கும் சூத்திரர்களுக்கும் உண்மையான 'சுயமரியாதை' கிடைக்கும் என்று முழங்கியவர்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் மட்டுமே. பாபாசாகேப் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும், சூத்திரர்களுக்காகவும், பஞ்சமர்களுக்காவும், பெண்களுக்காகாவும், தொழிலாளர்களுக்காகவும், கருத்தியல் ரீதியாகவும், சட்டத்தின் மூலமாகவும் போராடிய அசாதாரணமான தலைவர் ஆவார். ஆனால், வாக்கு அரசியல் தலைவர்கள் (பாரதீய சனதா உட்பட) அனைவரும் அவரை தாழ்த்தப்பட்ட சாதி சங்கத் தலைவர் போல் உருவகம் கொடுத்து அவரது பிறந்த நாளையும், நினைவு நாளையும் கொண்டாடி வருகின்றனர்.
தீண்டாமை ஒழிப்பும், அம்பேத்கரின் அறிவியல் பார்வையும்:
இந்து மதத்தை நிலைநிறுத்திக் கொள்ள ‘தீண்டாமை ஒழிப்பு' மூலம் சில சீர்திருத்த நடவடிக்கைகளை அன்றைய பார்ப்பன-பனியா தலைவர்கள் சிலர் மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது அம்பேத்கரின் பணி. இந்து மதத்தை நிர்-நிர்மாணம் (De-constuction) செய்வதே அம்பேத்கரின் இலக்கு. அந்த இலக்கு நோக்கியே தனது 'தீண்டாமை ஒழிப்பு பணியை' துவங்கினார். சமூக இயக்க கோட்பாட்டின்படி, “எது முதலில் தோன்றியதோ, அது கடைசியில் அழியும், எது இடையில் தோன்றியதோ, அது இடையில் அழியும், எது கடைசியில் தோன்றியதோ அது முதலில் அழியும்”. இதன்படி பார்த்தால் சாதி, சாதியப்படிநிலை, தீண்டாமை இம்மூன்றில் இறுதியாக உருவான தீண்டாமை முதலில் அழியும். இந்த அறிவியல் உண்மையை உணர்ந்து கொண்ட அம்பேத்கர், 'தீண்டாமை ஒழிப்பிலிருந்து' தனது பணியினைத் துவங்கினார்.
தீண்டாமை ஒழிப்பிற்காக அம்பேத்கர் போராடியதன் தொடர்ச்சியாக இன்னும் பல்வேறு சட்டத்திருத்தங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. முதன் முதலாக, தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் 1955ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்ததால் தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கும் மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. அதன்பின் 1965, ஏப்ரல் 27-ல் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.எஸ்.இளையபெருமாள் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் பின்னர் 1976-ல் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்தனைச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தாலும், அரசும், காவல்துறையும் 'சாதிய' மனநிலையில் இருப்பதால் குறிப்பிடும் வகையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
அதன் பின்னர் 1989ல் 'பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைத் தடைச் சட்டம் 1989' நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 23 பிரிவுகளைக் கொண்ட இச்சட்டம், பிற சட்டங்களைவிட மேலோங்கி நிற்கும் வகையில் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டதாக விளங்கியது. பல்வேறு வகை வன்கொடுமைக் குற்றச் செயல்களையும், அதற்கான தண்டனைகளையும் இச்சட்டம் கூறுகிறது. இத்தண்டனை ஆறு மாதத்திற்குக் குறையாததாய் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கும் அளவிற்கு, சிறைத்தண்டனையும் மற்றும் அபாரத்தையும் விதிக்க வகை செய்கிறது. 95களுக்குப் பிறகு, இச்சட்டங்களுக்கு விதிகள் அமைக்கப்பட்டு சரியான முறையில் நடைமுறைக்கு வந்தன. சமீபகாலமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சாதிய அமைப்புகள் இச்சட்டத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. அப்படியென்றால், இப்போதுதான் இச்சட்டங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்கிற உண்மை புலனாகிறது. தீண்டாமை ஒழிப்பிற்காக, தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இறந்த பின்பு சட்ட நூல்களின் மூலமும், தனது கொள்கைகளின் மூலமும் பாடுபட்டு கொண்டிருக்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர்.
சௌதார் குளமும், சனாதன மனநிலையும்:-
சௌதார் குளத்தை மகார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியதால், அக்குளத்தை புனிதப்படுத்த வேண்டும் என சாதி இந்துக்கள் பிரச்சாரம் செய்தனர். இதற்கிடையே 1927 ஆகஸ்டு 4ம் நாள் சௌதார் குளத்தை தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மகத் நகராட்சி இரத்து செய்தது. அதனைக் கண்டித்து, 1927, டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சத்தியாக்கிரகம் செய்வது என பாபாசாகேப் முடிவெடுத்தார். "போராட்டம் வன்முறையானதாக இருப்பினும், அகிம்சை வழியினதாயினும் அதன் குறிக்கோள் விழிமியதாயிருப்பின் அது நேர்மையானதே" என அம்பேத்கர் கருதினார்.
மராட்டியத்தின் பார்ப்பனர் அல்லாதார் தலைவர்களான ஜவல்கர், ஜெதே ஆகியோர் சத்தியாகிரகத் திட்டத்திற்கு முழு ஆதரவை அளித்தனர். இதே காலகட்டத்தில் பாலகங்காதரத் திலகரின் மகன் ஸ்ரீதர் பந்துக்கும், பாபசாகேப் அம்பேத்கருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அம்பேத்கர் தன்னுடைய உயரிய நோக்கத்திற்கு தோள் கொடுக்கும், பார்ப்பனரல்லாத இடைநிலை சமூகத் தலைவர்கள், பார்ப்பனர்கள் என அனைவருடனும் இணைந்து செயல்பட அணியமாக இருந்தார். சுயசாதி உணர்வும், தலைமை மீதான பற்றுதலும் இல்லாத உண்மையான பாட்டாளி வர்க்கத் தலைவர் அம்பேத்கர் ஆவார். 1927ம் ஆண்டு, சௌதார் குளப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம் என 'களப்போராளியாக' இந்த துணைக் கண்டம் முழுவதும் அறிமுகமானார் அம்பேத்கர். அதுவரை, கல்வியாளராக, பேராசிரியராக, சட்ட வல்லுனராக இருந்த அம்பேத்கர், அதன் பிறகு இந்துத்துவத்தை கருவறுக்கும் ஆயுதமாக தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.
அம்பேத்கர் கோரியது சலுகை அல்ல, சுயமரியாதை:
அம்பேத்கரின் சமகால கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிற அமைப்புகளும் இருந்தன. அந்த அமைப்புகள் தற்காலிகமாக 'தீண்டாமை' ஒழிந்தால் போதும் என்கிற அளவில் செயல்பட்டன. ஆனால், தீண்டாமைக்குக் காரணமான சாதியையும், அதை தாங்கி நிற்கும் இந்துத்துவத்தையும் ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் போராடவில்லை. அம்பேத்கர் ஒருவர் மட்டுமே தீண்டாமைக்கும், சாதியப்படிநிலைக்கும் இடையேயான தொடர்பினைக் கண்டறிந்து, அதனை ஒழிக்க வேண்டிதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். கோவில் நுழைவுப் போராட்டத்தில் பேசிய அம்பேத்கர், "நாங்கள் எதை மிகவும் வலியுறுத்துகிறோமேனில், கடவுளை வணங்குவதால், எந்த அளவிற்கு, நீங்கள் மனநிறைவு அடைகிறீர்கள் என்பது அன்று எங்கள் கவலை. தீண்டப்படாதவன் கோவிலுனுள் நுழைந்தால் கோவில் தீட்டுப்பட்டுப் போகும் என்பதோ கடவுள் சிலையின் புனிதம் பாழ்பட்டுவிடும் என்பதோ இருக்கக் கூடாது. அதனால் தான் எமக்கெனத் தனிக்கோயில் ஏற்படுத்தும் எண்ணத்தை எதிர்க்கின்றோம். இருக்கின்ற கோயிலினுள் செல்லும் உரிமைக்காகப் போராடுகின்றோம்" என்று முழங்கினார். தாழ்த்தப்பட்ட மக்கள் கடவுளை வணங்கினால் போதும் என்று அம்பேத்கர் சொல்லவில்லை. அனைவரும் பயன்படுத்தும் பொது கோவிலுக்குள் செல்லும் உரிமையும் அந்த மரியாதையும் வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். அதனால் அண்ணல் விரும்பியது சலுகைகளை அல்ல, சுயமரியாதை என்பது நன்கு புலப்படுகிறது. அதே காலகட்டத்தில், இதே கருத்தியலை ஏந்தி காங்கிரசோடு முரண்பட்ட வரலாறு, தென்னாட்டில் பெரியாருக்கு உண்டு.
உடைமைச் சமூகத்திற்கு எதிராக வர்க்கப்போராளி அம்பேத்கர்:
அம்பேத்கர், 1936-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சுதந்திர தொழிற்கட்சி (Independent labour party) என்கிற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். நிலமற்றவர்கள், ஏழை நிலக்குத்தகையாளர்கள், விவசாயிகள், தொழிலாளாகள் ஆகிய அனைவரின் உடனடித் தேவைகள், துன்பங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு கூறுகின்ற சீரிய வேலைத் திட்டத்தை அம்பேத்கர் துவக்கினார். தொழிற்சாலைகளை அரசுடமையாக்க வேண்டும், விவசாய குத்தகையாளர்களிடம் நிலக்கிழார்கள் குத்தகை வசூலிப்பதையும், குத்தகை செய்யும் நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றுவதையும் தடுத்து அவர்களை பாதுகாப்பதற்கு சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் போன்ற பொதுவுடமை சிந்தனைகளைத் தாங்கி அக்கட்சி செயல்பட்டது. சுதந்திர தொழிலாளர் கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு ஆங்கில நாளேடு, ‘அண்மையில் அம்பேத்கர் உருவாக்கிய புதிய கட்சி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதிலும், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் உறுதுணையாக விளங்கக் கூடும். சுதந்திர தொழிலாளர் கட்சி தனி வாக்காளர் தொகுதி முறையையும், இரட்டை வாக்குரிமையையும் கைவிட்டு விட்டால், மிகக் குறுகிய காலத்திலேயே, இக்கட்சி இந்தியாவிலேயே பெரும் சக்தி வாய்ந்த கட்சிகளில் ஒன்றாக வளாந்து விடும்" என எழுதியது.
உடைமை சமூகத்தையும், சாதிய சமூகத்தையும் தாங்கி நிற்கும் பார்ப்பனியத்தையும் இணைத்தே தகர்ப்பதற்கு அம்பேத்கர் போராடினார். அம்பேத்கர் வெறும் வாக்கப்போராளியாக மட்டும் இருந்திருந்தால் சனாதனவாதிகள் அவரைக் கண்டு அச்சம் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர் இம்மண்ணின் பிறவி முதலாளித்துவமான பார்ப்பனியத்தையும் எதிர்த்துப் போராடியதால் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை அவர் பெற இயலவில்லை. வர்க்க அரசியலை அம்பேத்கர் கையிலெடுத்தபோது, அவருக்குத் துணையாகவும், இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதி முதலிய கோரிக்கைகளை ஆதரித்தும் அப்போதைய கம்யூனிச தோழர்கள் எவரும் துணை நிற்கவில்லை என்பதை வரலாறு வேதனையுடன் பதிவு செய்கிறது.
இந்து சட்டதிருத்த மசோதாவும், பெண்ணியப்போராளி அம்பேத்கரும்:
1948ல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இந்து சட்டதிருத்த மசோதாவை கொண்டு வர முயற்சித்தார். சொத்துரிமை என்பது தந்தை வழி சமூகத்தை பின்பற்றுகிற ‘இந்து’ தர்மத்தில் பெண்ணுக்கு மறுக்கபட்டது. கணவர் இறந்த பிறகு மனைவிக்கும் அவரது மக்களுக்கும் ‘சொத்து’ போய் சேர வேண்டும் என்று அம்பேதகர் கோரினார். அதனை ‘இந்து’ தர்மத்தினை முழுவதும் கற்ற அம்பேத்கர், அத்தர்மத்திற்கு உட்பட்டு 'தாயாபாக'- விதியின்படி அத்திருத்தத்தை செய்ய முன்மொழிந்தார். அடுத்தபடியாக கணவனிடமிருந்து பிரிந்து போகும் பெண்களுக்கு ‘ஜீவனாம்ச’ உரிமை, சாதி மறுப்புத் திருமணம், பதிவுத் திருமணத்தை முறையாக அங்கீகரிக்கும் உரிமை என கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய உரிமைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப, பெண்களுக்காக சட்ட ரீதியாக உரிமைகளை பெற்றுத் தர பாடுபட்டவர் அம்பேத்கர்.
ஆனால், அன்றைய நேரு தலைமையிலான அரசில் இடம் பெற்றிருந்த பார்ப்பனத் தலைவர்கள் பலரும் அம்பேத்கரை கடுமையாக சாடினர். அம்பேத்கரின் உயரிய நோக்கம் புரிந்து கொள்ளப்படாமல், நூற்றுக்கணக்கான பெண்கள், இம்மசோதாவிற்கு எதிராக கூச்சல் போட்டனர். "இரண்டு பெண்கள் ஆதரவாக போராடியிருந்தால் கூட இச்சட்டதிருத்தம் செய்து இந்த மசோதா நிறைவேறியிருக்கும்" என்று அம்பேத்கர் மிகவும் மனம் வருந்தினார். பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியாத இந்த சட்ட அமைச்சர் பதவி தனக்குத் தேவையில்லை என்று கூறி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பெண்கள் இன்று முன்வைக்கும் கோரிக்கைகளை அன்றே எங்களுக்காக அம்பேத்கர் போராடினார் என்கிற வரலாறு இன்றைய பெண்ணிய அமைப்புகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இந்தியாவில் 'மார்ச் 8' மகளிர் தினத்தில் அம்பேத்கரின் இந்து மசோதாவையும் பெண்ணினத்திற்கு அம்பேத்கர் செய்த தியாகத்தையும் நினைவுகூர வேண்டியது முற்போக்காளர்களின் கடமை.
சூத்திரர், பஞ்சமர், தொழிலாளர்கள், பெண்கள் என இம்மண்ணின் அனைத்து விளிம்புநிலை மக்களுக்காகவும், அரசுடனும் மற்றும் சனாதன மதத்துடனும் வாழ்நாள் முழுவதும் சமர் செய்து மடிந்த விடுதலை வீரர் அம்பேத்கர் என்பதே நாம் அனைவருக்கும் பரப்ப வேண்டிய செய்தி.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் - சாதி, தீண்டாமை, சட்டம்!