வரப்பிலே தலை வைத்து
வயலிலே உடல் சாய்த்து
அசதியிலே உறங்குகிறான்
உழவன் என்னும் ஓர் இறைவன்
உணவுன்னு நமக்கெதுவும்
கிடைப்பதற்கு வழி வகுக்கும்
அவன் கதையை கவிதையிலே
பாடிடத்தான் முயலுகிறேன்..
சோற்றிலே நீ கையும் வைக்க
சேற்றில் அவன் கால் கிடக்கும்
பாட்டிலே அத சொல்லுறப்போ
கண்களும் தான் நீர் வடிக்கும்
ஏற்றம் கொண்டு நீர் இறச்சு
நாற்று நட்டு பயிரும் வச்சு
தூற்றுகிற மாந்தருக்கும்
போற்றுகிற உணவளிப்பான்
என்னதான் ஏற்றத்திலே
நீர அவன் இறச்சலும்
அவன் வழக்கை ஏறலையே
ஏன்னு கூட புரியலையே
பட்டினிக் கொடுமை தனை
போக்கிடவே சோறு தந்து
பல நேரம் தானே அவன்
பட்டினியா கிடந்திடுவான்
ஊருக்குள்ள வீடிருக்க
சொந்த பந்தம் தானிருக்க
வெள்ளாமை காப்பாத்த
வயக்காட்டில் தூங்கிடுவான்
பத்து தல ராவணனும்
ஒத்த தல இராமனுமே
மத்தியில உள்ள கத
சொல்ல தானே கேட்டிருப்போம்
அப்படி பல கதைகள்
எக்கச்சக்கமா இருக்க
கஷ்டப்படும் விவசாயி
கதைய யாரும் சொல்லலையே
சட்டியிலே சோறேடுத்து
வரப்பில் ஒருத்தி நடந்து வர
மனைவி தானோ என்றுணர்ந்து
மனம் குளிர பாத்திருப்பான்
அந்த நேரம் அவன் மனசில்
காதல் ஒன்னு பிறந்திடுமே
ஷாஜஹானின் கதலுமே
அதுக்குதான் இணையில்லையே
பொங்கி வரும் பொங்கல் வச்சு
கதிரவனை வணங்கிடுவான்
மழை வேண்டும் என நினைச்சு
வருணன தான் வேண்டி நிப்பான்
வானம் பார்த்த பூமியதான்
வளமாக ஆக்கிடவே
தன் வாழ்க்கை பூராவும்
அங்கேயே தொலைச்சு நிப்பான்
எத்தனையோ சாமியதான்
நாம தினம் கும்பிடுறோம்
எத்தனையோ வேண்டுதல்கள்
வரமாக கேட்டிருக்கோம்
ஆனாலும் நாமளுமே
கேட்காம சோறு தரும்
உழவனுமே ஓர் கடவுள்
என்று மட்டும் உணர்ந்திடுவோம்
எல்லோரின் வாழ்க்கையிலும்
இன்பம் துன்பம் இரண்டிருக்கும்
துன்பம் மட்டும் அதிகம் கொண்ட
உழவனை நாம் கும்பிடுவோம்!!!
அன்புடன் திருவாளர் பீன்