நம் நாட்டில் பிறந்தாலும் சடங்கு உண்டு; இறந்தாலும் சடங்கு உண்டு. இடையில் வாழ்வில் முக்கியமாக எது நிகழ்ந்தாலும் சடங்கு உண்டு.
சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.
சட்ட + அம் + கு = சடங்கு
‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள்.
‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது
‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி.
பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது.
“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”
ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார்.
எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள்.
சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:
அரண் – அரணம் – கரணம்
மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம். தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர்.
(குறிப்பு: நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. அவர்களாகவே அந்த வார்த்தை எங்களைக் குறிப்பிட்டது என சொல்லிக் கொண்டார்கள்…கொண்டிருக்கிறார்கள். நம் தமிழ் இளிச்சவாயர்களும் எப்பொழுதும் போல் எனக்கென்ன என்பதுபோல் இருந்து விட்டார்கள்….விடுகிறார்கள்...ஒவ்வொன்றிற்கும் அர்த்தங்கள் உண்டு. இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப்பொருள்படும்.)