Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 305  (Read 2476 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 305

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI



அப்பா

பத்து மாதம் கருவில்
சுமப்பவள் தாய் என்றால்
நித்தம் நித்தம் நின் கருத்தில்
சுமப்பவன் நீ..

வாழ்வின் சுமையை தாங்கும்
சுமைதாங்கியாய் இருந்தாலும்
ஒருபோதும் சிசுவை சுமையாய் நினையாய் நீ..

காடு மலயோ கரடு முறடோ
கண் துயிலாமல்
காலம் நேரம் பாராமல்
கணப்பொழுதும் அயராமல் காப்பவன் நீ

மனதில் மலை போல் பாசமும்
என்னை காக்கும் அரணாய் அன்பும்
நினைவில் நீங்கா நேசமும் கொண்டவன் நீ...

அடிபட்ட குழந்தை வலியில் அழ
அடித்துவிட்டு மனதில் குமுறி அழும் வீரன் நீ
உலகையே வெல்லும் வீரம் கொண்டாலும்
மகளின் முன் மழலையாய்
மாறும் மாயக்காரன் நீ..

ஆயிரமாயிரம் இன்னல்கள் வந்தாலும்
இன்முகத்தை காட்டி பெற்ற பிள்ளைக்கு
இன்பத்தை மட்டுமே வாரி வழங்கும் வள்ளல் நீ...

அப்பா

நான் பிறந்த பொழுது தொடங்கிய பயணம்
உடனிருந்து சிரிக்கும் மழலையாய்
தத்தி நடந்த வயதில் நண்பனாய்
பருவத்தே வழிநடத்தும் தமயனாய்
துயரத்தில் தோள் கொடுக்கும் நண்பனாய்
துவண்ட போதெல்லாம் எனக்கு துணையாய்

நீர் அழுது நான் பார்த்ததில்லை
நான் அழுவதை பார்க்க நீர் விரும்பியதில்லை
அதனால் தானா அப்பா
நிரந்தரமாக நான் அழுகையில் என்னை விட்டு போனீர்??

நீர் என்னருகில் இருக்கையில்
துன்பமும் துயரமடைந்தது
என்னிடம் நெருங்க முடியாமல்
ஏன் அப்பா அதற்கு வழி விட்டு விலகினீர்
இன்றும் என்னை விடாத கருப்பாய்
வாட்டி வதைக்கிறது

எல்லாரும் என் அருகில் இருக்க
நான் தனிமரமாய் திணறுகிறேன்
ஒருமுறை என்னிடம் வருவீரா
இந்த உலகமே என்னுடன் இருப்பதாய் உணருவேன் ❤❤❤❤




Offline HiNi

அப்பா !!!

பட்டாம்பூச்சி போல் சுற்றி விளையாட
என் சிறகுகளை வளர்த்ததும் நீயே
கண்டிப்புடன் கட்டி அணைத்ததும் நீயே!!

அளவில்லா அன்பை உள்ளே வைத்து எதிரியாய் நின்றாயே
என் மகளுக்கு பிடிக்கும் என்று பசியிலும் உன் உணவை ஊட்டினாயே

திருவிழாக்களில் விலைக்கு வாங்க முடியாத
சிம்மாசினமாய் உனது தோள்களை வழங்கினாய்

மனதில் நினைத்ததை சொல்லாமலே முகத்தை பார்த்து கண்டுபிடிக்கும் மந்திரத்தை எங்கே காற்றாய்?
வேர்வையில் கிளிந்த சட்டையுடன் நீ சுற்றுகையில் எங்களுக்காக தான் இந்த போராட்டம் என்று ஏன் புரியவில்லையோ?
சின்ன சண்டை போட்டாலும் பாப்பா என்று அழைத்ததும் ஓடி வந்த என்னை கண்டு புன்னகைத்தாயே..
வாழ்க்கையில் கடந்தேன் பல வருடங்களாய்
 உனது அன்பு கயிற்றை புரிந்து கொள்ள

உண்மையாக உழைத்து சொந்த காலில் நிற்கும்போது உணர்கிறேன் இத்தனை நாள் எவ்வளவு வலிகளை கடந்திருப்பாயோ?

வேலை நிமித்தமாக சற்று தொலைவில் இருந்ததும் தவித்து ஓடோடி வந்தாயே
என் முதல் சம்பளத்தில் சட்டை வாங்கியதும் வாரம்வாரம் உடுத்தி மகிழ்ந்தாயே..

முன்னே செல்ல விட்டு பின்னே நின்று ரசித்தாய்
தனியே என்னை செல்ல விட்டு பயிற்ச்சி அளித்தது என்னை தனிமையில் ஆழ்த்ததானோ?
உனது கண்டிப்பு எனது பாதுகாப்புன்னு அரியும்முன் விண்ணை விட்டு ஏன் சென்றாய்?

கல்யாண மாலை அனுபவிக்கும் முன்பே உன் கல்லறைக்கு மாலை போடும் பாவியாக நின்றேனே
உன் கை பிடித்து உலகம் சுற்ற வேண்டிய என்னை
உன்னை மூன்று முறை சுற்ற வைத்தார்களே ஏன்?
திரும்பி வருவாய் என்று துடித்துடிது ஏங்கி நின்றேனே எங்கே சென்றாய்?

உனக்கு கொல்லி வைக்க உறவினர்கள் முன்வராதபோது எங்களுக்காக போராட்டுன உனக்கு நானே இறுதி சடங்கை செய்தேனே
எத்தனை மகள்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்  பெருமிதம்!!!

உன் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை இப்போது என் பாதையில் நடைபோடும்

நான் வாழ்க்கை பாடம் கற்று கொள்வதை ரசித்து கொன்டிருக்கிராய் ஓரத்தில் என்று அறிவேன்!!!

மறு ஜென்மத்திலும் உன் மகளாய் பிறந்து அன்பை பொழிந்து காக்க வேண்டும் ஒரு தாயாய்!!!!
« Last Edit: February 20, 2023, 05:52:43 PM by HiNi »

Offline Madhurangi

இறந்தும் நினைவுகளில் வாழும் என் தந்தைக்காக..

தந்தை முகத்தை புகைப்பட சட்டங்களில் மட்டும் காணும் காலம்
வரை உணரவில்லை அவர் தந்த பாதுகாப்பின் அருமையை..

தந்தையின் ஸ்பரிசம் அதிகம் உணர்ந்ததில்லை.. அவர் மகள் எனும்
பெயரின் பெருமையை பலமுறை உணர்ந்துள்ளேன்..

என் கனவுகளுக்கு கண்டிப்புகளால் அத்திவாரம் இட்ட நீங்கள்
நிறைவேறும் காலம் அருகில் இல்லாததேனோ?

பெண்ணென்று என் கனவுகளுக்கு கடிவாளமிடாது செவ்விய அறிவும் ,  கனவுகளும்
 இரு பாலருக்கும் பொது என கற்று தந்த  என் தந்தையும் நவீன பாரதிதான்..

கண்டிப்பேனும் போர்வையில் கனிவினை மறைத்த
நீங்கள் இறுதிவரை கற்று தரவில்லை நீங்களின்றி வாழும் முறைமையினை..

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் "நீங்கள் இருந்திருந்தால் "
என்ற நினைவின்றி கடந்துவிடவே முடிந்ததில்லை..

பள்ளி தாண்டும் முன்பே உங்களை இழந்த நான் எவ்விதம்
இனி அடைப்பேன் நீங்கள் பெற்ற கடனையும் என்னை வளர்த்த கடனையும் ?

வாழ்வில் எந்த ஆணாலும் நிரவிட முடியாத இடைவெளிகளை உங்கள் நினைவுகளிலாவது
நிரப்ப எத்தனிக்கும் தங்கள் அசட்டு மகள் நான்..

செயலில் இல்லாத தங்கள் முகப்புத்தக கணக்கிட்கு என் வாழ்வில் முக்கிய தருணங்களை
செய்தியாக அனுப்பும் வினோத பழக்கங்கள் என்னுள் ஏராளம்..

இனியொரு பிறவி வேண்டும் .. அதிலும் உங்கள் மகளாக வேண்டும்..
அதிக காலம் உங்களோடு கழிக்கும் வரமும் வேண்டும்..

சொர்க்கத்தில் இருந்தும் என்னை  நிழலாக தொடர்கிறீர்கள் அப்பா
உங்கள் ஆசீர்வாதங்கள் வழியாக..

Offline TiNu



பூமியில் தோன்றும் ஒவ்வொரு  உயிருக்கும்...
துணை நிற்கும் சக்தியே.. தெய்வம் என்போர் பலர்..

காற்றும்.. மழையும்.. அடித்து தள்ளும் பொழுது...
அரவணைக்கும் கைகள் தோன்றும் அக்கணமே..

அது யாராக இருந்தாலும்.. எதுவாக இருந்தாலுமே..
அதற்கு நன்றி சொல்வது.. அவ்வுயிரின் கடமையே..

நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா?..
இக்கவிதையை படிக்கும்.. நல்லுள்ளங்களே...

நம் முன்னோர்கள்.. நமக்காக விட்டு சென்ற..
சில சான்றுகளை.. சொல்கின்றேன் கேளுங்கள்..

உயிர் பயத்தால்.. கொல்ல துணிந்த கம்சனின்
பார்வையில் இருந்து..  மறைந்த வளர்ந்தான் கண்ணனுமே..

அவன்,
கொட்டும் மழையிலும்.. சீரும் காளிங்கனிடம் இருந்தும்...
ஆயர்குலத்தை காலத்துக்கும் காத்து நின்றான் ..   

வம்சத்தின் அழிவு இவளாலே.. என ஜோதிடர் கூற...
இம்மண்ணில் புதையுண்டு.. மீண்டெழுதாள் சீதையுமே...

அவள்,
தன்னை தாங்கிய பூமித்தாயின் இருந்து கற்றுக்கொண்ட..
பொறுமையை கையிலெடுத்தாள்.. வாழ்ந்தும் காட்டினாள்...

இச்சமூகம் ஆயிரம் ஆயிரம் இம்சை கொடுத்தாலும்..
அவமானங்களை தாங்கி.. எழுந்துநின்று வாழ்ந்தான் கர்ணனுமே

அவர்,
தனக்கு தோள்கொடுத்த தலை நிமிர செய்தவனுக்காக..
அதர்மம் என தெரிந்தும்.. தோழனோடு கைகோர்த்தான்...

இவையாவும் சரித்திர கதைகள். கட்டு கதைகள் என்றாலுமே..
இன்றும் சில இயற்கை சக்தியுடன் எழுந்து நிற்போர் பலரே ...
 
நாம் அறியாமல் நம்மை காக்கும் செயல் யாவுமே..
விதியின் பயனா? இல்லை இயற்கையின் நியதியா..

தாய்.. தகப்பனின்.. அன்பான.. அரவணைப்பே...
நம்மைக்காக்கும் சக்தியில்  முதன்மையாதே....

நம் உடலையும்.. உள்ளத்தை பலப்படுத்தும்..
அரணை... அள்ளி  அள்ளி தருபவன்.. ஆசானே...

ஆபத்தில் தோள் கொடுக்கும்.. ஆபத்தாண்டவர்கள்..
நம்முடன் பயணிக்கும் நல்லுள்ளம்.. நண்பர்களே...

சில நேரங்களில்... மனிதர்கள் மட்டுமன்றி.. நம்மை...
காத்து நிற்கும்.. விலங்குகளும்... தாவரங்களும்....

ஏன் எப்படி என்று என்னை நோக்கி வினவ தோன்றுகிறதா?
நாம் உண்ணும் உணவும்.. வசிக்கும் குடிலும் எப்படி?

அது யாராக இருந்தாலும்.. எதுவாக இருந்தாலுமே..
அதற்கு நன்றி சொல்வது.. நம் பொறுப்பான  கடமையே..





Offline Ninja

எட்டி உதைத்த பொன் பாதங்களை
கட்டியணைத்து முத்தமிடுகிறாய்
பிஞ்சுக்கர நகக்கீறல்களை
பஞ்சுப்பொதியென பொதிந்து கொள்கிறாய்
மழலை உளறலை மதுரமென கொஞ்சி
மடியிலிட்டு தாலாட்டுகிறாய்
வழிந்தோடும் எச்சிலை
வாஞ்சையோடு துடைத்தெறிகிறாய்
தத்திநடக்கும் வாத்துநடையை
மயில் நடனமென்கிறாய்
கடலெனெ நீ காட்டும் திசையில்
விரியும் என் கண்களில்
நிறைந்திருக்கிறது உன் பேரன்புக் கடல்.
உலகம் இதுவென நீ காட்டுவதை உலகமென நான் நம்பிய நாளொன்றில்
என் தடத்தில் பயணிக்க எத்தனித்தேன்,
அருகில் வரவும் பரிதவிப்பு
தொலைவில் நிற்கவும் உனக்கு பரிதவிப்பு.
பட்டாம்பூச்சிகளை மட்டுமே அறிந்திருக்கும் எனக்கு
பாதையின் முட்களின் மீது பிரஞையில்லை...
கண்களாலேயே அரணமைத்து
நிற்கிறாய்.
நீளும் வானமும் நீலக் கடலும் இணையும் ஒரு புள்ளியில்
விரியத்தொடங்கும்
இந்த
பேரன்பின் வழித்தடத்தில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள்
எல்லாவற்றையும்
நீ
தாயுமானவன் பெயரினால் நிரப்ப
நான்
மகளதிகாரத்தினால் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்
மீண்டுமொரு முறை
பாதம் தழுவும் இந்த கடலலைகளை தொட்டுவிட்டு
ஓடி வந்து உன் கால்களை கட்டிக்கொள்கிறேன்...
அகண்டு விரிகிறது
நம் கடலும்
நம் வானமும்...

Offline ! Viper !

நீண்டு விரிந்திருக்கும் பாதையில்
வண்ணத்துப்பூச்சியின் பின் ஓடும் மழலையாய்
நின்றிருந்தேன்.
வெயிலில் மிதந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியின்  இறக்கைகளை பற்றி
உனக்கொரு பரிசளித்தேன்.
என் கைகளில் பற்றியிருந்த அதன் இறக்கைகளை விடுவித்து
நீ எனக்கொரு பரிசளித்தாய்.

சின்னஞ்சிறு செடிகளை கொய்து
சின்னஞ்சிறு குற்றங்களை செய்பவன் நான்
விரலிடுக்களில் இருக்கும் இலைகளை தட்டிவிட்டு விதைகளை தந்தாய்

விரிந்த வானத்தில் உயர நோக்கி பறந்த
பறவைகளைப் பார்த்தப்படி
உன்னிடம் கேட்டேன்,
'அப்பா எனக்கு வானம் வாங்கி தரியா?'
'வானமா? வானம் எதற்கு?' என வினவினாய்.
'நானும் பறவைகளை போல பறக்க தான்' என்றேன்.
வான் எட்டும்படி உயர தூக்கி உச்சி முகர்ந்தாய்.

என் விருப்பங்களுக்கு செவி சாய்த்திருக்கிறாய்
என் போக்குகளுக்கு என்னை விட்டுப்பிடித்திருக்கிறாய்
என் விதண்டாவாதங்களுக்கு விலகி நின்றிருக்கிறாய்
என் கருத்துக்களை அனுமதித்திருக்கிறாய்
என் அனுமாங்களை மல்லுக்கட்டி
மடக்கியிருக்கிறாய்
மகனென்ற ஸ்தானத்தின்று தோழன் ஸ்தானத்திற்கு நான் உயர்த்தப்பட்டிருந்தேன்.

என் பிரிய வானத்தில் ஓர் பறவையாய்
என் நேச விதைகளின் விருட்சமாய்
என் கனவுகளின் காவலனாய்
என் பேரன்பின் துவக்கமாய்
தோள் கொடுக்கும் தோழனாய்
நீ ஆவாய் என எண்ணியிருந்த தருணத்தில்
எங்கோ தொலைந்து போனாய்
என் பிரிய வானம் பறவைகளற்று வெளிறி போயிருக்கிறது
என் நேச விதைகள் தளிர்க்கவில்லை
என் கனவுகளெல்லாம் கானல் நீராகிவிட்டது
பேரன்பாய் துவங்கிய புள்ளியிலேயே இன்னமும் நின்றிருக்கிறேன்
எங்ஙனம் புரிய வைப்பது
தோள் கொடுக்கும் தோழர் எவரும்
தந்தையாகிவிடுவதில்லை என?

Offline Ishaa

அப்பா

என் தூக்கம் என்னை விரட்டும் போது
உன் அணைப்பில் இருந்தபடி
உன் சிறுவயது குறும்புகள் நான் கேட்டிருப்பேன்
இனிமேல் உன் அணைப்பில் கிடைக்கும் வரம்
மீண்டும் எப்போது கிடைக்கும் என் தங்கமே?

மாலை முதல் இரவு வரை சின்ன சின்ன வேலைகள் பார்த்தாய்
உறவுகளோடு தொலைபேசியில் சுகம் விசாரித்தாய்
பாசமுடன் உறவுகளை ஒட்டியே வாழ்ந்தாய்
இரவில் தொலைத்த தூக்கத்தை
பகலில் தேடி துயில் கொண்டாய்
இப்போது நீ தூங்கும் தூக்கத்தில் இருந்து
எப்படி உன்னை எழுப்ப?
நீயாக கண் விழிக்க மாட்டாயா என
ஆவலுடன் காத்திருக்கிறேன் அப்பா


அம்மாவுக்கும் எங்களுக்கும் எதுவும் ஆனால்
பதைபதைத்துப்போய் குடிக்கும் நீர் முதல் தைலம் போட்டு விடுவது வரை
எங்களுடன் இருந்து பார்த்தாயே
உம் கைகள் தைலம் போட
கண்ட பிணி எல்லாம் ஓடோடி போய்விடுமே
இப்போ யார் எங்களை காப்பார் அப்பா?

உம் வருத்தம் பற்றி நான் கேட்டால்
அது அதோட வேலைய பாக்குது
நான் என் வேலைய பார்க்கிறேன் என்று சொல்லி
உன் தன்னம்பிக்கையால் வருத்தங்களை வென்றாயே அப்பா
உன் தன்னம்பிக்கையும் தைரியமும் எங்களுக்கு ஊட்டி வளர்த்தாயே
நீ இல்லாத நாட்களை கடக்கும் தைரியத்தை சொல்லி தராமல் நீண்ட தூக்கத்திற்கு போனாயே அப்பா


ஒரு பெண் பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று
கண்டித்து வளர்த்தாய் அப்பா
உன் ஆதாரவோடு ஆண் பிள்ளை செய்யும் வேலைகளையும் செய்து வா
என்று பொறுப்பான அப்பாவை திகழ்ந்தாயே
இன்று உம்மிடம் எதுவும் கேட்க முடியாமல் தவிக்கிறேன் அப்பா

நீ எங்கு சென்றாலும்
உம் நினைவுகள் முழுவதும் என்னை சுற்றியே இருக்கும்
இனி என்னை யார் நினைப்பார் அப்பா
உன் கடைசி நாட்களிலும்
நாங்கள் மனம் தளராமல் இருக்க
106 நாட்கள் எங்களுக்கு தனிமையை பழக்கினாயே
எமக்கும் தனிமையை பழக்கினாயே
எங்களை தனிமையில் விட்டு உன் பயணத்தை நீ தொடங்கி விட்டாயே அப்பா

எங்கே நீ சென்றாலும்
உம் நினைவுகளோடு மட்டுமே வாழும்
உன் கடைக்குட்டி சிங்கம்

Special Thanks to Venmathi sis <3, Madhurangi, Viper and Gab!
You all made my day!