Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 256  (Read 3947 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 256
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


நீ இல்லாத வெற்றிடங்களில்
வெறுமனே லயித்து லயித்து, கொடூரத்தனிமைக்கு
பலியாகிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய நாழிகைகளில்
பிறர் என் மீது செலுத்தும் பாசத்தையெல்லாம்,
உட்கொள்ளும்படியாக நான் இல்லை. உனதொரு பிம்பம்
அங்கே உருப்பெருகிறது.
அதன் சாயலில்
வேறெதனையும் ஏற்க முடியாத,
மகா துயரொன்று
என் நாளங்களிலெல்லாம்
விரவிக் கிடக்கிறது.

என் இப்போதைய
உளச்சிதைவுக்கும் சேர்த்தே,
சற்று அதிகமாய்
உன்னை காதலித்திருக்கிறேன்.
அதற்கான பிரதியுபகாரமாய்
இப்படிச் சிதைந்த என்னை,
எனக்கு அளித்து விட்டுச் சென்றிருக்கிறாய்.

இதோ எனதிந்த தனிமையில்
ஆன்மாவைச் சோதித்துப் பார்க்கும்
ஏகாந்தம் நிறைந்திருக்கிறது...
இருவருக்கும் சொந்தமாகியிருந்த காதல்,
அயர்ச்சியின்றி அதனோடு
சம்பாஷணை
நடத்திக் கொண்டேயிருக்கிறது.
இடையிடையே...!
உன் சிரிப்புச் சப்தம்,
உன் குரலோசை,
நீ மெளனிக்கும் நிமிடங்கள்,
உன் செய்கை,
யாவற்றின் மனப் பிரதியும், அசரீரியும்,
என் பெரும் மெளனத்தை கலைத்து
போதை தரவல்லதாய் உள்ளது.

தனிமையெனும் பெரும் காட்டில்
வழி தவறுவதென்பது,
மரணத்துக்கான பாதையென்பதை
நீ அறிவாயா?
உன் நினைவுகளை விட்டும் தப்பிப்பிழைப்பதற்காய்
நான் எடுத்த பிரயத்தனங்கள் எல்லாமுமே உன்னில் தான்
மறுபடி வந்து முடிவுறுகிறது.
என் உயிர் வேரினில்
நீ காதல் மலராய்
பூத்துக் குலுங்குகிறாய்.
நீ உயிர்ப்போடு இருக்க வேண்டுமெனில்,
நான் சரியவே கூடாதென
தீர்மானம் பூண்டிருக்கிறேன்.

கவனி!
உன் மீதான அளவற்ற
மன நெருக்கத்தின் விபரீதத்தில்,
என்னை தனியாய்
இவ்வாழ்விலிருந்து பிரித்தெடுத்து
வதைத்துக் கொண்டிருக்கிறேன்...
பிரிவினைக்குப் பின்னர் காதலென்பது
அங்கீகரிக்கப்பட்ட ஒரு நச்சு....💔
பிழைகளோடு ஆனவன்...

Offline AgNi



வான துணிதனில் வரைந்த ஓவிய நிலவே !
கண்கள் வரைந்த காட்சிகளை
தூரிகையால் செதுக்கிட துடிக்கும் 
நானும் என் கனவுகளும் சுகமே !
நீ அங்கே சுகமா ?

பால்காய்ச்சிசெய்த இனிய  நிலவே!
பளிங்குபோன்ற என் மனமும்
பாலையான காலமும் சுகமே !
நீ அங்கு சுகமா ?

விண்வெளியில் மிதக்கும் பந்தே !
விதைகளில் ஒளிந்த விருக்ஷம்  போல்
வீண் கற்பனைகளில் சஞ்சரிக்கும்
நானும் என் நானும் நலமே !
நீ அங்கு நலமா ?

வான தடாகத்தில் முளைத்த வெள்ளை தாமரையே !
அலை அடிக்கும் கரையானாலும்
ஆழ்கடல்  முத்துக்கள் அமைதியாய்
அடைகாப்பது போல் அடைந்து
துடிக்கும் என் இதயம் நலமே !
நீ அங்கு நலமா ?

காற்றில் ஆடும் பூ போல
பறந்து அசைந்து ஆடும் விண் பூவே !
பெண் பூவின் மனகுதிரை பறந்தாலும்
பூலோகம் தாண்டி மேகத்தில் குடி கொண்ட
நானும் என் தனிமையும் சுகமே ! நீ அங்கு சுகமா ?

கோடி ஆண்டுகள் ஆனால் என்ன ?
நீ யாருக்காக காத்து இருக்கிறாயோ ?
காத்திருப்புகள் இங்கு கவிதை ஆகும் ..
வாய் திறந்து சொல்லாவிடினும்
வாழ்த்தும் இதயம் என்றும் உனக்காகவே !
எங்கு இருந்தாலும்ம் வாழ்க !




Offline JsB


நான் அதிகம் நேசிக்கும் இருளின் இரவே ....
நிலவின்  ஒளியில்  நீ உறங்கும் அழகை
ரசித்திடவே  தினமும் அந்நேரத்திற்காய் காத்திருக்கிறேன் ...
எனக்காய் வானில்  தோன்றி....ஒளியுடன்  கூடி ....
வட்டமடித்து ....நடனமாடும் ....நிலவின்  அழகியே....

இன்று யாரும் இல்லாதவளாக....
தனிமையில் இனிமை காண....
உனக்காக  ஓடி வந்திருக்கிறேன்
என் அழகான இரவே....
என் அமைதியான இரவே....
என் மொத்த அம்சமும் நிறைந்த நிலவே....
கண்களை பறித்துச் செல்லும்
கோடி  கோடி  நட்சத்திர கூட்டமே....
என்னையும் தழுவிக் கொண்டு செல்லும் பனிக்காற்றே....
விழித்திருக்கும் என்  கண்கள் உறங்க முடியாமல்
தவிப்பதை காண வந்தாயோ....

எல்லாம் முடிந்தது என
உன்னை சுமந்த என் இதயம்
உன்னை அடியோடு வெறுத்து....
வேரோடு பிடிங்கி ....தூக்கி எறிந்த நொடியை
நீ விளையாட்டாய்  நினைத்து விட்டாயோ???
நீ  விளையாடி சென்றது
என் உணர்வில் பிறந்த உண்மையான அன்பு ....அது

உண்மையான உயிர்களுக்கு உரிய பண்பு என்பதை
மறந்து போனாயோ ...
உன்னால்  தனிமையில் அழுது....
தனிமையில் புலம்பி....
தனிமையில் பேசி...
தனிமையில்  வாழ.... கற்றுக் கொடுத்த
நாட்களையும் ....இரவுகளையும்
எப்படி மறப்பேன்....
எப்படி மன்னிப்பேன்....

அன்பின் ஆழம் என்னவென்று புரியாத உனக்கு....
நான் காட்டி சென்ற அன்பு கூட....
புரியாத புதிராக தான் போயிருக்கும்
தொலைத்ததை தேடாதே....
நீ தொலைத்த பொக்கிஷம்....
உன்னை விட்டு சென்று
பல நாட்களாகி விட்டது....

வழிய வழிய பேசினால்
மயங்கி உன் பின்னே செல்கிற
பெண்  நானல்லவே
என் வழி தனி வழி
எல்லாவற்றையும் மறந்து
இன்னமும் சிரிக்கிறேன் பொய்யாக....

விடிகின்ற இரவே
எனக்காக விடியாமல் இருப்பாயா???
நீ விடிகின்ற ஒவ்வொரு நாளும்
என் கண்ணீரால் நனைத்து செல்கிறது

என்றும் நினைவிருக்கும் வரை
வலியால் துடிக்கின்ற உன் இதய துடிப்பு
ஜெருஷா


   
   



   
   
« Last Edit: January 26, 2021, 02:30:47 PM by JsB »

Offline MoGiNi

நிலவொளியில்
உருகி வழியும்
விம்ப வரிவடிவில்
கலந்து கிடக்கிறது ஆத்மா ..

ஆத்மார்த்த அன்புக்கு
ஆயுள் அத்தனை நீளமல்ல ..
சிறகுடைந்த பறவையின்
புன்னகையை
நீ பார்த்ததுண்டா ?
பார்ப்பாய் ..

வாழ்நாள் முழுமைக்குமான
புரிதல் என நினைத்தேன்
வாழவே இல்லை
பிரிதல் ...
வார்த்தைகளின் வீரியம்
புரிதலின் பரிணாமத்தில்
பிறழ்ந்து கிடக்கிறது ..

 தூரத்து நிலவில்
உன் விம்பம்
வழிகின்ற பொழுதெல்லாம்
இறுக்கிப் பிடிக்கிறது 
இருதயச் சுவர்கள் ..

 காய்கின்ற நிலவில்
கரைகின்ற கண் மை
இருளோடு கலந்து
இருதயத்தில் வழிகின்றது ..

தேய்கின்ற நிலவாக
உன் பிரியங்கள் இருந்தாலும்
ஓர் பவுர்ணமியின்
ஒளியாக என்னுள்
வார்க்கின்றேன் உன்னை .

உயிரோடு உறவாட
உன் நினைவுகள்
போதும் என்பேன்
இருந்தாலும் பிரிந்தாலும்
எனதாசை நீ என்பேன் ...

எனினும்
இந்த இரவு
இறக்கைகளை யாசித்திருக்கிறது..
மீண்டுவிட்ட தனிமைச் சுமைகளை
சுமந்து பறந்துவிட....

எதுவும் மீண்டுவிடப் போவதில்லை
யாருமற்ற
தனிமைகளை தவிர..

Offline Evil

காத்திருக்கிறாள் அவள்..
என் மன்னன் எங்கே என்று..
மனதினில் ஏக்கத்தை ஏந்தி.. 
நதிகரை ஓரம் ஓடி நின்றாள்.. 
அவள் கண்களில் நீர் வழிந்தோட..

அக்கண்ணீரும் நதியென ஆனதை...
அவள் அறியாமலே...
கவலைகளோடு... காத்திருக்கிறாள்
தன் காதலன் வருவான் என...
அவளின் கண்ணீரும்...   
கங்கையென பாய்ந்தனவோ... 

அது ஒரு அழகிய இரவு....
உலகமே தூங்கும் அவ்விரவு ஜாமத்தில்
என்னவள் மட்டும்
தூங்கவில்லை  எனக்காக...
என் வருகைகாக...

நதியோரம் ஒரு மரத்தடியில்...
சிவந்த கண்களுடனும்....
சிந்தும் கண்ணீருடனும்
காத்து கிடக்கிறாள்..
அவளின் மனதை...
கொள்ளை அடித்த...
இந்த கள்வன்...
வருவானென்று...

நான் நிலவை...
தூதாக அனுப்பினேன்..
நிலவே!  நீ சென்று
என் காதலியிடம் சொல்.. 
நான் வருவேன்!
உன்னைக் காண நிச்சயம்
வருவேன்னென்று!

உன் ரத்தத்தை கண்ணீர் என சிந்தாதே! 
உன்னை நான் சந்திக்கும் காலமோ..
வெகு தொலைவில் இல்லை..
என் அன்பே வாடாதே! 
வந்து விடுவேன் உன்னிடம்!!
உன் உள் மனதை கேட்டுப் பார்!
அதுவே சொல்லிவிடும்...
நான்  வந்து கொண்டு இருக்கிறேன்...
உன் அன்பை தேடி..... 
உன் அரவணைப்பை  நாடி ...
« Last Edit: January 27, 2021, 11:33:41 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline TiNu

சுற்றி சுற்றி ஆயிரம் ஆயிரம்.. 
நல்லுறவுகள் இருந்தாலுமே...
தன்னந்தனியே.. தனிமையை..
தேடுதே என் மனமே...

காரிருளின் கையணைப்பிலே..   
கண்மூடு கிடப்பதுவுமே..
ஓர் சுகமென அமைதியில்...
திளைக்குதே என் மனமே...

வீசும் குளிர் காற்றே...
உன் வாசம் எனை தீண்டுகையிலே..
விவரிக்க இயலா நிம்மதியில்... 
மயங்குதே என் மனமே..

கிளைகளை உரசும் இலைகளே.. 
உன் ஆனந்த அசைவினாலே...
எழும் ஸ்வர வரிசைகளில்...  .
உருகுதே என் மனமே.... 

சலசலவென நகரும் தண்ணீரே...   
உந்தன் சந்தோச நடனத்தாலே...
என் கண்கள் காணும் காட்சிகளினால்...   
கூத்தாடுதே என் மனமே..

இருள்சூழ் விடியா இரவினிலே.. 
திக்குத்தெரியாத கணம் போலே..
நினைவெங்கும் நிசப்தத்தால்...
ஸ்தம்பிக்குதே என் மனமே...

பாலொளி வீசும் வெள்ளி நிலவே..
உன் குளிர்முக சிரிப்பினாலே..
சில்லு சில்லாய் உடைந்து..
சிதறுதே என் மனமே..

தனிமை தேடி தனியே வந்தேன்...
ஆனால் நான் தனியே இல்லையே!!
சட்டெனெ தடுமாறின என் மனமுமே..
தனிமைகள் என்றுமே! தனியாக இல்லை!!!

Offline thamilan


மனதில் காதலுடனும்
கண்களில் ஏக்கத்துடனும்
காத்திருக்கிறாள் கன்னி இவள்

தன்னைப் பிரிந்து
தூரதேசம் சென்ற கணவன்
இந்த நிலவிடம் சரி
செய்தி அனுப்பியிருப்பானோ என
ஏங்கி காத்திருக்கிறாள் இவள்
நிலவுக்கு பேசும் சக்தி இருந்தால் 
கணவனை அவன் துயரத்தை
கதை கதையாய்  சொல்லி இருக்கிருக்குமே
கைகள் இருந்தால்
காதலன் அவன் இவள் நினைவில் உருகுவதை
காவியமாய் எழுதி இருக்குமே

காதல் எவ்வளவுக்கெவ்வளவு ஆனந்தமானதோ
அத்தனைக்கு அத்தனை துயரமானதே
இருப்பதை விட இல்லாத போது தானே
காதல் அதிகம் காயப்படுத்துகிறது
அவன் நினைவும் காதலும்
உடம்பின் ஒவ்வொரு அணுவிலும்
புதுப் புனலாய் பொங்கி வழிகிறதே

இப்போதெல்லாம்
எனக்கு இரவு பிடித்திருக்கிறது
தனிமை பிடித்திருக்கிறது
இந்த ஏகாந்த அமைதி பிடித்திருக்கிறது
இவை ஒவ்வொன்றும்
என் மனதை புடம் போட்டுக்கொண்டிருக்கிறது
என் அன்பானவனின் மேல் உள்ள காதலை
மெருகேட்டிக் கொண்டிருக்கிறது 
அவன் அவரும் வரை இந்த இரவும் தனிமையும் தான்
எனக்குத் துணை 

Offline Raju

சூரியன்
மறைந்தது
மேற்கு வானில்
தொலைந்தது...

நீ எப்போது வருவாய்
என காத்திருந்து
கடல் அலைகளும்
பொறுமை இழந்தது
கண் இமைகளும்
பூத்து போனது...

காக்க வைத்தாய்
ஏங்க வைத்தாய்
ஓர் அனாதையைபோல்
என்னை உணரவைத்தாய்...

குளிர்காற்றில் கரைவேனோ
கரைமணலில் புதைவேனோ
உனக்காய் காத்திருப்பேன்
நீ வரும் வழி பார்த்திருப்பேன்...!
« Last Edit: January 30, 2021, 06:09:13 PM by Raju »