மரணிக்கப்போகிறவனே கொஞ்சம் நில்
கணக்கை முடித்துவிட்டுப் போ
வாழ்க்கையெல்லாம் பற்று வைத்து விட்டு
போகப் போகிறவனே
உன்பங்குக்கு
ஒரு வரவாவது வைத்துவிட்டுப் போ
இந்த உலகுக்கு
ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய்
உலகத்தில் உள்ள எல்லாம் அனுபவித்தாய்
கடனாளியாகவே போக போகிறாயா
என்னுடையது என்று நீ
சொந்தம் கொண்டாடியது எதுவுமே
உனக்கு சொந்தம் இல்லை
உன் உடல் உனது
பெற்றோர் இட்ட பிச்சை
உன் சுவாசம்
காற்றிடம் நீ வாங்கிய கடன்
பசித்தபோதெல்லாம் பூமியின் மார்பில்
பால் குடித்தாயே
எதற்காவது விலை கொடுத்தாயா
வாடகை சரி கொடுத்ததுண்டா
நன்றியாவது செலுத்தினாயா
மின்சாரத்துக்கு நீருக்கும்
விலை கொடுத்த நீ
மேகம் தந்த தண்ணீருக்கும்
சந்திர சூரியன் தந்த வெளிச்சத்துக்கு
கட்டணம் கட்டினாயா
உன் முன்னோர்களின் நதிகளில் இருந்து
உன்வயலுக்கு நீர் பாய்ச்சியவனே
வெள்ளம் கரைஉடைத்தபோது
ஒரு தடவையாவது மண் சுமந்தாயா
அறிமுகம் இல்லாத கைகளினால்
கண்ணீர் துடைக்கப்பட்டவனே
சக மனிதனின் ஒரு துளி கண்ணீரையாவது
நீ துடைத்திருப்பாயா
யாரோ ஊற்றிய நீரால்
புன்னகை பூத்தவனே
ஒரு காய்ந்த உதட்டிலாவது
புன்னகையை மலர்வித்திருப்பாயா
என்ன உறவு உன்னுறவு
வாங்கலை மட்டுமே செய்தாயே
கொடுக்கலை செய்தாயா
மொத்தமாக செத்துப்போகப் போகிறவனே
கொஞ்சம் சில்லறைகளில் சரி நீ
இருக்க வேண்டாமா
மரணக்காற்றில் ஒரு விளக்கைபோல்
அணைந்து போகாதே
ஒரு ஊதுபத்தி போல
கொஞ்சம் நறுமணத்தையாவது விட்டுப் போ
உன்சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுப் போ
ஒரு தடயமும் இல்லாமல்
மறைவதற்கு வெட்கப்படு
குற்றவாளி தான் அப்படி செய்வான்