ஒவ்வொன்றாய் வகுத்தெடுத்த
பேரன்பினைப் பிரித்தறிவதற்குப் பக்குவப்படவே
நமக்குக் காலமாகிவிடுகிறது
நிறைய கதாப்பாத்திரங்களை சுமந்து
கொண்டுத் திரியும் நாம், எல்லோரிடமும்
அதைக் காட்டி விடுவதில்லை அதற்கென்றுத்
தனி அறையாக சில மனிதர்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறோம்
அவர்களுக்கும் நாம் நம்முடைய குணாதிசயங்களை
வெளிப்படையாகக் காட்டும் போது ஏற்றுக் கொள்ளக்
கூடிய ஏதோவொரு கதாப்பாத்திரத்தை வழங்கியிருப்போம்
அவர்களும் நமக்கு வழங்கியிருப்பார்கள்
அதனை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் கூட,
அவர்களுக்காக நாம் கதாப்பாத்திரத்தை
விரும்பத் துவங்குவோம்
சிலரைப் புரிந்து கொள்ள
சில சமயங்களில் அவர்களுடன் நிதானமாகப் பயணிக்க,
புன்னகைகளைத் தேக்கி வைக்க,
அழுகையிலிருந்து சுலபமாக விடுவிக்கச் செய்ய,
வெற்றியைக் கொண்டாட,
தோல்வியிலிருந்து முன்னேற்ற,
தேக்கி வைக்கப்பட்ட பலநாள் கண்ணீரை
ஒட்டு மொத்தமாகக் கொட்டித் தீர்க்கவென்று
ஓர் மடியை உருவாக்கி வைத்திருப்போம்
அப்படியான ஓர் புன்னகையை
தொலைவுக்குத் தள்ளும் ஒவ்வொரு
கொண்டாட்டமும் முத்தங்களைப் போல் ஜீவித்திருக்கும்
விலகலென்பது அரங்கேறும் தருவாயில்
திடகாத்திரத்தைத் தந்து தேற்றி
வைக்கும் புன்னகையே நிரந்தரமாயிருக்கும்
நான் புன்னகை என்று அவர்களைக்
குறிப்பிடுவதற்கும் ஓர் காரணமுண்டு.
புன்னகையே அன்பின் ஆதி
அன்பே நேசிப்பின் வெளிப்பாடு நேசங்களே
கொண்டாட்டங்களுக்குப் பக்கபலன்
நேசங்கொண்டோர்களே- என் கொண்டாட்டத்தின் ஆதி
அவர்களே புன்னகைக்கு உரியவர்கள்