உண்மையை மட்டுமே
உணவாய்க் கேட்கிறதென்ற
உயரமான குற்றாச்சாட்டோடு
எல்லோரும் பழக்க மறுத்த
அன்பெனும் மிருகத்தை
நீ உன் எளிய கைகளின்
சிறிய அசைவேவல்களுக்குள்
கட்டுப்படுத்தலாமென்ற
பேராசையோடு முன்வருகிறாய்
ஆரம்பத்தில் நீ காட்டும்
அக்கறைப் பார்வைகளையும்
புன்னகைச் சொற்களையுமேற்று
சற்றே உன் மனமகுடிக்கு
மயங்கிவிட்டதைப் போலவும்
பணிந்துவிட்டதைப் போலவும்
நடிக்கவும் செய்யுமந்த
நவரசமறிந்த நயவஞ்சக மிருகம்
பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்
கைக்கடங்காமல் முரண்டு பிடிக்கும்
வாய்க்கடங்காமல் பொய்கள் பல பேசும்
பொறுப்பேற்ற உன்னையே
வெறுப்பேற்றும் காரிய வினைகள் செய்யும்
வேண்டமென்று பாதியிலுதறினாலும்
விலகமனமில்லையென்று கலகம் செய்யும்
உறக்கங்கள் பறிக்க
இரவுகளை இரையாக்கும்
உயரங்கள் பறக்க
துயரங்களைக் துணைக்கேகும்
கனவுகள் பூக்க
கானல்களை நீராக்கும்
நினைவுகளில் அழுந்த
நிஜங்களை நிலைமாற்றும்
எதற்கிந்த ஏமாற்று வேலையென்று
எதிர்த்து நீ பேசிவிட்டால்
ஏமாற ஆளிருந்தால்
ஏமாற்றங்கள் புதிதில்லையென்று
எதிர்த்தர்க்கம் பேசுமந்த
எஜமானுக்கஞ்சா மிருகம்
நம்பிக்கையாய் வாங்கிவந்து
நாளெல்லாம் காத்து வளர்த்தும்
நல்லபுத்தி கிட்டலையென்று
நல்ல நாளில் அழுவாய்
கடைசியாகச் சொல்கிறேன்
கண்திருப்பாமல் கடந்துவிடு/color]