முகங்கள் விற்கும் அங்காடி
தெருவில் புதியதாய் ஒரு
முகங்கள் விற்கும் அங்காடி முளைத்திருந்தது
எத்தனையோ அங்காடிகளைப் போல
அதுவும் வாசல்கள் உள்ள ஒரு
அங்காடி தான்
எத்தனையோ அங்காடிகளைப் போல
அதுவும் ஜன்னல்களற்ற ஒரு
அங்காடி தான்
கண்ணாடி குடுவைகளில்
பத்திரப்படுத்தப்பட்ட
நேர்த்தியான முகங்களில் நமக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்
சில முகங்கள் கனகச்சிதமாக பொருந்தி போகலாம்
சில முகங்கள் பொருத்தமற்ற
அளவுகளில் இருப்பினும் அணிந்து கொள்வதென்பது
அவரவர் விருப்பம்
கண்ணாடி குடுவைகளில் அடைக்கபட்டிருக்கும் முகங்களுக்கும்
கண்ணாடியின் சாயல்.
மிகவும் ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டும்,
கண்ணாடி முகங்கள் என அறிந்து கொள்ளப்படும்பொழுது
சில கல்லெறிதல்கள் நிகழலாம்
உடைந்து விழும் கண்ணாடி முகங்களின் ஊடாக தெரியும்
உண்மை முகங்கள்
அளப்பரியாத கோரங்களை கொண்டது
ஆதலால்
கண்ணாடி முகங்களை அணிந்திடும்பொழுது
சிறிது கவனம் தேவை
பொருத்தமற்ற முகங்களை அணியும் பொழுது
பல காலம் பல முகங்களில்
அணியப்பட்ட சாயல்
அவற்றில் இன்னும் மிச்சமிருக்கலாம்
அவற்றின் ஏதேனும் ஒரு பிம்பம்
மிகச் சாதாரணமாக
நம்முடன் ஒட்டிக்கொண்டு விடலாம்
பிறகெப்போதும் அழிந்துவிடாத தடங்களை அவை நிஜ முகங்களின் மீது விட்டுச் செல்லலாம்
ஆதலால்
பொருத்தமற்ற முகங்களை அணிந்திடும்பொழுது
சிறிது கவனம் தேவை
நீண்ட நாள் அணியத் தேவையான முகங்களின் கீழ் சில குறிப்புகள்
கொடுக்கப்பட்டுள்ளன
1. நீண்ட நாள் அணியும் முகங்கள் சுயத்தன்மையை மறக்கடிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது
2. நீண்ட நாள் அணியும் முகங்கள் உண்மை உணர்ச்சிகளை மழுங்கடிக்க கூடியது
3. நீண்ட நாள் அணியும் முகங்கள் நம் மெய் முகங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியாமல் போகும் சாத்தியம் கொண்டது
ஆதலால்
நீண்ட நாள் அணியக் கூடிய முகங்களை
அணிந்திடும்பொழுது
சிறிது கவனம் தேவை
உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்த
ஒரு முகம்
உணர்ச்சிகளற்ற ஒரு முகம்
உணர்ச்சிகள் கொப்பளிக்கும் ஒரு முகம்
குறுநகை புரியும் ஒரு முகம்
வக்கிர புன்னகை சூடி நிற்கும் ஒரு முகம்
நிஜங்களை சுமந்து நிற்கும் ஒரு முகம்
நிஜங்களை திரித்து நிற்கும் ஒரு முகம்
பாவமானதொரு முகம்
பாவனைகளற்ற ஒரு முகம்
சுயம் தொலைந்த ஒரு முகம்
சுயத்தை மறைக்குமொரு முகம்
முகங்கள்,
முகங்கள்,
முகங்கள்,
முகங்களை ஏந்தி நிற்கும் கண்ணாடிக் குடுவைகள்,
கண்ணாடிக் குடுவைகளை ஏந்தி நிற்கும்,
ஜன்னல்களற்ற அங்காடிகள்
மீளமுடியாத முடிவிலியான ஒரு சுழற்சியில் சிக்கிக் கொள்ளும்பொழுது
மேலெழும்பி அழுத்துகின்றன
சில
முகங்களும்,
கண்ணாடிக் குடுவைகளும்,
ஜன்னல்களற்ற அங்காடிகளும்
முகங்கள் மிக கவனமாக கையாளப்பட வேண்டியவை
*Handle with care*