காலங்கள் விழுங்கிய கனவுகள்
ஒத்த புள்ளய பெத்து ஆச ஆசயாய்
அழகு பார்த்த அப்பனாத்தா விட்டு - ஆச
வச்சேனே மாயவன் அவன் மேலே ...
செப்பு சிலயாய் நிக்கயிலே கண்ணுலே
காதல் ஒட்டி வச்சு போனானே...
பாதகத்தி நான் பார்த்திருந்தேனே
பாவிமகன் வருவான் என...
விழி தீண்டிய வீரன் அவன் ...
வழி மாற்றி போனதெங்கே...?
அமுதினியாய் நான் இருக்க
அகிலம் விட்டு போனதென்ன...?
தொங்க தொங்க தாலி கட்டி,
மணக்க மணக்க மல்லிகை சுட்டி,
என் கை கோர்த்து நடக்காம ஈசனவன்
பாசகயிற்றை பற்றி போனதென்ன ...?
என்ஜோட்டு இளசுகள் தூளி கட்டி வாழயிலே...
மையிருட்டு அடுக்களையில் எனை வேகவிட்டு
மண்ணுக்குள்ளே கண்ணுறங்க போனதென்ன...?
நெனச்சவன் போனா என்ன கெடைச்சவன கட்டென்ன
சாதிசனம் தூத்தயில பாவிமக - இவ
பாழ்ப்பட்டு போனாளே
மவராசன் உன் நெனைப்பிலே ....!