விழிகள் நிறைந்து
சப்தமின்றி தாரை தாரையாய்
வழியும் கண்ணீரை அறியாமல்
விரல்கள் மோவாய் மூடி
தாடையை தாங்கி நிற்கும் கைகள்
ஒரு கால் ஊன்றி மறுகால்
லேசாய் சமன் செய்து
ஒலைக்கீற்றுக்களால் கட்டிய
வேலிக்கதவோரம் பல நாளிகளைகள்
தெருவையே வெறித்துப் பார்த்து
காத்து நிற்பாள் பாட்டி.....
*
மகன் பேர்ஷியா போக
வழி சொல்லிப்போன பிளஸ்ஸர் கார்
தெருவின் தொலை தூரத்து
வளைவில் மறைந்து
காணாமல் போகும்வரை
கவுணிச்சீலையும் மனதில்
ஓடும் நேற்சைகளும் வீழாமல்
கனத்த இதயத்துடன் திரும்புவாள்.....
*
காத்திருப்பின் அவஸ்தைகள்
உணர்த்தும் ஆகாயம் கிழித்து
கடல் கடந்த மகனின்
கடிதத்தின் வருகை....
*
தபால் காரனின் கைகளில்
வீங்கி நிற்கும் அத்தனை
ஏர்மெயில் கவர்களும் மகனின்
கையெழுத்தாகக்கூடும் எனும்
அதீத நம்பிக்கை சைக்கிளில்
தொங்கும் காக்கிப்பைகளிலும்
விழித்தேடலாய் தொடரும்....
*
இன்றைக்கு லெட்டர் இல்லை
என்ற இன்றைய பதிலில்
நாளை இருக்குமில்லியா
எனும் அடுத்த கேள்வியை
நுளைப்பாள் பாட்டி....
*
ஏமாற்றத்தில் உதிற்கும்
புன்னகையின் ஆழம்
பெரிய சிரிப்பின் அழகை
வென்றுவிடும் என்பேன் நான்...
*
ஏர்மெயில கிழிக்கும் முன்
தன் கைகளுக்குள் திணிக்கப்படும்
சில்லரைகளின் கணக்கை
மறந்துபோகிறான் தபால்காரன்
குதூகலித்துச் செல்லும்
பாட்டியின் சிரிப்பில்....
*
இறையருளால் நலம்
எனும் அப்பாவின் வரிகளை நான்
வாசித்து காட்டும் முன்பே அவளின்
சங்கடப்பொருமலின் முனகல் சப்தம்
என் தொண்டையை அடைக்க....
கவுணி முந்தானையால்
ஆனந்தக் கண்ணீர் துடைத்து
லேசாய் விதும்பிக்கொள்வாள்...
*
ஹாங்...
அதெல்லாம் ஒரு காலம்டா.....