நாம் வாழ்வோம்.. நாம் சாவோம்
சத்தியமும் ஜீவனும் கொஞ்சமே
கொஞ்சமென மிச்சமிருக்கும்
இவ்வுலகில் பிறப்பெடுத்திருப்பது உங்கள் தவறல்ல
கொலை வாள் தூக்கி சுமக்கும் நிலத்தில்
கருணை தேடித் திரிவது
உங்கள் தவறல்ல
இங்கு
வளையாத கோலென்று
ஒன்றுமேயில்லை
புகார்களற்ற உலகம் திண்மையற்றது
என புகார் பெட்டிகளை மடியில்
சுமந்து செல்வோர் கூட
உங்களின் எதோ ஒரு பிரதிபலிப்பு தான்
பிறிதொருவரின் வலி சூல்கொண்ட இதயத்தை திறந்து காட்டுகிறோம்
பிறிதொருவரின் மறைக்கப்பட்ட உண்மைகளை
திறந்து காட்டுகிறோம்
பிறிதொருவரின் ஊன்களை
திறந்து காட்டுகிறோம்
பிறிதொருவரின் படுக்கையறையை கூட
திறந்து காட்டுகிறோம்
ஏனெனில் யாரோ ஒருவரின்
உண்மையை
வலியை
அந்தரங்கத்தை
திறப்பது அவ்வளவு எளிதானதாக இருக்கிறது
எவ்வளவுக்கெவ்வளவு
இக்கூட்டினுள் சுருங்கிக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு
இங்கு
பயமில்லை
இந்த
உலகம் முடிந்துவிடாத ஒரு தருணத்தில் நமக்கான அன்பு
இன்னமும் மிச்சமிருக்கிறது
என பொறுத்திருக்கிறோம்
ஒவ்வொரு நாளும் நம் கல்லறைக்கென
சில வாசகங்களை தேர்வு செய்கிறோம்
வாழ்வினின்று முடித்துவிட முடியாத
சில செய்கையை
இறப்பில் பதிவு செய்து
நல்லவர் பட்டம் வாங்கிக் கொள்கிறோம்
இழந்து இழந்து
இழப்பதை புதுப்பித்து
மீண்டும் இழந்து
மீண்டும் புதுப்பிக்கிறோம்
மனிதர்களற்ற அடர்வனத்தில்
அன்பு தேடி அலைகிறோம்
மனிதர்களற்ற தீவில்
தனிமையின் மடியில் புரள்கிறோம்
மனிதர்களற்ற அறைகளில்
தலையணைகளில் புதைகிறோம்
பின் மனிதர்களைத் தேடித் திரிகிறோம்
வாழ்கிறோம்
வாழ்ந்து சாகிறோம்
பின் சாகிறோம்