எனை ஆட்கொண்ட தமிழே !
ஆசைஆசை அவ்வளவுஆசை ,
பால்வாடியில் கற்ற
உயிர்எழுத்துக்களும்
மெய்எழுத்துக்களும்
தமிழ்ஆசிரியை லட்சுமி
கற்பித்த உயிர்மெய் எழுத்துக்கள்..
என்ன ஒரு விந்தை
உயிர் மற்றும் மெய்
எழுத்துக்களை கூட்டினால்
உயிர்மெய் எழுத்துக்களா !!
உயர்வகுப்பில் சோடாபுட்டி
வாத்தியார் கற்றுதந்த இலக்கணம்
அய்யகோ....எத்துணை பிரிவுகள்..
சொல், பொருள், யாப்பு, அணி
ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கிளைகள்
பதின்வயதில் தமிழ் மீது காதல்
எனது தேடல் வித்திட பட்டது..
அவ்வையின் ஆத்திசூடியும்,
கண்ணகியின் கற்பை
பறைசாற்றும் சிலப்பதிகாரமும்,
தாசி குலத்தின் வைரமாய்
ஜொலித்த மணிமேகலையும் ,
பொய்யாமொழி புலவனின் முப்பாலும்,
பள்ளி பருவத்தில் பித்துக்கொள்ள செய்தது ..
முண்டாசு கவிஞனின்
மனதினில் உறுதி வேண்டும் வரிகள்
என் வாழ்க்கை பாதையை சீரமைத்து தந்தது..
பாவேந்தரின் குடும்ப விளக்கு
என் வாழ்வியல் பார்வையை மாற்றியமைத்தது ...
திருமுருகாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டும் என் நெஞ்சினில்
தேனாய் இனிக்க செய்தது ..
அகநானூற்று காதலும், புறநாநூற்று வீரமும்,
திருப்பாவை- திருவெண்பாவை பக்தியும்,
விழி வழியே உள்நுழைந்துஎன் அகம் தொட்டு
காதல் கொள்ள வைத்த
செந்தமிழ் மொழியே !
ஆசை ஆசை ...அடங்கிடா ஆசை ..