Author Topic: சிங்கக்குட்டியும் ஸ்மார்ட் போனும் (படித்ததில் பிடித்தது)  (Read 2553 times)

Offline regime

இரவு 12 மணி.

‘டிங் டிங்’ எனச் சத்தம் தூங்கிட்டிருந்த சிங்கக்குட்டி கண் திறந்து பார்த்துச்சு. சார்ஜ் போட்டிருந்த ஸ்மார்ட்போன் மின்னிட்டிருந்துச்சு. ஏதோ வாட்ஸப்ல மெசேஜ் வந்திருக்கு. இந்த நேரத்துல யாரா இருக்கும்’னு யோசிச்சுக்கிட்டே சிங்கக்குட்டி எழுந்துச்சு.

வாட்ஸ்அப்பை ஓப்பன் பண்ணிப் பார்த்தால், அட.. அம்மாகிட்டயிருந்து ‘ஹேப்பி பர்த்டே’னு மெசேஜ். சிங்கக்குட்டியின் முகம், 1000 ஸ்மைலிகள் ஒண்ணு சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி மாறிருச்சு.  இதே குகையின் பக்கத்து அறையிலிருந்துதான் அம்மா சிங்கம் மெசேஜ் அனுப்பி இருக்காங்க. ‘தேங்யூ... லவ் யூ அம்மா’னு ரிப்ளை பண்ணுச்சு சிங்கக்குட்டி. அப்புறம், கொட்டாவி விட்டுக்கிட்டே படுத்திருச்சு.

சிங்கக்குட்டி எப்பவுமே தாமதமாகத்தான் எழுந்திருக்கும். அதேபோல, பர்த்டே அன்னைக்கும் தாமதமா கண்ணை முழுச்சது. பார்த்தால்... சிங்கக்குட்டியின் கட்டிலைச் சுற்றி அதனுடைய நண்பர்கள்.

புலிக்குட்டி புஜ்ஜிமா, சிறுத்தைக்குட்டி ஷிவ், கரடிக்குட்டி கெளஷி, மான்குட்டி மிருதுவ் என எல்லோரும் கையில் ஒரு பூ வெச்சிருந்தாங்க. மஞ்சள், சிவப்பு, வயலட் என விதவிதமான கலரில், விதவிதமான மலர்கள். ‘`ஹேப்பி பர்த்டே ஜூட்டு’’னு ஒரே குரலில் சொன்னாங்க

அப்பா, அம்மா சிங்கங்களும் வாழ்த்து சொன்னாங்க. ‘`சீக்கிரம் முகம் கழுவிட்டு வா னு சொல்லிக்கிட்டே ஒரு பெரிய ஃப்ரூட் கேக்கை டேபிள் மேலே வெச்சாங்க. சிங்கக்குட்டிக்கு ஒரே குஷி. ஓடிப்போய்ப் பல் விளக்கி, முகம் கழுவிட்டு வந்துச்சு.

மெழுகுவத்தியை ஏற்றி, எல்லோரும் ஹேப்பி பர்த்டே பாட்டுப் பாடினதும், சிங்கக்குட்டி கேக் வெட்டுச்சு. இதை வந்திருந்த ஃப்ரெண்டு ஒவ்வொண்ணும் அவங்க ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்துச்சுங்க. உடனடியா ஃபேஸ்புக்ல அப்லோடு செஞ்சதும், காடு முழுக்கப் பரவிச்சு. எக்கச்சக்கமா லைக்ஸ் குவிய ஆரம்பிச்சுருச்சு. சிங்கக் குட்டிக்கு  ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என எல்லாத்திலும் வாழ்த்து குவிஞ்சுட்டே இருந்துச்சு.

அன்னைக்குப் பரிசா வந்த ஒரு ஐ-போனில் குவியும் லைக்ஸைப் பார்த்துக்கிட்டே கால் போன போக்கில் நடக்க ஆரம்பிச்சது சிங்கக்குட்டி. எவ்வளவு தூரம் நடந்துச்சுன்னு அதுக்கே தெரியலை. ஓர் ஆறு குறுக்கிடவும் சட்டுனு நின்னு, சுற்றிலும் பார்த்துச்சு. அடடா... ரொம்பத் தூரம் நடந்து வந்துட்டோம் போலிருக்கே. எப்படி வந்தோம். இப்போ, எந்தப் பக்கம் திரும்பிப் போகணும்’னு ஒரு நொடி குழம்பிப் போச்சு.

அட... நம்ம கையில்தான் ஸ்மார்ட்பொன் இருக்கே. மேப் போட்டுப் பார்த்துருவோம்’னு நினைச்சது. ஆனால், `நெட் ஒர்க்’ கனெக்ட் ஆகலை. சுத்துது... சுத்துது... ரொம்ப நேரமா சுத்திட்டே இருக்கு. அது மட்டுமா? ‘யுவர் சார்ஜ் இஸ் டெளவுன்’ என எச்சரிக்குது. அடச்சே’னு சிங்கக்குட்டி வெறுத்துப்போச்சு.

அப்போது, புதர் மறைவில் சலசலப்பு. சிங்கக்குட்டி பயத்துடன் பார்த்துட்டு இருக்கும்போதே, மூன்று ஓநாய்கள் வெளியே வந்துச்சு. ‘உர்ர்ர்ர்’னு வெறிப் பார்வையில் சிங்கக்குட்டியைச் சுற்றி நின்னுடுச்சுங்க.

ராஜா மகனே... வசமா மாட்டினியா? உன் அப்பன் பெரிய பலசாலி. தான் வெச்சதே சட்டம்னு எங்க கூட்டத்தை அடிக்கடி தொந்தரவு பண்ணிட்டே இருக்கான். அவனுக்குச் சரியான பாடம் புகட்டப்போறோம்’’னு சொல்லிச்சு ஓர் ஓநாய்

சிங்கக்குட்டிக்கு அழுகையே வந்திருச்சு. அப்போ, ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்’னு ஓர் இடிச் சத்தம். ஒரு மரத்து மேலிருந்து தொப்புனு குதிச்சது கரடி. ஓநாய்களைப் பார்த்து அது போட்ட சத்தத்தில், தரையில் புழுதியே பறந்துச்சு. புழுதி அடங்கிப் பார்த்தால், ஓநாய்களைக் காணலை. தலை தெறிக்க ஓடிப்போயிருக்குங்க

சிங்கக்குட்டி முகத்தில் நிம்மதி. அது கரடியைப் பார்த்து, ‘ரொம்ப நன்றி கரடி மாமா’னு சொல்லிச்சு.

இப்படித் தனியா இவ்வளவு தூரம் வரலாமா?’’னு கரடி கேட்க, ‘`ஸாரி மாமா. போன்ல வந்த மெஸேஜைப் பார்த்துட்டே வந்ததில் தூரத்தைக் கவனிக்கலை’’னு சொல்லிச்சு சிங்கக்குட்டி.

ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்க வேண்டியதுதான். அதுக்காக, அடிமையாகிடக் கூடாது. சரி சரி பார்த்துப் போ’’னு கரடி சொல்ல, ‘`மா... மாமா வழி தெரியலை. மேப்பும் ஒர்க் ஆகலை’’னு தயங்கிட்டே சொல்லிச்சு சிங்கக்குட்டி.

சரியா போச்சு. அப்போ, இந்த ஸ்மார்ட்போன்தான் உன்னுடைய மூளை. இதைக் கையிலிருந்து வாங்கிட்டால், நீ வெறும் பூஜ்ஜியமா? எல்லாத்துக்கும் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பிட்டு இருக்கக் கூடாது. நம்ம மூளையைவிட உலகில் பெரிய ஆற்றல் கருவி இல்லை. அதைப் பயன்படுத்தணும். ஆனால், கையில் இருக்கிற ஒரு சிறிய கருவியிடம் அதை அடமானம் வெச்சுடறீங்களே. இது எப்படி இருக்கு தெரியுமா? நம்மகிட்டே வேலைக்கு வந்த வேலைக்காரனிடமே எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு அவனுக்கு அடிமையான மாதிரி இருக்கு’’ எனச் சிரிச்சது கரடி.

சிங்கக்குட்டியால் பதில் பேசமுடியாமல் தலைகுனிச்சு நின்னுச்சு.

சரி, சரி வா’’னு கரடி நடக்க, ‘`கொஞ்சம் இருங்க மாமா... நான் முன்னாடி நடக்கறேன். எப்படிப் போகணும்னு யோசிச்சு, கவனிச்சு நடக்கறேன். எங்காவது தப்பா மாறினால் மட்டும் நீங்க வழிகாட்டுங்’’னு சொல்லிச்சு சிங்கக்குட்டி.

கரடியும் ஒரு புன்னகையோடு பின்னாடி நகர, நம்ம சிங்கக்குட்டி கையிலிருந்த ஸ்மார்ட்போனை ஆஃப் பண்ணிட்டு நடக்க ஆரம்பிச்சது.