ஒழுங்கற்றவைகளின் அழகியல்
ஒற்றைச் சாளரத்தின்
நூலாம்படையில் சிக்கியிருக்கும்
பூவிதழ் ஒன்று
புறக்கணிப்புகளின் வழி நெடுநாளாய்
நின்றிருக்கும் பெரும்பாறை
ஒன்று
சாக்கடைப் புழுக்களை
கொத்தித் தின்ன காத்திருக்கும்
வெண்கொக்கு ஒன்று
மீதமிருக்கும் கடைசி பழத்தை
அழுகல்களிடையே கிடக்கும் தெருவோரவாசிக்கு விட்டுச் செல்லும்
ஏழைப் பெண்ணொருத்தி
அழகான வர்ண சுவர் நிறைந்த கொஞ்சும் மழலையின் கிறுக்கல்
மைவிழிக்கண்களை விட்டு வெளிச் சிதறும்
மைத்தீற்றல்
குளிரில் சிணுங்கித் திரியும் தெருநாயின்
சிறு குட்டிகள்
அஜ்ஜியின் மஞ்சள் முக வெற்றிலைச் சிரிப்பு
சிகரெட் கங்குகளிடைய முடிக்கப்படாத
பேரழகியின் சித்திரம்
பாதம் சுடும் பொன்மணல்
கடைசி இணுங்கல் மிச்சமிருக்கும் தேய்பிறை
முகமழிந்த பழைய புகைப்படத்தின் கடைசி தங்கயின் பஞ்சு விரல்கள்
பிரிந்து சென்றவரின் மணம் மீதமிருக்கும்
பழந்துணி ஒன்று, மற்றும்
எந்தவித ஒழுங்கும் இல்லாமல்
சிதறிக் கிடக்கும் இச்சிறு கவிதை கூட
ஒழுங்கற்றவையின் அழகியல் தான்