மீனாட்சி உலா
ஒரு திருநாளின் கோவில் கூட்ட நெரிசலில்
மூச்சுத் திணறிய மீனாட்சி
கருவறையை விட்டு சத்தமின்றி
வெளியேறினாள்
நிற்காம போய்கிட்டே இருங்க
என்றவரின் குரலில் திகைத்து நின்றவள்
ஒரு கணம் சன்னதியை திரும்பிப் பார்த்து முறுவலித்தாள்
மகனின் சன்னதி படியில்
ஏபிசிடி சொல்லியபடி ஏறி இறங்கி
விளையாடிக் கொண்டிருந்த
சிறு குழந்தையை அள்ளிக் கொஞ்சினாள்
கைப்பேசியை நோக்கியிருந்த குழந்தையின் தாய் வெடுக்கென குழந்தையை பிடுங்கி இறைவியை முறைத்தாள்
குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் அளித்த
உமையம்மை முகம் சுருங்கி அகன்றாள்
கற்தூணின் சிம்ம யாளியின்
பிடறி தடவி யாளியை சிலிர்க்கச்
செய்தவள் யானைமுகப்படியில்
சிறுகுழந்தையாய் சறுக்கி
விளையாடினாள்
தூண்நெடுக இருந்த ஆலிங்கன சிற்பங்களில்
தனை மறந்து நாணமுற்றாள்
கயற்கண்குமரி
வெளிப்பலகையில் எழுதியிருந்த
திருவாசக பிழைகளை
உவகையுடன் திருத்திய
மரகதவல்லி,
மர்த்தினியின் மடியிலிருந்த
தாழம்பூ குங்குமத்தை
அள்ளி இட்டுக் கொண்டாள்
அக்கோமகளின் முகம்
ஆயிரமாயிரம் காலத்திற்கான
பிரகாசத்தைக் கொண்டிருந்தது
கடம்ப மர பூக்களை
சூடிக்கொண்ட தடாதகைப் பிராட்டியின்
பச்சை நிற மேனியெங்கும்
லட்சோபலட்ச பூக்கள் மின்னி மறைந்தது
பைரவரின் செந்நிற நாக்கினில்
வழிந்தோடும் எச்சிலை
துடைத்தபடி நீர்க்குவளையை
எடுத்து வைத்த அங்கயற்கண்ணி
ஆயிரங்கால் மண்டபத்தில் தனித்து
ஊஞ்சலாடினாள்
சுந்துவின் கருவறையை கூட்டத்திற்கிடையே எட்டிப் பார்த்த
மீனாள்
வியர்வையில் நெளியும்
கணவனை கண்டு குறுநகையுடன்
வெளியேறினாள்.
வெளிர் நிற பஞ்சு பொம்மையின்
அழகில் மயங்கி
கோவில் படியை துள்ளி குதித்து
தாண்டியவளை
தடுத்து நிறுத்திய
அகோர வீரபத்திரரை
வெவ்வெவ்வே என பழிப்பு காட்டினாள்
திருநாளின் கூட்டம் கோவிலினுள்ளிருக்க
நிதானமாக
கோவிலை சுற்றி உலா வந்தவள்
பௌர்ணமி நிலவில்
பொற்றாமரைக்குள படிகளில் அமர்ந்து
நீரின் அலையினூடே மிதந்த
நெடிந்துயர்ந்த கோபுர அழகை இரசித்தபடி
ஏகாந்தமாய் துயில் கொண்டாள்
மீனாட்சி