நான் மெளனித்துவிட்டபின்
ஏதோ ஒன்றின்மீதான
ஒற்றைப்பார்வையில் என்
உள்ளிருந்து வெளிக்கிளம்பும் சிரிப்பை
அப்படியே உள்ளுக்குள் விழுங்கி
கிரகித்துவிட்டபின்னும்
புலம்பெயராத பார்வையின்
ஏகாந்தத்திலும் என் உதடுகளின்
அசைவில் லேசாய்
வெளியேறிவிடுகிறது எனது புன்னகை...
அசைவற்ற ஜடத்தில்
யாரோ தொடும் உணர்வுகள்
ஜடம் அறிந்திருமாயின்
என் மெளனத்தினூடே
வெளியாகும் புன்னகையின்
அர்த்தங்களும் வடித்து
எழதிவைக்கப்படலாம்....
நிறங்களின் கலவையில்
பிறக்கிறது ஒவ்வொரு நொடியில்
பிறக்கும் என் பார்வைகளின்
உள் நினைவுகள்
ஓரக்கண்ணால் கூட பார்த்து
பரிதவிப்பதற்கானவனல்ல நான்
எனும்போது என் உலகம்
நிறங்களின் கலவைதான்.....
கவளங்களாய் உருட்டி
உண்டு பழகும் காலம் கவலைகளின்
உருளைகளால் மனதை
உருட்டி பிரட்டியபோது என் கால்கள்
நடந்து வந்திருப்பின் நான்
நினைவுகளின் கலவைகள் பரந்த
முற்றத்தில் உருள்பவனாகலாம்.....
யாதும் எவ்வளியும் எவ்விடத்தும்
நான் என்று சொல்லவியலாது போனதால்
யாரும் எங்கும் எவ்விடத்தும்
கூர்ந்து நோக்கும் காரணமிருக்கவில்லை.......
அவன் பைத்தியம் அது லூசென்றும்
பாவம் யாரென்றறியோம் எனும்
வார்த்தைகளை கேட்டிடும் புலனிலூடே
பிறக்காதுபோனது என் உணர்வுகள்........
நானாய் பிறளாதபோதும்
மனம் பிரண்டுபோகிறது - நான்
வலுவிழந்து செயலற்றுப்போகும்
நிலைக்கு என்னுள்ளே திணிக்கப்படும்
வார்த்தைகளின் வலிகளில்
மிரண்டு போய் நிற்கிறது இதயம்...
இன்னும் என் மெளனத்தினூடே
வெளியாகும் புன்னகையில்
லேசாய் நான் இருப்பதாய்
யாரேனும் உணரக்கூடும்.......