பிரிவின் வலி மரத்துப்போகும்
ஒரு தினத்தில் உன்னோடு பேச காதல் வேண்டும்.
காதல் என்பது இல்லாமைகளின் வலி என்பதை தாண்டி
இருத்தலின் நிறைவு,நேசித்தலின் கொண்டாட்டம்..
உன்னோடு பகிர்ந்தது ஆற்றாமையின்
பெரும்சுமையும், கண்ணீரின் உப்புச்சுவையும்..
திகட்டி மீண்டும் தித்திக்கும் அக்கறையின்
இனிப்புச்சுவையையும், மனநிலை அறிந்து
உனக்கான இடம் தரும் கண்டுகொள்ளாமையையும்
விட்டுக் கொடுத்தல்களையும்..
நிழலாய் பின்தொடர்ந்து வரும்
கவனிப்பின் அக்கறையையும்,
உன் விட்டேத்திகளின் மீதும் விரக்திமீதும்
இயல்பாய் எழும் கோபத்தையும்,
விதண்டாவாதங்கள் மீது நிகழ்த்தும்
மௌனத்தின் ஆக்கிரமிப்புகளையும்,
இல்லாமைகளுக்கான கணணீரையும்,
இயலாமைகளை தவிர்க்கும் 'நமக்கெதற்கு'களையும்,
எல்லாம் கூட்டிச்ச்சேர்த்து
உடனிருப்புகளில் நிறைவு கொள்ளுதலுமே...
இத்தனையும் கூடி ஒரு தினமில்லையேல்
எத்தனை கோடி இன்பமிருந்தென்ன பயன்?.
ஒரு கோப்பை தேநீர், கைகோர்த்த நீண்ட ஒரு உலா,
மௌனம் பேசி ஒருதோள் சாய்தல்,
திகட்டத் திகட்ட பேசித்தீர்த்தல்,
புலன் உணரும் ஸ்பரிசம்..
நினைவுகளில் அகலாத வாசம் என
தீராத பட்டியலோடு ஒரு தினம்,
ஒரு கணம், ஒரு நொடியென போதாமையிலேனும் காதல்செய்திட வேண்டும்..
நீ துணை என்றால் ஐந்திணைகளின் காதல் செய்வோம்,
.....