கண்கள் பூத்து
மனசு காத்து
இங்கே
வேராய் படர்வது
என் கவிதைகள் மட்டுமல்ல
ஈர விறகே ! உன்
பிரிவின் வலியும்தான்
இளவேனிற்காலத்தில் திரும்பி
வருவதாய் சொல்லி போனாய்
ஊதா பூக்களோடு
உனக்காய் காத்திருந்தேன்
இலையுதிர் காலம் தொட்டே
இலைகள் உதிர்ந்தது
இளவேனிற்காலமும் வந்தது - நீ
மட்டும் வரவே இல்லை
இதயம் கனத்து காத்து இருந்தேன்
இன்னும் பல வருடங்கள்
அதன் பிறகும்
நீ வரவே இல்லை
பிறகுக்கும் பிறகு வந்த
மற்றுமொரு இலையுதிர் காலத்தில்
இலைகளோடு சேர்ந்து - நானும்
உதிர்ந்து போனேன்
கடைசி விருப்பமாய்
நீ வரும் வழியிலே
என்னை விதைத்திருக்கிறார்கள்
நீ உணராமல் போன
என் இதயத்துடிப்பை போலல்ல
உன்னை
உண்மையாய் நேசித்த ஓர் ஜீவன்
என்பதை உணர்த்தும் நினைவுச்சின்னமாய்
உன் பாத சுவடுகள் கூட
எனக்கு புரியும்
எனை புரிந்து கொண்ட ஓர் உயிராய்
என்றைக்காவது ஓர் நாள் -என்னை
நீ தேடி வருவதை
சருகுகள் சொல்லும்பொழுது
நான் விழித்து கொள்வேன்
அதுவொரு
இளவேனிற்காலமாய் இருக்கும் .......