Author Topic: வெறி அழித்து நெறி வளர்ப்போம்!  (Read 1018 times)

Offline Yousuf

அந்தச் செய்தியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் செரிக்க முடியவில்லை. ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில் உறைந்தது எனலாம். சென்னை பாரிமுனை அருகேயுள்ள ஆங்கிலோ இந்தியன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் தனது ஆசிரியை உமா மகேசுவரியை வகுப்பிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான்.

அண்மையில்தான் தமிழ்ப்படமொன்றில் இடம்பெற்ற ஒரு நடிகர் பாடிய ‘கொலைவெறி’ என்ற பாடல் உலகப் பிரபலம் அடைந்தது. அந்தக் கொலைவெறி ஒரு சிறுவன் வாயிலாக 9.2.12 அன்று பள்ளிக்கூட வகுப்பறையிலேயே வெளிப்பட்டு விட்டது. அந்தக் கொலை வெறிக்கு உமா மகேசுவரி என்ற ஆசிரிய சகோதரி இரையாகிவிட்டார்.

அந்த மாணவனைக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் வைத்துவிட்டார்கள். கருவியைக் கைது செய்ததோடு காரியம் முடிந்துவிட்டதா? அந்தக் கருவியை இயக்கிய கையை என்ன செய்யப் போகிறோம்?

அந்தக் கைதான் நமது கல்வி அமைப்பு.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளிலும், சர்வதேசப் பள்ளிகளிலும் இடம்பிடிக்கப் போராடுகிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்கு மழலைப் பள்ளியில் இடம்பிடிக்க, சமூகத்தின் உயர்நிலையில் உள்ள மருத்துவர்களும், பொறியாளர்களும், அரசின் உயரதிகாரிகளும், பேராசிரியர்களும், முதல்நாள் இரவே சென்று வரிசையில் நிற்கிற சம்பவங்கள் எல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாகின்றன. அத்தகைய பள்ளிக்கூடங்களில் ஆங்கிலமும், ஆங்கில வழியில் அத்தனைப் பாடங்களும், மட்டுமல்லாமல் ஆங்கிலப் பண்பாடும் சொல்லித் தரப்படுகின்றன.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்கும் நிலை மாறி, அதை போற்றுதலுக்குரியதாக சித்தரித்து தமிழர்களை அத்தகையக் கலாச்சாரத்திற்கு இந்தப் பள்ளிகள் அடிமையாக்கிவிட்டன என்றால் மிகையில்லை.

அம்மா, அப்பா என்று அழைப்பதை விட டாடி, மம்மி என்று குழந்தைகள் அழைப்பதைப் பெற்றோர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் குடும்பத்தின் போதிய அரவணைப்பும், பெற்றோரின் பாசமும் இல்லாமல் வளர்கிறப் பிள்ளைகள் துப்பாக்கியைக் கொண்டுவந்து பள்ளியில் ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் சுட்டுக்கொல்கிற சம்பவங்கள் நடந்துவந்தன. இப்போது தமிழகமும் அமெரிக்காவாகிவிட்டது. இதற்காகப் பெருமைப்படுவதா? வெட்கித் தலைகுனிவதா? என்பதை தமிழக மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை ஆகிய நீதி நூல்களையும், பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம் ஆகியோரின் பாடல்களையும் படித்து வளர்ந்த பிள்ளைகளின் மனதில் அன்பு செலுத்துதல், பெரியோர்களை மதித்தல், ஆசிரியர்களுக்குக் கட்டுப்படுதல் ஆகிய நற்பண்புகள் ஆழமாகப் பதிந்திருந்தன. இப்போது அப்பாடங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு ஆங்கிலப் பாடங்களும், ஆங்கிலக் கலாச்சாரமும் பிஞ்சு மனங்களில் பதியச் செய்யப்படுகின்றன.

‘அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்’ என்று படித்த உள்ளங்கள், ‘கொலை செய்ய விரும்பு, கூடுவது சினம்’ என்று உணரும் கொடுமைக்குக் காரணம், நுகர்வு வெறி முற்றி, பிற்காலத்தில் பெரும் செல்வம் சம்பாதிக்கும் தகுதியைப் பெற, பிள்ளைப் பிராந்தியத்திலிருந்தே குழந்தைகளைத் தயாரிப்பதே ஆகும்.

ஆசிரியை உமா மகேசுவரியைக் கொலை செய்த பள்ளி மாணவன், ‘அக்னிபத்’ என்ற இந்திப் படத்தைப் பார்த்துதான் இந்தக் கொலைவெறியைப் பெற்றதாகக் கூறியிருக்கிறான்.

1980களின் இடைப்பகுதியில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரைக் கொலை செய்த ஜெயப்பிரகாஷ் என்ற என்பவன் ‘நூறாவது நாள்’ என்ற படத்தைப் பார்த்த பிறகுதான் இந்தக் கொலையுணர்ச்சியைப் பெற்றதாகக் கூறினான். இளஞ்சிறார்களின் மனதில் இயற்கை (Nature),மற்றும் வளர்ப்பு முறை (Nurture) ஆகிய இரண்டும் பெரும் தாக்கம் ஏற்படுத்துகின்றன. நல்ல பாரம்பரியச் சிறப்புள்ள குடும்பத்தில் பிறந்த பிள்ளை, அக்கறையற்ற வளர்ப்பு முறையாலும், வெளிச்சூழலாலும் சீரழிவதும் உண்டு. மிகமோசமான குடும்பப் பின்னணியைக் கொண்ட பிள்ளை, நல்ல புறச்சூழலாலும், நல்லோர்களின் தொடர்பாலும், உயரியப் பண்புகளோடு உருவாவதும் உண்டு.

ஆயினும் அவை இன்றைய கலாச்சாரச் சீர்கேடென்னும் ஆழிப்பேரலையோடு ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கலவாமல் தடுக்க ஒரு மாபெரும் கூட்டு உழைப்பு தேவைப்படுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமுதாய அமைப்புகள், அரசாங்கம், கலை ஊடகங்கள்

யாவும் இந்த முயற்சியில் கரம் இணைக்க வேண்டும். வருங்காலத் தலைமுறையை வன்முறையிலிருந்து காக்கவேண்டும்.