பேனை_விரட்ட_இதோ_சில_வழிகள்
தலைமுடியை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொண்டாலும் பேன் வருகிறதே என்று கேட்கும் பெண்களே. பொதுவாக இந்தப் பேன் என்பது உஷ்ண சம்மந்தமான உடம்பு அமைப்பைக் கொண்டவர்களுக்கு வெகு சீக்கிரம் வந்து விடும். இந்த நிலையில் நீங்கள் பேன் ஒழிப்பு மருந்துகளைப் பயன்படுத்தினால் அதனால் பேன்கள் மட்டும் தான் ஒழியும். ஈறுகளையும் எடுத்தால் தான் பேன் முற்றிலும் ஒழியும். மருந்து போட்டுப் பேனை ஒழித்த பிறகு 'ஈறு' எடுக்கும் சீப்பினால் ஒட்டு மொத்தமாக ஈறுகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து ஒருவாரம் இப்படிச் செய்து வந்தால் ஈறும் பேனும் ஒழிந்துவிடும். இது தவிர மருந்து போடாமல் படுக்கையில் தலையணைக்கு அடியில் வேப்பிலையைப் போட்டாலும் பேன்கள் வெளியேறிவிடும்.
அதுபோல பேன்களை ஒழிக்க இன்னொரு வழியும் உண்டு. அது யாதெனில், வெள்ளை மிளகை, பாலில் ஊற வைத்து அரைத்து தலையில் தடவி ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தலையைக் கவிழ்த்துப் போட்டுக் கொண்டு, தண்ணீரை விட்டு அலச வேண்டும்.
வசம்பை நன்றாக அரைத்து, விழுதுபோலச் செய்து கொள்ள வேண்டும். தலையில் இந்த விழுதைத் தடவிக் கொண்டு அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு அலசி விடலாம். இப்படிச் செய்தாலும் பேன் தொல்லை வராது.
கரும் துளசி இலைகளை தலையணையில் வைத்துக் கொண்டு படுத்தாலும் பேன் தொல்லை போய் விடும்.
இவற்றைத் தவிர பேன் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம். காரணம் பேன் ஏழு படுக்கையையும் தாண்டி வரும் என்பார்கள்.