Author Topic: குழந்தைகள் மண் சாப்பிடுறாங்களா? அரவணைப்பு அவசியம்!  (Read 962 times)

Offline RemO

குழந்தைகளின் பழக்கவழக்கங்களை கவனித்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவது பெற்றோரின் கடமை. சில குழந்தைகள் மண் சாப்பிடும். இது குழந்தைகளிடையே காணப்படும் சாதாரண பழக்கம்தான். அதேபோல் சில குழந்தைகள் சாக்பீஸ், சிலேட்டுக்குச்சி, பெயிண்ட், நகம் போன்றவற்றைக்கூட சாப்பிடுவர். உணவுப்பொருட்கள் அல்லாமல் பிறவற்றை சாப்பிடுவதற்கான காரணம் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

வளர்ச்சியை பாதிக்கும்

பொதுவாக பராமரிப்பு குறைவாக இருக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குழந்தைகளிடையேதான் இத்தகைய பழக்கம் அதிகமாய் காணப்படும். இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுவலி, ரத்தசோகை போன்றவை ஏற்படுகின்றன. குடற்புழுக்கள் குடலினுள் வளர்ந்து குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது. மண் சாப்பிடும் பழக்கம் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளிடமும், ஊட்டச்சத்து குன்றிய குழந்தைகளிடமும் இருக்க வாய்ப்புள்ளது. இப்பழக்கத்தில் இருந்து குழந்தைகளை விடுவிக்க சரியான அன்பும் அரவணைப்பும் பெற்றோர்கள் அளிக்கவேண்டும்.

நகம் கடிக்கும் பழக்கம்


நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகளிடையே சாதாரணமாக காணப்படும் பழக்கம்தான். குழந்தைகள் விரல் நகத்தைக் கடிப்பதால் நகத்தில் உள்ள அழுக்குகள் ஜீரணப்பாதையில் புகுந்து வயிற்று வலியை ஏற்படுத்தும். இதனால் வயிற்றில் புழுக்கள் உருவாகக்கூடும். எனவே குழந்தைகளுக்கு மென்மையாக எடுத்துக்கூறி நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அவ்வப்போது நகங்களை வெட்டி விடவேண்டும். இதனால் குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கம் குறைய வாய்ப்புள்ளது.