உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடை வண்டி நீ
கரிசன களிம்புக்காரன் நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்....
உன் கால்கள் என் வழிகாட்டி
நான் ஊர்சுற்றும் பல்லக்கு நீ
தெருவெங்கும் வருகிறாய் பவனி
உலகையே விளக்கிக்காட்டி எனக்கு....
உன் கண்ணுக்குள் நான் நிலவு
எனைக் காக்கும் தெய்வம் நீ
எப்பொழுதும் மறப்பதில்லை என்னை
உன் பார்வைவிட்டு விலகமுடிவதில்லை....
என் ஆசைக்காய் உன் வாழ்வு
எல்லாம் நிறைவேற்றுகிறாய் நீ
உனக்கென்று வாழ்வதில்லை நீ
எல்லாமும் எப்போதும் எனக்காய்...
உன் நினைவு நிழலில் என் வாழ்வு
உடல்நிலை சரியில்லை எனக்கு
செவிலியராய் மாறுகிறாய் நீ
தூக்கம் தொலைக்கிறாய் எனக்காய்...
உன் நெஞ்சம் என் பஞ்சுமெத்தை
எனது விளையாட்டு மைதானம் நீ
பொறுத்து மகிழ்கிறாய் நீ
எச்சிலொழுக எட்டியுதைக்கும் என்னை...
என் வளர்ச்சி உன் சந்தோஷம்
ஒருஅடிதான் எடுத்துவைத்தேன் நான்
காண்பவரிடமெல்லாம் சொல்லிவிடுகிறாய்
நான் சாதித்துவிட்டதாய் கர்வம்கொள்கிறாய்...
உன் பெருமைகள் சொல்லாதவன் நீ
என் பெருமைகளை சொல்லி
மகிழ்கின்றாய் இன்று
என் மீது அக்கறை கொண்ட நீ
உன் மீது அக்கறை இல்லாமல்
அவஸ்தை படுகின்றாய்
இன்று மருத்துவமனையில்
நீ வேண்டும் தந்தையே
என் வாழ்வின் வழி எங்கும்
நலாம் பெற வேண்டும் நீ
நாளும் வேண்டுகிறேன்.....