வெவ்வேறு நாளில் தான் பிறந்தோம்
இருந்தும் அறியப்பட்டோம் ஓர் பெயரில்
எனக்குமுன் பிறந்து என் வருகைக்காக
காத்திருந்தவன் நீ
பள்ளிப்பருவம் அதில் சிறகடித்து பறந்தோம் நாம்
மயில் இறகை நோட்டுக்குள் வைத்து அது குட்டி போடும் என
என்னை நம்ப வைத்து நான் உறங்காமல் காத்திருக்க
மறுநாள் எனக்கு தெரியாமல் நான் ஏமாற கூடாதென
அதில் இன்னொமொரு மயிலிறகை வைத்தவன் நீ
வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்ட
சொல்லி தந்தவன் நீ
நீ படித்த புத்தகம் அதனை நான் படிக்க
பாதுகாத்து தந்தவன் நீ
பெற்றோர் இல்லா வேளைகளில்
என்னை பார்த்துக்கொண்டவன் நீ
நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி
என பல விளையாட்டுகள் சொல்லி தந்தவன் நீ
மண் குழப்பி வீடு கட்டி விளையாடி
அதில் நாம் நம் உறவினர்களுடன் வசிக்க
சொல்லித்தந்தவன் நீ
சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல்
ஓட்ட கற்றுத்தந்தவன் நீ
ஒவ்வொரு தோல்வியையும் எனக்கு
பாடமாக கற்பித்தவன் நீ
புது கைபேசி வந்தததும் அதை எனக்கு
தந்து அழகு பார்த்தவன் நீ
வீட்டினில் நான் செய்த குறும்பினால்
பெற்றோரிடம் அதிகம் திட்டு வாங்கியவன் நீ
எனக்கு எல்லாமாகவும் இருப்பவன் நீ
அடுத்த பிறவியிலும் வேண்டும்
எனக்கு அண்ணனாக நீ !!