தோழியுடன் தொலைபேசியில் 05   
இரவுணவு உண்ணையில்    
இத்தனை காலமில்லா ஓர் 
மகிழ்ச்சி மனதில் 
வாழ்கை மேல் ஒரு ஆசை வருகிறது 
கண்களும் மங்கி தெரிகிறது கலங்கி 
என்னால் எதையும் பேச முடியவில்லை 
சற்றே ஏறெடுத்தாள் 
நெருங்கி வந்தாள் 
நாடியை உயர்த்தி 
யாடை செய்தாள் கேள்வி எழ 
மௌனமாக தலை அசைத்தேன் 
ஒன்றுமில்லையென  
அதிகம் சாப்பிட வில்லை 
இருவருமே உண்டது இரண்டே தோசைதான் 
போதும் 
உணவை உண்டபின் 
சமையலறையை சுத்தம்செய்து 
இருக்கைகளில் அமர்ந்தோம் 
ஒருவரை ஒருவர் 
அமைதியாக பார்த்துக் கொண்டோம் 
வார்த்தைகள் உதிரவில்லை 
நேரம் நள்ளிரவு ஆயிற்று 
உறங்க வேண்டும் நீ 
நான் போய் வருகிறேன் என்றேன் 
அவசியம் இல்லை
நீ இருப்பதால் 
தூக்கம் கெடப்போவது இல்லை 
இங்கேயே நில் என்றாள் 
மறுக்க ஏதும் இல்லை 
எதிர்பார்த்த ஒன்றுதான் நின்றேன் 
உறக்கம் வருவதாக இல்லை 
ஏதாவது வம்பு செய்ய யோசனை 
நான் உறங்க வேண்டும் 
உன் அறையில் படுத்து கொள்கின்றேன் 
அதுதான் எனக்கு பாதுகாப்பு 
நீ இங்கேயே படுத்துக்கொள் என்றேன் 
எங்கேனும் யுத்தமா என்றாள் 
புரியவில்லை ஏனென கேட்டேன் 
சிரித்தவள் 
அறையில் உறங்குவதுதான் பாதுகாப்பு என்றாய் 
எனவேதான் கேட்டேன் யுத்தமா என்று 
சிரித்தேன் 
சேர்ந்தே சிரித்தாள் மகிழ்ச்சி 
பாதுகாப்பு தேவையாகும்படி இங்கே ஆபத்து ஏதுமில்லை 
தைரியமாக இருக்கலாம் 
என் அறையிலும் உறங்கலாம் ஆனால் 
காலையில்தான் உறங்க முடியும் நிதிலா 
செவ்வந்திக்கு தெரியும் 
இரவு மாத்திரை உணவுக்கு பின்னரென 
அதை நான் போடவில்லை 
அவளால் கேட்கவும் முடியவில்லை 
சமாதானமாய் இருக்கவும் முடியவில்லை 
தெரிந்துமேன் கவலைப்படுத்துவான் 
பாவம் அவள் 
தலை வலிக்கிறது 
மாத்திரை போடவேண்டும் என்றேன் 
மாத்திரைதான் போட போவதாய் சொன்னேன் 
அவள் முகத்தில் மலர்ச்சி  
அன்புகொண்டதுக்கே தண்டணையா செவ்வந்திக்கு 
ஏன் இத்தனை வலிகள்  
மருந்தை போட்டுக்கொண்டேன் 
உடனே வினவுகிறாள் 
தூங்க போகிறாய நிதிலா 
உண்மையில் தலை வலிக்கிறதா   
எனது மனம் சிறிதே கசிய உடனே இருமி விட்டேன் 
புரையேறிய விளைவுதான் கண்களின் ஈரம்போலாய்   
குழப்பமாய் இருக்கிறதா உங்களுக்கு 
இருக்கலாம் 
நிதிலனின் கடிதம் இன்னும் படிக்கவில்லை  
தாங்கும் வலிமை இல்லாதவளென்று  
ஆழ் நட்பில் 
நன்கு உணர்ந்து  தெளிந்தவனாய்  
அவளுக்கு அனுப்பவில்லை கடிதம் 
எனக்கு தூக்கம் வரவில்லை செவ்வாய்  
நீ தூங்க போகிறாயா 
போய் தூங்கு என்றேன் 
சிரித்தாள் ஏதோ பார்க்கிறாள் 
இன்னும் எத்தனை நாட்கள் என்றோ  
இல்லை இப்படி ஒரு காலம் 
நிலைக்காதோ என்பதாகவோ 
எனது மனதும் 
கருக்கொண்ட மேகம்போல் இருக்கிறது 
ஏன் எனது மேனி இப்படி நோயானதோ 
என்றுமில்லாமல் இன்று தோன்றுகிறது 
வாழ ஆசை எழுகிறது 
சிரித்தவள் அருகே வந்து அமர்ந்தாள் 
தூக்கம் வரவில்லை 
வருவதாகவும் தெரியவில்லை 
நீ இருக்கின்றாய் இன்று இரவு 
மனதில் இருக்கும் மகிழ்ச்சியை சொல்ல 
நாவில் மொழியில்லை 
தம்பியின் சட்டத்தில் வலித்த மனதை 
அப்பா அன்பு 
சமரசம் செய்த காலம் போனது 
அம்மா மடியில் துயர் தொலைக்கும் சுகம் இழந்து 
ஆண்டுகள் ஏழு கடந்தோடியது  
சமரச அன்பும் 
தாய்மடிப் பரிவும் 
உன் உறவில் கண்டேன் 
பிறந்தபோது பிரிந்த உறவு 
மீண்டும் இணைந்ததுபோல தோன்றுதே 
ஏன் இத்தனை நாள் 
இப்படியொரு இரவுவர தாமதம் 
அன்பான நாட்களை இழந்துவிட்டேனோ  
வாழ்க்கையும் தொலைந்துபோனது 
பயமா இருக்கு நிதிலா எனக்கு 
 
மடிமீது சற்றே சாயட்டுமா என்றாள் 
சாயப்போகும் மேனி இது 
யாரும் சாயமுடியாத மடியிது 
எதுவரை என் மடி கிடைக்கும் உனக்கு   
சாய்ந்திட நினைத்தாலும் நிலைக்காத மடி இது 
எழும் எண்ணம் என்னுள்ளே
 
படுத்துக்கொள் என்றேன் 
தலையணையை மடிமேல் வைத்து 
தலையணைமேல் சாயவா கேட்டாள் 
மடியல்லவா கேட்டாள் வலிபோக்க 
தலையணையை அகற்றி யாடை செய்தேன் 
மடிமேல் சரிந்தாள் அருகே அமர்ந்தவள்  
என்ன பேசுவது 
என்ன செய்வது எதுவும் தெரியவில்லை 
என் மருத்துவமனை இரவுகளுக்கு மடிகொடுத்து 
வலித்த இடம் வருடி 
தலைகோதிய தாயவள் 
குழந்தையாய் இப்போது என் மடியில் 
செவ்வந்தியின் தியாக குணம் 
என்னை கொல்வதோடு 
ஒரு பெண்ணின் எதிர்காலத்தை 
நாசம் செய்த வலி வதைக்கிறது 
மனதெல்லாம் நனைந்த துகில்போல் 
ஏதோ செய்கிறது உணர்வுகள் 
கடந்த கால நினைவுகளை மீட்டுகின்றன 
மடியில் சரிந்தவள் 
இடுப்பை இரண்டு கைகளாலும் 
இறுக பிடிக்கின்றாள் 
என்னை தனியே தவிக்கவிட்டு 
போகாதேயென சொல்கிறது 
அவளது கரங்கள் விரல்கள் நகங்கள் பேசும் மொழி  
எனக்கும் ஏக்கம் உண்டுதான் வாழ 
வழியில்லையே  
எத்தனை முறை நான் இறந்து பிறப்பது 
செவ்வந்தி என்றேன் 
பேசவில்லை 
தலைமேல் கைவைத்தேன் 
மௌன மழை  
ஏன் என்றேன் 
பேசவில்லை 
தொடர்ந்தும் மழை  
ஏம்மா அழுகிறாய் 
நான் வந்ததும் அழுதாயே 
அதன் காரணமே சொல்லவில்லை 
மறுபடி ஏன் அழுகின்றாய் 
என்னையும் துயரப் படுத்துகிறாய் செவ்வாய் 
ஏன் என்றேன் 
மௌனமே மொழி  
மாண்டால் 
மூன்று நாளில் ஓயலாம் அழுது 
மரண நாளை எண்ணி   
எத்தனைநாள் அழுவாள்  
என் மனது உணருமே 
எனக்கான அவள் அழுகையை 
சற்றே தன்னை திடப்படுத்தினாள் 
கண்கள்மேல் இரங்கி 
ஏன் அழுதாய் சொல்லு என்றேன் 
 
எனது கடிதம் கண்டதும் எப்படி நினைத்தாயோ..... 
என்னை வெறுப்பாயோ..... 
பேசமறுத்து விடைகொடுப்பாயோவென பேதலித்து 
புலம்பிக் கொண்டிருந்தேன்..... 
கடவுளையும் நோக்கி கூக்குரலிட்டேன்..... 
இப்போதுதான் நம்புகின்றேன் கடவுள் இருப்பதையும்..... 
உன்னை என்னால் விலகிட முடியவில்லை 
கொண்ட அன்பதை நெடுங்காலம் 
மனதிலே மறைக்கவும் முடியவில்லை..... 
என்றோ ஒருநாள் 
சொல்லியே ஆகப்போவதை  
காலம் கடத்தி 
என் உயிரையும் நோகடித்து 
ஏன் வேதனை 
இப்போதே சொல்லிடத் தீர்மானித்தே 
கடிதம் அனுப்பினேன் 
உன் அன்பையும் 
என் இதயம் அறியும் நிதிலா  
காதலன்பு என்று சொல்லி 
சிறுமைப்படுத்திட்ட முடியாது நிதிலா 
எனவே 
உன் அன்புக்கு இணையாக தந்திட 
என்னிடம் 
என் பெண்மையை அன்றி ஏதுமில்லை 
என்பதை தெளிவாக சொன்னேன் கடிதத்தில் 
இதனால் என்னை நீ 
விலகிச்செல்வாயோ எனும் 
வேதனையும் சுமையும் என்னை 
அணு அணுவாக 
கொன்றுகொண்டு இருந்த நேரமதில் 
உன் தூய அன்பு 
என் வீட்டு வாசலில் 
ஒலியெழுப்பியதை கேட்டதும் 
மரணம் வந்தாலும் 
மகிழ்சியாக ஏற்கும் இதயம் உண்டாயிற்று 
அதுதான் இத்தனை காலம் 
இதயமதில் தேக்கிய பாரத்தை 
உன் மார்பிலே இறக்கி 
மறு உயிர் பெற்றேன் நிதிலா வேறில்லை 
நான் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் 
மகிழ்ச்சியாய் இரு என ஓய்ந்தவள் 
பழம்கதை பகிர ஆரம்பித்தாள் 
தோழியுடன் தொலைபேசியில் 
தொடரும்  நன்றி