Author Topic: கல்கியின் பொன்னியின் செல்வன்  (Read 96631 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 21

பல்லக்கு ஏறும் பாக்கியம்

அந்த ஆண்டில் வழக்கமாக மாரிக்காலம் ஆரம்பிக்க வேண்டிய காலத்தில் ஆரம்பிக்கவில்லை. இரண்டு தடவை மழை தொடங்குவது போல் தொடங்கிச் சட்டென்று நின்று விட்டது. காவேரி ஆற்றிலும் அதன் கிளை நதிகளிலும் தண்ணீர்ப் பிரவாகம் வர வரக் குறைந்து வந்தது. புது நடவு நட்ட வயல்களுக்குத் தண்ணீர் வரத்து இல்லாமல் பயிர்கள் வாடத் தொடங்கின. "எல்லாம் வால்நட்சத்திரத்தினால் வந்த விபத்து!" என்று மக்கள் பேசிக் கொள்ளலானார்கள்.

'நாட்டுக்கு எல்லா விதத்திலும் பீடை வரும் போலத் தோன்றுகிறது', 'இராஜ்ய காரியங்களில் குழப்பம்', 'இளவரசரைப் பற்றித் தகவல் இல்லை', 'அதற்கு மேல் வானமும் ஏமாற்றி விடும் போலிருக்கிறது' என்பவை போன்ற பேச்சுக்களை வழி நெடுகிலும் சேந்தன் அமுதனும் பூங்குழலியும் கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

மழை பெய்யாமலிருந்தது அவர்களுடைய பிரயாணத்துக்கு என்னமோ சௌகரியமாகத்தானிருந்தது. அன்று காலையிலிருந்தே வெய்யில் சுளீர் என்று அடித்தது. பிற்பகலில் தாங்க முடியாத புழுக்கமாயிருந்தது. இராஜபாட்டையில் மரங்களின் குளிர்ந்த நிழலில் சென்ற போதே அவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது.

"இது ஐப்பசி மாதமாகவே தோன்றவில்லையே? வைகாசிக் கோடை மாதிரியல்லவா இருக்கிறது?" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு போனார்கள்.

பழுவேட்டரையரின் அரண்மனைப் பல்லக்கு அவர்களைத் தாண்டிச் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு திடீரென்று குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. சாலை மரங்களின் இலைகள் காற்றில் அசைந்தாடிச் சலசலவென்று சத்தத்தை உண்டாக்கின. வடகிழக்குத் திக்கில் இருண்டு வருவது போலத் தோன்றியது. வானத்தின் அடி முகட்டில் இருண்ட மேகத் திரள்கள் தலை காட்டின. சிறிது நேரத்துக்குள்ளே அந்த மேகக் கூட்டங்கள் யானை மந்தை மதம் கொண்டு ஓடி வருவது போல் வானத்தில் மோதி அடித்துக் கொண்டு மேலே மேலே வரலாயின.

இளங்காற்று பெருங்காற்றாக மாறியது; பெருங்காற்றில் சிறிய மழைத் துளிகள் சீறிக் கொண்டு வந்து விழுந்தன. சிறு தூற்றல் விழத் தொடங்கிக் கால் நாழிகை நேரத்தில் 'சோ' என்ற இரைச்சலுடன் பெருமழை கொட்டலாயிற்று. காற்றிலும் மழையிலும் சாலை ஓரத்து விருட்சங்கள் பட்டபாட்டைச் சொல்லி முடியாது. சடசடவென்று மரக்கிளைகள் முறிந்து விழத் தொடங்கின. அப்போது அவற்றில் அடைக்கலம் புகுந்திருந்த பட்சிகள் கீச்சிட்டுக் கொண்டு நாலா திசைகளிலும் பறந்தோடின. சாலையில் போய்க் கொண்டிருந்த ஜனங்களும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

காற்று மழையிலிருந்து தப்புவதற்காகச் சிலர் ஓடினார்கள். மரக்கிளைகள் தலையில் விழுந்து சாக நேரிடுமோ என்ற பயத்தினால் மற்றவர்கள் ஓடினார்கள். அண்ட கடாகங்கள் வெடிப்பது போன்ற இடி முழக்கத்தைக் கேட்டு அஞ்சி வேறு சிலர் ஓடினார்கள். மழை பிடித்துக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம், பகற்பொழுது சென்று இரவு நெருங்கி வந்தது. அன்றிரவே தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தைச் சேந்தன் அமுதனும், பூங்குழலியும் கைவிட்டு விட்டார்கள்.

சேந்தன் அமுதனின் நந்தவனக் குடிலுக்கு அன்றிரவு போய்ச் சேர்ந்தால் போதும் என்று தீர்மானித்தார்கள். மழைக்கால இருட்டில் ஒருவரையொருவர் தைரியப்படுத்திக் கொண்டு, ஜாக்கிரதையாக நடந்தார்கள்.

"பூங்குழலி! நடுக்கடலில் எவ்வளவோ புயல்களையும் பெரு மழையையும் பார்த்தவளாயிற்றே நீ! மலை போன்ற அலைகளுக்கு மத்தியில் படகு விட்டுக் கொண்டு போகிறவள் ஆயிற்றே! இந்த மழைக்கு இவ்வளவு பயப்படுகிறாயே?" என்றான் சேந்தன் அமுதன்.

"நடுக்கடலில் எவ்வளவுதான் புயல் அடித்தாலும் மழை பெய்தாலும் தலையில் மரம் ஒடிந்து விழாதல்லவா? விழுந்தால் இடிதானே விழும்?" என்றாள் பூங்குழலி.

இவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள் அவர்களுக்கு எதிரே சற்றுத் தூரத்தில் சடசடவென்று மரம் முறிந்து விழும் சத்தம் கேட்டது. சேந்தன் அமுதன் பூங்குழலியின் கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு மேலே செல்வதை நிறுத்தினான்.

"இனி அவசரப்பட்டுக் கொண்டு போவதில் உபயோகமில்லை. சாலை ஓரத்தில் இங்கே சில மண்டபங்கள் இருக்கின்றன, அவற்றில் ஒன்றில் சிறிது நேரம் தங்கி மழையின் வேகம் குறைந்த பிறகு மேலே போகலாம்!" என்றான் சேந்தன் அமுதன்.

"அப்படியே செய்யலாம் ஆனால் மண்டபத்தை இந்த இருளில் எப்படிக் கண்டுபிடிப்பது?" என்றாள் பூங்குழலி.

"மின்னல் மின்னும் போது பார்த்தால் தெரிந்து விடும். இருபுறமும் கவனமாகப் பார்க்க வேண்டும்!" என்றான் சேந்தன் அமுதன்.

வானத்தையும் பூமியையும் பொன்னொளி மயமாக்கிக் கண்களைக் கூசச் செய்த ஒரு மின்னல் மின்னியது.

"அதோ ஒரு மண்டபம்!" என்றான் சேந்தன் அமுதன்.

பூங்குழலியும் அந்த மண்டபத்தைப் பார்த்தாள். அதே மின்னல் வெளிச்சத்தில் அவர்களுக்கு முன்னால் சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய மரம் விழுந்து கிடப்பதையும் பார்த்தாள். விழுந்த மரத்தினடியில் சிலர் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

"அமுதா! விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்தாயா? அதனடியில்..." என்றாள்.

"ஆமாம், பார்த்தேன், அந்தக் கதி நமக்கும் ஏற்பட்டு விடப்போகிறது. சீக்கிரம் மண்டபத்துக்குப் போய்ச் சேரலாம்!" என்று கூறிவிட்டு அமுதன் பூங்குழலியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மண்டபம் இருந்த திசையைக் குறிவைத்து விரைந்து சென்றான்.

இருவரும் மண்டபத்தை அடைந்தார்கள். சொட்ட நனைந்திருந்த துணிகளிலிருந்து தண்ணீரைப் பிழிந்தார்கள். துணியைப் பிழிந்த பிறகு பூங்குழலி தன் நீண்ட கூந்தலையும் பிழிந்தாள். பிழிந்த ஜலம் மண்டபத்தின் தரையில் விழுந்து சிறு கால்வாய்களாக ஓடியது.

"அடாடா! மண்டபத்தை ஈரமாக்கி விட்டோமே?" என்றாள் பூங்குழலி.

"மண்டபத்துக்கு அதனால் தீங்கு ஒன்றுமில்லை. ஜலதோஷம் காய்ச்சல் வந்திவிடாது! நீ இப்படிச் சொட்ட நனைந்து விட்டாயே?" என்றான் சேந்தன் அமுதன்.

"நான் கடலிலேயே பிறந்து வளர்ந்தவள். எனக்கு இன்னொரு பெயர் 'சமுத்திர குமாரி'. என்னை மழைத் தண்ணீர் ஒன்றும் செய்து விடாது" என்றாள் பூங்குழலி.

அவளுடைய உள்ளம் அப்போது தஞ்சாவூர்க் கோட்டைக்கு அருகிலிருந்த சாலை ஓர மண்டபத்திலிருந்து நாகைப்பட்டினத்து சூடாமணி விஹாரத்துக்குப் பாய்ந்து சென்றது.

'சமுத்திரகுமாரி' என்று அவளை முதன் முதலாக அழைத்தவர் அந்தச் சூடாமணி விஹாரத்தில் அல்லவா இருந்தார்?

"பூங்குழலி என்னுடைய நந்தவனமும் குடிசையும் சிறிது தூரத்திலேதான் இருக்கிறது. மழைவிட்டதும் அங்கே போய் விடலாம். என் தாயார் உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுவாள்!" என்று அமுதன் கூறிய வார்த்தைகள் பூங்குழலியின் காதில் அரைகுறையாக விழுந்தன.

மறுபடியும் பளிச்சென்று கண்ணைப் பறித்தது. ஒரு மின்னல் அதன் ஒளியில் அவர்கள் முன்னம் அரைகுறையாகப் பார்த்த காட்சி நன்றாகத் தெரிந்தது. இருவரும் திடுக்கிட்டு போனார்கள். சாலையில் ஏறக்குறைய அந்த மண்டபத்துக்கு எதிரே ஒரு பெரிய ஆலமரம் வேரோடு பறிக்கப்பட்டு விழுந்து கிடந்தது. விசாலமாகப் படர்ந்திருந்த அதன் கிளைகளும் விழுதுகளும் தாறுமாறாக முறிந்தும் சிதைந்தும் கிடந்தன. அவற்றுக்கடியில் இரண்டு குதிரைகளும் ஐந்தாறு மனிதர்களும் அகப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி அகப்பட்டுக் கொண்டிருந்தவர்களை விடுதலை செய்து காப்பாற்றுவதற்காக வேறு சிலர் முயன்று கொண்டிருப்பது தெரிந்தது. அவசரம் அவசரமாக அவர்கள் முறிந்து கிடந்த கிளைகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். "ஐயோ!" "அப்பா!" "இங்கே!" "அங்கே" "சீக்கிரம்!" என்பவை போன்ற குரல்கள் மழைச் சப்தத்தினிடையே மலினமாகக் கேட்டன.

இவற்றையெல்லாம் விட அதிகமாகச் சேந்தன் அமுதன் - பூங்குழலியின் கவனத்தை வேறொன்று கவர்ந்தது. விழுந்து கிடந்த மரத்துக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு பல்லக்கு தரையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் இரண்டு ஆட்கள் மட்டும் நின்றார்கள். மற்றவர்கள் விழுந்த மரத்தினடியில் அகப்பட்டுக் கொண்டவர்களைக் காப்பாற்றுவதில் முனைந்திருந்தார்கள் போலும்.

"அமுதா! பல்லக்கைப் பார்த்தாயா?" என்று கேட்டாள் பூங்குழலி.

"பார்த்தேன், பழுவூர் இளையராணியின் பல்லக்குப் போல் இருந்தது."

"விழுந்த மரம் அந்தப் பல்லக்கின் மேலே விழுந்திருக்கக் கூடாதா?"

"கடவுளே! ஏன் அப்படிச் சொல்கிறாய்? பழுவூர் ராணியைப் பார்த்து அவள் மூலமாக ஏதோ காரியத்தைச் சாதிக்கப் போகிறதாகச் சொன்னாயே?"

"ஆமாம், இருந்தாலும், அந்தப் பழுவூர் இளையராணியை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை!"

"பிடிக்காவிட்டால், அவள் பேரில் மரம் முறிந்து விழ வேண்டுமா, என்ன?"

"சாதாரணப்பட்டவர்களின் தலையிலேதான் மரம் விழ வேண்டுமா? ராணிகளின் தலையிலே விழக் கூடாதா?... அது போனால் போகட்டும்; இப்போது நாம் பல்லக்கினருகில் சென்று பழுவூர் ராணியைப் பார்த்துப் பேசலாமா? கோட்டைக்குள் போவதற்கு அவளுடைய உதவியைக் கேட்கலாமா?"

"அழகுதான்! ராணியைப் பேட்டி காண்பதற்கு நல்ல சமயம்! நல்ல இடம்! பல்லக்கின் கிட்டப் போனால் மழைக் கால இருட்டில் திருட வருகிறோம் என்றெண்ணி நம்மை அடித்துப் போட்டாலும் போடுவார்கள்."

"ராணியை நான் பார்த்துவிட்டால் அப்புறம் காரியம் எளிதாகி விடும்..."

"அது எப்படி?"

"என் அண்ணியின் பெயரைச் சொல்வேன் அல்லது மந்திரவாதி ரவிதாஸன் அனுப்பினான் என்பேன்."

"நல்ல யோசனைத்தான்! ஆனால் ராணியின் அருகில் நெருங்க முடிந்தால் அல்லவோ?.. அதோ பார், பூங்குழலி."

மீண்டும் ஒரு மின்னல் மின்னியது; அதன் வெளிச்சத்தில் இரண்டு பேர் பல்லக்கைத் தூக்குவது தெரிந்தது. ஆகா! கிளம்பி விட்டார்களா? இல்லை, இல்லை! மண்டபத்தை நோக்கியல்லவா பல்லக்கு வருவது போலக் காண்கிறது? ஆம், சிறிது நேரத்தில் பல்லக்கு மண்டபத்தின் முகப்புக்கு வந்து சேர்ந்தது. பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதை இறக்கி வைத்தார்கள்.

"பழுவூர் இளையராணி நம்மைத் தேடிக் கொண்டல்லவா வருகிறாள்?" என்றாள் பூங்குழலி.

அமுதன் அவளுடைய கரத்தைப் பற்றிக் கொண்டு மண்டபத்தின் உட்புறத்தை நோக்கி நகர முயன்றான்; ஆனால் பூங்குழலி அவ்விதம் நகர மறுத்தாள்.

இதற்குள் "யார் அங்கே?" என்று ஓர் அதட்டும் குரல் கேட்டது.

பல்லக்கைச் சுமந்து வந்தவர்களில் ஒருவனின் குரல் என்பதைத் தெரிந்து கொண்டு, "பயப்படாதே, அண்ணே! உங்களைப் போல் நாங்களும் வழிப்போக்கர்கள்தான். மழைக்காக மண்டபத்தில் வந்து ஒதுங்கியிருக்கிறோம்!" என்று சொன்னாள் பூங்குழலி.

"சரி, சரி! பல்லக்கின் அருகில் வரவேண்டாம்" என்றது அதே குரல்.

"நாங்கள் ஏன் பல்லக்கின் அருகில் நெருங்கப் போகிறோம்? பல்லக்கில் ஏறுவதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டாமா!" என்றாள் பூங்குழலி.

சேந்தன் அமுதன், "வள்ளுவர் பெருமாள் கூட இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். முற்பிறப்பில் செய்த வினைப் பயனைப் பற்றிக் கூறும்போது..." என்று தொடங்கினான்.

"போதும், போதும்! வாயை மூடிக் கொண்டு சும்மா இருங்கள்! நீங்கள் எத்தனை பேர்?"

"நாங்கள் இரண்டு பேர்தான் இன்னும் இரண்டு நூறு பேர் வந்தாலும் இந்த மண்டபத்தில் மழைக்கு ஒதுங்கலாம்!..." என்றான் அமுதன்.

தான் உண்மையென்று நம்பியதையே அமுதன் சொன்னான். அதே மண்டபத்தின் உட்புறத்தில் தூணின் மறைவில் மூன்றாவது மனிதன் ஒருவன் நின்றது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பல்லக்குச் சுமந்தவன், "நான் அப்போதே சொன்னேன். மழை வந்ததும் மண்டபத்தில் போய் ஒதுங்கலாம் என்றேன்; கேட்கவில்லை. அதனால் இந்தச் சங்கடம் நேர்ந்தது!" என்று தன் தோழனிடம் சொன்னான்.

"இப்படி ஆகும் என்று யார் அப்பா கண்டது? மழை வலுப்பதற்குள் கோட்டைக்குள் போய்விடலாம் என்று எண்ணினோம். இந்த மட்டும் பல்லக்கின் மேல் மரம் விழாமல் போச்சே!" என்றான் அவன் தோழன்.

இச்சமயம் இன்னொரு பிரகாசமான மின்னல் மின்னியது. சேந்தன் அமுதன் - பூங்குழலி இருவர்களுடைய கண்களும் கவனமும் பல்லக்கின் பேரிலேயே இருந்தது. ஆகையால் அந்த மின்னல் வெளிச்சத்தில், பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு ஒரு பெண்மணி தாங்கள் நின்ற திசையை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். அப்படி நோக்கிய பெண்மணியின் முகம் அவர்களைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டு புன்னகை புரிந்ததையும் கவனித்தார்கள்.

மறு வினாடி மண்டபத்திலும் வெளியிலும் இருள் சூழ்ந்தது.

மிக மெல்லிய குரலில் பூங்குழலி, "அமுதா! பார்த்தாயா?" என்றாள்.

"ஆம், பார்தேன்"

"பல்லக்கில் இருந்தது யார்?"

"பழுவூர் இளையராணிதானே?"

"உனக்கு என்ன தோன்றியது?"

"பழுவூர் ராணியைப் போலத்தான் இருந்தது ஆனால் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது."

"சந்தேகமில்லை; நிச்சயந்தான்."

"எது நிச்சயம்?"

"பழுவூர் ராணி அல்ல; பித்துப்பிடித்த என் அத்தை ராணி தான் பல்லக்கில் இருக்கிறாள்!"

"உஷ்! இரைந்து பேசாதே!"

"இரைந்து பேசாவிட்டால் காரியம் நடப்பது எப்படி?"

"என்ன காரியம்?"

"எதற்காக இத்தனை தூரம் வந்தோமோ, அந்தக் காரியந்தான். அத்தையைக் கண்டுபிடித்து விட்டோ ம். அவளை விடுவித்து அழைத்துப் போக வேண்டாமா?"

"இப்போது அது முடியாத காரியம், பூங்குழலி! பல்லக்கு எங்கே போய்ச் சேர்கிறது என்று பார்த்துக் கொள்வோம். பிறகு யோசித்து விடுதலை செய்வதற்கு வழி தேடலாம்."

"தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும் என்கிறாயே? அதெல்லாம் முடியாது; இப்போது அத்தையை விடுதலை செய்தாக வேண்டும். உனக்குப் பயமிருந்தால் நீ சும்மா இரு!"

"விடுதலையாவதற்கு உன் அத்தை சம்மதிக்க வேண்டாமா? பல்லக்கில் ஏறி ஜாம் ஜாம் என்று போய்க் கொண்டிருக்கிறாள். எங்கே போகிறாள்; எதற்காக, யார் அவளைப் பிடித்து வரச் செய்தது என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?"

"பாதாளச் சிறைக்குக் கொண்டு போகிறார்களோ, என்னமோ? அப்புறம் நம்மால் என்ன செய்ய முடியும்?"

"ஏன் முடியாது? பாதாளச் சிறையில் நானே இருந்து வெளி வந்தவன்தான். அரண்மனைகளில் எனக்கும் கொஞ்சம் செல்வாக்கு உண்டு. உன் அத்தையை எப்படியாவது நான் விடுதலை செய்கிறேன் இப்போது நீ சும்மா இரு!"

பூங்குழலியும் அச்சமயம் பொறுமையுடன் சும்மா இருக்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்தாள். அப்போது அவர்கள் சிறிதும் எதிர்பாராத காரியம் ஒன்று நிகழ்ந்தது.

மூடுபல்லக்கின் விலகிய திரை இன்னும் நன்றாய் விலகுவது போலிருந்தது. அதன் உள்ளிருந்து ஓர் உருவம் வெளியே வந்தது. சத்தம் சிறிதுமின்றிப் பூனை நடப்பது போல் நடந்தது. அடுத்த வினாடி அவர்கள் அருகில் வந்து விட்டது. இவ்வளவும் நல்ல இருட்டில் நடந்தபடியால், மண்டபத்தின் அடிப்படிகளில் நின்ற காவலர்கள் கண்ணில் படவில்லை. பல்லக்கிலிருந்து வெளிவந்தவள் ஊமை ராணிதான் என்பதைப் பூங்குழலி அந்த இருளிலும் நன்றாய்த் தெரிந்து கொண்டு விட்டாள். ஊமை ராணி அந்த இரண்டு பேரின் கைகளையும் பிடித்து இழுத்துக் கொண்டு அம்மண்டபத்தின் பின் பகுதிக்கு விரைந்து சென்றாள்.

பூங்குழலியைத் தழுவிக் கொண்டு உச்சிமுகந்து, அவளைப் பார்த்ததில் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். பின்னர், அத்தைக்கும் மருமகளுக்கும் சமிக்ஞை பாஷையில் சிறிது நேரம் சம்பாஷணை நடந்தது. அந்தக் காரிருளில் அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படித் தான் பேசிக் கொண்டார்களோ? ஒருவர் கருத்தை ஒருவர் எவ்வாறு தான் தெரிந்து கொண்டார்களோ? அது நம்மால் விளங்கச் சொல்ல முடியாத காரியம்.

பூங்குழலி சேந்தன் அமுதனிடம், "அத்தை சொல்லுவது உனக்குத் தெரிந்ததா? என்னைப் பல்லக்கில் ஏறிக் கொண்டு போகச் சொல்கிறாள். அவளை உன் வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுகிறாள்!" என்றாள்.

"உன் சம்மதம் என்ன பூங்குழலி?" என்று அமுதன் கேட்டான்.

"அத்தை சொல்லுகிறபடி செய்யப் போகிறேன். ஆளைப் பிடித்துக் கொண்டு வரச் சொன்னவர்கள் இன்னார் என்று தெரிந்து கொள்வதற்கு சரியான உபாயம் அல்லவா?"

"யோசித்துச் சொல்லு! பூங்குழலி! உபாயம் சரிதான்! அதில் என்ன அபாயம் இருக்குமோ!"

"அமுதா! நீ கவலைப்படாதே! அத்தை சொன்னபடி செய்வதினால் எனக்கு ஓர் அபாயமும் ஏற்படாது. அப்படி ஏற்படுவதாயிருந்தால், என் இடுப்பில் இந்தக் கத்தி இருக்கவே இருக்கிறது!" என்று சொன்னாள் பூங்குழலி.

அத்தையை மறுபடி ஒரு முறை தழுவிக் கொண்டு விட்டுப் பூங்குழலி அவளைப் போலவே சத்தம் செய்யாமல் நடந்து சென்று பல்லக்கில் புகுந்து திரையையும் விட்டுக் கொண்டாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 22

அநிருத்தரின் ஏமாற்றம்

முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் சில தினங்களாகத் தலைநகரிலேயே தங்கியிருந்தார். அவரைக் காண்பதற்கு அரசாங்க அதிகாரிகள், சிற்றரசர்கள், சேனைத் தலைவர்கள், அயல்நாட்டுத் தூதுவர்கள், வர்த்தகக் குழுக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், தென்மொழி வடமொழி வித்வான்கள் முதலியோர் வந்த வண்ணமிருந்தார்கள். ஆதலின் அவருடைய மாளிகையில் ஜே,ஜே என்று எப்போதும் ஜனக்கூட்டமாக இருந்தது.

அநிருத்தர் தமக்கெனத் தனியாக காவல் படை வைத்துக் கொள்ளவில்லை. பரிவாரங்களும் மிகக் குறைவாகவே வைத்துக் கொண்டிருந்தார். ஆகையால் பழுவேட்டரையர்களோடு அவருக்குத் தகராறு எழுவதற்குக் காரணம் எதுவும் ஏற்படாமலிருந்தது.

ஆனபோதிலும், சின்னப் பழுவேட்டரையர் முணு முணுத்துக் கொண்டிருந்தார். முதன்மந்திரி தஞ்சை நகரில் தங்க ஆரம்பித்ததிலிருந்து கட்டுக்காவல் குறைந்து போயிருந்தது. முதன்மந்திரியைக் காண வேண்டுமென்ற வியாஜத்தில் கண்டவர்கள் எல்லாம் கோட்டைக்குள் நுழைந்து கொண்டே இருந்தார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையை அடுத்து முதல்மந்திரியின் மாளிகை இருந்தபடியால், அரண்மனை வட்டாரத்திலும் ஜனக் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. முதன்மந்திரியின் பெயரைச் சொல்லிக் கொண்டும் அவருடைய இலச்சினையைக் காட்டிக் கொண்டும் அநேகம் பேர் அங்கே வந்து அவரைப் பார்த்த வண்ணமிருந்தார்கள்.

இதையெல்லாம் ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்று சின்னப் பழுவேட்டரையர் விரும்பினார். ஆனால் நேரில் முதன்மந்திரியிடம் போய்ச் சண்டை பிடிப்பதற்கு வேண்டிய துணிச்சல் அவருக்கு இல்லை. பெரிய பழுவேட்டரையரும் இருந்தால், இருவருமாக யோசித்து ஏதேனும் செய்யலாம். இந்தச் சமயம் பார்த்துப் பெரிய பழுவேட்டரையரும் கடம்பூருக்குப் போய் விட்டதனால், சின்னவரான காலாந்தக கண்டருக்கு ஒரு கை ஒடிந்தது போல் இருந்தது. கோட்டைக்குள் ஜனக் கூட்டத்தைச் சேர்த்துக் கட்டுக் காவலுக்கு ஊறு விளைவிப்பது போதாது என்று, முதன்மந்திரி அநிருத்தர் அடிக்கடி ஏதாவது சின்னப் பழுவேட்டரையரிடம் உதவி கேட்கும் பாவனையில் அவருக்குக் கட்டளை அனுப்பிக் கொண்டிருந்தார்.

சில நாளைக்கு முன்பு கோடிக்கரைக்கு அனுப்புவதற்குச் சில வீரர்கள் வேண்டும் என்று கேட்டார். காலாந்தக கண்டரும் ஆட்களைக் கொடுத்து உதவினார். பிறகு நேற்றைக்கு உயர் குலத்துப் பெண்மணி ஒருவரைத் திருவையாற்றிலிருந்து அழைத்து வரவேண்டுமென்றும், அதற்குப் பழுவூர் அரண்மனையின் மூடுபல்லக்கு ஒன்றும், சிவிகை தூக்கிகளும் வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார். சின்னப் பழுவேட்டரையர் இந்த கோரிக்கையையும் நிறைவேற்றினார். ஆனால் மனத்திற்குள் 'இந்தப் பிரம்மராயன் ஏதோ சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறான். அவ்விதம் மூடுபல்லக்கில் வைத்து வரவழைக்ககூடிய உயர் குடும்பத்துப் பெண்மணி யார்? எதற்காக இங்கே வருகிறாள். இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும். இத்தகைய சந்தர்ப்பத்தில் தமையனார் இங்கே இல்லாமற் போய் விட்டாரே?' என்று அவர் மனச் சஞ்சலப்பட்டது.

முதன்மந்திரி அநிருத்தரின் மாளிகைக்கு மூடுபல்லக்கில் வந்தது யார் என்று தெரிந்து கொள்ள இன்னொரு மனிதனும் ஆவல் கொண்டிருந்தான். அவன் வேறு யாரும் இல்லை; அநிருத்த பிரம்மராயரின் அருமைச் சீடனான ஆழ்வார்க்கடியான்தான்.

பெருமழை பெய்த அன்றைக்கு மறுநாள் காலையில் அநிருத்த பிரம்மராயர் ஸ்நானபானம், ஜபதபம், பூஜை, புனஸ்காரம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாளிகையில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தம்மைக் காண்பதற்கு யாரார் வந்து காத்திருக்கிறார்கள் என்று சேவகனைப் பார்த்துகொண்டு வரச் செய்தார். காத்திருந்தவர்களில் ஆழ்வார்க்கடியான் ஒருவன் என்று தெரிந்ததும், அவனை உடனே கூட்டி வரும்படி ஆக்ஞாபித்தார்.

ஆழ்வார்க்கடியான் தன் குருநாதரின் முன்னால் விரைந்து வந்து பயபக்தி வினயத்துடன் நின்றான்.

"திருமலை! போன காரியம் என்ன ஆயிற்று?" என்று அநிருத்தர் கேட்டார்.

"குருவே! மன்னிக்க வேண்டும் தோல்வியடைந்து திரும்பினேன்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஒருவாறு நான் எதிர்பார்த்ததுதான் ஆதித்த கரிகாலரைச் சந்திக்கவே முடியவில்லையா?"

"சந்தித்தேன் ஐயா! தாங்கள் சொல்லச் சொன்ன செய்திகளையும் சொன்னேன், ஒன்றும் பயனில்லை. இளவரசரைக் கடம்பூர் அரண்மனைக்குப் போகாமல் தடுக்க முடியவில்லை..."

"இளவரசர் இப்போது கடம்பூரில்தான் இருக்கிறாரா?"

"ஆம், குருவே! சம்புவரையரின் மாளிகையில் அவர் பிரவேசித்ததைப் பார்த்துவிட்டு தான் வந்தேன். இளவரசருக்கு சம்புவரையர் இராஜோபசார வரவேற்பு அளித்தார். சுற்றுப்புறத்து மக்கள் காட்டிய உற்சாகத்தை வர்ணிக்க முடியாது."

"அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடியதுதான். கடம்பூர் மாளிகைக்கு இன்னும் யார்யார் வந்திருக்கிறார்கள்?"

"இளவரசருடன் பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனும் வந்திருக்கிறார்கள். இங்கிருந்து பெரிய பழுவேட்டரையர் இளைய ராணியுடன் வந்திருக்கிறார். இன்னும் நடுநாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் சேர்ந்த பல சிற்றரசர்களையும் அழைத்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன்..."

"திருக்கோவலூர் மலையமான்..."

"மணிமுத்தா நதி வரையில் இளவரசருடன் வந்து திரும்பி போய்விட்டார்...?"

"அந்த வீரக்கிழவன் சும்மா இருக்கமாட்டான். இதற்குள் சைனியம் திரட்டத் தொடங்கியிருப்பான். தெற்கேயிருந்து கொடும்பாளூர்ப் பெரிய வேளான் பெரிய சைன்யத்துடன் வருவதாகக் கேள்விப்படுகிறேன். இந்த ராஜ்யத்துக்கு கேடு ஒன்றும் வராமல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். திருமலை! நீ வரும் வழியில் சோழ நாட்டு மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏதேனும் காதில் விழுந்ததா?"

"சின்ன இளவரசருக்கு நேர்ந்த கடல் விபத்தைப் பற்றியே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் மீது ஒரே கோபமாயிருக்கிறார்கள். சிலர் தங்களையும் சேர்த்துக் குறை கூறுகிறார்கள்..."

"ஆம், ஆம்; குறை கூறுவதற்கு அவர்களுக்கு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. திருமலை! சீக்கிரத்தில் இந்த முதன்மந்திரி உத்தியோகத்தை விட்டுவிட எண்ணி இருக்கிறேன்.."

"குருவே! தாங்கள் அப்படி செய்தால் எனக்கும் விடுதலை கிடைக்கும். ஆழ்வார்களின் பாசுரங்களை நாடெங்கும் பாடி யாத்திரை செய்து ஆனந்தமாய்க் காலம் கழிப்பேன். எப்போது உத்தியோகத்தை விட்டு விடப் போகிறீர்கள், ஐயா!"

"இராஜ்யத்திற்கு விபத்து நேராமல் பாதுகாக்கக் கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்க்கப் போகிறேன்; அது முடிந்ததும் விடப் போகிறேன்.."

"அது என்ன முயற்சி குருவே?"

"அந்த முயற்சியில் மிக முக்கியமான முதற்படி ஏறியாகி விட்டது. திருமலை! உன்னால் வரமுடியாது என்று நீ கைவிட்டு விட்ட ஒரு காரியத்தில் நான் வெற்றி பெற்று விட்டேன்..."

"அதில் வியப்பு ஒன்றுமில்லை, ஐயா! அது என்ன காரியமோ?"

"ஈழத் தீவில் பித்துப்பிடித்தவள் போலத் திரிந்து கொண்டிருக்கும் ஓர் ஊமை ஸ்திரீயைத் தேடிப் பிடித்து அழைத்து வரச் சொன்னேன் அல்லவா? உன்னால் அந்தக் காரியம் முடியவில்லை என்று திரும்பி வந்து கூறினாய் அல்லவா?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! அந்த ஊமை ஸ்திரீ..."

"நேற்றிரவு நம் அரண்மனைக்கு அவளைக் கொண்டு வந்தாகி விட்டது."

"ஆகா! அதிசயம! அதிசயம்! இதை எப்படிச் சாதித்தீர்கள்?"

"சின்ன இளவரசர் தப்பிப் பிழைத்தாரா இல்லையா என்று தெரிந்துகொள்ள அந்த ஊமைப் பெண் கோடிக்கரைக்கு வருவாள் என்று எதிர்பார்த்தேன். வந்தால் அவளைப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பியிருந்தேன். நல்ல வேளையாக அவள் அதிக தொந்திரவு கொடுக்காமலே வந்து விட்டாள். இந்த வேடிக்கையைக் கேள், திருமலை! திருவையாற்றிலிருந்து அவளை மூடுபல்லக்கில் வைத்து அழைத்து வரச் செய்தேன். இதற்காகப் பழுவூர் ராணியின் மூடுபல்லக்கையே வரச் செய்தேன்...."

"ஐயா நேற்று மாலை பெரும் புயலும் மழையும் அடித்ததே!"

"ஆம்; அதனால் வழியில் தடங்கல் ஏற்பட்டது. எனக்குக் கூடக் கவலையாகத்தானிருந்தது. நேற்று நள்ளிரவு நேரத்துக்குப் பல்லக்கு வந்த பிறகுதான் நிம்மதியாயிற்று."

"ஓகோ! நள்ளிரவு ஆகிவிட்டதா? தாங்களும் அத்தனை நேரமும் விழித்திருந்து வரவேற்பு அளித்தீர்களா?"

"விழித்திருந்தேன் ஆனால் வரவேற்பதற்கு நான் போகவில்லை. வீட்டுப் பெண்களைவிட்டே வரவேற்கச் செய்தேன். வெறி பிடித்தவளாயிற்றே; என்ன தகராறு செய்கிறாளோ என்று கவலையாகத்தானிருந்தது. நல்ல வேளையாக, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நன்றாகச் சாப்பிட்டு விட்டு, உடனே உறங்கி விட்டாள். திருமலை! உண்மையைச் சொல்லப் போனால், இன்னமும் அவளைப் பார்க்கும் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் பயமாய்த்தானிருக்கிறது. நீ இச்சமயம் வந்தது நல்லதாய்ப் போயிற்று...."

"குருவே! நானும் அந்தப் பெண்மணியைப் பார்ப்பதற்கு மிக்க ஆவலாயிருக்கிறேன்..."

"அப்படியானால், வா! அந்தப்புரத்துக்குப் போகலாம். உன்னை ஏற்கனவே அவளுக்குத் தெரியும் அல்லவா? நீ சின்ன இளவரசருக்கு வேண்டியவன் என்பதும் தெரியும். ஆகையால் உன்னிடமும் சிறிது சுகமாக இருக்கக்கூடும்."

குருவும், சீடனும் மாளிகையின் பின் கட்டுக்குச் சென்றார்கள். தாதிமார்களிடம் நேற்றிரவு வந்த பெண்மணியை அழைத்து வரும்படி அநிருத்தப்பிரம்மராயர் கட்டளை இட்டார்.

தாதிமார்கள் அந்த ஸ்திரீயை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அநிருத்தர் அவளைப் பார்த்துத் திகைத்துப் போய் நின்றார்.

ஆழ்வார்க்கடியானின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 23

ஊமையும் பேசுமோ?

அநிருத்தர் சற்று நேரம் பூங்குழலியை உற்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவளைக் கொண்டு வந்த தாதிமார்களை அருகில் அழைத்தார். அவர்களிடம் மெல்லிய குரலில் ஏதோ கேட்டார். அவர்கள் மறுமொழி சொன்ன பிறகு அந்த அறையை விட்டு அப்பால் போகச் செய்தார்.

ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "திருமலை! ஏதோ தவறு நேர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது!" என்றார்.

"ஆம், ஐயா! அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது."

"இவள் இளம் பெண் சுமார் இருபது பிராயந்தான் இருக்கலாம்."

"அவ்வளவு கூட இராது".

"நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதரசிக்குப் பிராயம் நாற்பது இருக்க வேண்டும்."

"அதற்கு மேலேயும் இருக்கும்"

"ஆம், ஆம், நீ இலங்கைத் தீவில் மந்தாகினி தேவியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா?"

"ஆம்; ஐயா! பார்த்து, தங்கள் கட்டளைப்படி இங்கு அழைத்து வரவும் முயன்றேன், முடியவில்லை."

"இந்தப் பெண் மந்தாகினி தேவி அல்லவே?"

"இல்லை, குருதேவரே! நிச்சயமாக அந்த அம்மையார் இல்லை!"

"அப்படியானால் இவள் யாராயிருக்கும்? எப்படி இங்கு வந்து சேர்ந்தாள்?"

"இவளையே கேட்டுவிட்டால் போகிறது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஊமையிடம் கேட்டு என்ன பயன்?"

"குருத்தேவரே! இவள் ஊமைதான் என்பது..."

"அதைத்தான் தாதிமார்களிடம் கேட்டேன். இங்கு வந்ததிலிருந்து இவள் ஒன்றும் பேசவில்லை என்றார்கள்."

"குருதேவரே! இவளை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்கு யாரை அனுப்பியிருந்தீர்கள்?"

"ஆகா! அந்த மூடன் ஏதாவது தவறு செய்து விட்டானா, என்ன?"

"எந்த மூடன், குருதேவரே! தாங்கள் இத்தகைய காரியங்களுக்கு மூடனை அனுப்பி வைத்திருப்பீர்களா?"

"புத்திசாலியாக காணப்பட்டான்; பழையாறைக்கு நான் சென்றிருந்த அன்று, வாணர் குலத்து வல்லவரையனுடன் ஒரு வாலிபன் சண்டையிட்டான் அல்லவா?"

"ஆம்! பழையாறை வைத்தியர் மகன் பினாகபாணி."

"அவனேதான்! உன்னையும் வல்லவரையனையும் கரிகாலரைச் சந்திக்க அனுப்பிய பிறகு அந்த வைத்தியர் மகனைச் சிறையிலிருந்து விடுதலை செய்து அழைத்து வரப் பண்ணினேன். நம் ஒற்றர் படைக்குத் தகுந்தவன் என்று கண்டு, அவனைக் கோடிக்கரைக்கு அனுப்பினேன். முன்னம் அவன் கோடிக்கரைக்குப் போய்ப் பழக்கப்பட்டவனாம்."

"அவன் தான் இந்தப் பெண்ணை இங்கு அழைத்து வந்தானா?"

"அடையாளம் எல்லாம் சரியாகச் சொல்லி அனுப்பினேன். அவனும் திருவையாற்றில் கொண்டு வந்து சேர்த்துவிட்டுக் காரியம் வெற்றி என்று செய்தி அனுப்பியிருந்தான்..."

"ஐயா! நான் தோற்றுப்போன காரியத்தில் வெற்றி அடைந்த அந்தப் புத்திசாலி ஒற்றன் இப்போது எங்கே? இந்தப் பெண்ணைக் குறித்து அவனையே கேட்டுவிடுவது நல்லதல்லவா?"

"நல்லதுதான்! ஆனால் நேற்றிரவு அவனுக்கு எதிர்பாராமல் ஒரு விபத்து நேர்ந்துவிட்டது...!"

"அடாடா! அவனுக்கு என்ன விபத்து, எப்படி நேர்ந்தது?"

"சிவிகையின் பின்னால் அவனும் வந்து கொண்டிருந்தான். இருட்டிய பிறகு கோட்டைக்கு வரவேண்டும் என்று நான் கட்டளையிட்டிருந்தபடியால் அந்தப்படியே அந்திமாலை நேரத்தில் திருவையாற்றிலிருந்து புறப்பட்டு, முன்னிரவு வேளையில் கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று புயல் அடித்த செய்தித்தான் உனக்குத் தெரிந்திருக்குமே..."

"ஆம், ஐயா! நான் கூடப் புயலுக்குப் பயந்து சாலை ஓரத்து யாத்திரை மண்டபம் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்கும்படி நேர்ந்தது."

"கோட்டைக்குச் சற்றுத் தூரத்தில் சிவிகை வந்தபோது சாலையில் பெரிய மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாகப் பல்லக்கின் மீது விழாமல் பின்னால் வந்தவர்கள் மீது விழுந்தது. வைத்தியர் மகன் பினாகபாணி விழுந்த மரத்தடியில் அகப்பட்டுக் கொண்டான்.."

இவ்வாறு முதன்மந்திரி கூறியபோது, ஒரு பெண் குரல் "அந்தச் சண்டாளன் தலையில் மரம் மட்டுந்தானா விழுந்தது? இடி விழவில்லையா?" என்று ஆத்திரத்துடன் கூறியது கேட்டது.

முதன்மந்திரி அநிருத்தர் அளவிலாத வியப்புடன் பூங்குழலியை நோக்கினார். அவளைப் பார்த்துக் கொண்டே "திருமலை! இப்போது பேசியவள் இந்தப் பெண்தானா?" என்றார்.

"ஆம், ஐயா! அப்படித்தான் தோன்றியது."

"இது என்ன விந்தை? செவிடுக்குக் காது கேட்குமா? ஊமையும் பேசுமா?" என்றார் அநிருத்தர்.

"செவிட்டுக்குக் காது கேட்பதும், ஊமை பேசுவதும் மிகவும் விந்தையான காரியந்தான். ஆனால் சர்வசக்தி வாய்ந்த விஷ்ணு மூர்த்தியின் பக்தராகிய தாங்கள் மனது வைத்தால் எந்த அற்புதந்தான் நடவாது? ஆழ்வார் திருவாய் மலர்ந்தருளியிருப்பது என்னவென்றால்.."

"போதும்! ஆழ்வார்களை இப்போது இங்கே இழுத்துத் தொந்தரவு செய்யாதே! இது விஷ்ணு பகவானின் கருணையினால் நடந்தது அல்ல; ஏதோ தவறு நடந்திருக்கிறது. இந்தப் பெண் நம்மை ஏமாற்றியிருக்கிறாள். இவள் யார்? இவளுடைய நோக்கம் என்ன? எதற்காக இவள் இத்தனை நேரமும் செவிட்டு ஊமை போல நடித்தாள்?"

"குருதேவரே! இந்தப் பெண்ணையே கேட்டு விடலாமே?"

"அப்பனே! உன் முகத்தில் தவழும் புன்னகையைப் பார்த்தால், உனக்கு ஒருவேளை தெரிந்திருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது. சரி! இவளையே கேட்டு விடுகிறேன்; பெண்ணே! நீ செவிடு இல்லையா? நான் பேசுவது உனக்குக் காது கேட்கிறதா...?"

"ஐயா! நான் செவிடாயிருக்கக் கூடாதா என்று சில சமயம் விரும்பியதுண்டு. ஆனால் எனக்குக் காது கேட்பது பற்றி இப்போது சந்தோஷப்படுகிறேன். அந்தச் சண்டாளன் வைத்தியர் மகன் தலையில் மரம் ஒடிந்து விழுந்த செய்தியைக் கேட்டேன் அல்லவா? சுவாமி! அவன் செத்து ஒழிந்தானா?" என்றாள் பூங்குழலி.

"ஆகா! உனக்குக் காது கேட்கிறது; பேசவும் பேசுகிறாய்; நீ ஊமை அல்ல!" என்றார் அநிருத்தர்.

"நிச்சயமாய் இந்தப் பெண் ஊமை இல்லை!" என்றான் சீடன்.

"ஆகா! நான் ஊமையில்லை என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்களே! சோழ சாம்ராஜ்யத்திலேயே மிக்க அறிவாளி முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் என்று நான் கேள்விப்பட்டது சரிதான்!" என்றாள் பூங்குழலி.

"பெண்ணே! என்னைப் பரிகாசமா செய்கிறாய்! ஜாக்கிரதை! நீ ஊமையில்லாவிட்டால் நேற்று இரவு இங்கு வந்ததிலிருந்து பேசாமலிருந்தது ஏன்? ஊமைபோல் நடித்தது ஏன்? உண்மையைச் சொல்லு!" என்று கேட்டார் முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மாதிராயர்.

"ஐயா! நேற்றிரவு இங்கு நான் வந்து சேரும் வரையில் பேசத் தெரிந்தவளாக இருந்தேன். என்னை 'வாயாடி' என்று கூடச் சொல்வதுண்டு. முதன்மந்திரியின் அரண்மனையைப் பார்த்து இங்கு எனக்கு நடந்த இராஜோபசாரங்களைப் பார்த்ததும் பிரமித்து ஊமையாய்ப் போனேன். உங்கள் அரண்மனைப் பெண்மணிகள் என்னுடன் சமிக்ஞை மூலமாகப் பேசினார்கள். அவர்கள் எல்லாரும் ஊமை என்று எண்ணி நானும் சமிக்ஞையாக மறுமொழி சொன்னேன். தங்களுடைய பேச்சைக் கேட்ட பிறகு, எனக்கும் பேச்சு நினைவு வந்தது...."

"நீ பெரிய வாயாடி என்பதில் சந்தேகமில்லை; உன்னை எப்படித்தான் வைத்தியர் மகன் பிடித்துக் கொண்டு வந்தான் என்பதை நினைத்தால் ஆச்சரியமாயிருக்கிறது. அவன் முட்டாளாயிருந்தாலும் சாமர்த்தியசாலிதான்."

"சுவாமி! அந்தப் பாவி மகன் என்னைப் பிடித்துக் கொண்டு வரவில்லை. அதற்குப் பிரயத்தனப்பட்டிருந்தால், இத்தனை நேரம் அவன் யமலோகத்துக்கு நிச்சயமாக யாத்திரை செய்து கொண்டிருப்பான்!" என்று கூறிப் பூங்குழலி தன் இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் காட்டினாள்.

"பெண்ணே! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் கத்தியை இடுப்பிலே செருகிக்கொள். அவன் பேரில் உனக்கு ஏன் இத்தனை கோபம்? அதனால்தான் உன்னைப் பிடித்து வரவில்லை என்கிறாயே?"

"என்னை அவன் பிடித்துக் கொண்டு வரவில்லை; ஆனால் என்னை அவன் ஆட்கள் படகிலே சேர்த்துக் கட்டிப் போட்டு விட்டு வந்தார்கள். என் அண்ணியை மரத்திலே சேர்த்துக் கட்டி விட்டார்கள். இத்தனைக்கும் அந்தச் சண்டாள வைத்தியர் மகன் தனக்கு இதில் ஒரு சம்பந்தமும் இல்லையென்று என்னிடம் சொன்னான்.."

"அந்த வரையில் அவன் புத்திசாலிதான் நான் சொன்னபடியே அவன் நடந்து கொண்டிருக்கிறான்..."

"ஐயா!, முதன்மந்திரியே! அந்த தூர்த்தனை அனுப்பியது தாங்கள்தானா? வாயில்லாப் பேதையாகிய என் அத்தையைப் பிடித்துக் கொண்டு வரக் கட்டளையிட்டதும் தாங்கள்தானா?"

"உன் அத்தையா? கரையர் மகள் மந்தாகினி உன் அத்தையா? அப்படியானால், நீ...கலங்கரை விளக்கத்துக் காவலர் தியாகவிடங்கருக்கு நீ என்ன வேணும்?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஐயா! அவருடைய அருமைப் புதல்விதான் நான்!"

"ஆகா! தியாகவிடங்கருக்கு இவ்வளவு வாயாடியான ஒரு மகள் இருக்கிறாள் என்பது எனக்கு இதுவரை தெரியாமற் போயிற்று!"

"இதை வெளியில் சொல்ல வேண்டாம், ஐயா!"

"ஏன், பெண்ணே?"

"சோழ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி பிரம்மராயருக்குத் தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்று நாடெல்லாம் பிரசித்தமாயிருக்கிறது. தங்களுக்கு ஒன்று தெரியாது என்று ஏற்பட்டால், தங்களிடம் மக்களுக்குள்ள மதிப்புக்குப் பங்கம் வந்துவிடாதா?"

"பெண்ணே! என் மதிப்பைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குத் தெரியாத இன்னொரு செய்தியை மட்டும் சொல்லிவிடு. உன் அத்தையைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றாயே, அவள் இப்போது எங்கே? நான் அனுப்பிய பல்லக்கில், நீ எப்படி ஏறிக்கொண்டாய்? எவ்விடத்தில் ஏறிக் கொண்டாய்?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஐயா! வாயில்லாத ஊமையாகிய என் அத்தையைத் தாங்கள் எதற்காகக் கைப்பற்றிக் கொண்டு வர ஆட்களை அனுப்பினீர்கள்?"

"மகளே! அதை உன்னிடம் சொல்வதற்கில்லை; அது பெரிய இராஜாங்க சம்பந்தமான விஷயம்."

"தந்தையே! அப்படியானால், தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு நானும் மறுமொழி சொல்ல இயலாது."

"சொல்லும்படி செய்வதற்கு வழிகள் இருக்கின்றன!"

"என்னிடம் பலிக்காது!"

"பெண்ணே! உன்னைப் பாதாளச் சிறைக்கூடத்துக்கு அனுப்புவேன்!"

"எந்தப் பாதாளச் சிறையிலும் என்னை அடைத்து வைத்திருக்க முடியாது."

"பாதாளச் சிறைக்கு ஒரு தடவை போனவர்கள் திரும்பி வரவில்லை."

"திரும்பி வந்த ஒருவனை எனக்குத் தெரியும், ஐயா! நேற்றுக்கூடச் சேந்தன் அமுதனுடன் பேசிக் கொண்டு தான் பிரயாணம் செய்தேன்..."

"அவன் யார் சேந்தன் அமுதன்?..."

"அவன் என்னுடைய இன்னொரு அத்தையின் மகன். அவனும் நானுமாகத்தான் கோடிக்கரையிலிருந்து வந்து கொண்டிருந்தோம்."

"எதற்காக மகளே?"

"இந்தத் தஞ்சாவூரிலுள்ள மாடமாளிகை, கூடகோபுரங்களைப் பார்க்க வேண்டுமென்று வெகு காலமாக ஆசை உண்டு. சக்கரவர்த்தி சுந்தர சோழரைத் தரிசிக்க வேண்டும் என்றும் ஆவல் கொண்டிருந்தேன். சக்கரவர்த்திக்கு உடல்நலமில்லை என்று சொன்னார்களே? இப்போது எப்படியிருக்கிறது ஐயா! நான் பார்க்கலாமா?"

"அப்படியேதான் இருக்கிறது, மகளே! அபிவிருத்தி ஒன்றுமில்லை, ஆகையால் சக்கரவர்த்தியைத் தரிசிக்கும் எண்ணத்தை மறந்துவிடு!..."

"அது எப்படி மறக்க முடியும் ஐயா! சக்கரவர்த்தியை நான் பார்த்தேயாக வேண்டும். பார்த்து, அவருடைய தர்மராஜ்யத்தில் பெண்களைப் பலவந்தமாகப் பற்றிக் கொண்டு வரும் அக்கிரமம் நடக்கும் செய்தியைச் சொல்ல வேண்டும்..."

"பெண்ணே! உன்னோடு வெறும் விவாதம் செய்து கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. உன்னைப் பலவந்தமாகப் பற்றிக்கொண்டு வர நான் கட்டளையிடவும் இல்லை. நான் அனுப்பிய பல்லக்கில் நீ எப்படி ஏறிக் கொண்டாய், அதைச் சொல்! யாராவது உன்னைப் பலவந்தமாகப் பிடித்துப் பல்லக்கில் ஏற்றினார்களா?"

"இல்லை, சுவாமி! அது மட்டும் இல்லை. தஞ்சைக் கோட்டைக்கு அருகில் வரும் சமயத்தில் இந்தப் பல்லக்கு வெறுமையாக இருந்தது. மழையாயிருக்கிறதே என்று நானாகவேதான் பல்லக்கில் ஏறிக் கொண்டேன்..."

முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மராயர் தமது சீடனாகிய ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "ஒருவாறு எனக்கு இப்போது விஷயம் விளங்குகிறது. வழியில் புயலும் மழையுமாயிருந்தப் போது பல்லக்கை எங்கேயோ இறக்கியிருக்கிறார்கள். அச்சமயம் இவள் அத்தையைப் பல்லக்கிலிருந்து இறக்கிவிட்டு இவள் ஏறிக் கொண்டிருக்கிறாள். வைத்தியர் மகன் பேரில் மரம் விழுந்து பிரக்ஞை இழந்துவிட்டபடியால் அவனால் கவனிக்க முடியவில்லை. சிவிகை தூக்கிய மற்றவர்கள் கவனிக்கவில்லை. கோட்டை வாசலுக்குச் சமீபத்திலேதான் இது நடந்திருக்க வேண்டும் திருமலை! என்னுடைய ஊகம் சரியாயிருக்கும் என்று உனக்குத் தோன்றுகிறதா?" என்று கேட்டார்.

"சுவாமி! தாங்கள் இப்போது ஊகித்துச் சொன்னபடியே தான் நடந்தது; நானே கண்ணால் பார்த்தேன்."

"நீ பார்த்தாயா? அது ஏன்? இத்தனை நேரம் ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தாய்? சீக்கிரம் சொல்லு!"

"நேற்று முன்னிரவில் மழைக்கால இருட்டில் கோட்டை வாசலை நெருங்கி வந்து கொண்டிருந்தேன். பெரும் புயலும் மழையும் அடித்தன; மரங்கள் முறிந்து விழுந்தன. சாலையோரத்து யாத்திரிகர் மண்டபம் ஒன்றில் சிறிது நேரம் தங்கியிருக்கலாம் என்று சென்றேன். அங்கே நான் ஒதுங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் இந்தப் பெண்ணும் இன்னொரு வாலிபனும் வந்தார்கள். இவள் தன் அத்தை மகன் என்று சொன்னாளே, அவனாக இருக்கலாம். மின்னல் வெளிச்சத்தில் அவன் கழுத்தில் உருத்திராட்சம் கட்டியிருப்பதைப் பார்த்தேன். பிஞ்சிலே பழுத்த சைவன் என்று தெரிந்து கொண்டு அவனிடம் 'வைஷ்ணவத்தின் பெருமையைச் சொல்லலாம்; சற்றுப் பொழுது போகும்' என்று எண்ணினேன். இதற்குள் அதே மண்டபத்தின் முகப்பில் ஒரு சிவிகையைக் கொண்டு வந்து வைத்தார்கள். சிவிகையின் திரையில் பழுவேட்டரையரின் பனைச் சின்னம் தெரிந்தது. சிவிகையிலிருந்து ஒரு பெண் இறங்கி இவர்கள் அருகில் வந்தாள். மண்டபத்தில் இருள் கவிழ்ந்த இடத்தில் மூன்று பேரும் ஏதோ ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டார்கள். பிறகு இவள் போய்ப் பல்லக்கில் ஏறுவதைப் பார்த்தேன். மின்னல் வெளிச்சத்திலிருந்து 'பல்லக்கிலிருந்து இறங்கியவள் வேறு; மறுபடியும் ஏறியவள் வேறு' என்று தெரிந்து கொண்டேன். பல்லக்குத் தூக்கிகள் இதையொன்றும் கவனிக்கவில்லை; மழை சிறிது நின்றதும் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுப் போய் விட்டார்கள்!..."

"ஆகா! அப்படியா என்னை ஏமாற்றி விட்டார்கள்? இத்தனை நேரம் சொல்லாமல் சும்மா இருந்தாயே? அந்த இரண்டு பேரும் பிறகு என்ன செய்தார்கள்?"

"பல்லக்குப் போன பிறகு அவர்களும் போய் விட்டார்கள்; பின்னர் நானும் புறப்பட்டேன்..."

"திருமலை! நீ ஏன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தாய்? இவள் அத்தையை நீ ஏன் தடுத்து நிறுத்தவில்லை? நீயும் இவர்களுடைய சூழ்ச்சியில் கலந்துவிட்டாயா, என்ன?"

"அபசாரம், குருதேவரே! அபசாரம்! அத்தகைய துரோகத்தை நான் செய்யக்கூடியவனல்ல. முதலில், இதெல்லாம் தங்கள் ஏற்பாடு என்று எனக்குத் தெரியாது. பழுவூர் அரண்மனைப் பல்லக்கு ஆனபடியால், சின்னப் பழுவேட்டரையருடைய காரியமாயிருக்கும் என்று எண்ணினேன். மேலும், மந்தாகினி தேவியை என்னால் தடுத்து நிறுத்த முடியுமா? புயற்காற்றை அணை போட்டு நிறுத்தினாலும் நிறுத்தலாம்; அந்த மாதரசியை நிறுத்த முடியுமா? இலங்கையிலேயே முயன்று பார்த்துத் தோல்வி அடைந்தவன்தானே. மேலும் அந்த அம்மாளுக்கு என்னை அடையாளம் தெரியும். பார்த்ததும் மிரண்டு ஓடிப் போவார்கள்; பிறகு யாராலும் அவரைப் பிடிக்க முடியாது..."

"அதை நினைத்தால் வைத்தியர் மகன் கெட்டிக்காரன் என்றே தோன்றுகிறது. இத்தனை தூரம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் அல்லவா?"

"குருதேவரே! இந்த விஷயத்தில் தங்கள் ஊகம் சரியல்லவென்று தோன்றுகிறது. மந்தாகினி தேவி தாமே விரும்பித்தான் வந்திருக்க வேண்டும். தஞ்சையை நெருங்கியதும் அவருடைய மனம் மாறியிருக்க வேண்டும்..."

"இருக்கலாம்; இருக்கலாம், ஆனாலும் இதற்குள் அதிக தூரம் அந்தக் கரையர் மகள் போயிருக்க முடியாது. இரவெல்லாம் காற்றும் மழையுமாக இருந்ததல்லவா? சமீபத்திலேதான் எங்கேயாவதுதான் இருக்க வேண்டும். திருமலை! எப்படியாவது அவளைப் பிடித்தாக வேண்டும். ஒரு வேளை இந்தப் பெண்ணுக்கு அவள் தங்குமிடம் தெரிந்திருக்கலாம்...மகளே! உன் பெயர் என்ன?"

"பூங்குழலி, ஐயா!"

"ஆகா! அழகான பெயர்! பெயர் வைப்பதில் தியாகவிடங்கரின் சாமர்த்தியத்துக்கு இணையே கிடையாது. பூங்குழலி! உன் அத்தை எங்கே தங்கியிருப்பாள் என்று உனக்குத் தெரிந்திருக்கும். தெரிந்தால் சொல்லு! அவளுக்கு ஒன்றும் கெடுதல் நேராது."

பூங்குழலி சிறிது யோசித்துவிட்டு, "சுவாமி! என் அத்தை இப்போது இருக்கக்கூடிய இடம் எனக்குத் தெரியும். அவளை எதற்காகத் தாங்கள் பிடித்துக் கொண்டு வரச் செய்தீர்கள் என்று சொன்னால், நானும் அவள் இருக்குமிடத்தைச் சொல்லலாம்..."

"பூங்குழலி! அது பெரிய இராஜாங்க விஷயம். அரண்மனையைப் பற்றிய இரகசியம் உன்னிடம் சொல்ல முடியாது."

"நானும் சொல்ல முடியாது!"

"இந்தப் பெண்ணுடன் பேசிச் சாத்தியப்படாது.."

"ஐயா! ஒரு நிபந்தனையை நிறைவேற்றுவதாயிருந்தால்..."

"ஆகா! எனக்கு இந்தப் பெண் நிபந்தனை போடுகிறாளாம்! அது என்ன?"

"என் அத்தையைத் தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து மணிமகுடம் சூட்டுவதாயிருந்தால், அவளை நானே அழைத்து வருகிறேன்."

"திருமலை! இந்தப் பெண்ணுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது...!"

"அதை இப்போதுதானா கண்டீர்கள், குருதேவரே! இவளை ஒன்றும் கேட்கவே வேண்டாம். இவள் அத்தை இருக்குமிடம் எனக்குத் தெரியும். இவள் அத்தை மகன் சேந்தன் அமுதன் கோட்டைக்குச் சற்றுத் தூரத்தில் பூந்தோட்டத்தில் இருக்கிறான். அவனும் அவனது அன்னையும் தளிக்குளத்தார் கோயிலுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்கிறவர்கள். அங்கேதான் தாங்கள் தேடும் பெண்மணி இருக்கிறாள். என்னுடன் சில ஆட்களை அனுப்பினால், அழைத்து வருகிறேன்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

பூங்குழலி திருமலையை எரித்து விடுகிறவள் போலப் பார்த்துவிட்டு, "அப்படி ஏதாவது செய்தால், நான் இப்போதே சக்கரவர்த்தியின் அரண்மனை முன்னால் சென்று முறையிடுவேன்! நீங்கள் செய்யும் அக்கிரமம் ஊரெல்லாம் அறியும்படி செய்வேன்!" என்றாள்.

"திருமலை! இவளைப் பாதாளச் சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான்; வேறு வழி இல்லை!" என்றார் அநிருத்தப்பிரம்மராயர்.

"என் அருகில் யாராவது வந்தால் கொன்று விடுவேன்!" என்று பூங்குழலி மடியில் செருகி வைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டினாள்.

"ஐயா! இந்தப் பெண்ணை பாதாளச் சிறைக்கு அனுப்ப வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இளையபிராட்டி குந்தவை தேவியின் மாளிகைக்கு அனுப்பி வைக்கலாம். இளையபிராட்டி இப்போது இங்கேதானே இருக்கிறார்? அவர் இந்தப் பெண்ணின் பைத்தியத்தைத் தெளிய வைப்பார்! இளையபிராட்டிக்கும் இந்தப் பெண்ணினால் ஆக வேண்டிய காரியம் ஏதேனும் இருக்கலாம்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"எதனால் சொல்லுகிறாய்? இளையபிராட்டிக்கு இந்தப் பெண்ணின் மூலமாக என்ன காரியம் ஆகவேண்டியிருக்கப் போகிறது...?"

"குருதேவரே! தங்களுக்குத் தெரியாதா? நேற்று மாலை இங்கு அடித்த புயல் சோழ நாட்டுக் கடற்கரை ஓரமாக அதாஹதம் செய்து விட்டிருக்கிறதாம்! தங்கள் அரண்மனை வாசலில் நாலாபுறமிருந்தும் தூதர்கள் வந்து காத்திருக்கிறார்கள்..."

"ஆம், ஆம்! அவர்களையெல்லாம் நான் இப்போது பார்க்கவேண்டும். அதற்குள் இந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்ததில் வெகு நேரம் வீணாகிவிட்டது. இவள் ஊமையாகவே பிறந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்..."

"கேள்வி முறையில்லாமல் கொடுமை செய்யலாம் அல்லவா?" என்று முணுமுணுத்தாள் பூங்குழலி.

"நாகைப்பட்டினத்துக்குப் பெரிய ஆபத்து என்று கேள்விப்படுகிறேன். கடல் பொங்கி வந்து நகரையே மூழ்க அடித்து விட்டதாகச் சொல்கிறார்கள்!..."

இந்த வார்த்தைகளைக் கேட்டு முதன் மந்திரி அநிருத்தர், பூங்குழலி இருவருமே திடுக்கிட்டார்கள்.

"அதைப் பற்றித் தங்களிடம் விசாரிப்பதற்கு இளையபிராட்டியே இங்கே வந்தாலும் வரக்கூடும்" என்று முடித்தான் ஆழ்வார்க்கடியான்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே அரண்மனை வாசலில் ஜயகோஷத் தொனிகள் கேட்டன. "திருமலை, நீ எப்போது ஞான திருஷ்டி பெற்றாய்? இளையபிராட்டிதான் வருகிறார் போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு அநிருத்தர் எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.

அதற்குள் அதே வாசல் வழியாகக் குந்தவை தேவியும் வானதியும் உள்ளே பிரவேசித்தார்கள்.

பூங்குழலி அங்கே நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், இளையபிராட்டியின் திருமுகத்தில் குடிகொண்டிருந்த கவலைக் குறி மறைந்து, வியப்பும் உவகையும் ஒருங்கே பிரதிபலித்தன.
« Last Edit: April 22, 2012, 10:03:52 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 24

இளவரசியின் அவசரம்

இளவரசிகளை உபசரித்து வரவேற்றுப் பீடங்களில் உட்காரச் செய்த பிறகு அநிருத்தர் தாமும் அமர்ந்தார்.

"தேவி, என்னைப் பார்க்க வேணுமென்று சொல்லி அனுப்பினால் நானே வந்திருக்கமாட்டேனா? இவ்வளவு அவசரமாக வந்த காரணம் என்ன? சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா?" என்று கேட்டார்.

"சக்கரவர்த்தியின் தேக சுகம் எப்போதும் போலிருக்கிறது, ஐயா! ஆனால் மனதுதான் கொஞ்சமும் சரியாக இல்லை. நேற்று இரவு அடித்த கடும் புயல் தந்தையின் மனத்தை ரொம்பவும் பாதித்திருக்கிறது. இராத்திரியெல்லாம் அவர் தூங்கவில்லை. குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணி அடிக்கடி புலம்பினார். பொழுது விடிந்தவுடன் தங்களைப் போய்ப் பார்க்கும்படி சொன்னார். புயலினால் கஷ்ட நஷ்டம் அடைந்தவர்களுக்கெல்லாம் உடனே உதவி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அதைத் தங்களிடம் சொல்லுவதற்காகவே முக்கியமாக வந்தேன்!" என்றாள் இளையபிராட்டி குந்தவை.

"தேவி! இந்த எளியவனால் என்ன செய்ய முடியும்? முதன்மந்திரி என்ற பெயர்தான் எனக்கு என்பது தங்களுக்குத் தெரியாதா? பெரிய பழுவேட்டரையர் இந்தச் சமயம் ஊரை விட்டுப் போயிருக்கிறார். பொக்கிஷத்தை இறுக்கிப் பூட்டிக் கொண்டுதான் போயிருப்பார். அவருடைய சம்மதமின்றிக் காலாந்தககண்டரால் கூடப் பொக்கிஷ சாலையைத் திறக்க முடியாதே! கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? வாசலில் பலர் வந்து காத்திருப்பதைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்களைப் பார்ப்பதற்கே எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதனால்தான் வெளியில் செல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறேன்" என்று அநிருத்தப்பிரம்மராயர் பஞ்சப் பாட்டுப் பாடினார்.

"ஐயா! அதைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம் என்னுடைய சொந்த உடைமைகள் அனைத்தையும் கொடுக்கிறேன். என் அன்னையும் அவ்விதமே கொடுக்கச் சித்தமாயிருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையில் உள்ள எல்லாப் பொருள்களையும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். தந்தை அவ்விதம் சொல்லி அனுப்பினார்கள். ஏழைகளின் கஷ்டங்களுக்குத் தற்காலிக, சாந்தியாகவேனும் - ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள்..."

"தங்களுடைய சொந்த உடைமைகள் யானைப் பசிக்குப் சோளப் பொரி கொடுத்ததாகவே இருக்கும். சோழ நாடு முழுவதும் நேற்றுப் புயல் அடித்திருக்கிறது. எங்கெங்கே என்னென்ன நேர்ந்திருக்கிறது என்ற செய்திகளே இன்னும் கிட்டவில்லை. இதோ நிற்கிறானே, என் பரமானந்த சீடன், இவன் பெரும் பயங்கரமான செய்தியைச் சொல்லுகிறான். கடல் பொங்கி எழுந்து கோடிக்கரை முதல் நாகைப்பட்டினம் வரையில் கடலோரமுள்ள ஊர்களையெல்லாம் மூழ்கடித்து விட்டதாம்...!"

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அங்கிருந்த மூன்று பெண்களின் முகங்களும் பீதிகரமான மாறுதலை அடைந்ததை அநிருத்தர் கவனித்தார்.

உடனே அவர் தொடர்ந்து ஆறுதலாகக் கூறினார்: "ஆனால் அதை நான் நம்பவில்லை இவன் கூறுவது வெறும் வதந்திதான். புயலைக் காட்டிலும் வேகமாக வதந்தி பரவியிருக்கிறது. கடற்கரைப் பகுதியிலிருந்து செய்தி வருவதற்கே இன்னும் நேரமாகவில்லை. குதிரை மீது தூதர்கள் வந்தாலும் இன்று மத்தியானத்துக்கு மேலேதான் இங்கு வந்து சேர முடியும். இதற்கிடையில் நம்மால் செய்யக் கூடிய உதவிகளையெல்லாம் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்."

இளையபிராட்டி குந்தவை தன் மனக் குழப்பத்தைச் சிறிது சமாளித்துக் கொண்டு, "ஐயா! நாகைப்பட்டினம் பற்றிய வதந்தி என் காதிலும் விழுந்தது. அதைப் பற்றியும் தங்களிடம் பேசலாம் என்று வந்தேன். இப்போதுதானே சூடாமணி விஹாரத்திற்கு நாம் நிவந்தங்கள் அளித்துவிட்டு வந்தோம்? விஹாரத்துக்கு விபத்து நேர்ந்தால் பாவம், அதில் உள்ள பிக்ஷுக்கள் என்ன செய்வார்கள்?" என்று கூறிவிட்டு, பூங்குழலி நின்ற இடத்தை நோக்கினாள்.

"ஐயா! இந்தப் பெண் இங்கே எப்படி வந்தாள்? கோடிக்கரைத் தியாவிடங்கரின் மகள் பூங்குழலி அல்லவா இவள்?" என்று வினவினாள்.

"ஆமாம்; தியாகவிடங்கரின் குமாரிதான் ஆனால் அவரைப் போல் சாதுவல்ல. ரொம்பப் பொல்லாத பெண் தனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுத் தொந்தரவு விளைவிப்பவள்!" என்றார் முதன்மந்திரி.

இளையபிராட்டிக்கு வேறு வித ஐயப்பாடு தோன்றியது. அருள்மொழியைப் பற்றி உளவு அறிவதற்காகத்தான் பூங்குழலியை இங்கே அநிருத்தர் தருவித்திருக்கிறாரோ? தந்திர வித்தைகளில் கைதேர்ந்த மந்திரியாயிற்றே? எப்படி இருந்தாலும் பூங்குழலியின் சார்பில் தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு, "அப்படியொன்றுமில்லையே? பூங்குழலி மிக நல்ல பெண் ஆயிற்றே! இங்கே வா, அம்மா! முதன்மந்திரி ஏன் உன் பேரில் கோபமாயிருக்கிறார்? அவருக்கு ஏதேனும் தொந்தரவு கொடுத்தாயா?" என்றாள்.

பூங்குழலி சற்று நெருங்கி வந்து, "தேவி! முதன்மந்திரியையே தாங்கள் கேளுங்கள்! நான் முதன்மந்திரிக்குத் தொந்தரவு கொடுத்தேனா அவர் எனக்குத் தொந்தரவு கொடுத்தாரா என்று கேளுங்கள்!" என்றாள்.

"ஓகோ! நீயும் கோபமாகத்தான் இருக்கிறாய்! இங்கே வா, பெண்ணே; என் அருகில் உட்கார்ந்துகொள்!" என்று கூறி இளையபிராட்டி பூங்குழலியைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.

"ஐயா! இந்தப் பெண்ணை எதற்காகத் தருவித்தீர்கள்? ஏதாவது முக்கியமான காரியமா?" என்று கேட்டாள்.

"அம்மணி! நான் இந்தப் பெண்ணைத் தருவிக்கவில்லை. இப்படி ஒரு பொல்லாத பெண் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்குத் தெரியாது இவளாகவேதான்.." என்று அநிருத்தர் தயங்கினார்.

"தேவி! முதன்மந்திரி ஏன் தயங்குகிறார்? மிச்சத்தையும் சொல்லச் சொல்லுங்கள்!" என்றாள் பூங்குழலி.

"இவளாகவேதான் இவளுடைய அத்தையைத் தேடிக் கொண்டு வந்தாள்."

"யார் இவளுடைய அத்தை? ஓகோ! சேந்தன் அமுதனின் அன்னையா? கோட்டைக்கு வெளியில் அல்லவா அவர்களுடைய வீடு இருக்கிறது?"

"இல்லை; அமுதனின் அன்னை இல்லை; இவளுக்கு இன்னொரு ஊமை அத்தை இருக்கிறாள். இளவரசி! தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய செய்திதான். ஈழநாட்டுக் காடுகளில் பித்துப்பிடித்தவள் போல் திரிந்து கொண்டிருந்த ஊமை ஸ்திரீ ஒருவர் உண்டு. அந்த மாதரசியை இங்கே ஒரு முக்கியமான காரியத்துக்காக அழைத்து வர விரும்பினேன். அதற்காகப் பெரு முயற்சி செய்தேன்; கடைசியில், வெற்றி கிட்டியது அந்தச் சமயத்தில்..."

குந்தவை தேவி சொல்லி முடியாத பரபரப்பை அடைந்து, "உண்மையாகவா? அந்தப் பெண்மணி இப்போது இங்கே இருக்கிறாளா? நான் உடனே பார்க்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பீடத்தை விட்டு எழுந்தாள்.

"மன்னிக்க வேண்டும் தேவி! வெற்றி கிட்டும் சமயத்தில் இந்தப் பெண் குறுகிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டாள்!" என்றார் முதன்மந்திரி.

குந்தவை மிக்க ஏமாற்றத்துடன் திரும்பவும் உட்கார்ந்து "பூங்குழலி! இது உண்மைதானா? என்ன காரியம் செய்து விட்டாய்!" என்றாள்.

"தேவி! என் அத்தையை அழைத்து வருவதற்கு முதன்மந்திரி கையாண்ட முறையைக் கேளுங்கள். அப்போது என் பேரில் குற்றம் சொல்லமாட்டீர்கள்!" என்றாள் பூங்குழலி.

பிறகு, முதன்மந்திரி நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறினார்.

கேட்டுக் கொண்டிருந்த இளையபிராட்டி, "அப்படியானால், இந்தக் கோட்டைக்குப் பக்கத்திலே தானே எங்கேனும் இருக்க வேணும்? தேடிப் பார்க்கலாமே?" என்றாள்.

"நல்ல வேளையாகத் தேடிப் பார்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை. சேந்தன் அமுதன் குடிசையில் இன்று காலையில் பார்த்ததாக என் சீடன் சொல்லுகிறான்" என்றார் முதன்மந்திரி.

"அப்படியானால் ஏன் வீண் கால தாமதம்? மற்றக் காரியங்கள் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நாமே போய் அழைத்து வருவோம்; தாங்கள் வருவதற்கில்லாவிட்டால் நான் போய் வருகிறேன் வானதி! புறப்படு, போகலாம்!" என்றாள்.

ஆழ்வார்க்கடியான் அப்போது குறுக்கிட்டு, "தேவி! சற்று யோசித்துச் செய்ய வேண்டும். புதிய மனிதர்கள் கூட்டமாய் வருவதைக் கண்டால் அந்த அம்மாள் மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். பிறகு புயலைப் பிடித்தாலும் அந்த அம்மணியைப் பிடிக்க முடியாது!" என்று சொன்னான்.

"ஆம், திருமலை சொல்லுவது சரிதான் நம்மைப் பார்த்ததும் பூங்குழலியின் அத்தை மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். நமது பிரயத்தனமெல்லாம் வீணாகிவிடும்! நீ என்ன யோசனை சொல்கிறாய், திருமலை?" என்று முதன்மந்திரி கேட்டார்.

"இந்தப் பெண்மணியையே போய் அழைத்து வரும்படி சொல்லுங்கள். இந்த உலகத்தில் அந்த மாதரசியைக் கட்டுக்குள் வைக்கக் கூடியவர்கள் இரண்டே பேர்தான்! அவர்களில் இந்தப் பெண் ஒருத்தி!"

"இன்னொருவர் யார்?" என்று முதன்மந்திரி கேட்டதற்கு, ஆழ்வார்க்கடியான் சிறிது தயங்கி "இன்னொருவர் கடலில் முழுகிவிட்டதாக ஊரெல்லாம் வதந்தியாயிருக்கிறது!" என்றான்.

குந்தவை தேவி அதைக் கவனியாதவள்போல், பூங்குழலியைப் பார்த்து, "கரையர் மகளே! உடனே போய், உன் அத்தையை இங்கே அழைத்து வா! அவளுக்கு இங்கே ஒரு கெடுதியும் நேராது. மிக முக்கியமான காரியமாக உன் அத்தையை உடனே நான் பார்க்க வேண்டியிருக்கிறது! எனக்காக இந்த உதவி செய்வாய் அல்லவா?" என்றாள்.

"ஆகட்டும், அம்மா, முயன்று பார்க்கிறேன் ஆனாலும் முதன்மந்திரி இப்படிப்பட்ட உபாயத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டியதில்லை. முன்னாலேயே எனக்குத் தெரிந்திருந்தால்.."

"ஆமாம்; விஷயங்களை மறைத்து வைப்பதில் இம்மாதிரி அசந்தர்ப்பங்கள் நேரத்தான் நேருகின்றன. அதை நானே உணர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் அத்தையை அழைத்துக் கொண்டு வா! அதற்குப் பிறகு இன்னொரு முக்கியமான வேலை உனக்கு இருக்கிறது!" என்றாள் இளையபிராட்டி.

"திருமலை! நீயும் இந்தப் பெண்ணோடு போய்விட்டு வா! கோட்டை வாசல் வழியாக நீங்கள் வருவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், நமது அரண்மனைக்கு வரும் இரகசிய வழியில் அழைத்துக் கொண்டு வா!" என்றார் அநிருத்தர்.

பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் போன பிறகு குந்தவை முதன்மந்திரியைப் பார்த்து, "ஐயா! வாசலில் வந்து காத்திருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பி விட்டு வாருங்கள். மிக முக்கியமான காரியங்களைப் பற்றித் தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கிறது!" என்றாள்.

"இதோ வந்துவிடுகிறேன், தாயே! எனக்கும் தங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது!" என்று சொல்லி விட்டு அநிருத்தர் சென்றார்.

இத்தனை நேரமும் மௌனமாக இருந்த வானதி, "அக்கா! பூங்குழலிக்கு இன்னொரு முக்கியமான காரியம் என்ன வைத்திருக்கிறீர்கள்? மறுபடியும் நாகைப்பட்டினத்துக்கு அனுப்பப் போகிறீர்களா?" என்று கேட்டாள்.

"ஆம் வானதி! நீ வீணாகக் கவலைப்படாதே! பொன்னியின் செல்வனுக்கு ஆபத்து ஒன்றும் நேர்ந்து விடாது."

"நானும் அவளுடன் நாகைப்பட்டினத்துக்குப் போகிறேனே அக்கா!"

"நீ போய் என்ன செய்வாய்? உன்னைக் காப்பாற்றுவதற்கு வேறு யாராவது வேண்டுமே?"

"அந்த ஓடக்காரிக்கு என்னைக் கண்டால் பிடிக்கவேயில்லை, அக்கா!"

"எப்படியடி அவள் மனதை நீ கண்டுபிடித்தாய்?"

"என்னுடன் அவள் பேசவே இல்லை!"

"நீயும் அவளோடு பேசவில்லை; அவளும் உன்னோடு பேசவில்லை."

"நான் அடிக்கடி அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை ஒரு தடவைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை; அவளுக்கு ஏதோ என் பேரில் கோபம்!"

"ஆமாமடி, வானதி! இந்த நாட்டில் உள்ள கலியாணமாகாத கன்னிப் பெண்களுக்கெல்லாம் உன் பேரில் கோபமாய்த்தானிருக்கும். அதற்காக நீ வருத்தப்படுவதில் பயனில்லை" என்று சொன்னாள் இளையபிராட்டி குந்தவைதேவி.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 25

அநிருத்தரின் குற்றம்

முதன்மந்திரி தம் அரண்மனை ஆசார வாசலில் காத்திருந்தவர்களைப் பார்த்துப் பேசி அனுப்பிவிட்டு விரைவிலேயே திரும்பி வந்தார்.

"அம்மணி! ஏதோ என்னால் முடிந்த வரைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன். புயலினால் நேர்ந்த சேதங்களை அறிந்து வர நாலா பக்கமும் ஆட்களை அனுப்பியிருக்கிறேன். சின்னப் பழுவேட்டரையருக்கும் சொல்லி அனுப்பியிருக்கிறேன், நம் இருவரின் பொறுப்பிலும் பொக்கிஷ சாலையைத் திறந்து விடவேண்டும் என்று."

"ஐயா! பெரிய பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி நிலவறைப் பொக்கிஷம் ஒன்று இருக்கிறதாமே! அதில் கணக்கில்லாத பொருள்கள் குவிந்து இருப்பது உண்மையா? பெரிய பிராட்டி ஒரு தடவை சொன்னார்கள்."

"அதைத் திறந்தால் அதிலுள்ள பொருளைக் கொண்டு ஆயிரம் பெரிய கோவில்கள் புதியதாய்க் கட்டலாமே என்று அந்த அம்மாளுக்கு எண்ணம். நான் கூட அந்த நிலவறைக்குள் போனதில்லை அம்மா! அதற்குள் ஒரு தடவை போகிறவர்கள் உயிரோடு திரும்புவதில்லை" என்றார் முதன்மந்திரி.

"அது போகட்டும், ஐயா! அந்த ஊமைத் தாயை இவர்கள் அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்களா? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போய்விடுமோ என்று எனக்குக் கவலையாயிருக்கிறது" என்றாள் குந்தவை.

"தாயே! அந்த மாதரசியைப் பற்றித் தங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரிந்தது? தாங்கள் ஏன் அவளைப் பற்றி இவ்வளவு பரபரப்பு அடைந்திருக்கிறீர்கள்?" என்றார் அநிருத்தர்.

"ஐயா! சில தினங்களுக்கு முன்பு சக்கரவர்த்தியே என்னிடம் அந்த மாதரசியைப் பற்றிச் சொன்னார்."

"என்ன? அவள் உயிரோடிருப்பதாகச் சொன்னாரா, என்ன?"

"இல்லை, ஐயா! இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னார். அவள் இறந்து போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். அதனாலேதான் அவருடைய சித்தம் கலங்கிப் போயிருக்கிறது. அந்த ஊமைத்தாய் கடலில் விழுந்து இறந்து போய்விட்டதாகத் தாங்கள் தானே தெரிந்து கொண்டு வந்து என் தந்தையிடத்தில் சொன்னீர்களாம்? பின், அந்த மாதரசி உயிரோடிருக்கும் செய்தி தங்களுக்கு எப்படித் தெரிந்தது?"

"தங்களை அதே கேள்வி கேட்கவேண்டும் என்று எண்ணினேன். தங்களுக்கு எப்படித் தெரிந்தது, தேவி?"

"அதற்கென்ன, சொல்கிறேன் வாணர்குலத்து வீரர் ஈழத்துக்குப் போய்த் திரும்பி வந்தாரே, அவர் முதலில் சொன்னார். பிறகு என் தம்பி அருள்மொழி..." என்று கூறிவிட்டு, குந்தவை தன் தவறைத் தானே உணர்ந்தவள் போல் வாயைக் கையினால் பொத்திக் கொண்டாள்.

"தேவி! இளவரசர் அருள்மொழிவர்மரைப்பற்றித் தாங்கள் என்னிடம் சொல்ல விரும்பவில்லையென்றால், சொல்ல வேண்டாம். தாங்கள் அந்தப் பெயரைக் குறிப்பிட்டதை நான் அடியோடு மறந்துவிடுகிறேன்."

"இல்லை, ஐயா! தங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது என்ற எண்ணத்துடனேயே வந்தேன். விஷயங்களை மூடி மறைத்து வைப்பதினால் தீமைதானே தவிர, நன்மை ஒன்றுமில்லை என்பதைக் கண்டுகொண்டேன். நேற்றிரவு எனக்கு அது நன்றாய்த் தெரிந்தது. ஐயா! என் இளைய சகோதரனைக் கடல் கொண்டு போய்விடவில்லை. பொன்னியின் செல்வனைச் சமுத்திரராஜன் காப்பாற்றிக் கரையில் சேர்த்தார். அவன் இப்போது நாகைப்பட்டினத்திலுள்ள புத்த விஹாரத்தில் இருக்கிறான். அவனைப் பார்ப்பதற்காகவே நான் நாகைப்பட்டினம் போயிருந்தேன். ஆனால் தங்களுக்கு இது எல்லாம் தெரியும் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு."

"தாங்கள் சந்தேகித்தது நியாயமே; ஆனால் தேவி, தெரிந்ததாக நான் காட்டிக் கொள்ளவில்லையே! வேறு யாருடைய காரியத்தில் தலையிட்டாலும் தங்களுடைய காரியத்தில் தலையிடுவதில்லை என்று வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆட்களுக்கும் அவ்விதமே கட்டளை இட்டிருக்கிறேன். தாங்கள் செய்வது எதுவுமே உசிதமாகத்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. நானும், மலையமான் கொடும்பாளூர் வேளானும் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம், 'இளையபிராட்டி மட்டும் ஆண் பிள்ளையாய்ப் பிறந்திருந்தால், இந்த அகில உலகத்தையும் சோழர்களின் வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டு வந்து தனியரசு செலுத்தி ஆண்டு வருவாள்' என்று."

"அந்த மாதிரி எண்ணம் எனக்கு இருந்தது உண்மைதான். நான் பெண்ணாகப் பிறந்திருந்த போதிலும் என் சகோதரர்கள் மூலமாக அந்த மனோரதம் நிறைவேறும் என்ற ஆசையுடன் இருந்தேன். அந்த ஆசையை இப்போது விட்டுவிட்டேன், ஐயா! இராஜ்ய விஷயங்களில் பெண்கள் தலையிடவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன்! பாருங்கள், என் சகோதரனை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் இருக்கும்படி செய்தேன் அதன் விபரீதப் பலனைப் பாருங்கள்!"

"ஒன்றும் நேர்ந்து விடவில்லையே, தாயே! பொன்னியின் செல்வனை நடுக்கடலில் காப்பாற்றிய சமுத்திரராஜன், இப்போது கரையில் பத்திரமாயிருக்கும் போது தீங்கு விளைவித்து விடுவானா?"

"ஐயா! தாங்கள் உடனே என் தந்தையிடம் வந்து இவ்வாறு தைரியம் சொல்லுங்கள்."

"ஆகா! சக்கரவர்த்திக்குத் தெரியுமா, என்ன? இளவரசர் சூடாமணி விஹாரத்தில் இருக்கும் செய்தி?"

"நேற்று இரவுதான் சொன்னேன்; சொல்லும்படியாக நேர்ந்துவிட்டது."

"ஆகா! இன்னும் கொஞ்சநாள் சொல்லாமலிருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். தாங்கள் செய்திருந்தது மிக நல்ல ஏற்பாடு என்று நினைத்தேன்! தேவி! சோழ நாடு முழுவதும் ஒரே கொந்தளிப்பாகயிருக்கிறது. நேற்று அடித்த புயல் காரணமாக வெளியில் ஏற்பட்ட கொந்தளிப்பு சில நாளாகவே சோழ நாட்டு மக்களின் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருக்கிறது. மதுராந்தகர் மீதும் பழுவேட்டரையர்கள் மீதும் ஜனங்கள் ஒரே கோபமாகயிருக்கிறார்கள். இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வரக் கப்பல்கள் அனுப்பப்பட்டதையும் அறிந்திருக்கிறார்கள். இளவரசரைப் பழுவேட்டரையர்கள் தான் கடலில் மூழ்கடித்து விட்டதாகப் பலர் நம்புகிறார்கள். இச்சமயத்தில் இளவரசர் இந்த நாட்டில் இருப்பது தெரிந்தால் மக்கள் கொதித்து எழுவார்கள். இளவரசரின் தலையில் இப்போதே மணிமகுடத்தைச் சூட்டிவிட வேண்டும் என்று பெரும் கிளர்ச்சி செய்வார்கள். பழுவேட்டரையர்களும் சண்டைக்கு எப்போது முகாந்தரம் ஏற்படும் என்று காத்திருக்கிறார்கள். கொடும்பாளூர் பெரியவேளார் பெரும் படை திரட்டிக் கொண்டு தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். தேவி! சோழ நாட்டில் இரத்த வெள்ளம் ஓடப்போகிறது என்று அஞ்சுகிறேன். இந்தப் பெரிய சாம்ராஜ்யம் சகோதரச் சண்டையினால் அழிந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். அப்படி ஒன்றும் நேராமலிருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் ஸ்ரீ ரங்கநாதரைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்."

"என்னுடைய பிரார்த்தனையும் அதுவேதான், ஐயா! என் சகோதரர்கள் இந்த சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஏற வேண்டுமென்ற ஆசையை நான் விட்டுவிட்டேன். என்னைப் பொறுத்த வரையில் மதுராந்தகனுக்கே முடி சூட்டுவதில் இப்போது எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை."

"தங்களுக்கு ஆட்சேபமில்லை, ஆனால் மக்களுக்கு ஆட்சேபம் இருக்கிறதே! சக்கரவர்த்தி இன்னும் பல்லாண்டு இவ்வுலகில் வாழவேண்டும். ஆனால் விதிவசத்தினால் அவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டதென்றால் அன்றைய தினமே இந்தச் சோழ நாடு முழுவதும் ரணகளமாகி விடும்..."

"ஐயா! அத்தகைய துர்க்கதி விரைவிலேயே நேர்ந்து விடுமோ என்று எனக்குப் பயம் அதிகமாயிருக்கிறது. நேற்றிரவு சக்கரவர்த்தியின் நிலை மிக்க கவலைக்கிடமாகி விட்டது. அதனாலேதான் அவரிடம் பொன்னியின் செல்வன் பத்திரமாயிருக்கிறான் என்று சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால், சொல்லியும் அவர் நம்பவில்லை! அவருக்கு நான் வெறுமே ஆறுதல் சொல்வதாக எண்ணிக் கொண்டார். பல வருஷங்களுக்கு முன்னால் மாண்டு போன 'பழிகாரி' ஆவி அவருடைய புதல்வர்களின் மீது பழி வாங்குவதாக எண்ணிப் பிரமை கொண்டு பிதற்றுகிறார்..."

"அந்தோ, கடவுளே! என்ன விபரீதம்? நேற்று இரவு நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லுங்கள்!"

"அதற்காகத்தான் வந்தேன் ஐயா! சொல்லித் தங்களிடம் யோசனை கேட்பதற்காகவே வந்தேன். முன் தடவை சுந்தர சோழர் மருத்துவசாலை ஏற்படுத்துவதற்காக நான் வந்த சமயத்தில், சக்கரவர்த்தி எனக்கு அந்தப் பழைய வரலாற்றைக் கூறினார், ஈழ நாட்டை அடுத்த தீவில் தாம் ஒதுங்க நேர்ந்த போது, கரையர் மகள் ஒருத்தி தம்மைக் கரடிக்கு இரையாகாமல் காப்பாற்றியது பற்றிச் சொன்னார். பின்னர் அத்தீவிலேயே சில மாத காலம் சொப்பன சொர்க்கலோகத்தில் வாழ்வது போல் அந்தப் பெண்ணுடன் வாழ்ந்திருந்ததைப் பற்றிச் சொன்னார். பின்னர் இந்தத் தஞ்சைபுரிக்கு அவர் அழைத்து வரப்பட்டதையும் கூறினார். அரண்மனை வாசலில் கூடியிருந்த கூட்டத்தின் மத்தியில் கரையர் மகளைப் பார்த்ததையும், ஆருயிர் நண்பராகிய தங்களை விட்டு அவளைத் தேடிக் கொண்டு வரச் சொன்னதையும், தாங்கள் தேடிப் போய்த் திரும்பி வந்து அவள் கடலில் விழுந்து இறந்தாள் என்று தெரிவித்ததையும் கூறினார். அதுமுதல் அடிக்கடி அந்தக் கரையர் மகள், ஆவி வடிவத்தில் வந்து தம்மைத் துன்புறுத்துவதாகவும் சமீப காலத்தில் அவள் வருகை அதிகமாயிருப்பதாகவும் சொன்னார்..."

"தேவி, அதையெல்லாம் நீங்கள் நம்பினீர்களா!"

"தந்தை கூறிய வரலாறு அவ்வளவு அதிசயமாயிருந்தபடியால் என் மனமும் மிக்க குழம்பி விட்டது. இறந்து போனவளின் ஆவி வந்து தந்தையைத் தொந்தரவு படுத்துவது சித்தப்பிரமையாயிருக்கலாம் என்று நினைத்தேன். பிறகு யோசித்துப் பார்க்கப் பார்க்க வேறு சில ஐயங்கள் உண்டாயின. வானதி ஒரு நாள் இரவு, சக்கரவர்த்தியின் கூக்குரலைக் கேட்டுப் போய்ப் பார்த்தாள். பழுவூர் இளையராணி மாதிரி ஓர் உருவம் மன்னரின் எதிரில் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு மூர்ச்சித்து விழுந்தாள். அது முதல் அந்தக் கரையர் மகளுக்கும், இந்தப் பழுவூர் இளையராணிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. வல்லவரையரும், அருள்மொழியும் கூறியதிலிருந்து அது உறுதியாயிற்று. ஐயா! நந்தினி தேவி ஒருவேளை அந்த கரையர் மகளின் புதல்வியாயிருக்க முடியுமா?"

"தங்களைப் போலவே நானும் ஊகிக்கத்தான் முடியும். தாயே! உருவ ஒற்றுமையைப் பார்த்தால் அப்படித் தான் கருத வேண்டியிருக்கிறது. ஆனால் அதிலிருந்து மட்டும் நிச்சயிக்க முடியுமா? ஒரு வேளை கரையர் மகளின் கடைசித் தங்கையாகக் கூட நந்தினிதேவி இருக்கலாம். இதையெல்லாம் பற்றி நிச்சயமாகத் தெரிந்தவர்கள் இப்போது மூன்று பேர்தான் இருக்கிறார்கள்..."

"அவர்கள் யார், சுவாமி!"

"ஒருவர்தான் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி. அவருடைய உள்ளத்தில் ஏதோ ஒரு இரகசியம் இருந்து வேதனை செய்து வருகிறது. ஆனால் அது இன்னதென்பதை அவராகச் சொன்னாலொழிய, நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாது. மகானாகிய கண்டராதித்தர் காலமாகும் தருவாயில் பெரிய பிராட்டி அதை அவரிடம் கூறினார் என்பது எனக்குத் தெரியும். கண்டராதித்தர் என்னிடம் சொல்லத் தொடங்கினார். இரண்டு வார்த்தை சொல்வதற்குள் அவருடைய மூச்சு நின்றுவிட்டது.."

"மற்ற இருவரும் யார், ஐயா?"

"மற்ற இருவரும் பேசத் தெரியாத ஊமைகள். சேந்தன் அமுதனின் அன்னையும் பெரியன்னையுந்தான். இவர்களில் அமுதனுடைய அன்னையிடமிருந்து நாம் ஒன்றும் தெரிந்து கொள்ள இயலாது. செம்பியன் மாதேவியிடம் அவள் அளவிலாத பக்தி உள்ளவள். அந்தத் தேவி உயிரோடிருக்கும் வரையில் இவள் ஒன்றும் தெரிவிக்க மாட்டாள். ஆகையினால்தான் அவளுடைய தமக்கை மந்தாகினியை ஈழ நாட்டிலிருந்து அழைத்து வருவதற்கு நான் பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன்..."

"ஆகா! அந்தக் கரையர் மகளின் பெயர் மந்தாகினியா? அவள் உயிரோடிருப்பது தங்களுக்கு எப்போது தெரிந்தது.?"

"தேவி! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அது எனக்குத் தெரிந்த விஷயந்தான்."

"என்ன? என்ன? இருபத்தைந்து வருஷங்களாகத் தெரிந்துமா என் தந்தையிடம் தாங்கள் சொல்லவில்லை? ஐயா! அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணத்தினால் என் தந்தை எத்தனை மனோவேதனைக்கு உள்ளானார் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியாதா?"

"தெரியும் தாயே! தெரியும்."

"தெரிந்துமா அவரிடம் உண்மையைச் சொல்லாதிருந்தீர்கள்?"

அநிருத்தர் ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். அவர் உள்ளத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது என்பதை அவருடைய முகம் எடுத்துக்காட்டியது பின்னர் அவர் கூறினார்:

"தேவி! இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு குற்றம் செய்தேன். முதன்முதலாக அதை இப்போது தங்களிடந்தான் சொல்லுகிறேன். கரையர் மகளைத் தேடி வரும்படி தங்கள் தந்தை என்னை அனுப்பினார் அல்லவா? விரைவாகக் குதிரை மீது செல்லும் ஆட்களுடன் நானும் போனேன். கோடிக்கரை போய்ச் சேர்ந்தோம். அங்கே கொந்தளித்துக் கொண்டிருந்த கடலில் அவள் கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து விழுந்துவிட்டாள் என்பதை அறிந்தோம். அந்தப் பயங்கரக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். தியாக விடங்கரே நடுங்கிய குரலில் நாக்குழறக் கூறினார். அதைத்தான் நானும் தஞ்சாவூருக்கு வந்து என் நண்பரிடம் தெரிவித்தேன்..."

"இதில் தங்கள் குற்றம் என்ன, ஐயா?" என்றாள் குந்தவை.

"குற்றம் இதுதான்; கரையர் மகள் கடலில் விழுந்தாளே தவிர, அதிலே முழுகிச் சாகவில்லை. அந்தக் கொந்தளித்த கடலில் படகு விட்டுக் கொண்டு வந்த வலைஞன் ஒருவன் அவளைக் கண்டெடுத்துப் படகில் ஏற்றிக் காப்பாற்றிவிட்டான். கோடிக்கரைக்கு வெகு தூரத்தில் அப்பால் அவன் வந்து கரையேறினான். திரும்பி வரும் வழியில் நான் அந்தக் கரையேறும் படகைப் பார்த்தேன். அதில் இருந்த பெண் யார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் படகுக்காரனிடம் நிறையப் பணம் கொடுத்து அவளைப் பத்திரமாக இலங்கைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்படியும் அங்கேயே இருக்கும்படியும் கூறினேன். அவனும் சம்மதித்துச் சென்றான். நான் திரும்பித் தஞ்சைக்கு வந்து கரையரின் மகள் கடலில் விழுந்து மாண்டு விட்டதாகக் கூறினேன். தங்கள் தந்தைக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டுதான் மனமறிந்து அத்தகைய குற்றத்தைச் செய்தேன். அந்தக் குற்றம் இத்தனை காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு விபரீதமான விளைவை உண்டாக்குமென்று எதிர்பார்க்கவில்லை..."

இளையபிராட்டி குந்தவை அப்போது குறுக்கிட்டு, "ஐயா! தாங்கள் செய்தது குற்றமாயிருந்தாலும் என் தந்தைக்கு நன்மை செய்யும் எண்ணத்துடனேயே செய்தீர்கள். பிறகு, அக்கரையர் மகளைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டு வந்தீர்களா?" என்று கேட்டாள்.

"ஏன்? அடிக்கடி கேள்விப்பட்டுத்தான் வந்தேன். இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டதும், சுந்தர சோழர் மதுரைப் போர் முனைக்குப் போனார். நான் காசி க்ஷேத்திரத்துக்குச் சென்றேன். சில ஆண்டுகள் அங்கேயே தங்கி வேதாகம சாத்திரங்கள் பயின்றுவிட்டுத் திரும்பி வந்தேன். அப்போது பழையாறையில் ஈசான பட்டரின் தந்தை அந்தக் கரையர் மகளோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தேன். அவர் ஒரு அதிசயமான செய்தியைச் சொன்னார். அந்தக் கரையர் மகள் பெரிய பிராட்டியின் அரண்மனைத் தோட்டத்தில் வந்து சில நாள் தங்கியிருந்ததாகவும், இரட்டைக் குழந்தைகள் பெற்று அங்கேயே போட்டுவிட்டு ஓடிப் போனதாகவும் கூறினார். எப்போதாவது நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவள் இரகசியமாக வருவதுண்டு என்றும் தெரிவித்தார். குழந்தைகள் என்ன ஆயின என்று கேட்டேன், அவர் சொல்ல மறுத்து விட்டார். அது செம்பியன் மாதேவிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்று கூறினார். நானும் அதைப்பற்றி அதிகம் கிளறாமலிருப்பதுதான் நல்லது என்று சும்மா விட்டு விட்டேன். தேவி! அருள்மொழி குழந்தைப் பிராயத்தில் காவேரி நதியில் விழுந்து விட்டபோது, அவனைக் காவேரி அன்னை காப்பாற்றினாள் என்று எல்லாரும் சொல்லுவார்கள் அல்லவா? அப்படிக் காப்பாற்றியவள் உண்மையில் கரையர் மகள்தான் என்று என் மனத்தில் அச்சமயமே தோன்றியது...."

"தங்கள் உள்ளத்தில் தோன்றியது உண்மைதான், ஐயா! அருள்மொழி ஈழ நாட்டில் அந்த மாதரசியைப் பார்த்துவிட்டு வந்து அவ்வாறுதான் சொன்னான். ஆனால் இந்த விந்தையைக் கேளுங்கள்! என் தந்தை என்ன எண்ணுகிறார் தெரியுமா? கடலில் விழுந்து இறந்த கரையர் மகள்தான் ஆவி வடிவத்தில் வந்து தம் மக்கள் மீது பழி வாங்குவதாக எண்ணுகிறார். நேற்றிரவு வெளியில் கடும் புயல் அடித்தபோது என் தந்தையின் உள்ளப் புயலும் வேகத்தை அடைந்தது. இரவு முழுவதும் அவர் தூங்கவே இல்லை; என்னையும் தூங்கவிடவில்லை. பழைய கதைகளையெல்லாம் மறுபடி சொன்னார். 'கடலில் விழுந்து இறந்த அந்தப் பழிகாரிதான் இப்போது என் பேரில் பழி வாங்குகிறாள். அவள்தான் என் அருள்மொழியைக் கடலில் மூழ்க அடித்துக் கொன்று விட்டாள்! கரிகாலனையும் அவள் பழி வாங்காமல் விடமாட்டாள்!' என்று அடிக்கடி அலறினார். 'என் ஒரு மகனாவது உயிரோடிருக்கும்போது என்னைக் கொண்டு போக மாட்டாயா, யமனே!' என்று கதறினார். அவருக்கு எவ்வளவோ நான் சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. அதன் பேரிலேதான் நாகைப்பட்டினம் புத்த விஹாரத்தில் அருள்மொழிவர்மன் பத்திரமாயிருப்பதைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டி நேர்ந்தது..."

"அதற்குப் பிறகு சக்கரவர்த்தி சிறிது ஆறுதல் அடைந்தாரா?"

"அதுதான் இல்லை; அதன் பிறகு சித்தப்பிரமை இன்னும் அதிகமாகிவிட்டது! முதலில் அச்செய்தியை அவர் நம்பவே இல்லை. ஆனால் நேரில் பார்த்துவிட்டு வந்தேன் என்று சொன்ன பிறகு நம்பினார். ஏன் அவனை அழைத்துக் கொண்டு வரவில்லை என்று கேட்டார். குளிர் சுரத்துக்குப் பிறகு பிரயாணத்துக்கு வேண்டிய உடல் பலம் வரவில்லை என்றும், விரைவில் அழைத்துக் கொண்டு வர ஏற்பாடு செய்வதாகவும் கூறினேன். ஆனால் அவனை இப்போது இங்கு அழைத்து வருவதால் இராஜ்யத்தில் ஏற்படக் கூடிய குழப்பத்தைப் பற்றியும் இலேசாகச் சொன்னேன். இதைக் கேட்டதும் அவருடைய மனப் போக்கு வேறு விதமாகத் திரும்பி விட்டது. 'இந்த இராஜ்யந்தான் என் பிள்ளைகளுக்கு யமனாக ஏற்பட்டிருக்கிறது. இராஜ்யம் அவர்களுக்கு இல்லையென்று தீர்ந்தால் என் புதல்வர்கள் உயிரோடு சுகமாயிருப்பார்கள். அதற்காகத்தான் அவர்களை இங்கு அழைத்து வர இவ்வளவு அவசரப்படுகிறேன்!' என்றார். திடீரென்று இன்னொரு பீதி அவர் மனத்தில் குடிகொண்டது. உக்கிரமான புயல் காற்றினால் நேற்றிரவு அரண்மனையெல்லாம் கிடுகிடுத்துப் போயிற்று. ஒரு தடவை பேரிடி இடித்து ஓய்ந்ததும் என் தந்தை வெறி கொண்டு விட்டார். 'மகளே! அருள்மொழியை இனி நான் பார்க்கப் போவதில்லை. கீழைக் கடலில் தோன்றும் புயல் காற்றுகளையும் சுழிக் காற்றுகளையும் பற்றி எனக்கு நன்றாய்த் தெரியும். இன்று அடிக்கும் புயலினால் கடற்கரையில் தென்னை மர உயரம் அலைகள் எழும்பும். உள்நாட்டில் வெகு தூரம் கடல் பொங்கிவந்து மூழ்க அடிக்கும். காவேரிப்பட்டினத்தை அன்று ஒருநாள் கடல் கொண்டது போல் நாகைப்பட்டினத்தையும் கொண்டு போனாலும் போய்விடும். அதிலும் கடற்கரைக்கும் கால்வாய்க்கும் மத்தியில் உள்ள புத்த விஹாரம் ஒரு நாளும் தப்பிப் பிழைக்காது. அந்தப் பழிகாரி கரையர் மகள் கடலில் என் மகனைக் கொண்டு போக முடியவில்லை. அதற்குப் பதிலாக கரையிலேயே வந்து என் மகனைக் கொல்லப் போகிறாள்! நான் போய் இதோ அவளைத் தடுத்து என் மகனைக் காப்பாற்றப் போகிறேன்' என்று கதறிக் கொண்டு எழுந்திருக்க முயன்றார். அந்த முயற்சியில் தளர்ச்சியுற்றுப் படுக்கையில் விழுந்தார். ஐயா! அப்போது என் தந்தை விம்மி அழுத குரலைக் கேட்டால் கல்லும் மலையும் உருகிவிடும்!" என்றாள் இளையபிராட்டி.

அவளுடைய கண்களில் அப்போது தாரை தாரையாகக் கண்ணிர் வழிந்து கொண்டிருந்தது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 26

வீதியில் குழப்பம்

குந்தவை கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டு, வானதியும் விம்மத் தொடங்கினாள். உலகத்தில் எத்தனையோ இன்ப துன்பங்களைப் பார்த்தவரான அநிருத்தப் பிரம்மராயரின் இரும்பு நெஞ்சமும் இளகியது.

"தாயே! சக்கரவர்த்தி இப்போது படும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமானவன் இந்தப் பாவிதான். என்ன பிராயச்சித்தம் செய்து அந்தப் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை!" என்றார்.

"ஐயா! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்தக் கரையர் மகள் இறந்துவிடவில்லை. உயிரோடிருக்கிறாள் என்பதைத் தந்தைக்குத் தெரிவித்துவிட்டால் அவருடைய துன்பம் தீர்ந்து மன அமைதி ஏற்பட்டு விடும். அதைச் சொல்வதற்காகவே தங்களிடம் வந்தேன். எப்படியாவது என் பெரியன்னையை அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ள வந்தேன். ஆனால் தாங்களே அதற்குப் பிரயத்தனம் செய்திருக்கிறீர்கள்!" என்றாள் இளையபிராட்டி.

"ஆம், அம்மா! நானும் அத்தகைய முடிவுக்குத்தான் வந்திருந்தேன். மந்தாகினிதேவி உயிரோடிருக்கும் விவரத்தைச் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடத் தீர்மானித்து விட்டேன். ஆனால் வெறுமனே சொன்னால் அவர் நம்ப மாட்டார். முன்னே நான் கூறியது பொய், இப்போது சொல்வதுதான் உண்மை என்று எவ்விதம் அவரை நம்பச் செய்வது? அதற்காகவே அந்தத் தேவியை இங்கே அழைத்து வரச் செய்த பிறகு சொல்ல எண்ணினேன். நேரிலே பார்த்தால் நம்பியே தீரவேண்டும் அல்லவா? அதற்காகவே முக்கியமாக இலங்கைத் தீவுக்குச் சென்றிருந்தேன். ஆனால் தங்கள் தம்பியோடும் பெரிய வேளாரோடும் சதி செய்வதற்காக நான் ஈழ நாட்டுக்குப் போனேன் என்று பழுவேட்டரையர்கள் சக்கரவர்த்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். அது இல்லை என்று நிரூபிப்பதற்காகவேனும் மந்தாகினி தேவியைத் தங்கள் தந்தையின் முன்னால் கொண்டு போய் நிறுத்தப் போகிறேன்" என்றார் அநிருத்தர்.

"ஐயா! அந்த மாதிரி திடீரென்று கொண்டு போய் நிறுத்தினால் தந்தைக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டாலும் நேரிடலாம். முன்னால் தெரிவித்து விட்டுத்தான் அவர்களைப் பார்க்கச் செய்யவேணும்!" என்றாள் இளையபிராட்டி.

"ஆம், ஆம் அவ்வாறுதான் செய்ய உத்தேசித்திருக்கிறேன். இந்த வீட்டுக்கு மந்தாகினி தேவி வந்து சேர்ந்ததும் போய்ச் சொல்லலாம் என்று நினைத்தேன். இன்று காலை அரண்மனைக்கு வரவே எண்ணியிருந்தேன். அதற்குள் தியாகவிடங்கரின் மகள் நடுவில் தலையிட்டு எனக்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டாள். அந்தப் பொல்லாத பெண்ணுக்கு ஒருநாள் தகுந்த தண்டனை விதிப்பேன்!" என்றார் முதன்மந்திரி.

"ஐயோ! அப்படி ஒன்றும் செய்யாதீர்கள் அவள் நல்ல பெண்ணோ, பொல்லாத பெண்ணோ, நான் அறியேன். ஆனால் அருள்மொழியைக் கடலில் முழுகிப் போகாமல் காப்பாற்றியவள் பூங்குழலிதான் அல்லவா?"

"கடவுள் காப்பாற்றினார் என்று சொல்லுங்கள், தாயே! பாற்கடலில் பள்ளிகொண்ட பகவான் காப்பாற்றினார். அவருடைய அருள் இல்லாவிட்டால், இந்தச் சிறு பெண்ணால் என்ன செய்துவிட முடியும்? ஜோதிட சாஸ்திரம் உண்மையானால், கிரகங்கள், நட்சத்திரங்களின் சஞ்சார பலன்கள் மெய்யானால், இளவரசரைக் கடலும் தீயும் புயலும் பூகம்பமும்கூட ஒன்றும் செய்ய முடியாது..."

"இறைவன் அருளின்றி எதுவும் நடவாதுதான். ஆனால் இறைவனுடைய சக்தியும் மனிதர்கள் மூலமாகத் தானே இயங்க வேண்டும்? பூங்குழலியை மறுபடியும் நாகப்பட்டினத்துக்கு அனுப்ப எண்ணியிருக்கிறேன், ஐயா! அல்லது, தாங்கள் வேறுவிதமாக எண்ணினால் - பகிரங்கமாகவே அருள்மொழியை இங்கு வரச் செய்யலாம் என்று கருதினால்..."

"இல்லை, தாயே! இல்லை! சிம்மாசனம் யாருக்கு என்பது நிச்சயமாகும் வரைக்கும் அருள்மொழிவர்மனைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளாமலிருப்பதே நல்லது. தங்கள் தந்தையை இன்று முடிவாகக் கேட்டுவிட எண்ணியிருக்கிறேன். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டுவதாயிருந்தால், தங்கள் தம்பியை மறுபடியும் ஈழ நாட்டுக்குத் திருப்பி அனுப்பி விடுவது நல்லது. அருள்மொழிவர்மர் இங்கு இருக்கும்போது மதுராந்தகருக்கு மகுடம் சூட்டச் சோழ நாட்டு மக்கள் ஒருநாளும் உடன்படமாட்டார்கள். சோழ நாடு பெரும் ரணகளமாகும்; சோழ நாட்டின் நதிகளில் எல்லாம் இரத்த வெள்ளம் பெருகி ஓடும்..."

"ஐயா! அப்படியானால் பூங்குழலியையும், சேந்தன் அமுதனையும் மறுபடி நாகப்பட்டினத்துக்கு அனுப்புவதே நல்லதல்லவா?"

"அதுதான் நல்லது சக்கரவர்த்தி விரும்பினால் ஒரு முறை அருள்மொழிவர்மர் இரகசியமாகத் தஞ்சைக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போகலாம்!"

"ஆம், ஆம்! மந்தாகினி தேவியும் அருள்மொழியும் உயிரோடிருக்கிறார்கள் என்பதை ஒருமுறை கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டால்தான் சக்கரவர்த்தியின் உள்ளம் அமைதி அடையும்."

"பெரிய இளவரசரைப் பற்றித் தங்கள் தந்தைக்கு எவ்விதக் கவலையும் இல்லை அல்லவா?"

"இல்லவே இல்லை; ஆதித்த கரிகாலனுக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்று சக்கரவர்த்தி நம்பியிருக்கிறார். தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஐயா?"

"எனக்கு என்னமோ அவ்வளவு நம்பிக்கை இல்லை. போர்க்களத்தில் பெரிய இளவரசர் அஸகாய சூரர்தான். ஆனால் மற்ற இடங்களில் அவரை ஏமாற்றுவதும் வஞ்சிப்பதும் கஷ்டமல்ல. பழுவேட்டரையர்கள் அவரை விரோதிக்கிறார்கள். பழுவூர் இளையராணி அவருக்கு எதிராக ஏதோ பயங்கரமான இரகசியச் சூழ்ச்சி செய்து வருகிறாள். இந்த இரண்டு செய்திகளையும் கரிகாலருக்கு என் சீடன் மூலம் சொல்லி அனுப்பினேன். ஆயினும் பலன் இல்லை. தஞ்சாவூருக்கு எவ்வளவு சொல்லியும் வர மறுத்தவர் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்குப் போயிருக்கிறார்..."

"ஐயா! பழுவூர் இளையராணி எங்கள் சகோதரியாயிருக்கக் கூடும் என்று நான் என் தமையனுக்குச் செய்தி அனுப்பியிருக்கிறேன். அருகிலிருந்து காப்பாற்றும்படியும் வாணர் குலத்து வீரருக்குச் சொல்லி அனுப்பினேன். ஆகா! வல்லவரையர் மட்டும் இப்போது இங்கே இருந்திருந்தால், நாகப்பட்டினத்துக்கு அனுப்பியிருக்கலாம்..."

"அந்தப் பிள்ளை ஏதாவது சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ளாமலிருப்பதற்கு நானும் என் சீடனை அனுப்பி இருப்பேன். இப்போதுகூடத் தாங்கள் பூங்குழலியை அனுப்பினால் பின்னோடு திருமலையையும் அனுப்ப உத்தேசிக்கிறேன்."

"போனவர்கள் இன்னும் வந்து சேரவில்லையே? என் பெரியன்னை வந்துவிட்டால், என் நெஞ்சிலிருந்து முக்கால்வாசி பாரம் இறங்கிவிடும் ஐயா! அவர் வந்தவுடனே, தாங்கள் என் தந்தையைச் சந்தித்துச் சொல்லி விடுவீர்கள் அல்லவா? நான் என் அன்னையிடம் ஆதியிலிருந்து எல்லாக் கதையையும் சொல்லியாக வேண்டும்..."

"ஆகா! மலையமான் மகளுக்குத்தான் எத்தனை மனத்துன்பங்கள்! அதோடு, திருக்கோவலூர்க் கிழவனுக்கு இதெல்லாம் தெரியும்போது அவன் என்ன செய்யப் போகிறானோ? தன் பேரப் பிள்ளைகளுக்குப் பட்டம் இல்லை என்று தெரிந்தால், இந்த நாட்டையே அழித்து விடுவேன் என்று ஒருவேளை மலையமான் கிளம்பக்கூடும்..."

"என் பாட்டனாரைச் சரிக்கட்டும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள். இந்தப் பெண் வானதி இருக்கிறாளே, இவளுடைய பெரிய தகப்பனாரைப் பற்றித்தான் எனக்கு கவலையாயிருக்கிறது. கொடும்பாளூர்ப் பெண் சோழ சிங்காதனத்தில் ஒருநாள் வீற்றிருக்கப் போகிறாள் என்று அவர் ஆசை கொண்டிருக்கிறாராம். இந்தப் பெண்ணின் மனதிலே கூட அந்த ஆசை இருக்கிறது..."

வானதி இப்போது குறுக்கிட்டு ஆத்திரம் நிறைந்த குரலில் "அக்கா!..." என்றாள்.

அந்தச் சமயத்தில், வானதி மேலே பேசுவதற்குள், பூங்குழலி உள்ளே பிரவேசித்தாள். அவள் தனியாக வந்தது கண்டு மூன்று பேரும் சிறிது துணுக்குற்றார்கள்.

"கரையர் மகளே! உன் அத்தை எங்கே? திருமலை எங்கே?" என்று முதன்மந்திரி பரபரப்புடன் கேட்டார்.

"ஐயா! என் கர்வம் பங்கமுற்றது. நான் சொல்லிப் போனபடி அத்தையை இங்கு கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை."

"நீங்கள் போவதற்குள்ளேயே காணோமா? அல்லது வருவதற்கு மறுத்து விட்டாளா? அப்படியானால்..."

"இல்லை ஐயா! கோட்டைக்குள்ளே அழைத்துக் கொண்டு வந்துவிட்டோ ம். அதற்குப் பிறகுதான் ஜனக் கூட்டத்திலே அகப்பட்டு அத்தை காணாமற் போய்விட்டார்!" என்றாள் பூங்குழலி. பின்னர் அச்சம்பவம் பற்றிய பின்வரும் விவரங்களைக் கூறினாள்:

மந்தாகினிதேவி நல்ல வேளையாகச் சேந்தன் அமுதன் வீட்டிலேயேதான் இருந்தாள். அவள் அங்கேயே இருக்கும்படியான காரணங்கள் நேர்ந்திருந்தன. நேற்றிரவு அடித்த புயலில் அமுதனுடைய வீடு சின்னாபின்னமடைந்திருந்தது. தோட்டத்திலிருந்த மரம் ஒன்று வீட்டுக் கூரை மேலேயே விழுந்திருந்தது. சேந்தன் அமுதனோ முதல் நாளிரவு மழையில் நனைந்த காரணத்தினால் கடும் சுரம் வந்து படுத்துப் பிதற்றிக் கொண்டிருந்தான். இரண்டு சகோதரிகளும் விழுந்த மரங்களை அகற்றி வீட்டைச் சரிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பூங்குழலியைக் கண்டதும் மந்தாகினி மகிழ்ச்சி அடைந்தாள். திருமலையைக் கண்டு கொஞ்சம் தயங்கினாள். அவன் நம்மைச் சேர்ந்தவன் என்று பூங்குழலி கூறிய பிறகு தைரியம் அடைந்தாள். வழியில் பூங்குழலியும் திருமலையும் ஊமை ராணியிடம் என்ன சொல்லுவது. எவ்வாறு சொன்னால் அவள் தயங்காமல் தங்களுடன் வருவாள் என்று பேசி முடிவு செய்திருந்தார்கள். அந்தப்படியே பூங்குழலி அவள் அத்தையிடம் கூறினாள். சக்கரவர்த்தி நோய்ப்பட்டுப் படுத்தபடுக்கையாயிருப்பதாகவும், எந்த நேரத்திலும் இந்த மண்ணுலகை விட்டுப் போய்விடலாமென்றும், அவருடைய மூச்சுப் பிரிவதற்கு முன்னால் ஊமை ராணியை ஒரு தடவை பார்க்க ஆசைப்படுகிறார் என்றும், ஊமை ராணியை அவர் இத்தனை காலமாகியும் மறக்கவில்லையென்றும், அவளைப் பார்த்தால் ஒருவேளை அவர் புதிய பலம் பெற்று இன்னும் சில காலம் உயிர் வாழக்கூடும் என்றும் சமிக்ஞை பாஷையில் தெரியப்படுத்தினாள். அதற்காகவே தான் முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மராயர் அவளை எப்படியாவது பிடித்து வர ஆட்களை அனுப்பியதாகவும் முதன்மந்திரியின் அரண்மனையிலேதான் முதல் நாளிரவு தான் தங்கியிருந்ததாகவும் கூறினாள். சக்கரவர்த்தியின் அருமைப் புதல்வி குந்தவை தேவி ஊமை ராணியைத் தன் தந்தையிடம் அழைத்துப் போவதற்காக முதன்மந்திரி வீட்டில் காத்திருப்பதாகவும் தெரியப்படுத்தினாள். இதையெல்லாம் ஒருவாறு தெரிந்து கொண்ட பிறகு மந்தாகினி பூங்குழலியுடனும் திருமலையுடனும் புறப்பட்டு வர இசைந்தாள். கோட்டை வாசலுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது, சக்கரவர்த்தியின் வேளக்காரப் படையினர், கோட்டைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போகட்டும் என்று மூன்று பேரும் ஒதுங்கி நின்றார்கள். வேளக்காரப் படையை மந்தாகினி கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வேளக்காரப் படையைத் தொடர்ந்து ஒரு பெருங்கூட்டம் கோட்டைக்குள்ளே பிரவேசித்தது. அவர்களைத் தடுத்து நிறுத்தவும் கோட்டைக் கதவுகளைச் சாத்தவும் காவலர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை. "இந்தக் கூட்டத்தோடு நாம் போக வேண்டாம். முதன்மந்திரி அரண்மனைக்குப் போகப் பிரத்தியேகமான சுரங்க வழி இருக்கிறது. அதன் வழியாகப் போகலாம்" என்றான் திருமலை. இதைப் பற்றி பூங்குழலி அவளுடைய அத்தைக்குச் சொல்லப் பிரயத்தனப்பட்டாள். ஊமை ராணி அதைக் கவனியாமல் கோட்டைக்குள் போகும் கூட்டத்தோடு சேர்ந்து போகத் தொடங்கினாள். திருமலையும் பூங்குழலியும் பின்னோடு சென்றார்கள். கோட்டைக்குள் பிரவேசித்த பிறகும், திருமலை வேறு தனி வழியாகப் போகலாம் என்று சொன்னதைப் பூங்குழலியின் அத்தை பொருட்படுத்தவில்லை. கூட்டத்துடன் கலந்தே சென்றாள். கூட்டத்தைப் பார்த்து பயப்படும் சுபாவம் உடையவள் இம்மாதிரி செய்வதைக் கண்டு மற்ற இருவருக்கும் வியப்பாயிருந்தது. கொஞ்ச தூரம் போன பிறகு கூட்டத்தில் சிலர் மந்தாகினியைக் குறிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள். "இந்த அம்மாளைப் பார்த்தால் பழுவூர் இளையராணியின் ஜாடையாக இல்லையா?" என்று ஒருவருக்கொருவர் பேசிகொள்ள ஆரம்பித்தார்கள். திருமலைக்கும் பூங்குழலிக்கும் இது கவலையை அளித்தது. அவர்கள் மந்தாகினிக்கு முன்னால் போய் நின்று தடுத்து நிறுத்த முயன்றார்கள். இதற்குள் ஆழ்வார்க்கடியானைப் பார்த்தவர்கள் சிலர் "இவன், யாரடா வைஷ்ணவன்? பெண் பிள்ளையைத் தொந்தரவு படுத்துகிறான்?" என்றார்கள். இந்த வார்த்தைகள் காதில் விழுந்து வேளக்காரப் படையில் முன்னால் போனவர்கள் திரும்பி வந்தார்கள். ஊமை ராணியைச் சூழ்ந்து கொண்டு மற்றவர்களை அப்புறப்படுத்தினார்கள். அந்த நெருக்கடியில் திருமலையும் பூங்குழலியும் கூட அப்பால் தள்ளப்பட்டு விலகிப் போக நேர்ந்தது.

வேளக்காரப் படையில் ஒருவன் மந்தாகினி தேவியிடம் "அம்மா! நீ யார்? உன்னை யார் தொந்தரவு செய்தார்கள், சொல்! அவனை இங்கேயே தூக்கிலே போட்டு விடுகிறோம்!" என்று கேட்டான். ஊமை ராணி மறுமொழி சொல்லாமல் நின்றாள்.

இதற்குள் ஒருவன் "இவளைப் பார்த்தால் பழுவூர் ராணி ஜாடையாக இல்லையா?" என்றான்.

இன்னொருவன், "அப்படித்தான் இருக்கவேண்டும். அதனாலேதான் இவ்வளவு கர்வமாயிருக்கிறாள்!" என்றான்.

"பழுவூர்க் கூட்டமே கர்வம் பிடித்த கூட்டம்!" என்றான் மற்றொருவன்.

இந்த நிகழ்ச்சிகள் சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்குச் சமீபத்தில் நிகழ்ந்தன. ஆகையால் என்ன சச்சரவு என்று தெரிந்து கொள்வதற்காகப் பழுவூர் வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள்.

"பழுவூர்க் கூட்டமே கர்வம் பிடித்த கூட்டம்" என்று வேளக்கார வீரன் ஒருவன் கூறியது அவர்கள் காதில் விழுந்தது.

"யாரடா பழுவூர்க் கூட்டத்தைப் பற்றி நிந்தனை செய்கிறவன்? இங்கே முன்னால் வரட்டும்" என்றான் பழுவூர் வீரன் ஒருவன்.

"நான்தானடா சொன்னேன்! என்னடா செய்வாய்!" என்று வேளக்கார வீரன் முன் வந்தான்.

"நீங்கள்தானடா கர்வம் பிடித்தவர்கள் உங்கள் கர்வம் பங்கமடையும் காலம் நெருங்கிவிட்டது!" என்றான் பழுவூர் வீரன்.

"ஆகா! எங்கள் இளவரசரைக் கடலில் மூழ்கடித்து விட்டதனால் இப்படிப் பேசுகிறாயா? உங்களைப் போன்ற பாதகர்கள் இருப்பதாலேதான் புயல் அடித்து ஊரெல்லாம் பாழாகி விட்டது!" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

பழுவூர் வீரன் " என்னடா சொன்னாய்?" என்று அவனைத் தாக்கப் போனான்.

வேளக்கார வீரன் அவனைத் தடுத்தான். பின்னர் கூட்டத்தில் கைகலப்பும் குழப்பமும் கூச்சலும் எழுந்தன.

"பழுவூர் வள்ளல்கள் வாழ்க!" என்று சிலரும், மூன்று உலகம் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க!" என்று சிலரும் கோஷமிட்டார்கள்.

"கொடும்பாளூர் வேளார் வாழ்க!"

"திருக்கோவலூர் மலையமான் வாழ்க!" என்ற குரல்களும் எழுந்தன.

அச்சமயத்தில் சின்னப் பழுவேட்டரையரே குதிரை மீது ஆரோகணித்து அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் சண்டை நின்றது. ஜனங்களும் கலைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். வேளக்காரப் படையினர் முன்னால் சென்றார்கள். பழுவூர் வீரர்கள் காலாந்தககண்டரைச் சூழ்ந்து கொண்டு நடந்ததைத் தெரிவித்தார்கள். பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் வீதி ஓரத்தில் ஒதுங்கினார்கள். சுற்று முற்றும் கூர்ந்து கவனித்தார்கள் மந்தாகினியைக் காணவில்லை.

"ஐயோ! இது என்ன? இப்படி நேர்ந்துவிட்டதே! தலைநகரில் அரசாட்சி அழகாக நடக்கிறது! அத்தையை எப்படிக் கண்டுபிடிப்பது? ஏதாவது கெடுதல் நேர்ந்திருக்குமோ? யாரேனும் பிடித்துக் கொண்டு போயிருப்பார்களோ?" என்று பூங்குழலி கவலைப்பட்டாள்.

காலாந்தககண்டரும் பழுவூர் வீரர்களும் போன பிறகு நாலாபுறமும் தேடிப் பார்த்தார்கள்; மந்தாகினியைக் காணவில்லை.

திருமலை, "நான் இன்னும் சிறிது நேரம் தேடிப் பார்க்கிறேன். நீ சீக்கிரம் சென்று முதன்மந்திரியிடமும் இளையபிராட்டியிடமும் சொல்லு; நாம் இரண்டு பேர் மட்டும் தேடினால் போதாது. முதன்மந்திரியும் இளையபிராட்டியும் ஏதேனும் ஏற்பாடு செய்வார்கள்" என்றான்.

பூங்குழலி போவதற்குத் தயங்கினாள். மறுபடியும் ஆழ்வார்க்கடியான், "நான் சொல்வதைக் கேள் உன் அத்தைக்கு ஒன்றும் நேர்ந்திருக்க முடியாது. ஜனக் கூட்டத்தில் யாரோ தெரிந்த மனிதன் ஒருவனை உன் அத்தை பார்த்திருக்கிறாள். அவள் ஒரு திக்கையே கவனமாக நோக்கியதிலிருந்து ஊகிக்கிறேன். அதனாலேதான் கூட்டத்தோடு சேர்ந்து வந்தாள். இப்போதும் அவனைத் தொடர்ந்துதான் போயிருக்கிறாள் என்று தோன்றுகிறது. எப்படியும் கண்டு பிடித்துவிடலாம்; நீ போய் முதன்மந்திரியிடம் சொல்லு!" என்றான். பூங்குழலி முதன்மந்திரியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள்..."

இதையெல்லாம் கேட்ட குந்தவை பெரிதும் கவலை அடைந்தாள். அநிருத்தர் அவ்வளவு கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

"பார்த்தீர்களா, இளவரசி! கலகப் பிசாசு எப்போது சந்தர்ப்பம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டீர்களா? அருள்மொழிவர்மர் உயிரோடிருக்கிறார் என்று தெரியவேண்டியதுதான். ராஜ்யமெங்கும் தீ மூண்டுவிடும்!" என்றார்.

"தாங்கள் முதன்மந்திரியாயிருக்கும் வரையில் அப்படி ஒன்றும் நேராது. இப்போது, என் பெரியன்னையைப் பற்றிச் சொல்லுங்கள். நான் பயந்தது போலவே ஆகிவிடும் போலிருக்கிறதே! அவரை எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று கேட்டாள்.

"அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம்; கோட்டைக்குள் வந்து விட்டபடியால் இனி நான் அறியாமல் வெளியில் போக முடியாது. அதற்குத் தக்க ஏற்பாடு செய்துவிடுகிறேன். தேடவும் ஏற்பாடு செய்கிறேன். இனி, சக்கரவர்த்தியைப் பார்க்காமல் மந்தாகினி தேவி இவ்விடம் விட்டுப் போகவும் மாட்டாள்!" என்றார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 27

பொக்கிஷ நிலவறையில்

பூங்குழலி மந்தாகினி தேவியை விட்டுப் பிரிந்த இடத்தில் நாம் இப்போது அந்த மாதரசியைத் தொடர்வது அவசியமாகிறது. அவள் கூட்டத்திலும் குழப்பத்திலும் மறைந்துவிட்ட காரணம் பற்றி ஆழ்வார்க்கடியான் கூறியது உண்மையேயாகும். வேளக்காரப் படையுடன் தொடர்ந்து கோட்டைக்குள் பிரவேசித்த கூட்டத்தில் மந்தாகினி, ரவிதாஸன் என்னும் சதிகாரனைப் பார்த்து விட்டாள். ஏதேனும் ஒரு புலன் குறைவாயுள்ளவர்களுக்கு மற்றப் புலன் நன்கு இயங்குவது இயல்பல்லவா? மந்தாகினிக்கோ காது கேளாது; வாய் பேசாது. அவ்வளவுக்கு அவளுடைய கண் பார்வை கூர்மையாயிருந்தது. ஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும் மந்தாகினி தேவியையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் கண்ணிற்குப் படாத ரவிதாஸன் மந்தாகினியின் பார்வைக்கு இலக்கானான்.

வரப் போகும் நன்மை தீமைகளை முன்னாலேயே அறிந்து கொள்ளக் கூடிய இயற்கையான உணர்ச்சி அறிவும் மந்தாகினிக்கு இருந்தது. ஆதலின் ரவிதாஸன் ஏதோ தீய காரியத்துக்காகவே இங்கே வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஏற்கெனவே ஈழ நாட்டில் அருள்மொழிவர்மனை ரவிதாஸன் கொல்ல முயன்றதையும் அவள் அறிந்திருந்தாள் அல்லவா! ஆதலின் கூட்டத்தோடு கூட்டமாகத் தஞ்சையின் வீதிகளில் சென்ற போது அவள் பார்வை ரவிதாஸனை விட்டு அகலவில்லை.

குழப்பத்தின் உச்சமான நிலையில் சின்னப் பழுவேட்டரையர் குதிரை மேலேறி வந்த சமயத்தில் ஜனக்கூட்டம் சடசடவென்று கலைந்ததல்லவா? அச்சமயம் ரவிதாஸனும் இன்னொரு மனிதனும் ஒரு சந்து வழியில் அவசரமாகப் புகுந்து செல்வதை மந்தாகினி பார்த்தாள். உடனே அந்தத் திசையைக் குறிவைத்து அவளும் வேகமாகச் சென்று, அதே சந்து வழியில் பிரவேசித்தாள்.

இது நிகழ்ந்த ஒரு நிமிட நேரத்தில், ஜனக்கூட்டத்தினால் மோதித் தள்ளப்பட்ட திருமலையும், பூங்குழலியும் மந்தாகினியைக் கவனிக்க முடியவில்லை. பிறகு பார்த்தால் அவளைக் காணவில்லை. மந்தாகினி சந்து வழியில் புகுந்து பிறகு இரண்டொரு தடவை திரும்பிப் பார்த்தாள். பூங்குழலியும் திருமலையும் வருகிறார்களோ என்று அவர்களைக் காணவில்லை. ஆனாலும் ரவிதாஸனைத் தொடர்வதே, முக்கியமான காரியம் என்று எண்ணிச் சென்றாள். இந்த வரலாற்றின் ஆரம்பத்தில் வந்தியத்தேவன் காலாந்தககண்டரின் ஆட்களிடமிருந்து தப்பிச் சென்ற வழியிலேயே ரவிதாஸனும் அவனுடைய தோழனும் சென்றார்கள். ரவிதாஸனுடைய தோழனையும் முன்னம் நாம் சந்தித்திருக்கிறோம். திருப்புறம்பயம் பள்ளிப்படையிலே நள்ளிரவு சதிக் கூட்டத்திலே நாம் பார்த்த சோமன் சாம்பவன் என்பவன் தான் அவன்.

அவ்விருவரும் அதி வேகமாகச் சந்து பொந்துகளில் புகுந்து சென்றார்கள். ஆங்காங்கு விழுந்து கிடந்த மரங்களைப் பொருட்படுத்தாமல் தாண்டிக் குதித்துச் சென்றார்கள். மழைத் தண்ணீர் தேங்கியதால் ஏற்பட்டிருந்த சேற்றுக் குட்டைகளையும் கவனியாமல் சென்றார்கள். இன்னமும் இலேசாகக் காற்று அடித்துக் கொண்டிருந்தபடியால் மரக்கிளைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. கிளைகளிலிருந்து அவ்வப்போது தண்ணீர்த் துளிகள் சலசலவென்று விழுந்தன. தங்களை யாரும் பின் தொடர்வார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு லவலேசமும் இல்லை. ஆகையால் அவர்கள் திரும்பிப் பாராமலே விரைந்து சென்றார்கள். திரும்பிப் பார்த்திருந்தாலும் மந்தாகினி தேவியை அவர்கள் பார்த்திருக்க முடியாது.

கடைசியில், அவர்களுடைய துரிதப் பிரயாணம் பெரிய பழுவேட்டரையருடைய அரண்மனைத் தோட்டத்தின் பின் மதிள் ஓரத்தில் வந்து நின்றது. புயலினால் வேருடன் பறிக்கப்பட்ட மரம் ஒன்று அந்த மதிள் மேலே விழுந்து முறிந்து கிடந்தது. ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் அந்த மரத்தின் மீது எளிதில் ஏறி மதிளைக் கடந்து அப்பால் தோட்டத்தில் குதித்தார்கள். அவர்கள் குதிப்பதைப் பார்த்த மந்தாகினி தேவியும் சிறிது நேரத்துக்கெல்லாம் அதே மரத்தின் மீது ஏறி அப்பாலிருந்த தோட்டத்தில் இறங்கினாள்.

ரவிதாஸன், சோமன் சாம்பவனைச் சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டுப் பெரிய பழுவேட்டரையரின் அரண்மனையை அணுகினான். பெரிய பழுவேட்டரையரும் பழுவூர் இளைய ராணியும் இல்லாதபடியால் அரண்மனை சூன்யமாகக் காணப்பட்டது. எனினும் பெண்களின் பேச்சுக் குரல் மட்டும் கேட்டது. ஒருமுறை இரண்டு தாதிப் பெண்கள் அந்த மாளிகையின் பின் முகப்புக்கு வந்தார்கள். தோட்டத்து மரங்கள் பல முறிந்து விழுந்து கிடந்ததைப் பார்த்தார்கள்.

"ஆகா! அனுமார் அழித்த அசோக வனம் மாதிரியல்லவா இருக்கிறது?" என்றாள் ஒருத்தி.

"நம்முடைய சீதா தேவி இங்கே இச்சமயம் இருந்திருந்தால், ரொம்ப மனவேதனைப் பட்டிருப்பாள்!" என்றாள் இன்னொருத்தி.

சற்று நேரம் இவ்விதம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் திரும்ப உள்ளே செல்லும் சமயத்தில் ரவிதாஸன் வாயைக் குவித்துக் கொண்டு ஆந்தைக் குரல் போன்ற ஒலி உண்டாக்கினான். தாதிப் பெண்கள் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். ரவிதாஸன் நன்றாக மறைந்து கொண்டிருந்தான். தாதிகளில் ஒருத்தி "பாரடி! பட்டப் பகலில் கோட்டான் கத்துகிறது! நேற்று அடித்த புயலில் ஆந்தைக்கும் புத்தி சிதறிவிட்டது!" என்றாள். இன்னொருத்தி ஒன்றும் சொல்லவில்லை.

சற்று நேரத்துக்கெல்லாம் மறுமொழி சொல்லாமல் சென்றவள் திரும்பி வந்தாள். பழுவூர் அரண்மனைக்கும் பொக்கிஷ நிலவறைக்கும் நடுவில் இருந்த வஸந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தாள். இந்த மண்டபத்திலேதான் வந்தியத்தேவன் பழுவூர் ராணியைச் சந்தித்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தோழிப் பெண் தோட்டத்தை உற்றுப் பார்த்தாள். மறுபடியும் ஆந்தையின் குரல் கேட்டது. குரல் வந்த இடத்தை நோக்கி அந்தப் பெண் நடந்து வந்தாள். மரத்தின் மறைவிலிருந்து ரவிதாஸனும் முன்னால் வந்தான். காந்த சக்தி கொண்ட கண்களால் அவளை விழித்துப் பார்த்தாள்.

"மந்திரவாதி, வந்துவிட்டாயா? இளைய ராணி கூட இங்கே இல்லையே? எதற்காக வந்தாய்?" என்று கேட்டாள்.

"பெண்ணே, இளையராணி அனுப்பித்தான் வந்திருக்கிறேன்!" என்றான் ரவிதாஸன்.

"போன இடத்திலும் ராணியை நீ விடவில்லையா? இங்கே எதற்காக வந்தாய்? யாருக்காவது தெரிந்தால்..."

"தெரிந்தால் என்ன முழுகிவிடும்?"

"அப்படிச் சொல்லாதே! சின்னப் பழுவேட்டரையர் எங்கள் பேரில் சந்தேகம் கொண்டிருக்கிறார். என்னை அழைத்து ஒருநாள் கடுமையாக எச்சரித்தார். மறுபடியும் மந்திரவாதி வந்தால் தம்மிடம் வந்து சொல்லவேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறார்..."

"அவன் கெட்டான், போ! அவர்களுடைய காலமெல்லாம் நெருங்கிவிட்டது! நீ ஒன்றும் கவலைப்படாதே! நிலவறையின் சாவி வேண்டும் சீக்கிரம் கொண்டு வந்து கொடு!" என்றான் ரவிதாஸன்.

"ஐயையோ! நான் மாட்டேன்!"

"இதோ பார், உன் எஜமானியின் மோதிரம்!" என்று ரவிதாஸன் இளைய ராணியின் முத்திரை மோதிரத்தைக் காட்டினான்.

"இதை நீ எங்கே திருடினாயோ, என்னமோ யார் கண்டது?"

"அடி பாவி! என்னையா திருடன் என்கிறாய்? இளைய ராணியே என்னைக் கண்டு நடுங்குவதைப் பார்த்து விட்டுமா இப்படிச் சொல்கிறாய்? பார்! இன்றிரவே ஒன்பது பிசாசுகள் வந்து உன்னை உயிரோடு மயானத்துக்குத் தூக்கிச் சென்று..."

"வேண்டாம், வேண்டாம்! உன் பிசாசுகள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும். எனக்கென்ன வந்தது? இளைய ராணியின் மோதிரத்தைக் காட்டினால் நீ கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். ஆனால் அவசரப்படாதே! தோட்டம் அழிந்து கிடப்பதைப் பார்க்க அடிக்கடி பெண்கள் இங்கே வருகிறார்கள். எல்லாரும் சாப்பிடும் சமயத்தில் நான் உன்னிடம் சாவியைக் கொண்டு வந்து கொடுக்கிறேன் அதுவரை பொறுத்திரு...!"

"ஆகட்டும்; எனக்கும் கொஞ்சம் சாப்பாடு கொண்டு வா! சாப்பிட்டு இரண்டு நாள் ஆகிறது நிறையக் கொண்டு வா!" என்றான் ரவிதாஸன்.

தாதிப் பெண் போன பிறகு, ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் விழுந்து கிடந்த மரம் ஒன்றில் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அறியாத வண்ணம் மந்தாகினியும் சற்று தூரத்தில் மறைவான இடத்தில் உட்கார்ந்து கொண்டாள். ரவிதாஸனும் தாதிப் பெண்ணும் பேசியது ஒன்றும் அவளுக்குப் புரியாவிட்டாலும் ஏதோ நடக்கப் போகிறதென்று ஊகித்துக் கொண்டாள்.

வெகு நேரம் கழித்து அத்தாதிப் பெண் திரும்பி வந்தாள். ரவிதாஸன் எழுந்து முன்னால் போனான். அவள் கொண்டு வந்திருந்த சோற்று மூட்டையையும், சாவிக் கொத்தையும் வாங்கிக் கொண்டான். பிறகு, வஸந்த மண்டபத்தை அடைந்து அங்கிருந்த பொக்கிஷ நிலவறைக்குச் சென்ற நடை பாதையில் இருவரும் சென்றார்கள். ஒரு சாவி, இரண்டு சாவி, மூன்றாவது சாவியையும் போட்டுத் திருப்பிய பிறகு, பூட்டுத் திறந்தது. நிலவறையின் உள்ளே ஒரே கும்மிருட்டாக இருந்தது.

ரவிதாஸன் தாதிப் பெண்ணைப் பார்த்து, "அடடா! ஒன்று மறந்து விட்டேனே! இந்த இருட்டறையில் விளக்கு இல்லாமல் எப்படி போவது? ஒரு விளக்காவது தீவர்த்தியாவது கொண்டு வா!" என்றான்.

"பட்டப்பகலில் தீவர்த்தியும், விளக்கும் எப்படிக் கொண்டு வருவேன்? யாராவது பார்த்துச் சந்தேகப்பட்டால்?"

"அது எனக்குத் தெரியாது! உனக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை என்றா சொல்கிறாய்? நான் நம்பமாட்டேன். தீவர்த்தியாவது தீபமாவது கொண்டு வா! இல்லாவிடில் இராத்திரி பன்னிரண்டு கொள்ளிவாய்ப் பிசாசுகளை அனுப்பி..."

"ஐயையோ, சும்மா இரு! எப்படியாவது கொண்டு வந்து தொலைக்கிறேன்" என்று கூறினாள் அந்தத் தாதிப் பெண்.

"அதற்குள் நானும் சாப்பிட்டு முடிக்கிறேன்" என்றான் ரவிதாஸன்.

தோழிப் பெண் அரண்மனையை நோக்கிச் சென்ற பிறகு ரவிதாஸனும் சோற்று மூட்டையுடன் தோட்டத்துக்குள் பிரவேசித்தான் சோமன் சாம்பவனிடம் வந்தான். அவனிடம் சோற்று மூட்டையைக் கொடுத்து, "ஒருவேளை இரண்டு மூன்று நாள் நிலவறையிலேயே நீ இருக்கும்படி நேரலாம். சரியான சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் அல்லவா? ஆகையால் இந்தச் சோற்று மூட்டையை வைத்துக் கொள். வேலை எடுத்துக் கொண்டு என்னோடு சத்தமிடாமல் வா! அந்தப் பெண் தீவர்த்தி கொண்டு வரப் போயிருக்கிறாள். அதற்குள் நீ நிலவறைக்குள் புகுந்து விட வேண்டும்" என்று சொன்னான். இருவரும் துரிதமாகச் சென்றார்கள்; மந்தாகினியும் அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 28

பாதாளப் பாதை

நாற்புறமும் நன்றாகப் பார்த்துவிட்டு ரவிதாஸன் திறந்திருந்த நிலவறைக் கதவைச் சுட்டிக் காட்டிச் சோமன் சாம்பவனை அதன் உள்ளே போகச் சொன்னான்.

"முதலில் இருட்டில் கண் தெரியாது அதற்காகக் கதவின் அருகிலேயே நின்றுவிடாதே! உள்ளே கொஞ்சம் தூரமாகவே போய் நின்றுகொள்!" என்றான்.

சோமன் சாம்பவன் நிலவறைக்குள் புகுந்ததும் அவனை இருள் விழுங்கிவிட்டது போலிருந்தது. பிறகு, ரவிதாஸன் நடைபாதை வழியாகத் திரும்பி நந்தினிதேவியின் வஸந்த மண்டபம் வரையில் சென்றான். அங்கிருந்து பழுவேட்டரையரின் அரண்மனையைப் பார்த்துக் கொண்டிருந்தான். தாதிப் பெண்ணைத் தவிர வேறு யாராவது வந்து விட்டால் அவனும் நிலவறைக்குள் அவசரமாகச் சென்று கதவைச் சாத்திக் கொள்வது அவசியமாயிருக்கலாம் அல்லவா?

ரவிதாஸன் அவ்விதம் வஸந்த மண்டபத்தில் நின்று கொண்டு அரண்மனை வாசலையே பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மந்தாகினி சிறிதும் சத்தமின்றி நடந்து வந்து திறந்திருந்த நிலவறைக்குள் பிரவேசித்தாள். அடர்ந்த காடுகளில் நள்ளிரவில் எத்தனையோ நாள் இருந்து பழக்கப்பட்டவளுக்கு அந்த நிலவறையின் இருட்டு ஒரு பிரமாதமா என்ன? சில வினாடி நேரத்தில் கண் தெரிய ஆரம்பித்தது. ரவிதாஸனுடன் வந்தவன் சற்றுத் தூரத்தில் ஒரு தூணுடன் முட்டிகொண்டு தவித்ததைப் பார்த்தாள். இவள் அதற்கு நேர்மாறான திசையில் சென்றாள். அங்கே ஒரு படிக்கட்டு காணப்பட்டது. நிலவறைப் பாதை அங்கே கீழே இறங்கிச் சென்றது. படிகளின் வழியாக இறங்கிக் கீழே நின்று கொண்டாள்.

சோமன் சாம்பவனுக்கு ஏதோ சிறிது சத்தம் கேட்டிருக்க வேண்டும். "யார் அது? யார் அது?" என்று குரல் கொடுத்தான். அது திறந்திருந்த வாசல் வழியாகப் போய் ரவிதாஸனுடைய காதில் இலேசாக விழுந்தது. அதே சமயத்தில் அரண்மனை வாசல் வழியாகத் தாதிப் பெண் கையில் தீவர்த்தியுடன் வந்து கொண்டிருந்ததை ரவிதாஸன் பார்த்தான். தான் முன்னால் சென்று சோமன் சாம்பவனுக்கு எச்சரிக்கை செய்வதற்காக விரைந்து நடந்தான். நிலவறை வாசற்படிக்குள் புகுந்ததும், "சாம்பவா! எங்கே இருக்கிறாய்?" என்னைக் கூப்பிட்டாயா?" என்றான்.

"ஆமாம்; கூப்பிட்டேன்!"

"அதற்குள்ளே அவசரமா? உன் குரல் வெளியிலே யாருக்காவது கேட்டால் என்ன செய்கிறது? உன்னை இங்கே இப்படியே விட்டு விட்டுப் போய்விடுவேன் என்று நினைத்தாயா?"

"இல்லை; இல்லை! ஒரு விஷயம் கேட்பதற்காகக் கூப்பிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே சோமன் சாம்பவன் ரவிதாஸனை அணுகி வந்தான்.

இச்சமயத்தில் நிலவறையில் வாசலில் பிரகாசமான வெளிச்சம் தெரிந்தது. "ஓகோ! அந்தப் பெண் தீவர்த்தியுடன் வந்து விட்டாள்; உன்னைப் பார்த்துவிடப் போகிறாள். போ! போ! தூரமாகச் சென்று தூண் மறைவில் நில்! சீக்கிரம்!" என்றான் ரவிதாஸன்.

சோமன் சாம்பவன் அவசரமாகப் பின்வாங்கிச் சென்றான். அடுத்த வினாடி நிலவறையின் வாசலில் தாதிப் பெண் கையில் தீவர்த்தியுடன் வந்து நின்றாள்.

"மந்திரவாதி! மந்திரவாதி! எங்கே போனாய்?" என்றாள்.

"எங்கேயும், போகவில்லை உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறிக் கொண்டே ரவிதாஸன் அவளை அணுகித் தீவர்த்தியைக் கையில் வாங்கிக் கொண்டான்.

"பெண்ணே! வெளியில் கதவைப் பூட்டிகொள். இன்னும் ஒரு நாழிகைக்கெல்லாம் சாவியுடன் திரும்பி வா! கதவைத் தட்டிப் பார்! நான் குரல் கொடுத்தால் திறந்து விடு! ஒருவரும் இல்லாத சமயமாகப் பார்த்துத் திற!" என்றான் ரவிதாஸன்.

"ஆகட்டும், மந்திரவாதி! ஆனாலும் உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். சின்னப் பழுவேட்டரையருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நீ அகப்பட்டுக் கொண்டால் என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே!" என்று கேட்டுக் கொண்டாள் தாதிப் பெண்.

"பெண்ணே! வீணாகக் கலவரப்படாதே! நான்தான் சொன்னேனே! காலாந்தககண்டனுக்கே இறுதிக் காலம் நெருங்கிவிட்டது!"

"என்னை ஏன் மறுபடி வந்து கதவைத் திறக்கச் சொல்லுகிறாய்? நிலவறையிலிருந்து வெளியில் போவதற்குத்தான் வேறு வழி இருக்கிறதே!"

"அந்த வழி இன்றைக்கு உபயோகப்படாது; வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீ போ! சரியாக ஒரு நாழிகைக்கெல்லாம் திரும்பிவிடு!"

தாதிப் பெண் வெளியில் சென்று கதவைச் சாத்தினாள். அவள் வெளியில் கதவைப் பூட்டிய அதே சமயத்தில் ரவிதாஸன் உட்புறத்தில் தாளிட்டான். பின்னர், கையில் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சோமன் சாம்பவன் இருக்குமிடம் நோக்கி விரைந்து வந்தான்.

"சாம்பவா! என்னை என்னமோ கேட்க வேண்டுமென்று சொன்னாயே? இப்போது கேள்" என்றான்.

"நீ இதற்கு முன் ஒரு தடவை இங்கு வந்தாயா?" என்று சோமன் சாம்பவன் கேட்டான்.

"ஒரு தடவை என்ன? பல தடவை வந்திருக்கிறேன். நாம் சேர்த்து வைத்திருக்கும் பொருளெல்லாம் வேறு எங்கிருந்து வந்ததென்று நினைத்தாய்?" என்றான் ரவிதாஸன்.

"நான் அதைக் கேட்கவில்லை நீ சற்று முன் என்னை இங்கு விட்டு விட்டு வெளியில் போனாயல்லவா? மறுபடியும்..."

"இப்போதுதான் வந்திருக்கிறேனே?"

"நடுவில் ஒரு தடவை வந்தாயா?"

"நடுவிலும் வரவில்லை; ஓரத்திலும் வரவில்லை, எதற்காகக் கேட்கிறாய்?"

"நீ போன சிறிது நேரத்துக்கெல்லாம் வாசற்படியின் வெளிச்சம் சட்டென்று மறைந்தது நான் தூணில் முட்டிக் கொண்டேன்."

"ஒருவேளை கதவு தானாகச் சாத்தித் திறந்துக் கொண்டிருக்கும்."

"ஏதோ ஒரு உருவம் உள்ளே வந்தது போலத் தெரிந்தது; காலடி சத்தமும் நன்றாகக் கேட்டது."

"உன்னுடைய சித்தப்பிரமையாயிருக்கும் இந்த நிலவறையே அப்படித்தான் இருட்டிலே நிழல் போலத் தெரியும். திடீரென்று வெளிச்சம் தோன்றி மறையும். விசித்திரமான ஓசைகள் எல்லாம் கேட்கும். இங்கு நுழைந்தவர்கள் சிலர் பயப்பிராந்தியினாலேயே செத்துப் போயிருக்கிறார்கள். அவர்களுடைய எலும்புக்கூடுகள் அங்கங்கே கிடக்கின்றன. பழுவேட்டரையன் வேண்டுமென்றே அந்த எலும்புக்கூடுகளை எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறான். ஒருவரும் அறியாமல் இந்த நிலவறைக்குள் நுழைகிறவர்கள் எலும்புக்கூடுகளைப் பார்த்துப் பயந்து சாகட்டும் என்று.."

"அப்படி யாருக்கும் தெரியாமல் இந்த நிலவறையில் பிரவேசிக்க முடியுமா, என்ன?"

"சாதாரணமாக யாரும் நுழைய முடியாது. என்னைத் தவிர அப்படி யாரும் நுழைந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. நானும் இளையராணி அல்லது அவளுடைய தோழியின் உதவியினால்தான் இங்கு வந்திருக்கிறேன்.."

"பின்னே மனிதர்களின் எலும்புக்கூடுகளைப் பற்றிச் சொன்னாயே?"

"அதுவா? பழுவேட்டரையன் யாரையாவது பயங்கரமாகத் தண்டிக்க விரும்பினால், நிலவறைக் கதவை இலேசாகத் திறந்து வைத்து விடுவான். பொக்கிஷ நிலவறையைப் பற்றிக் கேட்டிருப்பவர்கள் பொருளாசையினால் இதில் நுழைவார்கள். அப்புறம் இதைவிட்டு வெளியில் போவதில்லை."

"நீ ஒருவனைத் தவிர இங்கு வந்தவன் யாரும் வெளியில் போனதில்லையென்றா சொல்லுகிறாய்?"

"முன்னேயெல்லாம் அப்படித்தான் இப்போது இரண்டு பேரைப் பற்றி எனக்குச் சந்தேகமாயிருக்கிறது..."

"யாரைச் சொல்லுகிறாய் என்று எனக்குத் தெரியும் வல்லவரையனையும், கந்தமாறனையும் சொல்லுகிறாய்."

"ஆமாம்."

"அவர்களை நாம் இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறோமே!"

"எத்தனை தடவை உனக்குச் சொல்வது? வல்லவரையனை ஒரு முக்கியமான காரியத்துக்காகத்தான் இளைய ராணி விட்டு வைத்திருக்கிறாள். சுந்தர சோழனுடைய குலம் நசிக்கும் போது வந்தியத்தேவனும் சாவான். அதற்குக் காலம் நெருங்கிவிட்டது. வா! வா! இந்த நிலவறையிலுள்ள சுரங்கப் பாதைகளை எல்லாம் உனக்குக் காட்டுகிறேன்... ஒரு காரியத்தில் மட்டும் ஜாக்கிரதையாயிரு! இங்கே நவரத்தினக் குவியல் வைத்திருக்கும் மண்டபம் ஒன்றிருக்கிறது. அதில் நூறு வருஷங்களாகச் சோழர்கள் சேர்த்து வைத்த நவரத்தினங்களைக் குப்பல் குப்பலாகப் போட்டு வைத்திருக்கிறார்கள். அந்த நவரத்தினங்களின் மோகத்தில் மனத்தைப் பறிகொடுத்து விட்டால், நீ வந்த காரியத்தையே மறந்து போனாலும் போய்விடுவாய்!"

"ரவிதாஸா! யாரைப் பார்த்து இந்த வார்த்தை சொல்கிறாய்? உன்னைப் போல் நானும் வீரபாண்டியனுடைய தலையற்ற உடலின் மீது சத்தியம் செய்து கொடுத்தவன் அல்லவா?"

"யார் இல்லை என்றார்கள்? அந்த நவரத்தினக் குவியல்களைப் பார்த்தபோது என் மனது கூடச் சிறிது சலித்துப் போய் விட்டது; அதனாலேதான் எச்சரிக்கை செய்தேன். இருக்கட்டும்; வா, போகலாம், முதலில் சோழன் அரண்மனைக்குப் போகும் வழியை உனக்குக் காட்டுகிறேன். அதைக் காட்டிவிட்டு நான் போன பிறகு நீயே சாவகாசமாக இந்த நிலவறை முழுவதையும் சுற்றிப் பார்த்துக் கொள் பின்னொரு காலத்தில் உபயோகமாகயிருக்கலாம்."

ரவிதாஸன் தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டு மேலே நடந்தான் சோமன் சாம்பவன் பக்கத்திலேயே சென்றான்.

முன்னொரு சமயம் பெரிய பழுவேட்டரையரும் இளையராணி நந்தினியும் சென்ற அதே பாதையில் அவர்கள் சென்றார்கள். தீவர்த்தியின் புகை சூழ்ந்த வெளிச்சத்தில் நிலவறையின் தூண்களும் அவற்றின் நிழல்களும் கரிய பெரிய பூதங்களைப் போல் தோன்றின. இருளில் வாழும் வௌவால்கள் பயங்கரமான குட்டிப் பேய்களின் தோற்றம் கொண்டிருந்தன. ஆங்காங்கு பிரம்மாண்டமான சிலந்திக் கூடுகளும் அவற்றின் மத்தியில் ராட்சஸ சிலந்திப் பூச்சிகளும் காணப்பட்டன. தரையிலோ விசித்திர வடிவங்கள் கொண்ட ஜீவராசிகள் சில அதிவேகமாகவும் சில மிகவும் மெதுவாகவும் ஊர்ந்து சென்றன. ரவிதாஸன் கூறியது போலவே இனந்தெரியாத பலவிதச் சத்தங்கள் கேட்டன. வெளியே இன்னமும் அடித்துக் கொண்டிருந்த புயலின் சத்தமும் எப்படியோ எங்கிருந்தோ அந்தச் சுரங்க நிலவறைக்குள் வந்து எதிரொலி செய்தது.

சோமன் சாம்பவன் திடீரென்று திடுக்கிட்டு நின்று, "ரவிதாஸா! ஏதோ காலடிச் சத்தம் போல் கேட்கவில்லை?" என்று கேட்டான்.

"கேட்காமல் என்ன? நம்முடைய காலடிச் சத்தம் கேட்கத் தான் கேட்கிறது. வீணாக மிரண்டு விடாதே! இப்போது நானும் இருக்கும் போதே இப்படிப் பயப்பட்டாயானால், இங்கே இரண்டு மூன்று தினங்கள் எப்படியிருப்பாய்?" என்றான் ரவிதாஸன்.

"நான் ஒன்றும் பயப்படவில்லை; நீ போன பிறகு வீண்பிராந்திக்கு உள்ளாவதைக் காட்டிலும் நீ இருக்கும்போதே கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நிலவறைக்குள் புகுந்தவர்கள் சிலர் இங்கேயே செத்துப் போனார்கள் என்று சொன்னாயல்லவா?" என்றான் சோமன் சாம்பவன்.

"ஆமாம்; அவர்களுடைய ஆவிகள் இங்கேயே உலாவிக் கொண்டு தானிருக்கும். அதனால் என்ன? பேய்கள்தான் நம்மைக் கண்டு பயந்து அலறுமே? அந்தச் சிறு பையன் வந்தியத்தேவன் இந்த நிலவறையில் பயப்படாமல் இருந்து எப்படியோ தப்பி வெளியேறியிருக்கிறான். எத்தனையோ பேய் பிசாசுகளைப் பார்த்த நானும் நீயும் ஏன் பயப்பட வேண்டும்?"

"பேயும் பிசாசும் இருக்கட்டும், அதற்கெல்லாம் யார் பயப்படுகிறார்கள். வேறு பிராணிகள், விஷ ஜந்துகள் இங்கே இருக்கலாம் அல்லவா?"

"பாம்புக்கும் தேளுக்கும் பயப்படப் போகிறாயா? நம்மைக் கண்டாலே அவைகள் வளைகளில் போய் ஒளிந்துக் கொள்ளும்..."

"இருந்தாலும் இரண்டு மூன்று நாட்கள் இங்கேயே இருக்கிறது என்றால் யோசனையாகத்தான் இருக்கிறது, ரவிதாஸா! அதற்கு முன்னாலேயே ஒருவேளை சந்தர்ப்பம் கிடைத்தால்...?"

"வேண்டாம், வேண்டாம்! அந்தத் தவறு மட்டும் செய்து விடாதே! இன்றைக்குச் செவ்வாய்க் கிழமை; புதன், வியாழன், இரண்டு நாளும் நீ காத்திருக்க வேண்டும். சுந்தர சோழன் தனிமையாக இருக்கும் நேரம் எது என்பதைப் பார்த்து வைத்துக் கொள். சுந்தர சோழனுடைய பட்டமகிஷி எப்போதும் அவன் அருகிலேயே இருப்பாள். வெள்ளிக்கிழமை இரவு நிச்சயமாகத் துர்க்கா பரமேசுவரியின் கோயிலுக்குப் போவாள். அன்று இரவுதான் நீயும் உன் காரியத்தை முடிக்க வேண்டும். சுந்தர சோழனுடைய குலம் நிர்மூலமாகும் நாள் வெள்ளிக்கிழமை தான். முன்பின்னாக ஏதாவது நடந்தால் காரியம் கெட்டுப் போகலாம்!" என்றான் ரவிதாஸன்.

இப்படிப் பேசிக் கொண்டே இருவரும் விரைவாக நடந்தார்கள். சோமன் சாம்பவன் மட்டும் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே போனான். ஆயினும் அவர்கள் அறியாமல் தூண்களின் மறைவிலே ஒளிந்தும் சிறிதும் சத்தமின்றிப் பாய்ந்தும் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஊமை ராணி அவர்கள் கண்ணில் படவில்லை. நிலவறைச் சுரங்கத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கெதிரே நெடுஞ்சுவர் நின்றது. அதில் எங்கும் வாசல் இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால், சுவரின் உச்சியில் சிறு பலகணி வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்தது.

ரவிதாஸன் தீவர்த்தியைச் சாம்பவன் கையில் கொடுத்து விட்டு அந்தச் செங்குத்தான சுவரில் ஆங்காங்கு நீட்டிக் கொண்டிருந்த முண்டு முரடுகளைப் பிடித்துக் கொண்டு ஏறினான். பலகணி வழியாகச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கீழே சரசர என்று இறங்கினான்.

"அந்தப் பலகணி வழியாக வெளியில் குதிக்க வேண்டுமா? அதுதான் வழியா?" என்று சாம்பவன் கேட்டான்.

"இல்லை; இல்லை அந்தப் பலகணி வழியாக எலிதான் நுழைந்து செல்லலாம். ஆனால் அது வழியாகப் பார்த்தால் சோழன் அரண்மனை தெரியும். அந்த அரண்மனையிலும் முக்கியமான இடம் தெரியும்" என்றான் ரவிதாஸன்.

"சுந்தர சோழன் படுத்திருக்கும் இடமா?" என்றான் சாம்பவன்.

"ஆமாம், அங்கே ஜன நடமாட்டம் எப்படியிருக்கிறது என்பதை இந்தப் பலகணியின் மூலமாகப் பார்த்து நீ தெரிந்து கொள்ளலாம். இப்போது என்னுடன் வா! நான் செய்கிறதை நன்றாகப் பார்த்துக் கொள்!"

இவ்விதம் கூறிவிட்டு ரவிதாஸன் கீழே குனிந்தான். உற்றுப் பார்த்து வட்ட வடிவமான ஒரு கல்லின் மீது காலை வைத்து அமுக்கிக் கொண்டு இரண்டு கையினாலும் ஒரு சதுர வடிவமான கல்லைப் பிடித்துத் தள்ளினான்; கீழே ஒரு வழி காணப்பட்டது.

"கடவுளே! நிலவறைக்குள்ளே ஒரு பாதாளப் பாதையா?" என்று வியந்தான் சோம்பன் சாம்பவன்.

"ஆமாம்; இந்தப் பாதை இருப்பது பெரிய பழுவேட்டரையரையும் இளைய ராணியையும் தவிர யாருக்கும் தெரியாது. மூன்றாவதாக எனக்குத் தெரியும்! இப்போது உனக்கும் தெரியும்! பாதையைத் திறப்பது எப்படி என்று தெரிந்து கொண்டாய் அல்லவா?"

இருவரும் அப்பாதையில் இறங்கிச் சென்றார்கள்; தீவர்த்தியின் வெளிச்சம் சிறிது நேரத்திற்கெல்லாம் மறைந்தது. ஊமை ராணி தான் மறைந்து நின்ற இடத்திலிருந்து ஒரே பாய்ச்சலாக அங்கு வந்தாள். திறந்திருந்த வழியை உற்றுப் பார்த்தாள். அதில் இறங்குவதற்கு ஓர் அடி வைத்தாள். பிறகு புனராலோசனை செய்தவளாய்ச் சட்டென்று காலை வெளியில் எடுத்தாள்.

சிறிது நேரம் யோசனை செய்து கொண்டிருந்துவிட்டு, முன்னம் ரவிதாஸன் சுவரின் மீது ஏறிய இடத்தை நோக்கினாள். அங்கே ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று அவன் ஏறியது போலவே தானும் சுவர் மீது ஏறினாள். பலகணியை அடைந்ததும் அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு அப்பால் பார்த்தாள். சுவரை ஒட்டினாற்போல் தோட்டமும் அதற்கப்பால் அழகிய மாடமாளிகையும் தென்பட்டன. அந்த மாளிகையைப் பார்த்ததும் அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. அதற்குள்ளே தனக்கு உயிரினும் இனியவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவள் உள்ளுணர்ச்சி கூறியது. இரகசிய வழியாகப் போகிறவர்கள் தனக்குப் பிரியமானவர்களுக்குத் தீங்கு செய்யும் நோக்கம் கொண்டவர்கள் என்பதையும் உணர்ந்தாள். அவர்களுடைய தீய நோக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைத் தனக்குக் கொடுத்து அருள வேண்டுமென்று அவள் அந்தராத்மாவில் குடிகொண்டிருந்த தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டாள்.

கீழே இறங்கிவிடலாமா என்று அவள் எண்ணிய சமயத்தில் சற்றுத் தூரத்தில் தெரிந்த மாளிகையின் மேன்மாடத்தில் ஓர் அதிசயக் காட்சி தெரிந்தது. சற்று முன் அந்த இருளடர்ந்த நிலவறையிலிருந்த ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் அதில் ஏறித் தூண்களின் மறைவில் ஒளிந்து நின்றார்கள். அரண்மனையின் உட்பக்கமாக உற்று உற்றுப் பார்த்தார்கள். அப்போது பகல் நேரமாதலால் அந்த மாளிகையின் மேன்மாடம் நன்றாகத் தெரிந்தது. ரவிதாஸன் கையில் தீவர்த்தி இல்லை. சாம்பவன் கையில் வேல் மட்டும் இருந்தது. ரவிதாஸன் அந்த வேலை வாங்கிக் கொண்டு மாளிகையின் உட்புறத்தை நோக்கி அதை எறிவதற்காகக் குறிபார்த்தான். ஊமை ராணியின் நெஞ்சு அச்சமயம் நின்றுவிட்டது போலிருந்தது. நல்ல வேளையாக ரவிதாஸன் வேலை எறியவில்லை. எறிவது போல் பாவனை செய்து விட்டுச் சோமன் சாம்பவனிடம் திரும்பக் கொடுத்து விட்டான். மறுகணம் அவர்கள் இருவரும் அங்கிருந்து மறைந்து விட்டார்கள்.

ஊமை ராணியும் பலகணியிலிருந்து சுவர் வழியாகக் கீழே இறங்கினாள். சுரங்கப்பாதை தென்பட்ட இடத்தையே பார்த்துக் கொண்டு மறைந்து நின்றாள். இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தப் பாதையில் மறுபடி தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. இருவரும் வெளியில் வந்தார்கள் சுரங்கப்பாதையை மூடினார்கள்.

"அதைத் திறக்கும் வழியை நன்றாய்த் தெரிந்து கொண்டாயல்லவா?" என்று ரவிதாஸன் கேட்டான்.

"தெரிந்து கொண்டேன் இனி உனக்குக் கவலை வேண்டாம். ஒப்புக் கொண்ட காரியத்தை நிச்சயமாகச் செய்து முடிப்பேன்! சுந்தர சோழனுடைய வாழ்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடையும்! இம்மாதிரியே நீங்களும் உங்கள் காரியத்தைச் செய்யுங்கள்" என்றான் சாம்பவன்.

"இளையராணி கரிகாலனைப் பார்த்துக் கொள்வாள் அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தக் குட்டிப் புலி கடலிலிருந்து தப்பி வந்து நாகைப்பட்டினத்தில் இருப்பதாகக் காண்கிறது. ஆனால் இந்த தடவை அவன் தப்ப முடியாது. அவனைக் காப்பாற்றி வந்த இரண்டு பெண் பேய்களும் இப்போது இத்தஞ்சையில் இருக்கின்றன. ஓடக்காரப் பெண்ணையும், ஊமைச்சியையும் கூட்டத்தில் பார்த்தேன். அந்த வீர வைஷ்ணவத் துரோகிகூட இங்கேதான் இருக்கிறான். ஆகையால் குட்டிப் புலியும் இனித் தப்ப முடியாது. நாகைப்பட்டினத்துக்குக் கிரம வித்தனை அனுப்ப போகிறேன். சுந்தர சோழனுடைய குலம் இந்த வெள்ளிக்கிழமை நசிந்துவிடும்..."

"அப்புறம் மதுராந்தகத்தேவன் இருப்பானே?"

"அவன் இருந்தால் இருக்கட்டும் அப்படிப்பட்ட ஒரு பேதை இன்னும் சில காலத்துக்குச் சோழ நாட்டுச் சிங்காதனத்தில் இருந்து வருவதுதான் நல்லது. பாண்டியச் சக்கரவர்த்திக்கும் வயது வரவேண்டும் அல்லவா?"

இவ்வாறு பேசிக் கொண்டே ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் வந்த வழியோடு விரைந்து சென்றார்கள்.



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 29

இராஜ தரிசனம்

அவர்கள் மறைந்த பிறகு ஊமை ராணி சுரங்கப்பாதை தென்பட்ட இடத்துக்கு வந்தாள். உற்று உற்றுப் பார்த்துப் பாதையைத் திறப்பதற்கு முயன்றாள், முடியவில்லை. ரவிதாஸன் அப்பாதையைத் திறந்தபோது அவள் தூரத்தில் நின்றபடியால் திறக்கும் வழியை அவள் கவனித்துப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இரண்டு பேரில் ஒருவனாவது அங்கே கட்டாயம் திரும்பி வருவான் என்று அவள் மனத்தில் நிச்சயமாகப் பட்டிருந்தது. ஆகையால், அவ்விடத்திலேயே காத்திருக்கத் தீர்மானித்தாள்.

அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. ரவிதாஸனை வெளியில் அனுப்பிவிட்டுச் சோமன் சாம்பவன் அங்கே திரும்பி வந்தான். அவன் கையில் தீவர்த்தி இருந்தது. ஆனால் முன்னைக் காட்டிலும் மங்கலாக எரிந்தது. ரவிதாஸனிடம் அவன் எவ்வளவோ தைரியமாகத்தான் பேசினான். ஆயினும் அவன் மனத்தில் பீதி போகவில்லையென்பது சுற்று முற்றும் மிரண்டு பார்த்துக் கொண்டு வந்ததிலிருந்து தெரிந்தது.

சுரங்கப்பாதை திறந்த இடத்தின் அருகில் வந்து அவன் பீதியுடன் உட்கார்ந்து கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் தீவர்த்தி அணைந்து விட்டது. பிறகு அவன் சுவரின் உச்சியின் மீதிருந்த பலகணியை அடிக்கடி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அதன் வழியாக உள்ளே வந்த வெளிச்சம் சிறிது சிறிதாக மங்கி மறைந்து கொண்டிருந்தது. நன்றாக வெளிச்சம் மங்கிச் சூரியன் அஸ்தமித்துவிட்டது என்று அறிந்த பிறகு அவன் சுரங்கப்பாதையை மறுபடியும் திறக்கத் தொடங்கினான். இப்போது மந்தாகினி அதன் சமீபமாக வந்து நின்று கொண்டாள். பாதை திறந்தது; சோமன் சாம்பவன் அதனுள் இறங்கப் போனான்.

அப்போது அந்த நிலவறையில், அவனுக்கு வெகு சமீபத்தில், 'கிறீச்' என்ற நீடித்த ஓலக் குரல் ஒன்று கேட்டது. சோமன் சாம்பவன் தன் வாழ் நாளில் எத்தனையோ பயங்கரங்களைப் பார்த்தவன்தான். ஆயினும் அந்த மாதிரி அமானுஷிகமான ஒரு சத்தத்தை அவன் கேட்டதில்லை. பேய் என்பதாக ஒன்று இருந்து அதற்குக் குரலும் இருந்தால், அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. முதல் தடவை அக்குரல் கேட்டதும் சாம்பவன் தயங்கி நின்றான்; அதன் எதிரொலி நிற்கும் வரையில் காத்திருந்தான். இரண்டாந்தடவை அந்த ஓலக் குரலைக் கேட்டதும் அவன் உடம்பின் ரோமமெல்லாம் குத்திட்டு நிற்கத் தொடங்கியது. மூன்றாந்தடவை இன்னும் சமீபத்தில் கேட்ட பிறகு அவனுடைய உறுதி குலைந்து விட்டது. அந்த இருளடர்ந்த நிலவறையில் வழி துறை கவனியாமல் குருட்டாம் போக்காக ஓடத் தொடங்கினான்.

அவன் மறைந்ததும் ஊமை ராணி அந்தப் பாதையில் இறங்கினாள். சில படிகள் இறங்கிய பிறகு சமதரையாக இருந்தது. அதில் விடுவிடு என்று நடந்து போனாள். சோமன் சாம்பவன் அவள் இறங்குவதைப் பார்த்திருந்து திரும்பி வந்தாலும் அவளைப் பிடித்திருக்க முடியாது அவ்வளவு விரைவாக நடந்தாள். நரகத்துக்குப் போகும் தொலைவில்லாத இருண்ட வழியைப் போல் தோன்றியது. ஆயினும் அதற்கும் ஒரு முடிவு இருந்தது. செங்குத்தான சுவரில் முடிந்த இடத்தில் மேலே இடைவெளி சிறிது தெரிந்தது. சில படிகளும் கைக்குத் தென்பட்டன. அவற்றின் வழியாக ஏறியபோது தலையில் திடீரென்று முட்டியது. பாதாளப் பாதையின் படிகளுக்கும், மேலே தலை முட்டிய இடத்துக்கும் நடுவில் சிறிய சிறிய இடைவெளிகள் காணப்பட்டன. அவற்றின் ஒன்றில் நுழைந்து வெளியில் வந்தாள். சுற்றிலும் பெரிய பெரிய பூத வடிவங்கள் தென்பட்டன. ஈழத் தீவில் பிரம்மாண்டமான சிலை வடிவங்களைப் பார்த்தவளானபடியால் அந்தக் காட்சி அவளுக்குத் திகைப்பை உண்டு பண்ணவில்லை. தான் வெளி வந்த பாதை எங்கே முடிகிறது என்பதை நன்றாய்க் கவனித்துக் கொண்டாள். பத்துத் தலை இராவணன் தன் இருபது கைகளினாலும் கைலையங்கிரியைப் பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தான். மலைக்கு மேலே சிவனும் பார்வதியும் வீற்றிருந்தார்கள். இராவணன் மலையைத் தூக்கிய இடத்தில் கீழே பள்ளமாயிருந்தது. மேலே தூக்கி நிறுத்திய மலையை அவனுடைய இருபது கைகளும் தாங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு கைகளுக்கு மத்தியில் இருந்த இடைவெளி வழியாக அந்தச் சிற்ப மண்டபத்துக்குள் தான் பிரவேசித்திருப்பதைத் தெரிந்து கொண்டாள். கைலையங்கிரிக்கு அடியில் அப்படி ஒரு பாதை இருக்கிறதென்பது சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு நாளும் தெரியாது. அதன் அடியில் இறங்கிப் பார்க்கலாம் என்ற எண்ணமும் யாருக்கும் தோன்றாது. சமயத்தில் ஒளிந்து கொள்ளுவதற்குக் கூட அது சரியான மறைவிடந்தான்.

சில மணி நேரம் அந்தச் சிற்பச் சுரங்கப்பாதையின் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மந்தாகினி அச்சிற்ப மண்டபத்தைச் சுற்றினாள். வெளிச்சம் மிகக் குறைவாயிருந்த போதிலும் இரவில் பார்த்துப் பழக்கமுற்ற அவளுடைய கூரிய கண்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரிந்தன. ஓரிடத்தில் சோழ குலத்து முன்னோர்களில் ஒருவரான சிபிச் சக்கரவர்த்தி புறாவின் உயிரைக் காக்கத் தம் உடலின் சதைகளை அறுத்துக் கொடுக்கும் காட்சி சிலை வடிவத்தில் இருந்தது. சிபியின் வம்சத்தில் பிறந்தவர்களானபடியினால் அல்லவோ சோழர்களுக்குச் 'செம்பியன்' என்னும் பட்டம் உரியதாயிற்று? அந்தச் சிற்பத்தைக் கூர்மையாகக் கவனித்துப் பார்த்த பிறகு ஊமை ராணி அப்பால் சென்றாள். பிரம்மாண்டமான சிவபெருமானுடைய சிரஸிலிருந்து கங்கை நதி கீழே விழும் காட்சி ஒரு சிற்பத்தில் அமைந்திருந்தது. அருகில் பகீரதன் கைகூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தான். கீழே விழுந்த பகீரதி நதி ஒரு பிரம்மாண்டமான ரிஷியின் வாய் வழியாகப் புகுந்து, காது வழியாக வெளியேறியது. அப்படி வெளியேறிய கங்கையில் ஒரு சிறிய முனிவர் குண்டிகையில் தண்ணீர் மொண்டு கொண்டிருந்தார். அவர்தான் குறு முனிவர் என்று பெயர் பெற்ற அகஸ்தியராக இருக்க வேண்டும். அந்தக் குண்டிகையை அவர் இன்னொரு சிறிய மலையின் மீது கவிழ்த்தார். குண்டிகையிலிருந்து பெருகிய நதி வரவரப் பெரிதாகிக் கொண்டு சென்றது. இந்தச் சிற்பக் கங்கையிலும் காவேரியிலும், அவற்றை அமைத்த போது தண்ணீர் பெருகுவதற்கும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது அவற்றில் தண்ணீர் இல்லை. காவேரி நீண்டு வளைந்து மலைப் பாறைகளின் வழியாகவும் மரமடர்ந்த சோலைகளின் வழியாகவும் சென்றது. அதன் இருபுறமும் அநேக சிவன் கோயில்கள் இருந்தன. கடைசியாகக் காவேரி கடலில் கலக்க வேண்டிய இடத்தில் அந்தச் சிற்ப மண்டபத்தின் மதிள் சுவர் இருந்தது. ஏதோ சந்தேகப்பட்டு ஊமை ராணி அந்த இடத்தில் மதிள் சுவரில் கையை வைத்து அமுக்கினாள் சிறிய கதவு ஒன்று திறந்தது. அதன் வழியாக வெளியேறிய இடம் அரண்மனைத் தோட்டம். அதற்கு அப்பால் வெகு சமீபத்தில் அரண்மனையின் உன்னதமான மாடங்கள் காணப்பட்டன. சுற்றுமுற்றும் பார்த்தாள்; மயங்கிய அந்தி மாலையின் வெளிச்சத்தில் தோட்டத்தில் யாருமில்லை என்று தெரிந்தது. பழுவேட்டரையரின் தோட்டத்தில் விழுந்து கிடந்தது போலவே இங்கேயும் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. ஆகையால் தோட்டத்தில் யாராவது இருந்தாலும் அவள் சிற்ப மண்டபத்திலிருந்து வெளிவந்ததைப் பார்த்திருக்க முடியாது. இன்னும் நன்றாய் இருட்டட்டும் என்று சிற்ப மண்டபத்தை ஒட்டியே நின்று காத்திருந்தாள். ஒருவேளை கையில் வேலையுடைய அந்த யமகிங்கரன் வந்தாலும் வரக்கூடும். ஆகையால், சிற்ப மண்டபத்துக்குள்ளும் அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரண்மனையின் தீபங்கள் ஒவ்வொன்றாகச் சுடர்விட்டு எரியத் தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் அரண்மனை முழுவதும் ஒரே ஜகஜ்ஜோதியாகக் காட்சி அளித்தது. கீழ் அறைகளில் ஏற்றிய தீபங்கள் பலகணிகளின் வழியாக வெளியில் ஒளி வீசின. மேல் மாடங்களில் ஏற்றிய தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு பிரகாசித்தன.

"ஐயோ! பகல் வேளையைக் காட்டிலும் இரவு மிகவும் அபாயகரமாகத் தோன்றுகிறதே!" என்று மந்தாகினி எண்ணினாள்.

அரண்மனையை நாலுபுறமும் நன்றாக உற்றுப் பார்த்தாள். சிற்ப மண்டபத்துக்குச் சமீபமாக இருந்த அரண்மனைப் பகுதியிலே மட்டும் அதிக விளக்குகள் இல்லை என்பதைக் கவனித்துக் கொண்டாள். காவேரி வெள்ளத்திலிருந்து தான் எடுத்துக் காப்பாற்றிய தன் உயிருக்குயிரான செல்வக் குமாரனை இலங்கையில் கொல்ல முயற்சித்த பாதகனும், அவனுடைய தோழனும் அரண்மனையின் இந்தப் பகுதியிலே தான் மேல் மாடத்தில் ஏறி நின்றார்கள். ரவிதாஸன் இன்னொருவனிடமிருந்து வேலை வாங்கி யார் மீதோ எறிவது போல் குறி பார்த்த இடம் இதுதான். நல்ல வேளையாக, இந்தப் பகுதியில் அதிகமாக தீபங்கள் ஏற்றவில்லை. அதற்குக் காரணம் யாதாயிருக்கலாம்?.. நல்லது; அதுவும் சீக்கிரத்தில் தெரிந்து போகிறது.

நன்றாக அஸ்தமித்து அரண்மனைத் தோட்டத்தில் இருள் சூழ்ந்தவுடனே மந்தாகினி சிற்ப மண்டபத்தின் வாசலிலிருந்து மிரண்டோ டும் மானின் வேகத்துடன் பாய்ந்து சென்று அரண்மனையை அடைந்தாள். அரண்மனையின் அந்தப் பின் பகுதியில் வட்ட வடிவமான தாழ்வாரங்களும் அவற்றைத் தாங்கி நின்ற வரிசை வரிசையான தூண்களும், பல இடங்களில் மேன் மாடத்துக்கு ஏறும் படிக்கட்டுகளும் காணப்பட்டன. தாழ்வாரங்களில், பெரிய விருந்துகளுக்குச் சமையல் செய்ய உதவும் பிரம்மாண்டமான தாமிரப் பாத்திரங்கள், பழசாய்ப் போன தந்தப் பல்லக்குகள், ஒடிந்த சிங்காதனங்கள், இப்படிப் பல பொருள்கள் இருந்தன. அவற்றின் மத்தியில் சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு மந்தாகினி கடைசியாக ஒரு படிக்கட்டின் மீது துணிந்து ஏறினாள். கீழே இருந்தது போலவே மேன் மாடத்திலும் வட்ட வடிவமான தாழ்வாரங்களும் அவற்றின் மேற்கூரையைத் தாங்கிய சித்திர விசித்திரமான தூண்களும் வேலைப்பாடு அமைந்த பலகணிகளும் நிலா முன்றில்களும் அவற்றில் பளிங்குக்கல் மேடைகளும் காணப்பட்டன. மனித சஞ்சாரம் அற்றதாகத் தோன்றிய அந்த மேன்மாடக் கூடங்களில் மந்தாகினி சுற்றிச்சுற்றி அலைந்தாள். மாடத்தின் உட்புறத்து ஓரங்களுக்குப் போக அவள் மிகவும் தயங்கினாள். ஓரிடத்தில் உட்புறத்தில் கீழேயிருந்த தீப வெளிச்சம் வருவதைக் கண்டு அங்கே போய்த் தூண் மறைவில் எட்டி பார்த்தாள். ஆகா! அவள் பார்த்தது என்ன? பார்த்த கண்களைத் திருப்பவே முடியாத காட்சிகளைப் பார்த்தாள்.

ஒரு விசாலமான மண்டபத்தின் மத்தியில் சித்திர வேலைப்பாடு அமைந்த சப்ரமஞ்சக் கட்டிலில் ஒருவர் சாய்ந்த வண்ணம் படுத்திருந்தார். அவரைச் சுற்றிலும் நாலு ஸ்திரீகளும் இரண்டு ஆடவர்களும் அச்சமயம் நின்றார்கள். படுத்திருந்தவரிடம் அவர்கள் பயபக்தி கொண்டவர்கள் என்பது அவர்களுடைய தோற்றத்திலிருந்து தெரிந்தது. சிறிது தூரத்தில் இன்னும் அதிக மரியாதையுடன் இரு தாதிப் பெண்கள் நின்றார்கள்.

ஒரே ஒரு தீபந்தான் அந்த மண்டபத்தில் எரிந்தது. அதுவும் கட்டிலுக்கு அருகில் இருந்த விளக்குத் தண்டின் மீது பொருத்தப்பட்டு மங்கலான வெளிச்சத்தையே தந்து கொண்டிருந்தது. சுற்றிலும் நின்றவர்களை முதலில் மந்தாகினி பார்த்தாள். அவர்களில் ஒருத்தி தன் உயிருக்குயிரான சகோதரன் மகள் பூங்குழலி என்பதை அறிந்தாள். மற்றவர்களையும் அவள் முன்னம் சில தடவை மறைவான இடங்களிலிருந்து பார்த்திருக்கிறாள். ஆனால், அவர்கள் எல்லாம் யார் யார் என்பது அவ்வளவு நன்றாய்த் தெரியாது.

சுற்றி நின்றவர்களைப் பார்த்துவிட்டு மிக மிகத் தயக்கத்துடன் மந்தாகினி கட்டிலில் படுத்திருந்தவரைப் பார்த்தாள். அவளுடைய நெஞ்சு ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டது. ஆம்; அவரேதான்! எத்தனையோ யுகம் என்று சொல்லக் கூடிய நீண்ட காலத்துக்கு முன்னால் தான் சின்னஞ்சிறு பெண்ணாக ஓடி விளையாடிக் காடுகளில் திரிந்து கொண்டிருந்த காலத்தில் ஓரிடத்தில் வந்து ஒதுங்கி, தன் உள்ளத்தையும் உயிரையும் கொள்ளை கொண்ட மனிதர் தான். தான் வாழ்ந்திருந்த பூதத் தீவைச் சில காலம் சொர்க்க லோகமாக ஆக்கியிருந்தவர்தான். பெரிய கப்பலில் கூட்டமாக வந்தவர்களால் அழைத்துப் போகப்பட்டவர்தான்! ஆகா! அவர் இப்போது எப்படி மாறிப் போயிருக்கிறார்!

பூர்வ ஜன்மம் என்று சொல்லக்கூடிய அந்த நாட்களுக்குப் பிறகும் மந்தாகினி அவரைப் பல தடவை அவரறியாமல் பார்த்திருக்கிறாள். காவேரி நதியில் உல்லாசப் படகுகளில் அவர் சென்ற போது கரையில் அடர்ந்த புதர்களின் மறைவில் ஒளிந்திருந்து பார்த்திருக்கிறாள். நகரங்களின் தெருக்களில் வெண்புரவிகள் பூட்டிய தங்க ரதத்தில் வீதிவலம் வந்தபோது கூட்டத்தோடு கூட்டமாய் நின்று பார்த்திருக்கிறாள். ஆனால் கடைசியாக அவரைப் பார்த்துக் கொஞ்ச காலம் ஆகிவிட்டது. அந்தக் காலத்திற்குள்ளே தான் இப்படி மாறிப் போயிருக்கிறார். முகத்தில் தாடியும் மீசையும் வளர்ந்திருந்தன. கன்னங்கள் ஒட்டி உலர்ந்து போயிருந்தன; நெற்றியிலே சுருக்கங்கள். ஆகா! அந்தக் கண்களில் ஒரு காலத்தில் குடிகொண்டிருந்த காந்த ஒளி எங்கே போயிற்று? தெய்வமே! இப்படியும் மனிதர்கள் மாறுவது உண்டா? இலங்கைத் தீவில் விஷஜுரத்தில் பீடிக்கப்பட்டவர்கள் பலரை நீண்ட நாள் காய்ச்சலுக்குப் பிறகு உயிர் போகும் சமயத்தில் ஊமை ராணி மந்தாகினி பார்த்ததுண்டு.

ஆகா! ஒரு சமயம் தங்கச் சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்த இவருடைய களை ததும்பிய முகமும் அவ்வளவாக மாறிப் போயிருக்கிறதே! ஒருவேளை இவருடைய அந்திம காலமும் நெருங்கி விட்டதோ!

திடீரென்று மந்தாகினிக்கு அன்று மாலை தான் பார்த்த பயங்கரக் காட்சி நினைவுக்கு வந்தது. அவள் அச்சமயம் நின்ற இடத்திலேதான் ரவிதாஸன் என்னும் கொலைகாரனும் அவனுடைய தோழனும் நின்றார்கள். அங்கிருந்து தான் வேல் எறியக் குறி பார்த்தார்கள். ஒருவேளை கட்டிலில் படுத்திருப்பவர் மீது எறியத்தான் குறி பார்த்தார்களோ? இந்த நினைவினால் மந்தாகினியின் உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. கண்களைச் சுற்றிக் கொண்டு வந்தது; மயக்கம் வரும் போலிருந்தது. தூணைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கால்களை ஊன்றி நின்று சமாளித்துக் கொண்டாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 30

குற்றச் சாட்டு

சுந்தர சோழ சக்கரவர்த்தியின் உள்ளமும் உடலும் சில நாளாகப் பெரிதும் நைந்து போயிருந்தன. புயல் அடித்த இரவு அவர் தூங்கவே இல்லையென்று இளையபிராட்டி முதன்மந்திரியிடம் கூறியது மிகைப்படுத்திக் கூறியதல்ல. அன்று பகற்பொழுது அவர் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டுதானிருந்தது. பிற்பகலில் சின்ன பழுவேட்டரையர் வந்து அவருடைய சஞ்சலத்தை அதிகப்படுத்தி விட்டார். முக்கியமாக, முதன்மந்திரி அநிருத்தர் மீது அவர் பல குற்றங்களைச் சுமத்தினார். அவர் தஞ்சைக்கு வந்தது முதல் கோட்டைக்குள் ஜனங்கள் வருவது பற்றிய கட்டு திட்டங்கள் எல்லாம் உடைந்து விட்டன என்று கூறினார். முதல்மந்திரியைப் பார்ப்பதற்கு வருகிறோம் என்று வியாஜத்தினால் கண்டவர்கள் எல்லாம் கோட்டைக்குள் நுழைகிறார்கள் என்றும், இதனால் சக்கரவர்த்தியின் பாதுகாப்புக்கே பங்கம் விளையலாம் என்றும் குறிப்பிட்டார். அந்த இரண்டு குற்றங்களையும் கேட்ட சக்கரவர்த்தி தமக்குத் தாமே புன்னகை செய்து கொண்டார். அவற்றை அவர் முக்கியமாகக் கருதவில்லை.

ஆனால், மேலும் காலாந்தககண்டர் சுமத்திய குற்றங்களைப் பற்றி அவ்விதம் அலட்சியம் செய்ய முடியவில்லை. அன்று வெளியிலேயிருந்து வந்த ஜனங்களுக்கும் வேளக்காரப் படையினருக்கும் வீதியில் விவாதம் முற்றிப் பெரும் கலவரமாகி விடக் கூடிய நிலைமை ஏற்பட்டதென்றும், அச்சமயம் நல்ல வேளையாகத் தாம் அங்கே செல்ல நேர்ந்தபடியால் விபரீதம் எதுவும் நேரிடாமல் தடுத்து இரு சாராரையும் சமாதானப்படுத்தி அனுப்பியதாகவும் கூறினார். முதன்மந்திரி அநிருத்தர் ஒழுக்கத்தில் மிகச் சிறந்தவர் என்று நாடெல்லாம் பிரசித்தமாயிருக்க, அவருடைய நடவடிக்கை அதற்கு நேர்மாறாயிருக்கிறதென்றும், கோடிக்கரையிலிருந்து யாரோ ஒரு ஸ்திரீயைப் பலவந்தமாகக் கைப்பற்றி அவர் கொண்டு வந்திருக்கிறார் என்றும், பழுவூர் அரண்மனைப் பல்லக்கையும், ஆள்களையும் இந்தக் காரியத்துக்கு உபயோகப்படுத்தியதாகவும், எதற்காக என்பது தெரியாமல் தாம் ஆள்களையும் பல்லக்கையும் அனுப்பிவிட்டதாகவும், ஏதாவது அபகீர்த்தி ஏற்பட்டால் அது பழுவூர்க் குடும்பத்தின் தலையிலே விடியும் என்றும் கூறினார்.

கடைசியாக இன்னொரு சந்தேகாஸ்பதமான சம்பவத்தைப் பற்றியும் சொன்னார். "பெரிய பழுவேட்டரையர் அரண்மனைக்கு யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி வருவதாக அறிந்து நான் கவலை கொண்டிருந்தேன். அவன் இளையபிராட்டியைப் பார்க்க வருவதாக அறிந்தபடியால் நடவடிக்கை எடுக்கத் தயக்கமாயிருந்தது. ஆயினும், அந்த அரண்மனையின் மீது ஒரு கண் வைத்திருக்கும்படி ஓர் ஒற்றனை நியமித்திருந்தேன். இன்றைக்கு யாரோ ஒருவன் பொக்கிஷ மந்திரியின் அரண்மனைத் தோட்டத்தில் பின்புறமாகச் சுவர் ஏறிக் குதித்ததைப் பார்த்ததாக அந்த ஒற்றன் வந்து சொன்னான். உடனே அவனைக் கைப்பற்றி வரச் சில ஆட்களை அனுப்பினேன். அவர்கள் ஒருவனை அரண்மனைத் தோட்டத்தில் கையும் மெய்யுமாகப் பிடித்து வந்தார்கள். யார் என்று பார்த்தால், முதன்மந்திரியின் அருமைச் சீடனாகிய ஆழ்வார்க்கடியான் என்று தெரிய வந்தது.

'எதற்காக சுவர் ஏறிக் குதித்தாய்?' என்று கேட்டதற்கு அவன் மறுமொழி சொல்ல மறுத்துவிட்டான். 'முதன் மந்திரியின் கட்டளை' என்றான். சக்கரவர்த்தி! இப்படியெல்லாம் இந்த அநிருத்தப்பிரம்மராயர் செய்து வந்தால், தஞ்சைக் கோட்டைப் பாதுகாப்புக்கு நான் எப்படிப் பொறுப்பு வகிக்க முடியும்? என் தமையனாரும் ஊரில் இல்லாதபடியால் இதையெல்லாம் தங்கள் காதில் போட வேண்டியதாயிற்று!"

இவ்வாறு சின்னப் பழுவேட்டரையர் முறையிட்டது சக்கரவர்த்தியின் மனக் குழப்பத்தை அதிகமாக்கிற்று. "ஆகட்டும், இன்று மாலை அநிருத்தர் இங்கே வருகிறார். இதைப்பற்றி எல்லாம் விசாரிக்கிறேன். முக்கியமாக, கோடிக்கரையிலிருந்து ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் பிடித்து வரச் சொன்ன விஷயம் என் மனத்தைப் புண்ணாக்கியிருக்கிறது. அது உண்மை தானே! தளபதி! சிறிதும் சந்தேகம் இல்லையே?" என்று கேட்டார்.

"சந்தேகமே இல்லை! பல்லக்குத் தூக்கிளும் அவர்களுடன் வந்த வீரர்களும் நேற்று நள்ளிரவில் என்னிடம் வந்து சொன்னார்கள். தஞ்சைக் கோட்டையை அணுகிய போது புயலில் சிக்கிக் கொண்டார்களாம். சாலையின் மரம் ஒன்று பெயர்ந்து விழுந்து சிலருக்கு அபாயம் ஏற்பட்டதாம். சிவிகை மீது மரம் விழாமல் தப்பியது பெரும் புண்ணியம் என்று சொன்னார்கள். நல்லவேளையாக ஸ்திரீஹத்தி தோஷம் ஏற்படாமற்போயிற்று! இதைப் பற்றி விசாரிப்பதோடு ஆழ்வார்க்கடியான் காரியத்தையும் சக்கரவர்த்தி தீர விசாரணை செய்ய வேண்டும்!" என்று தெரிவித்துவிட்டு, காலாந்தக கண்டர் சக்கரவர்த்தியிடம் விடைபெற்றுச் சென்றார்.

அநிருத்தர் வரும் சமயத்தில் அங்கே இருக்கச் சின்னப் பழுவேட்டரையர் விரும்பவில்லை. தாறுமாறாகச் சம்பந்தமில்லாத கேள்வி ஏதேனும் தம்மை முதன்மந்திரி கேட்டு திணறச் செய்யக்கூடும் என்ற அச்சம் அவர் மனதிற்குள்ளே இருந்தது. முக்கியமாக சக்கரவர்த்தியிடம் புயலினால் அவதிக்குள்ளான ஜனங்களுக்கு உதவுவதற்காகப் பொக்கிஷ சாலையைத் திறந்து விடும்படி அநிருத்தர் தம் முன்னாலேயே உத்தரவு வாங்கி விட்டால் பெரிய தொல்லையாகப் போய்விடும். நாளைக்குத் தமையனாரின் முன்னால் எப்படி முகத்தைக் காட்டுவது?

அநிருத்தருடைய வரவை அன்று காலையிலிருந்தே சக்கரவர்த்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில்தான் முதன்மந்திரி வந்தார். அவருடைய திட நெஞ்சமும் இப்போது சிறிது கலங்கிப் போயிருந்தது. அவர் எவ்வளவோ ஜாக்கிரதையுடன் போட்டிருந்த திட்டம் தவறிப் போய்விட்டது. மந்தாகினியைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைக்கும். பின்னர் சக்கரவர்த்தியைப் போய்ப் பார்க்கலாம் என்று அவர் அரண்மனைக்குப் போவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். பிற்பகலில் ஆழ்வார்க்கடியான் வந்து பெரிதும் தர்மசங்கடமான செய்தியைத் தெரியப்படுத்தினான். ஊமை ராணி போயிருக்கக்கூடும் என்று தான் ஊகித்த குறுகிய சந்து வழியில் சென்றதாகவும், ஒரு ஸ்திரீ பழுவேட்டரையர் அரண்மனைத் தோட்டத்து மதிள்சுவர் ஏறிக் குதித்தது போல் தோன்றியதென்றும், அவள் ஊமை ராணியாக இருக்கக் கூடும் என்று எண்ணி அவனும் அந்த மதிள் சுவரில் ஏறிக் குதித்ததாகவும் தோட்டத்தில் தேட ஆரம்பிப்பதற்குள்ளே சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் வந்து பிடித்துக் கொண்டதாகவும் கூறினான்.

"அவர்களிடம் உண்மைக் காரணத்தைச் சொல்ல முடியவில்லை. ஐயா அதனாலேதான் தங்களுடைய பெயரைக் கூறி விடுதலை பெற்று வரவேண்டியதாயிற்று!" என்றான்.

இந்த விவரம் முதன்மந்திரிக்குப் பெரும் கவலையை உண்டாக்கிற்று. "இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையில் இவ்வளவு அரண்மனைகள் இருக்கிறபோது, பெரிய பழுவேட்டரையரின் மாளிகையிலேதானா அவள் பிரவேசிக்க வேண்டும்? பகிரங்கமாக ஆள்விட்டுத் தேடச் சொல்லக்கூட முடியாதே? ஆனாலும் பார்க்கலாம். பெரிய பழுவேட்டரையர் ஊரில் இல்லாதது ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. அரண்மனையைச் சுற்றிலும் காவல் போட்டு வைக்கலாம். அவ்வரண்மனைக்கு உள்ளேயும் எனக்கு ஒரு ஆள் இருக்கிறான் அவனுக்கும் சொல்லி அனுப்புகிறேன்! இருந்தாலும், இந்த ஓடக்காரப் பெண் எவ்வளவு தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டாள்?" என்றார் முதன்மந்திரி.

"சுவாமி! ஓடக்காரப் பெண் குறுக்கிட்டிராவிட்டாலும் ஊமை ராணி தங்கள் விருப்பத்தின்படி நடந்திருப்பாள் என்பது நிச்சயமில்லை. எப்படியாவது ஓடிப் போகத்தான் முயன்றிருப்பாள்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"எனக்கென்னவோ ஒரு நம்பிக்கை இருக்கிறது. இத்தனை தூரம் வந்தவள் சக்கரவர்த்தியைப் பார்க்காமல் போக மாட்டாள் என்று. நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து பார்க்கலாம். ஆனால், இனிமேலும் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்குப் போகாமல் காலம் தாழ்த்துவது முறையன்று. நீயும் அந்த ஓடக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு என்னுடன் வா! இரண்டு இளவரசர்களைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்தி விடவேண்டும். சின்ன இளவரசரைக் கடலிலிருந்து கரை சேர்த்த ஓடக்காரப் பெண் நேரில் அதைப்பற்றிச் சொன்னால் சக்கரவர்த்திக்கு நம்பிக்கை உண்டாகலாம்?" என்றார்.

முதன்மந்திரி அநிருத்தரும், அவருடைய சீடனும், பூங்குழலியும் சக்கரவர்த்தியின் அரண்மனைக்குச் சென்றார்கள். அரண்மனை முகப்பிலேயே இளையபிராட்டியும் வானதியும் அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். ஊமை ராணி அகப்படவில்லையென்ற செய்தி இளையபிராட்டிக்கும் கலக்கத்தை அளித்தது. அவள் பெரிய பழுவூர் மன்னரின் அரண்மனைத் தோட்டத்தில் புகுந்த செய்தி கலக்கத்தை அதிகப்படுத்தியது. இதிலிருந்து விபரீத விளைவு ஏதேனும் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

"ஐயா! பெரிய பழுவூர் மன்னரின் மாளிகையிலிருந்து வெளியேறுவதற்குச் சுரங்க வழி இருக்கிறதாமே? அதன் வழியாகப் போய் விட்டால்?"

முதன்மந்திரிக்கு வந்தியத்தேவனின் நினைவு வந்தது. "தாயே! அந்த வழியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாயிருக்குமா? எல்லாரும் வாணர் குலத்து வாலிபனைப் போன்ற அதிர்ஷ்டசாலியாயிருப்பார்களா? ஆயினும் கோட்டைக்கு வெளியிலும் ஆட்களை நிறுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்!" என்றார்.

பின்னர் ஆழ்வார்க்கடியானையும் பூங்குழலியையும் இளையபிராட்டியுடன் விட்டுவிட்டு முதன்மந்திரி மட்டும் சக்கரவர்த்தி படுத்திருந்த இடத்துக்குச் சென்றார். சக்கரவர்த்திக்கும் அவர் அருகில் வீற்றிருந்த வானமாதேவிக்கும் வழக்கமான மாரியாதைகளைச் செலுத்திவிட்டு, புயலினால் சோழ நாடெங்கும் நேர்ந்துள்ள சேதங்களைப் பற்றி விசாரித்துத் தக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்ததினால் சீக்கிரமாக வரமுடியவில்லை என்று சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்திக் கொண்டார். அந்த ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டதில் சக்கரவர்த்திக்குச் சிறிது திருப்தி உண்டாயிற்று.

"தனாதிகாரி இல்லாத சமயத்தில் நீங்களாவது இப்போது இங்கு இருந்தீர்களே! அது நல்லதாய்ப் போயிற்று! ஆனால் இது என்ன நான் கேள்விப்படுவது? கோடிக்கரையிலிருந்து யாரோ ஒரு ஸ்திரீயைப் பலவந்தமாகப் பிடித்து வந்திருக்கிறீராமே? சற்று முன் கோட்டைத் தளபதி சொன்னார். பிரம்மராயரே! இம்மாதிரி நடவடிக்கையை உம்மிடம் நான் எதிர்பார்க்கவில்லையே! ஒரு வேளை அதற்கு மிக அவசியமான காரணம் ஏதேனும் இருந்திருக்கலாம். அப்படியானால் எனக்குத் தெரிவிக்கலாமல்லவா? அல்லது எல்லாருமே நான் நோயாளியாகி விட்டபடியால் என்னிடம் ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை, என்னை எதுவும் கேட்க வேண்டியதுமில்லை என்று வைத்துக் கொண்டு விட்டீர்களா? அருள்மொழிவர்மன் கடலில் முழுகாமல் தப்பிக் கரை சேர்ந்து நாகப்பட்டினம் புத்த விஹாரத்தில் இருப்பதாகக் குந்தவை கூறுகிறாள். அதைப்பற்றிச் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. கரை ஏறியவன் ஏன் இவ்விடத்துக்கு வரவில்லை? அவன் தப்பிப் பிழைத்து பத்திரமாக இருக்கும் செய்தியை ஏன் இதுவரை எனக்கு ஒருவரும் தெரியப்படுத்தவில்லை? மந்திரி! என்னைச் சுற்றிலும் நான் அறியாமல் என்னவெல்லாமோ நடைபெறுகிறது. என்னுடைய ராஜ்யத்தில் எனக்குத் தெரியாமல் பல காரியங்கள் நிகழ்கின்றன. இப்படிப்பட்ட நிலைமையில் உயிரோடிருப்பதைக் காட்டிலும். ." என்று சக்கரவர்த்தி கூறி வந்தபோது அவர் தொண்டை அடைத்துக் கொண்டது; கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

குறுக்கே பேசக்கூடாதென்ற மரியாதையினால் இத்தனை நேரம் சும்மாயிருந்த அநிருத்தர் இப்போது குறுக்கிட்டு, "பிரபு! நிறுத்துங்கள். தங்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு நாளும் தங்களுடைய நலனுக்கு எதிரான காரியம் எதுவும் செய்யவில்லை; இனியும் செய்யமாட்டேன். தங்களுக்கு வீண்தொல்லை கொடுக்க வேண்டாம் என்ற காரணத்துக்காக இரண்டொரு விஷயங்களைத் தங்களிடம் சொல்லாமல் விட்டிருக்கலாம். அது குற்றமாயிருந்தால் மன்னித்துவிடுங்கள். இப்போது தாங்கள் கேட்டவற்றுக்கெல்லாம் மறுமொழி சொல்கிறேன். கருணைகூர்ந்து அமைதியாயிருக்க வேண்டும்" என்று இரக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

"முதன்மந்திரி! இந்த ஜன்மத்தில் எனக்கு இனி மன அமைதி இல்லை. அடுத்த பிறவியிலாவது மன அமைதி கிட்டுமா என்று தெரியாது. என் அருமை மக்களும் என் ஆருயிர் நண்பராகிய முதன்மந்திரியும் எனக்கு எதிராகச் சதி செய்யும் போது..."

"பிரபு, தங்களுக்கு எதிராகச் சதி செய்பவர்கள் யார் என்பதைச் சீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். அந்தப் பாதகத்துக்கு நான் உடந்தைப்பட்டவன் அல்ல. இந்த முதன்மந்திரி பதவியை இப்போது நான் பெயருக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறேன். பெரிய பழுவேட்டரையரிடமே இந்தப் பதவியைக் கொடுத்து விடுகிறேன் என்று முன்னமே பல தடவை சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதற்குச் சித்தமாயிருக்கிறேன். என் பேரில் சிறிதளவேனும் தங்களுக்கு அதிருப்தி இருந்தால்..."

"ஆம் முதன்மந்திரி, ஆம்! எந்த நேரத்திலும் என்னைக் கைவிட்டுப் போய்விட நீங்கள் எல்லோருமே சித்தமாயிருக்கிறீர்கள். என் மூச்சுப் போகும் வரையில் என்னுடன் இருந்து என்னுடன் சாகப் போகிறவள் இந்த மலையமான் மகள் ஒருத்திதான். நான் செய்திருக்கும் எத்தனையோ பாவங்களுக்கு மத்தியில் ஏதோ புண்ணியமும் செய்திருக்கிறேன். ஆகையினால் தான் இவளை என் வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றேன்!" என்றார் சக்கரவர்த்தி.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சக்கரவர்த்திக்கு அருகில் கட்டிலில் வீற்றிருந்த வானமாதேவிக்கு விம்மலுடன் அழுகை வந்து விட்டது. அவள் உடனே எழுந்து அடுத்த அறைக்குச் சென்றாள்.

"மன்னர் மன்னா! மலையமான் மகளைப் பற்றித் தாங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். அவருடைய திருவயிற்றில் பிறந்த மக்களும் தங்களிடம் இணையற்ற பக்தி விசுவாசம் கொண்டிருக்கிறார்கள்."

"ஆனாலும் என் வார்த்தையை அவர்கள் மதிப்பதில்லை. என் கட்டளைக்கும் கீழ்ப்படிவதில்லை. எனக்குத் தெரியாமல் ஏதேதோ, செய்கிறார்கள். நீரும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறீர்! அருள்மொழிவர்மன் கடலிலிருந்து தப்பிப் பிழைத்து நாகைப்பட்டினம் புத்த விஹாரத்திலிருப்பது உமக்கு முன்னமே தெரியும் அல்லவா? ஏன் என்னிடம் சொல்லவில்லை?"

"மன்னிக்க வேண்டும் பிரபு! அந்த விவரம் நேற்று வரையில் எனக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்கவில்லை. இளவரசரின் உயிருக்கு ஆபத்து நேரிட்டிராது என்று மட்டும் உறுதியாயிருந்தேன். அவர் பிறந்த வேளையைக் குறித்துச் சோதிடக்காரர்கள் எல்லாரும் கூறியிருப்பது பொய்யாகி விடாதல்லவா?"

"முதன்மந்திரி! சோதிட சாஸ்திரத்தினால் நேரக்கூடிய தீங்குகளுக்கு அளவே இல்லை. இந்த இராஜ்யத்திலிருந்து சோதிடக்காரர்கள் எல்லாரையுமே அப்புறப்படுத்திவிட எண்ணுகிறேன். அருள்மொழியின் ஜாதகத்தைக் குறித்து சோதிடக்காரர்கள் கூறியிருப்பதை வைத்துக் கொண்டுதான் நான் உயிரோடிருக்கும் போதே அவனைச் சிம்மாதனத்தில் ஏற்றி விடுவதற்கு எல்லாரும் பிரயத்தனப்படுகிறார்கள்; நீரும் அவர்களைச் சேர்ந்தவர்தானே?"

"சத்தியமாக இல்லை; பிரபு! அதற்கு மாறாக, சின்ன இளவரசர் சிறிது காலத்துக்கு இந்தச் சோழ நாட்டுக்குள் வராமலிருந்தாலே நல்லது என்று எண்ணினேன். இலங்கைக்குப் போயிருந்தபோது இளவரசரிடம் அவ்விதமே சொல்லி விட்டு வந்தேன். ஆனால் நான் இப்பால் வந்தவுடன் பழுவேட்டரையர்களின் ஆட்கள் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வர இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். தாங்களும் அதற்குச் சம்மதம் அளித்திருக்கிறீர்கள். இந்தச் செய்தி நாடு நகரமெல்லாம் பரவியிருக்கிறபடியால், ஜனங்கள் பழுவேட்டரையர்கள் மீது ஒரே கோபமாயிருக்கிறார்கள். அவர்கள் தான் இளவரசரை ஏற்றி வந்த கப்பலை வேண்டுமென்று கடலில் மூழ்கடித்து விட்டதாக ஜனங்களிடையில் பேச்சாயிருக்கிறது...."

"பொய், முதன்மந்திரி! பொய்! எல்லாம் முழு பொய்! பார்த்திபேந்திர பல்லவன் எல்லாம் என்னிடம் கூறிவிட்டான். பழுவேட்டரையர்கள் அனுப்பிய கப்பலில் இளவரசன் வரவில்லை. பார்த்திபேந்திரனுடைய கப்பலில் வந்தான். வழியில் வேண்டுமென்று கடலில் குதித்தான். இன்னொரு எரிந்த கப்பலில் இருந்த யாரோ ஒருவனைக் காப்பாற்றுவதற்காக என்று சொல்லி, பார்த்திபேந்திரன் தடுத்தும் கேளாமல், கொந்தளித்த கடலில் குதித்தான். இப்போது யோசிக்கும் போது எல்லாமே பொய்யென்றும் என்னை ஏமாற்றுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்றும் தோன்றுகிறது. இந்தச் சூழ்ச்சியில் குந்தவையும் சம்பந்தப்பட்டவள் என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு வேதனை தாங்கவில்லை. இந்த உலகமே எனக்கு எதிராகப் போனாலும் குந்தவை என்னுடன் இருப்பாள் என்று எண்ணியிருந்தேன். ஒரு தகப்பன் தன் மகளிடம் சாதாரணமாகச் சொல்லத் தயங்கக் கூடிய வரலாறுகளையெல்லாம் சொன்னேன்...."

"அரசர்க்கரசே! இளையபிராட்டி தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் உலகமே சொன்னாலும் நான் நம்பமாட்டேன்; தாங்களும் நம்பக்கூடாது. இளையபிராட்டி ஒரு விஷயத்தைத் தங்களிடம் சொல்லவில்லை என்றால், அதற்குக் காரணம் அவசியம் இருக்கவேண்டும். சின்ன இளவரசர் தம் சிநேகிதனைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்ததில் பொய் ஒன்றுமில்லை. இளவரசையும் அவருடைய சிநேகிதரையும் கடலிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்த ஓடக்காரப் பெண் இதோ அடுத்த அறையில் இருக்கிறாள். இலங்கையில் நடந்தவற்றையும் நேரில் பார்த்து அறிந்தவள். அரசே! அவளைக் கூப்பிடட்டுமா!" என்றார் அநிருத்தர்.

சக்கரவர்த்தி மிக்க ஆவலுடன், "அப்படியா? உடனே அவளை அழையுங்கள். முதன்மந்திரி!... கோடிக்கரையிலிருந்து நீர் பலவந்தமாகப் பிடித்து வரச் சொன்ன பெண் அவள்தானா?"...என்றார்.

"பழுவேட்டரையர் பல்லக்கில் வந்த பெண்தான் அடுத்த அறையில் காத்திருக்கிறாள். இதோ அழைக்கிறேன்" என்று அநிருத்தர் கூறிக் கையைத் தட்டியதும், பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் உள்ளே வந்தார்கள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 31

முன்மாலைக் கனவு

பூங்குழலியைச் சக்கரவர்த்தி உற்றுப் பார்த்துவிட்டு, "இந்தப் பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையல்லவா? ஆனால் முகஜாடை சற்றுத் தெரிந்த மாதிரி இருக்கிறது. பிரம்மராயரே! இவள் யார்?" என்று கேட்டார்.

"இவள் கோடிக்கரைத் தியாக விடங்கர் மகள் பெயர் பூங்குழலி!"

"ஆகா! அதுதான் காரணம்!" என்று சக்கரவர்த்தி கூறினார். பிறகு வாய்க்குள்ளே, 'இவள் அத்தையின் முகஜாடை கொஞ்சம் இருக்கிறது! ஆனால் அவளைப் போல் இல்லை; ரொம்ப வித்தியாசம் இருக்கிறது' என்று முணுமுணுத்துக் கொண்டார்.

அவர் முணுமுணுத்தது பூங்குழலியின் காதில் இலேசாக விழுந்தது. அதுவரையில் சக்கரவர்த்தியைப் பூங்குழலி பார்த்ததில்லை. அவர் அழகில் மன்மதனை மிஞ்சியவர் என்று கேள்விப்பட்டிருந்தாள். இளவரசரைப் பெற்ற தந்தை அப்படித்தான் இருக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தாள். இப்போது உடல் நோயினாலும் மன நோயினாலும் விகாரப்பட்டுத் தோன்றிய சக்கரவர்த்தியின் உருவத்தைப் பார்த்துத் திகைத்துப் போனாள். தன் அத்தையைக் கைவிட்டது பற்றிச் சக்கரவர்த்தியிடம் சண்டை பிடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்ததை நினைத்து வெட்கினாள். பயத்தினாலும் வியப்பினாலும் கூச்சத்தினாலும் சக்கரவர்த்தியைத் தரிசித்தவுடனே வணக்கம் கூறுவதற்குக் கூட மறந்து நின்றாள்.

"பெண்ணே! உன் தந்தை தியாகவிடங்கர் சுகமா?" என்று சக்கரவர்த்தி அவளைப் பார்த்துக் கேட்டார்.

அப்போதுதான் பூங்குழலிக்குச் சுய நினைவு வந்தது. இலங்கை முதல் கிருஷ்ணா நதி வரையில் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் சந்நிதியில் தான் நிற்பதை உணர்ந்தாள். உடனே தரையில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு எழுந்து கை கூப்பி வணக்கத்துடன் நின்றாள்.

சுந்தரசோழர் அநிருத்தரைப் பார்த்து, "இந்தப் பெண்ணுக்குப் பேச வரும் அல்லவா? ஒரு கால் இவள் அத்தையைப் போல் இவளும் ஊமையா?" என்று கேட்டபோது, அவர் முகம் மன வேதனையினால் சுருங்கியது.

"சக்கரவர்த்தி! இந்தப் பெண்ணுக்குப் பேசத் தெரியும். ஒன்பது ஸ்திரீகள் பேசக்கூடியதை இவள் ஒருத்தியே பேசி விடுவாள்! தங்களைத் தரிசித்த அதிர்ச்சியினால் திகைத்துப் போயிருக்கிறாள்" என்றார் அநிருத்தர்.

"ஆமாம்; என்னைப் பார்த்தால் எல்லாருமே மௌனமாகி நின்று விடுகிறார்கள். என்னிடம் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை!" என்றார் சக்கரவர்த்தி.

மறுபடியும் பூங்குழலியைப் பார்த்து, "பெண்ணே! இளவரசன் அருள்மொழிவர்மனை நீ கொந்தளித்த கடலிலிருந்து காப்பாற்றினாய் என்று முதன்மந்திரி சொல்லுகிறார் அது உண்மையா?" என்ற சுந்தர சோழர் கேட்டார்.

பூங்குழலி தயங்கித் தயங்கி, "ஆம், பிரபு!...அது குற்றமாகயிருந்தால்.." என்றாள்.

சக்கரவர்த்தி சிரித்தார்; அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாக தொனித்தது.

"பிரம்மராயரே! இந்தப் பெண் சொல்லுவதைக் கேளுங்கள்! 'அது குற்றமாயிருந்தால்' என்கிறாள். இளவரசன் உயிரை இவள் காப்பாற்றியது 'குற்றமாயிருந்தால்' என்கிறாள். என் மகன் கடலில் முழுகிச் செத்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் போலிருக்கிறது. அப்படிப்பட்ட ராட்சதன் நான் என்று இவளிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள்? முதன்மந்திரி, நாட்டு மக்கள் எல்லாம் இப்படித்தான் என்னைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறார்களா?" என்று கேட்டார் சுந்தர சோழர்.

"பிரபு! இவள் பயத்தினால் ஏதோ சொல்லிவிட்டாள். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பெண்ணே! இளவரசரை நீ காப்பாற்றியதற்காக இந்தச் சோழ நாடே உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது. சக்கரவர்த்தியும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதற்காக நீ என்ன பரிசு வேண்டுமோ, அதைக் கேட்டுப் பெறலாம். இப்போது, நடந்ததையெல்லாம் சக்கரவர்த்தியிடம் விவரமாகக் கூறு! பயப்படாமல் சொல்லு!" என்றார்.

"முதலில் ஒரு விஷயத்தை இந்தப் பெண் சொல்லட்டும். இளவரசரைக் கடலிலிருந்து காப்பாற்றியதாகச் சொல்லுகிறாளே, அவன் இளவரசன் தான் என்பது இவளுக்கு எப்படி தெரியும்? முன்னம் பார்த்ததுண்டா!" என்றார் சக்கரவர்த்தி.

"ஆம், பிரபு! முன்னம் ஈழ நாட்டுக்கு வீரர்களுடன் இளவரசர் கப்பல் ஏறியபோது சில தடவை பார்த்திருக்கிறேன். ஒரு முறை இளவரசர் என்னைச் 'சமுத்திர குமாரி' என்று அழைத்ததும் உண்டு!" என்று கூறினாள் பூங்குழலி.

"ஆகா! இந்தப் பெண்ணுக்கு இப்போதுதான் பேச்சு வருகிறது!" என்றார் சோழ சக்கரவர்த்தி.

பின்னர், முதன்மந்திரி அடிக்கடி தூண்டிக் கேள்வி கேட்டதன் பேரில் பூங்குழலி வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்துச் சென்றதிலிருந்து இளவரசரை நாகப்பட்டினத்தில் கொண்டு போய் விட்டது வரையில் எல்லாவற்றையும் கூறினாள். ஆனால் அநிருத்தர் எச்சரிக்கை செய்திருந்தபடியால் மந்தாகினியைப் பற்றி மட்டும் ஒன்றும் சொல்லவில்லை.

எல்லாம் கேட்ட பின்னர் சக்கரவர்த்தி, "பெண்ணே! சோழ குலத்துக்கு இணையில்லாத உதவி செய்திருக்கிறாய். அதற்கு ஈடாக உனக்குச் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஆனால் ஒன்று கேட்கிறேன், சொல்! கோடிக்கரையில் இளவரசரைக் கரை சேர்ந்த பிறகு இங்கே ஏன் அழைத்து வரவில்லை? ஏன் நாகப்பட்டினத்துக்கு அழைத்துப் போனாய்?" என்றார்.

"சுவாமி! இளவரசர் கொடிய சுரத்தினால் நினைவு இழந்திருந்தார். நாகப்பட்டினம் புத்த விஹாரத்தில் நல்ல வைத்தியர்கள் இருக்கிறார்கள் என்று அங்கே அழைத்துப் போனோம். பிக்ஷுக்கள் இளவரசரிடம் மிக்க பக்தி உள்ளவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இளவரசரை அந்த நிலையில் ஓடத்தில்தான் ஏற்றிப் போகலாமே தவிர, குதிரை மேலோ, வண்டியிலோ ஏற்றி அனுப்ப முடிந்திராது..."

"அச்சமயம் கோடிக்கரையில் பழுவேட்டரையர் இருந்தாரே, அவரிடம் ஏன் தெரிவிக்கவில்லை...?"

பூங்குழலி சற்றுத் தயங்கிவிட்டுப் பின்னர் கம்பீரமான குரலில், "சக்கரவர்த்தி! பழுவேட்டரையர் இளவரசருக்கு விரோதி என்று நாடெல்லாம் அறிந்திருக்கிறது. அப்படியிருக்க, இளவரசரைப் பழுவேட்டரையரிடம் ஒப்புவிக்க எவ்விதம் எனக்கு மனம் துணியும்?" என்றாள்.

"ஆம், ஆம்! என் புதல்வர்களுக்குப் பழுவேட்டரையர்கள் மட்டுமா விரோதிகள்? நான் கூடத்தான் விரோதி. உலகம் அப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறது. அது போகட்டும்! முதன்மந்திரி நேற்று இங்கு அடித்த புயல் நாகப்பட்டினத்தில் இன்னும் கடுமையாக இருந்திருக்குமே? இளவரசனுக்கு மறுபடியும் ஏதேனும் தீங்கு நேரிடாமலிருக்க வேண்டுமே என்று என் நெஞ்சம் துடிக்கிறது."

"பிரபு, சோழ நாடு அதிர்ஷ்டம் செய்த நாடு. இப்போது இந்நாட்டுக்கு மகத்தான நல்ல யோகம் ஆகையால்.."

"சோழ நாடு அதிர்ஷ்டம் செய்த நாடுதான்; ஆனால் நான் துரதிர்ஷ்டசாலியாயிற்றே, பிரம்மராயரே! நான் கண்ணை மூடுவதற்குள் என் புதல்வர்களை ஒரு தடவை பார்க்க விரும்புகிறேன்..."

"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள், இத்தகைய புதல்வர்களையும், புதல்வியையும் பெற்ற தங்களைப் போன்ற பாக்கியசாலி யார்? இதோ இன்றைக்கே ஆட்களை அனுப்பி வைக்கிறேன். இளவரசரைப் பத்திரமாய் அழைத்து வருவதற்கு என் சீடன் திருமலையையும் கூட அனுப்புகிறேன்!" என்றார் முதன்மந்திரி.

அப்போதுதான் சக்கரவர்த்தி ஆழ்வார்க்கடியான் மீது தம் பார்வையைச் செலுத்தினார். "ஆகா! இவன் இத்தனை நேரமும் இங்கே நிற்கிறானா? சின்னப் பழுவேட்டரையர் இவனைப் பற்றித்தானே சொன்னார்? பழுவூர் அரண்மனை மதிளில் ஏறிக் குதித்தவன் இவன்தானே?"

"பிரபு, அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. அதைப் பற்றி நாளைக்குத் தெரியப்படுத்த அனுமதி கொடுங்கள். ஏற்கனவே மிக்க களைப்படைந்து விட்டீர்கள்!" என்றார் முதன்மந்திரி.

இச்சமயத்தில் மலையமான் மகளும், குந்தவையும் வானதியும் சக்கரவர்த்தி அறைக்குள்ளே வந்தார்கள். "முதன்மந்திரி! இன்றைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். சக்கரவர்த்திக்கு அதிகக் களைப்பு உண்டாகக் கூடாது என்று வைத்தியர்கள் கண்டிப்பாகக் கட்டளையிட்டிருக்கிறார்கள்!" என்று மகாராணி கூறினாள்.

பின்னர், "இந்தப் பெண் இனிமையாகப் பாடுவாளாம். ஒரு தேவாரப் பாடல் பாடச் சொல்லுங்கள். சக்கரவர்த்திக்குக் கானம் மிகவும் பிடிக்கும்" என்றாள்.

"ஆகட்டும் தாயே! என் சீடன் கூட ஆழ்வார் பாசுரங்களை நன்றாகப் பாடுவான் அவனையும் பாடச் சொல்கிறேன்!" என்றார் முதன்மந்திரி.

பூங்குழலி "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்ற அப்பர் தேவாரத்தைப் பாடினாள்.

ஆழ்வார்க்கடியான் "திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்" என்ற பாசுரத்தைப் பாடினான்.

பாடல் ஆரம்பித்ததும் சுந்தர சோழர் கண்களை மூடிக் கொண்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் முகத்தில் சாந்தியும் நிம்மதியும் காணப்பட்டன. மூச்சு நிதானமாகவும் ஒரே மாதிரியாகவும் வந்தது. நல்ல நித்திரையில் ஆழ்ந்து விட்டார் என்று தெரிந்தது.

இருட்டுகிற சமயமாகி விட்டபடியால் தாதிப் பெண் விளக்கேற்றிக் கொண்டு வந்து வைத்தாள். முதன்மந்திரி உள்ளிட்ட அனைவரும் அவ்வறையிலிருந்து வெளியேறினார்கள். மலையமான் மகள் மட்டும் சிறிது நேரம் சக்கரவர்த்தியின் அருகில் இருந்தாள். அடுத்த அறையின் வாசற்படியிலிருந்து குந்தவை அவளைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்யவே அவளும் எழுந்து சென்றாள். பின்னர், அந்த அறையில் மௌனம் குடிகொண்டது. சுந்தர சோழர் மூச்சுவிடும் சப்தம் மட்டும் இலேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

முதல் நாளிரவு சற்றும் தூங்காத காரணத்தினால் களைத்துச் சோர்ந்திருந்தபடியினாலும், பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் பாடிய தமிழ்ப் பாசுரங்களின் இனிமையினாலும் சுந்தர சோழர் அந்த முன் மாலை நேரத்தில் நித்திரையில் ஆழ்ந்தாரென்றாலும், அவருடைய துயில் நினைவற்ற அமைதி குடிகொண்ட துயிலாக இல்லை. பழைய நினைவுகளும் புதிய நினைவுகளும் உண்மை நிகழ்ச்சிகளும் உள்ளக் கற்பனைகளும் கனவுகளாக உருவெடுத்து அவரை விதவிதமான விசித்திர அனுபவங்களுக்கு உள்ளாக்கின.

அமைதி குடிகொண்டிருந்த நீலக்கடலில் அவரும் பூங்குழலியும் படகில் போய்க் கொண்டிருந்தார்கள். பூங்குழலி படகைத் தள்ளிக் கொண்டே கடலின் ஓங்கார சுருதிக்கு இசைய ஒரு கீதம் பாடிக் கொண்டிருந்தாள்.

"சோர்வு கொள்ளாதே மனமே - உன்
ஆர்வ மெல்லாம் ஒருநாள் பூரணமாகும்!
காரிருள் சூழ்ந்த நீளிரவின் பின்னர்
காலை மலர்தலும் கண்டனை அன்றோ
தாரணி உயிர்க்கும் தாமரை சிலிர்க்கும்
அளிக்குலம் களிக்கும் அருணனும் உதிப்பான்!"

இந்தக் கீதத்தைக் கேட்டுச் சுந்தர சோழர் புளகாங்கிதம் அடைந்தார். அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த சோர்வு நீங்கி உற்சாகம் ததும்பியது. "இன்னும் பாடு! இன்னும் பாடு!" என்று பூங்குழலியைத் தூண்டிக் கொண்டிருந்தார். ஆழ் கடலில் மிதந்து படகு போய்க் கொண்டேயிருந்தது.

திடீரென்று இருள் சூழ்ந்தது; பெரும் காற்று அடிக்கத் தொடங்கியது. சற்று முன் அமைதியாக இருந்த கடலில் மலை மலையாக அலைகள் எழுந்து விழுந்தன. தொட்டில் ஆடுவது போல் சற்று முன்னால் ஆடிக் கொண்டிருந்த படகு இப்போது மேக மண்டலத்தை எட்டியும் அதல பாதாளத்தில் விழுந்தும் தத்தளித்தது. படகில் இருந்த பாய்மரங்களின் பாய்கள் சுக்குநூறாகக் கிழிந்து காற்றில் அடித்துக் கொண்டு போகப்பட்டன. ஆயினும் படகு மட்டும் கவிழாமல் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் பூங்குழலியின் படகு விடும் திறத்தைச் சுந்தர சோழ சக்கரவர்த்தி வியந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

காற்று வந்த வேகத்தைப் போலவே சட்டென்று நின்றது. கடலின் கொந்தளிப்பு வரவரக் குறைந்தது. மீண்டும் பழையபடி அமைதி ஏற்பட்டது. கீழ்திசையில் வான்முகட்டில் அருணோதயத்துக்கு அறிகுறி தென்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் தங்கச் சூரியன் உதயமானான். கடலின் நீரும் பொன் வண்ணம் பெற்றுத் தகதகா மயமாகத் திகழ்ந்தது. சற்று தூரத்தில் பசுமையான தென்னந் தோப்புக்கள் சூழ்ந்த தீவுகள் சில தென்பட்டன. அத்தீவுகளிலிருந்து புள்ளினங்கள் மதுர மதுரமான குரல்களில் இசைத்த கீதங்கள் எழுந்தன. ஈழ நாட்டின் கரையோரமுள்ள தீவுகள் அவை என்பதைச் சுந்தர சோழர் உணர்ந்து கொண்டார். அவற்றில் ஒரு தீவிலேதான் முந்தைப் பிறவியில் அவர் மந்தாகினியைச் சந்தித்தார் என்பது நினைவு வந்தது.

அந்தத் தீவின் பேரில் பார்வையைச் செலுத்திக் கொண்டே "பூங்குழலி! கடைசியில் என்னைச் சொர்க்கலோகத்துக்கே கொண்டு வந்து சேர்த்து விட்டாயல்லவா? உனக்கு நான் எவ்விதத்தில் நன்றி செலுத்தப் போகிறேன்?" என்றார். பூங்குழலி மறுமொழி சொல்லாதது கண்டு அவள் பக்கம் திரும்பிப் பார்த்தார் அப்படியே ஸ்தம்பிதமாகிவிட்டார். ஏனெனில், படகில் இன்னொரு பக்கத்தில் இருந்தவள் பூங்குழலி இல்லை. அவள் மந்தாகினி! முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தாளோ, அப்படியே இன்றும் இருந்தாள்!

சில நிமிஷ நேரம் திகைத்திருந்து விட்டு, "மந்தாகினி நீதானா? உண்மையாக நீதானா? பூங்குழலி மாதிரி மாற்றுருவம் கொண்டு என்னை அழைத்து வந்தவள் நீதானா?" என்றார். தாம் பேசுவது அவளுக்குக் காது கேளாது என்பது நினைவு வந்தது. ஆயினும் உதடுகளின் அசைவிலிருந்து அவர் சொல்வது இன்னதென்பதை அறிந்து கொண்டவள் போல மந்தாகினி புன்னகை புரிவதைக் கண்டார்.

அவள் அருகில் நெருங்கிச் செல்வதற்காக எழுந்து செல்ல முயன்றார். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. தம் கால்கள் பயனற்றுப் போயின என்பது நினைவு வந்தது.

"மந்தாகினி! நான் நோயாளியாய்ப் போய் விட்டேன். உன்னிடம் என்னால் வர முடியவில்லை; நீதான் என் அருகில் வரவேண்டும். இதோ பார் மந்தாகினி! இனி ஒரு தடவை மூன்று உலகத்துக்கும் சக்கரவர்த்தியாக முடிசூட்டுவதாய் என்னை யாரேனும் அழைத்தாலும் நான் உன்னை விட்டுப் போகமாட்டேன். இந்த ஈழ நாட்டுக்கு அருகிலுள்ள தீவுகளுக்கு நாம் போக வேண்டாம். இங்கே யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். படகை நடுக்கடலில் விடு! வெகுதூரம், தொலைதூரம், ஏழு கடல்களையும் தாண்டிச் சென்று அப்பால் உள்ள தீவாந்தரத்துக்கு நாம் போய்விடுவோம்!" என்றார் சுந்தர சோழர். அவர் கூறியதையெல்லாம் தெரிந்து கொண்டவள் போல் மந்தாகினி புன்னகை புரிந்தாள்.

காவேரி நதியில் இராஜ ஹம்ஸத்தைப் போல் அலங்கரித்த சிங்காரப் படகில் சுந்தர சோழ சக்கரவர்த்தியும் அவருடைய பட்டத்து ராணியும் குழந்தைகளும் உல்லாசப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். கான வித்தையில் தேர்ந்தவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். சுந்தர சோழர் கான இன்பத்தில் மெய் மறந்து கண்களை மூடிக் கொண்டிருந்தார். திடீரென்று, "ஐயோ! ஐயோ!" என்ற கூக்குரலைக் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தார். "குழந்தையைக் காணோமே! அருள்மொழியைக் காணோமே" என்று பல குரல்கள் முறையிட்டன. சுந்தர சோழர் பரபரப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தார். காவேரியின் வெள்ளத்தில் அவருடைய செல்வக் குழந்தையான அருள்மொழியை யாரோ ஒரு ஸ்திரீ கையினால் பிடித்துக் கொண்டு தண்ணீரில் அமுக்கிக் கொல்ல முயன்று கொண்டிருந்தாள். சொல்ல முடியாத பயங்கரத்தை அடைந்த சுந்தர சோழர் காவேரி வெள்ளத்தில் குதிக்க எண்ணினார். அச்சமயம் அந்த ஸ்திரீயின் முகம் அவருக்குத் தெரிந்தது. அது விகாரத்தை அடைந்த மந்தாகினியின் முகம் என்பதை அறிந்து கொண்டார். உடனே அவருடைய உடல் ஜீவசக்தி அற்ற ஜடப் பொருளைப் போல் ஆயிற்று. தண்ணீரில் குதிக்கப் போனவர் படகிலேயே தடால் என்று விழுந்தார்.

படகிலே விழுந்த அதிர்ச்சியினாலே தானோ, என்னமோ, சுந்தர சோழர் துயிலும் கனவும் ஒரே காலத்தில் நீங்கப் பெற்றார். புயல் மழை காரணமாக வழக்கத்தைவிடக் குளிர்ச்சி மிகுந்திருந்த அவ்வேளையில் அவருடைய தேகமெல்லாம் வியர்த்திருந்தது. இவ்வளவு நேரமும் கண்ட தோற்றங்கள் எல்லாம் கனவில் கண்டவை என்பதை உணர்ந்தபோது அவருடைய நெஞ்சிலிருந்து ஒரு பெரும் பாரத்தை எடுத்தது போன்ற ஆறுதல் ஏற்பட்டது. எதிரே பார்த்தார் அறையில் ஒருவரும் இருக்கவில்லை. தீபம் மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தாம் தூங்கிவிட்ட படியால் பக்கத்து அறையில் இருக்கிறார்கள் போலும்! கையைத் தட்டி அழைக்கலாமா என்று எண்ணினார். "சற்றுப் போகட்டும்; கனவுத் தோற்றத்தின் அதிர்ச்சிகள் நீங்கட்டும்" என்று எண்ணிக் கொண்டார்.

அப்போது மேல் மச்சியிலிருந்து ஏதோ மிக மெல்லிய சப்தம் கேட்டது. அது என்னவாயிருக்கும்? முகத்தைச் சிறிதளவு திருப்பிச் சப்தம் வந்த திக்கை நோக்கினார். மேல் மச்சில் தூணைப் பிடித்துக் கொண்டு விளிம்பின் வழியாக ஓர் உருவம் இறங்கி வருவது போலத் தோன்றியது.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 32

"ஏன் என்னை வதைக்கிறாய்?"

சுந்தர சோழர் மிக்க வியப்பு அடைந்தார். மேன்மாடத்திலிருந்து அவ்வாறு தூண்களின் விளிம்பின் வழியாக யார் இறங்கி வருகிறது? எதற்காக வரவேண்டும்! இத்தனை நேரம் கண்ட குழப்பமான கனவுகள் நினைவு வந்தன. இதுவும் கனவிலே காணும் தோற்றமா? இன்னும் தாம் தூக்கத்திலிருந்து நன்றாக விழித்துக் கொள்ளவில்லையா? இந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகச் சுந்தர சோழர் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டார். ஒரு நிமிஷ நேரம் அவ்வாறு இருந்துவிட்டுக் கண்களை நன்றாகத் திறந்து அந்த உருவம் இறங்கிய திக்கைப் பார்த்தார். அங்கே இப்போது ஒன்றும் இல்லை. ஆகா! அந்தத் தோற்றம் வெறும் பிரமையாகத்தான் இருக்க வேண்டும்.

அவர் உறங்குவதற்கு முன்னால் நிகழ்ந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டார். முதன்மந்திரியும் அவருடைய சீடனும் இனிய குரலில் பாடிய தியாகவிடங்கரின் மகளும் தாம் தூங்கிய பிறகு போய்விட்டார்கள் போலும். மலையமான் மகளும் தாதிமார்களும் வழக்கம் போல் அடுத்த அறையிலே காத்திருக்கிறார்கள் போலும். குந்தவையைக் குறித்துத் தாம் முதன்மந்திரியிடம் குறை கூறியதைச் சக்கரவர்த்தி நினைத்துக் கொண்டு சிறிது வருத்தப்பட்டார். குந்தவை இணையற்ற அறிவும், முன் யோசனையும் படைத்தவள். இராஜ்யத்திலே குழப்பம் ஏற்படாமலிருக்கும் பொருட்டு இளவரசனை நாகப்பட்டினத்தில் இருக்கச் செய்திருக்கிறாள். அதைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண்டது தம்முடைய தவறு. தமது அறிவு சரியான நிலைமையில் இல்லை என்பது சில காலமாகச் சுந்தர சோழருக்கே தெரிந்திருந்தது. பின்னே, இளையபிராட்டியின் பேரில் கோபித்துக் கொள்வதில் என்ன பயன்? எதையும் அவளுடைய யோசனைப்படி செய்வதே நல்லது. இப்போது முக்கியமாகச் செய்ய வேண்டியது நாகப்பட்டினத்திலிருந்து இளவரசனை அழைத்து வர வேண்டியது. கடவுளே! புயலினால் அவனுக்கு யாதொரு ஆபத்தும் நேரிடாமல் இருக்க வேண்டுமே! உடன் குந்தவையிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். பக்கத்து அறையில் இருப்பவர்களை அழைப்பதற்காகச் சுந்தர சோழர் கையைத் தட்ட எண்ணினார்....

ஆனால் இது என்ன? தம்முடைய தலைமாட்டில் யாரோ நடமாடுவதுபோல் தோன்றுகிறதே! ஆனால் காலடிச் சத்தம் மிக மெதுவாக - பூனை, புலி முதலிய மிருகங்கள் நடமாடுவது போல் கேட்கிறது. யாராயிருக்கும்? ஒருவேளை மலையமான் மகளா? தம் குமாரியா? தாதிப் பெண்ணா? தமது உறக்கத்தைக் கலைக்கக் கூடாது என்று அவ்வளவு மெதுவாக அவர்கள் நடக்கிறார்களா?

"யார் அது?" என்று மெதுவான குரலில் சுந்தர சோழர் கேட்டார் அதற்குப் பதில் இல்லை.

"யார் அது? இப்படி எதிரே வா!" என்று சற்று உரத்த குரலில் கூறினார் அதற்கும் மறுமொழி இல்லை.

சுந்தர சோழருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அது அவருக்குக் குழப்பத்தையும் திகிலையும் உண்டாக்கியது. 'ஒருவேளை அவளாக இருக்குமோ? அவளுடைய ஆவியாக இருக்குமோ? கனவிலே தோன்றிய கிராதகி இப்போது நேரிலும் வந்து விட்டாளா? நள்ளிரவில் அல்லவா ஆடை ஆபரண பூஷிதையாக முன் மாலையிலேயே வந்துவிட்டாளா? அல்லது ஒருவேளை நள்ளிரவு ஆகிவிட்டதா? அவ்வளவு நேரம் தூங்கி விட்டோ மா? அதனாலேதான் ஒருவேளை மலையமான் மகளும், தம் குமாரியும் இங்கே இல்லையோ? தாதிப் பெண்களும் தூங்கி விட்டார்களோ? ஐயோ! அவர்கள் ஏன் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போனார்கள்? அந்தப் பாதகி கரையர் மகளாக இருந்தால் என்னை இலேசில் விடமாட்டாளே? உள்ளம் குமுறி வெறி கொள்ளும் வரையில் போகமாட்டாளோ?'

'அடிபாவி! உண்மையில் நீயாக இருந்தால் என் முன்னால் வந்து தொலை! என்னை எப்படியெல்லாம் வதைக்க வேண்டுமோ, அப்படியெல்லாம் வதைத்துவிட்டுப் போ! ஏன் பார்க்க முடியாதபடி தலைமாட்டில் உலாவி என் பிராணனை வாங்குகிறாய்? முன்னால் வா! இரத்த பலி கேட்பதற்காக வந்திருக்கிறாயா? வா! வா! நீ தான் மடியில் கத்தி வைத்திருப்பாயே? புலி கரடிகளைக் கொன்ற அதே கத்தியினால் என்னையும் கொன்றுவிட்டுப் போய்விடு! என் மக்களை மட்டும் ஒன்றும் செய்யாதே! நான் செய்த குற்றத்துக்காக அவர்களைப் பழி வாங்காதே! அவர்கள் உனக்கு ஒரு துரோகமும் செய்யவில்லையடி! நான்தான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறிக் கடலில் விழுந்து சாகும்படி நானா சொன்னேன்? நீயே செய்த அந்தக் கோரமான காரியத்துக்கு என்னை எதற்காக வதைக்கிறாய்?..."

சுந்தர சோழர் தம்முடைய தலைமாட்டில் வெகு சமீபத்தில் ஓர் உருவம் வந்து நிற்பதை உணர்ந்தார். திகிலினால் அவருடைய உடம்பு நடுங்கியது. வயிற்றிலிருந்து குடல் மேலே ஏறி நெஞ்சை அடைத்துக் கொண்டது போலிருந்தது! நெஞ்சு மேலே ஏறித் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண் விழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போலிருந்தது. அவள்தான் வந்து நிற்கிறாள் சந்தேகமில்லை. அவளுடைய ஆவிதான் வந்து நிற்கிறது. தாம் நினைத்தபடியே கடைசியாக இரத்தப் பழி வாங்குவதற்கு வந்திருக்கிறது. தம் நெஞ்சில் கத்தியால் குத்தித் தம்மைக் கொல்லப் போகிறது. அல்லது வெறுங் கையினாலேயே தம் தொண்டையை நெறித்துக் கொல்லப் போகிறதோ, என்னமோ? எப்படியாவது அவள் எண்ணம் நிறைவேறட்டும்! தாம் இனி உயிர் வாழ்ந்திருப்பதில் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. அந்தப் பேய் தம்மைப் பழி வாங்கி விட்டுப் போனால் தம் மக்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடும் அல்லவா?

இன்னும் சிறிது நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தால், மந்தாகினிப் பேயின் ஆவி வடிவம் தம் கண்களுக்குப் புலனாகும் என்று சுந்தர சோழருக்குத் தோன்றியது. தலைமாட்டில் அவ்வளவு சமீபத்தில் அந்த உருவம் வந்து நிற்பது போலிருந்தது. அதன் நிழல் கூட அவர் முகத்திலே விழுந்தது போலிருந்தது. ஒரு கணம் நிமிர்ந்து பார்ப்பதற்கு எண்ணினார் அவ்வளவு தைரியம் வரவில்லை. "நான் கண்களை இறுக மூடிக் கொள்கிறேன். அது செய்வதை செய்துவிட்டுப் போகட்டும்" என்று தீர்மானித்துக் கண்களை மூடிக் கொண்டார்.

சற்று நேரம் அப்படியே இருந்தார்; அவர் எதிர்பார்த்தது போல் அவர் நெஞ்சில் கூரிய கத்தி இறங்கவும் இல்லை. அவர் தொண்டையை இரண்டு ஆவி வடிவக் கைகள் பிடித்து நெறிக்கவும் இல்லை. அந்த உருவம் அவர் தலைமாட்டில் நின்ற உருவம் அங்கிருந்து நகர்ந்து போய்விட்டதாகத் தோன்றியது. ஆகா, கரையர் மகள் அவ்வளவு சுலபமாக என்னை விட மாட்டாள். இன்னும் எத்தனை காலம் என்னை உயிரோடு வைத்திருந்து சித்திரவதை செய்ய வேண்டுமோ செய்வாள்? இன்றைக்கு என் கண்ணில் படாமலே திரும்பித் தொலைந்து போய்விட்டால் போலும்! சரி, சரி யாரையாவது கூப்பிடலாம். யாராவது இந்த அறைக்குள்ளே வந்தால், இன்னும் இவள் ஒரு வேளை இங்கேயே இருந்தாலும் மறைந்து போய்த் தொலைவாள்!

"யார் அங்கே? எல்லாரும் எங்கே போனீர்கள்?" என்று உரத்த குரலில் கூவிக் கொண்டே சுந்தர சோழர் கண்களைத் திறந்தார்.

ஆகா! அவர் எதிரே, மஞ்சத்தில் கீழ்ப்புரத்தில், நிற்பது யார்? அவள்தான் சந்தேகமில்லை; அந்த ஊமையின் பேய்தான், தலைவிரி கோலமாக நிற்கிறது பேய்! அதன் நெற்றியிலே இரத்தம் கொட்டுகிறது! "இரத்தப் பழி வாங்க வந்தேன்!" என்று சொல்லுகிறது போலும்! சுந்தர சோழர் உரத்த குரலில் வெறி கொண்டவரைப் போல் அந்த ஆவி உருவத்தைப் பார்த்த வண்ணமாகக் கத்தினார்:

"அடி ஊமைப் பேயே! நீ உயிரோடிருந்த போதும் வாய் திறந்து பேசாமல் என்னை வதைத்தாய்; இப்பொழுதும் என்னை வதைக்கிறாய்! எதற்காக வந்திருக்கிறாய், சொல்லு! இரத்தப் பழி வாங்க வந்திருந்தால் என்னைப் பழி வாங்கிவிட்டுப் போ; ஏன் சும்மா நிற்கிறாய்? ஏன் முகத்தை இப்படிப் பரிதாபமாக வைத்துக் கொண்டிருக்கிறாய்? என்னிடம் ஏதாவது கேட்க வந்திருக்கிறாயா? அப்படியானால் சொல்லு! வாய் திறந்து பேச முடியவில்லையென்றால், சமிக்ஞையினாலே சொல்லு! வெறுமனே நின்று கொண்டு என்னை வதைக்காதே. உன் கண்ணில் ஏன் கண்ணீர் ததும்புகிறது? ஐயையோ! விம்மி அழுகிறாயா, என்ன? என்னால் பொறுக்க முடியவில்லையே! ஏதாவது சொல்லுகிறதாயிருந்தால் சொல்லு! இல்லாவிட்டால் தொலைந்து போ. போகமாட்டாயா; ஏன் போக மாட்டாய்? என்னை என்ன செய்ய வேண்டுமென்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாய்? என் அருமை மகனை சின்னஞ்சிறு குழந்தையை காவேரி வெள்ளத்தில் அமுக்கிக் கொல்லப் பார்த்தவள்தானே நீ! கடவுள் அருளால் உன் எண்ணம் பலிக்கவில்லை. இனியும் பலிக்கப் போவதில்லை! அடி பாதகி! இன்னும் எதற்காக என் நெஞ்சைப் பிளக்கிறவள்போல பார்த்துக் கொண்டு இருக்கிறாய்? போ! போ! போக மாட்டாயா? போகமாட்டாயா! இதோ உன்னைப் போகும்படி செய்கிறேன் பார்!..."

இப்படிச் சொல்லிக் கொண்டே சுந்தர சோழர் தமதருகில் கைக்கெட்டும் தூரத்தில் என்ன பொருள் இருக்கிறதென்று பார்த்தார். பஞ்ச உலோகங்களினால் செய்த அகல் விளக்கு ஒன்றுதான் அவ்விதம் கைக்குக் கிடைப்பதாகத் தென்பட்டது. அதை எடுத்துக் கொண்டு, "போ! பேயே போ!" என்று அலறிக் கொண்டு மந்தாகினிப் பேயின் முகத்தைக் குறி பார்த்து வீசி எறிந்தார். திருமால் எறிந்த சக்ராயுதத்தைப் போல் அந்தத் தீபம் சுடர்விட்டு எரிந்த வண்ணம் அந்தப் பெண்ணுருவத்தை நோக்கிப் பாய்ந்து சென்றது.

அப்போது சுந்தர சோழர் பேய் என்று கருதிய அந்தப் பெண் உருவத்தில் வாயிலிருந்து ஓர் ஓலக்குரல் கிளம்பிற்று.

சுந்தர சோழருடைய ஏழு நாடியும் - ஒடுங்கி, அவருடைய உடலும் சதையும் எலும்பும் எலும்புக்குள்ளே இருந்த ஜீவ சத்தும் உறைந்து போயின. தீபம் அந்த உருவத்தின் முகத்தின் மீது விழவில்லை. சற்று முன்னாலேயே தரையில் விழுந்து உருண்டு 'டணங் டணங்' என்று சத்தமிட்டது.

அகல் விளக்கு அணைந்துவிட்ட போதிலும், நல்ல வேளையாக அந்த அறையின் இன்னொரு பக்கத்தில் வேறொரு தீபம் எரிந்து கொண்டிருந்தது. அதன் மங்கலான வெளிச்சத்தில் சுந்தர சோழர் உற்றுப் பார்த்து, மந்தாகினியின் ஆவி வடிவம் இன்னும் அங்கேயே நிற்பதைக் கண்டார். அதனுடைய முகத்தில் விவரிக்க முடியாத வேதனை ஒரு கணம் காணப்பட்டது. பின்னர் அது கடைசி முறையாக ஒரு தடவை சுந்தர சோழரை அளவில்லாத ஆதங்கத்துடன் பார்த்துவிட்டுத் திரும்பி அங்கிருந்து போவதற்கு யத்தனித்தது.

அந்த நேரத்திலேதான் சுந்தர சோழரின் உள்ளத்திலே முதன் முதலாக ஒரு சந்தேகம் உதித்தது. இது மந்தாகினியின் ஆவி உருவமா? அல்லது அவளை வடிவதில் முழுக்க முழுக்க ஒத்த இன்னொரு ஸ்திரீயா? அவளுடன் இரட்டையாகப் பிறந்த சகோதரியா? அல்லது ஒரு வேளை...ஒரு வேளை...அவளேதானா? அவள் சாகவில்லையா? இன்னமும் உயிரோடிருக்கிறாளா? தாம் நினைத்ததெல்லாம் தவறா? அவளேயாக இருக்கும் பட்சத்தில் அவள் பேரில் தாம் விளக்கை எடுத்து எறிந்தது எவ்வளவு கொடுமை! அவளுடைய முகத்தில் சற்று முன் காணப்பட்ட பரிதாபம் மாறி, விவரிக்க முடியாத வேதனை தோன்றியதே? தம்முடைய கொடூரத்தை எண்ணி அவள் வேதனைப் பட்டாளோ? ஆகா! அதோ அவள் திரும்பிப் போக யத்தனிக்கிறாள். எந்தப் பக்கம் போகலாம் என்று பார்க்கிறாள்.

"பெண்ணே! நீ கரையர் மகள் மந்தாகினியா? அல்லது அவளுடைய ஆவி வடிவமா? அல்லது அவளுடன் பிறந்த சகோதரியா? நில், நில்! போகாதே! உண்மையைச் சொல்லிவிட்டுப் போ!..."

இவ்விதம் சுந்தர சோழர் பெரும் குரலில் கூவிக் கொண்டிருந்த போது தடதடவென்று பலர் அந்த அறைக்குள் புகுந்தார்கள். மலையமான் மகள், குந்தவை, வானதி, பூங்குழலி, முதன்மந்திரி, அவருடைய சீடன், அத்தனை பேரும் அறைக்குள்ளே வருகிறார்கள் என்பதைச் சுந்தர சோழர் ஒரு கண நேரத்தில் தெரிந்து கொண்டார்.

"நிறுத்துங்கள்! அவள் ஓடிப் போகாமல் தடுத்து நிறுத்துங்கள்! அவள் யார், எதற்காக வந்தாள் என்பதைக் கேளுங்கள்!" என்று சுந்தர சோழர் அலறினார்.

உள்ளே வந்தவர்கள் அவ்வளவு பேரும் ஒரு கணம் வியப்பினால் திகைத்துப் போய் நின்றார்கள். சுந்தர சோழரின் வெறி கொண்ட முகத் தோற்றமும், அவருடைய அலறும் குரலில் தொனித்த பயங்கரமும் அவர்களுக்குப் பீதியை உண்டாக்கின. மந்தாகினி தேவியை அங்கே பார்த்தது அவர்களை வியப்பு வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்தது. இன்னது செய்வது என்று அறியாமல் எல்லாரும் சற்று நேரம் அசைவற்று நின்றார்கள். முதன்மந்திரி அநிருத்தர், நிலைமை இன்னதென்பதையும் அது எவ்வாறு நேர்ந்திருக்கக் கூடும் என்பதையும் ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொண்டார். அவர் பூங்குழலியைப் பார்த்து, "பெண்ணே! இவள்தானே உன் அத்தை?" என்றார்.

"ஆம், ஐயா!" என்றாள் பூங்குழலி.

"திருமலை! ஏன் மரம் போல நிற்கிறாய்? மந்தாகினி தேவி ஓடப் பார்க்கிறாள்! அவளைத் தடுத்து நிறுத்து, சக்கரவர்த்தியின் கட்டளை!" என்றார்.

ஆழ்வார்க்கடியான் தன் வாழ்நாளில் முதன்முறையாகக் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தான்.

"ஐயா! அதைக் காட்டிலும் புயற் காற்றைத் தடுத்து நிறுத்தும்படி எனக்குக் கட்டளையிடுங்கள்!" என்றான்.

இதற்குள் பூங்குழலி சும்மா இருக்கவில்லை. ஒரே பாய்ச்சலாக ஓடிச் சென்று அத்தையின் தோளைப் பிடித்துக் கொண்டாள். மந்தாகினி அவளை உதறித் தள்ளிவிட்டு ஓடினாள்.

ஆழ்வார்க்கடியான் சட்டென்று ஒரு காரியம் செய்தான். சற்று முன்னால் முதன்மந்திரி முதலியவர்கள் நுழைந்து வந்த கதவண்டை சென்று அதைச் சாத்திக் தாளிட்டான். பிறகு கதவை யாரும் திறக்க முடியாதபடி கைகளை விரித்துக் கொண்டு நின்றான். வேடர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட மானைப் போல் நாலுபுறமும் பார்த்து மிரண்டு விழித்தாள் மந்தாகினி. தப்பிச் செல்வதற்கு வேறு வழி இல்லை என்று, தான் இறங்கி வந்த வழியாக ஏறிச் செல்ல வேண்டியதுதான் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். அவள் மேல் மாடியை நோக்கிய பார்வையிலிருந்து அவளுடைய உத்தேசத்தை மற்றவர்களும் அறிந்து கொண்டார்கள்.

சுந்தர சோழர், "பிடியுங்கள்! அவளைப் பிடித்து நிறுத்துங்கள்! அவள் எதற்காக வந்தாள், யாரைப் பழிவாங்க வந்தாள் என்று கேளுங்கள்!" என்று மேலும் கத்தினார். தூணின் வழியாக மேல் மாடத்துக்கு ஏறிச் செல்ல ஆயத்தமாயிருந்த மந்தாகினி தேவியிடம் மறுபடியும் பூங்குழலி ஓடி நெருங்கினாள். இம்முறை அவளைப் பிடித்து நிறுத்துவதற்குப் பதிலாகப் பூங்குழலி கையினால் சமிக்ஞை செய்து ஏதோ கூற முயன்றாள். மந்தாகினி அதன் பொருளைத் தெரிந்து கொண்டவள் போல், கீழே விழுந்து கிடந்த அகல் விளக்கைச் சுட்டிக் காட்டினாள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த குந்தவை, "அப்பா! பெரியம்மாவின் பேரில் தாங்கள்தான் விளக்கை எடுத்து எறிந்தீர்களா?" என்று கேட்டாள்.

"ஆம் மகளே! அந்தப் பேய் என்னைப் பார்த்த பார்வையை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் விளக்கை எடுத்து எறிந்தேன்!" என்றார் சுந்தர சோழர்.

"தந்தையே! பேயுமல்ல; ஆவியும் அல்ல; உயிரோடிருக்கும் மாதரசியேதான். அப்பா! பெரியம்மா சாகவே இல்லை! முதன்மந்திரியைக் கேளுங்கள்! எல்லாம் சொல்லுவார்!" என்று குந்தவை கூறிவிட்டு, மந்தாகினியும் பூங்குழலியும் மௌன வாக்குவாதம் செய்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்தாள். உடனே அந்த இடத்துக்குப் பாய்ந்து சென்றாள்.

"மகளே! அவளிடம் போகாதே! அந்த ராட்சஸி உன்னை ஏதாவது செய்து விடுவாள்!" என்று சுந்தர சோழர் கூவிக் கொண்டே குந்தவையைத் தடுப்பதற்காகப் படுக்கையிலிருந்து பரபரப்புடன் எழுந்திருக்க முயன்றார்.

மலையமான் மகள் வானமாதேவி அவருடைய தோள்களை ஆதரவுடன் பிடித்துப் படுக்கையில் சாயவைத்தாள். "பிரபு! சற்றுப் பொறுங்கள்! தங்கள் திருமகளுக்கு அபாயம் ஒன்றும் நேராது!" என்று கூறினாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 33

"சோழர் குல தெய்வம்"

குந்தவை தன் அருகில் வந்ததும் மந்தாகினி அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தை இளையபிராட்டி செய்தாள். தரையில் விழுந்து மந்தாகினியின் பாதங்களைத் தொட்டு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாள். மந்தாகினியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. அவள் குனிந்து குந்தவையைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டாள். பிறகு இளையபிராட்டி அவளுடைய ஒரு கையைத் தோள் வரையில் சேர்த்துத் தன் கையினால் தழுவிப் பிணைத்துக் கொண்டு சக்கரவர்த்தி படுத்திருந்த இடத்தை நோக்கி வந்தாள்.

சக்கரவர்த்தினி இப்போதுதான் மந்தாகினியின் முகத்தை நன்றாகப் பார்த்தார். அவளுடைய நெற்றியிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டார்.

"சுவாமி! தாங்கள்தான் விளக்கை எறிந்து காயப்படுத்தி விட்டீர்களா? ஐயோ! என்ன காரியம் செய்தீர்கள்?" என்று மலையமான் மகள் அலறினாள்.

"இல்லை, இல்லை! நான் எறிந்த விளக்கு இவள் பேரில் விழவே இல்லை. அதற்கு முன்னாலேயே இவள் இரத்தக் காயத்துடன் வந்து நின்றாள். ஆனால் இந்தப் பாதகி என் பேரில் பழி சொன்னாலும் சொல்லுவாள்! நீங்களும் நம்பிவிடுவீர்கள். நீங்கள் எல்லோருமே அவளுடைய பட்சத்தில் இருக்கிறீர்கள். மலையமான் மகளே! இவளிடம் நீ கூடப் பரிதாபப்படுகிறாயே? இவள் யார் என்பது உனக்குத் தெரியுமா?" என்று சுந்தர சோழர் கேட்டார்.

"தெரியும், சுவாமி! இவர் என் குலதெய்வம் சோழர் குலத்துக்கே தெய்வம். என் அருமை மகன் காவேரியில் மூழ்கிப் போய் விடாமல் காப்பாற்றிக் கொடுத்த தெய்வம் அல்லவா?..."

"ஆகா! நீ கூட அவ்விதம் நம்புகிறாயா? குந்தவை ஒருவேளை அவ்வாறு உன்னிடம் சொன்னாளா?"

"நானே கண்ணால் பார்த்ததைத்தான் சொல்கிறேன், குந்தவையும் அப்போது குழந்தை அல்லவா? அவளுக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? அருள்மொழியைக் காப்பாற்றியது மட்டும் அல்ல, சோழ நாட்டுக்குத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த தெய்வமும் இவர்தானே! தாங்கள் பூதத் தீவில் காட்டுக் கரடிக்கு இரையாகாமல் காப்பாற்றிய தெய்வம் அல்லவா?"

"கடவுளே! அதுகூட உனக்குத் தெரியுமா? இவள் இத்தனை நாள் உயிரோடு இருந்து வருகிறாள் என்பதும் தெரியுமா?"

"சில காலமாகத் தெரியும். தெரிந்தது முதல் இத்தேவியை ஈழ நாட்டிலிருந்து அழைத்து வரும்படி முதன்மந்திரியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்..."

"அநிருத்தரே! இது என்ன மகாராணி சொல்லுவது? இவள் உண்மையிலேயே அந்தக் கரையர் மகள்தானா? இவள் உயிரோடு தானிருக்கிறாளா? இவள் இறந்துவிட்டாள் என்பது பொய்யா? இவள் ஆவி என்னை வந்து சுற்றுகிறதென்று நான் எண்ணியதெல்லாம் பிரமையா? ஏற்கெனவே என் அறிவு குழம்பியிருக்கிறது. எல்லாருமாகச் சேர்ந்து என்னை முழுப் பைத்தியமாக்கி விடாதீர்கள்?" என்றார் சக்கரவர்த்தி சுந்தர சோழர்.

"பிரபு! இவர் கரையர் மகள் என்பது உண்மைதான். இவர் இறக்கவில்லை என்பதும் உண்மைதான். சக்கரவர்த்தி! நான் பெரிய குற்றவாளி. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை ஆனாலும் தங்கள் கருணையினால்..."

"முதன்மந்திரி! இப்போது தெரிகிறது, கோடிக்கரையிலிருந்து நீர் பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு வரச் சென்னவள் இவள் தான்! பல்லக்கில் வந்தவள் அந்த ஓடக்காரப் பெண் என்று நீர் கூறியது உண்மையல்ல!..."

"மன்னர் மன்னா! அடியேனை மன்னிக்க வேண்டும்!"

"ஆகா! மன்னிக்க வேண்டுமாம்! சக்கரவர்த்தி என்றும், மன்னர் மன்னன் என்றும் கூறப்பட்ட ஒருவன் என்னைப் போல் ஏமாற்றப்பட்டது இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து நேர்ந்திராது. எனக்குத் தெரியாமல் ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? ஏன் முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாது? இன்று சாயங்காலம் என்னுடன் அத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தீர்களே? அப்போதுகூட ஏன் சொல்லவில்லை? முதன்மந்திரி! எனக்கு எல்லாம் விளங்குகிறது. பழுவேட்டரையர்கள் சொல்லுவது சரிதான் நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்!"

"நாங்கள் சூழ்ச்சி செய்தது என்னமோ உண்மைதான். ஆனால் தங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யவில்லை. எப்படியாவது கரையர் மகளைத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டுமென்று எண்ணினோம். அவள் கடலில் விழுந்து இறந்தது பற்றித் தங்கள் மனம் மிக்க வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மகாராணியின் மூலமாக அறிந்து நான் இந்த முடிவுக்கு வந்தேன். மகாராணியும் அவ்விதம் ஆக்ஞாபித்தார்கள். ஆனால் அவரை அழைத்து வருவது எளிய காரியமாயில்லை. அவர் உயிரோடிருப்பதாகச் சொன்னால், தாங்கள் நம்புவது சிரமமாயிருக்கும். ஆகையால் எப்படியும் அவரை இந்த ஊரில் கொண்டு வந்து சேர்த்த பிற்பாடு தங்களிடம் சொல்ல எண்ணினேன். நேற்று மாலை கோட்டை வாசலுக்குக் கிட்டத்தட்ட வந்த பிறகு மந்தாகினி தேவி மறைந்து விட்டார். அவருக்குப் பதிலாக இந்தப் பெண் பல்லக்கில் வந்தாள். இன்றைக்கெல்லாம் தேவியைத் தேடுவதில் ஈடுபட்டிருந்தோம். அவர் பழுவூர் அரண்மனைத் தோட்டத்தின் மதிள் ஏறிக் குதித்ததைப் பார்த்து விட்டுத்தான் என் சீடனும் அவ்வாறு மதிள் ஏறிக் குதித்தான். ஆனால் இந்தத் தேவி அகப்படவில்லை. திருமலையைப் பழுவூர் ஆட்கள் பிடித்துக் கொண்டு வந்தார்கள். சக்கரவர்த்தி! என் சீடனை அக்குற்றத்துக்காக மன்னிக்கப் பிரார்த்திக்கிறேன்."

"மன்னிப்பதற்கு இது ஒரு குற்றந்தானா? எவ்வளவோ இருக்கிறது! அப்புறம் சொல்லுங்கள்!"

"அப்புறம், இன்று சாயங்காலம் வரை காத்திருந்தும், பழுவூர் அரண்மனைக்குள்ளே தேடியும், இவரைக் காணவில்லை. தாங்கள் சற்று முன் கண்ணயர்ந்திருந்தபோது நாங்கள் எல்லாரும் அடுத்த அறையில் இவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். இவர் எங்கே மறைந்திருக்கக் கூடும் என்றும், இதையெல்லாம் பற்றித் தங்களிடம் எப்படிச் சொல்லுவது, யார் சொல்லுவது என்றும் யோசனை செய்து கொண்டிருந்தோம். அதற்குள் இவராகவே எப்படியோ தங்கள் சந்நிதிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று!"

சக்கரவர்த்தி அப்போது மந்தாகினி தேவி இருந்த இடத்தை நோக்கினார். குந்தவை, பூங்குழலி முதலியோர் அந்தப் பெண்மணியின் நெற்றியிலிருந்த காயத்தை ஈரத் துணியினால் துடைத்து விட்டு மருந்து கலந்த சந்தனக் குழம்பை அதன் பேரில் அப்புவதைக் கவனித்தார்.

"விடங்கர் மகளே! உன் அத்தையின் நெற்றியில் காயம் எப்படி ஏற்பட்டதென்று கேட்டுச் சொல்லுவாயா?" என்றார்.

பூங்குழலி இரண்டு அடி முன்னால் வந்து, "கேட்டேன், பிரபு! ஆனால் அத்தை சொல்லும் காரணம் எனக்கே சரியாக விளங்கவில்லை.." என்றாள்.

"என்னதான் சொல்லுகிறாள்? நான் விளக்கை எறிந்ததால் ஏற்பட்ட காயம் என்று சொல்லுகிறாளா?"

"இல்லை, இல்லை! மலை மேல் முட்டிக் கொண்டதால் காயம் பட்டதாகச் சொல்கிறார். இரத்தம் வழிந்ததை அவர் கவனிக்கவில்லையென்றும் கூறுகிறார்..."

சுந்தர சோழர் அப்போது ஒரு மிக அபூர்வமான காரியம் செய்தார். கலகலவென்று நகைத்தார்! அம்மாதிரி அவர் சிரித்ததை மற்றவர்கள் பார்த்துப் பல வருஷங்கள் ஆயின. மீண்டும் மீண்டும் அவர் நினைத்து நினைத்துச் சிரித்தார். அனைவரும் அவரைக் கவலையுடன் உற்றுப் பார்க்கத் தொடங்கினார்கள்.

"முதன்மந்திரி எதற்காக என்னை எல்லோரும் இப்படி உற்றுப் பார்க்கிறீர்கள்? எனக்குப் புதிதாகப் பைத்தியம் பிடிக்கவில்லை. பழைய பைத்தியந்தான் மிச்சமிருக்கிறது. இப்போது நான் சிரிப்பதன் காரணம் உங்களுக்கெல்லாம் தெரியவில்லையா? சோழ வளநாட்டில் இவள் மலையில் மோதிக் கொண்டு காயம் பட்டதாகக் கூறுகிறாளே? அதை எண்ணித்தான் சிரித்தேன். மலையைப் பற்றிச் சொல்வானேன்? இங்கே ஒரு சிறிய விக்கிரகம் செய்யக் கூடக் கல் கிடைக்காதே? சோழச் சக்கரவர்த்தியின் தலையில் யாராவது கல்லைப் போட விரும்பினால் அதற்குக்கூட ஒரு கருங்கல் கிட்டாதே! இவள் மலை மீது மோதிக் கொண்டதாகச் சொல்கிறாளாமே? எந்த மலையின் மேல் மோதிக் கொண்டாள்? பூங்குழலி, நன்றாக கேள்!" என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வானதியின் முகத்தில் அப்போது ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அவள் சட்டென்று இரண்டு அடி முன் வந்து சக்கரவர்த்திக்கு வணக்கம் செலுத்தினாள்.

"ஐயா! எனக்கு ஒன்று தோன்றுகிறது கட்டளையிட்டால் சொல்லுகிறேன்!" என்றாள்.

"வேளிர் மகளே! நீ வேறு இங்கே இருக்கிறாயா? உன்னை இத்தனை நேரமும் நான் கவனிக்கவே இல்லையே? இவ்வளவு தடபுடலுக்கும் நீ மூர்ச்சையடைந்து விழாமல் இருக்கிறாயே? அதுவே ஆச்சரியந்தான்! உனக்கு என்ன தோன்றுகிறது? எதைப்பற்றி? சொல்!" என்று சக்கரவர்த்தி ஆக்ஞாபித்தார்.

"இந்தத் தேவி மலை மேல் மோதிக் கொண்டதால் காயம் பட்டது என்கிறாரே! அதைப்பற்றி எனக்கு ஒன்று தோன்றுகிறது ஐயா!"

"என்ன? என்ன? நீ புத்திசாலிப்பெண்! உனக்கு ஏதேனும் காரணம் புரிந்தாலும் புரிந்திருக்கும்! சீக்கிரம் சொல்! ஈழ நாட்டில் மலையில் முட்டிக் கொண்டு அந்த இரத்தக் காயத்துடனே இங்கே வந்திருக்கிறாளா?"

"இல்லை, ஐயா; இந்த அரண்மனைத் தோட்டத்தில் சிற்ப மண்டபம் ஒன்று இருக்கிறதல்லவா? அதற்குள்ளே இராவணன் தூக்கிப் பிடிக்கும் கைலாச மலை ஒன்று இருக்கிறது. ஒருவேளை அதில் இவர் முட்டிக் கொண்டிருக்கலாம்!"

இவ்விதம் வானதி சொன்னதும் அத்தனை பேரும் வியப்புக் கடலில் மூழ்கிப் போனார்கள். "இருக்கலாம்; இருக்கலாம்!" "அப்படித்தான் இருக்கும்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

குந்தவை வானதியின் நெற்றியைத் தொட்டு திருஷ்டி கழிப்பது போல் கையை நெறித்து, "அடி என் கண்ணே! என்ன புத்திசாலியடி நீ! எங்களுக்கெல்லாம் தோன்றாதது உனக்குத் தோன்றியதே!" என்றாள்.

பூங்குழலி அதைக் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, தன்னுடைய ஊமை அத்தையிடம் சமிக்ஞா பாஷையில் பேசினாள் பின்னர், "ஆமாம்! சிற்ப மண்டபத்தில் உள்ள மலைதானாம்! அந்த மண்டபத்தை நான் பார்த்திருந்தால், எனக்கும் அது தெரிந்திருக்கும்!" என்றாள்.

சக்கரவர்த்தி மந்தாகினியை உற்றுப் பார்த்துக் கொண்டே "ஆமாம்; வழி தெரியாமல் தவித்துச் சிற்ப மண்டபத்தின் மலை மேல் முட்டிக் கொண்டிருக்கிறாள். எங்கே போவதற்காக வழி தேடினாளோ, தெரியவில்லை கடைசியில் இங்கே வந்து சேர்ந்தாள்!" என்றார்.

"தங்களிடம் வருவதற்குத்தான் வழி தேடி இருக்கிறார். அதைப்பற்றிச் சிறிதும் சந்தேகம் இல்லை. நானே இவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். தங்களைத் தரிசிக்காமல் இவ்விடம் விட்டுப் போகமாட்டார் என்று..."

"நான் நம்பவில்லை; முதன்மந்திரி! என்னிடம் இவள் வருவதாக இருந்தால் முன்னமே வந்திருக்கமாட்டாளா? இருபத்தைந்து வருஷமாக வந்திருக்கமாட்டாளா? இத்தனை நாள் பொறுத்திருந்து வருவானேன்? என்னைப் பேயாக வந்து சுற்றுவானேன்? ஆம், ஆம்! இவள் பேய் வடிவத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன். அதுவும் உண்மை தானே? பேயைப் போலத்தான் ஈழ நாட்டுக் காடு மலைகளில் அலைந்து திரிந்து வந்திருக்கிறாள். நான் இத்தனை காலமும் அரண்மனைச் சுகபோகங்களில் ஆழ்ந்து காலம் கழித்திருக்கிறேன். குற்றத்தின் சக்தியைத்தான் என்னவென்று சொல்லுவது? இவளைப் போன்ற உருவத்தைக் கண்டு எத்தனை தடவை என் உள்ளம் பிரமை அடைந்திருக்கிறது; யார் கண்டது? இப்போது வந்ததைப் போல் இதற்கு முன்னாலும் இரகசியமாக வந்து என்னைப் பார்த்து விட்டுப் போனாளோ, என்னவோ? நான் பிசாசு என்று எண்ணி மிரண்டு வந்தேன்!... இருபத்தைந்து ஆண்டு! இருபத்தைந்து யுகம்!"

இவ்விதம் தமக்குத் தாமே பேசுக்கிறவர் போலச் சொல்லி வந்த சக்கரவர்த்தி திடீரென்று அநிருத்தரின் பக்கம் திரும்பி, "முதன்மந்திரி! நீர் ஏதோ குற்றம் செய்ததாகச் சொல்லி மன்னிப்புக் கேட்டீரே? அது என்ன குற்றம்?" என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அநிருத்தர், "சக்கரவர்த்தி! குற்றவாளியிடமே குற்றத்தைப் பற்றிக் கேட்பது தர்மமா?" என்றார்.

"பின்னே, யாரிடம் கேட்கிறது? ஆம், ஒருவரிடமும் கேட்க வேண்டியதில்லை. உம்முடைய முகத்திலேயே எழுதியிருக்கிறது. அவள் கடலில் விழுந்து இறந்துவிட்டதாக வந்து சொன்னீரே? அதுவே பொய்! இருபத்தைந்து வருஷங்களாக அந்தப் பொய்யை நீர் சாதித்து வந்தீர். நானும் நம்பி வந்தேன் அநிருத்தரே! உண்மையிலேயே உமது குற்றம் மிகப் பயங்கரமானது!..."

"அதற்கு நான் மட்டும் பொறுப்பாளி அல்ல, சக்கரவர்த்தி! கரையர் குல மகளும் பொறுப்பாளிதான்! அவர் கடலில் விழுந்தது என்னமோ உண்மை. பிறகு புனர் ஜன்மம் அடைந்தார். தங்களிடம் அவர் உயிரோடிருப்பதைச் சொல்ல வேண்டாமென்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார்; வாக்குறுதியைக் கொடுக்காவிடில் மறுபடியும் உயிரை விட்டு விடுவேன் என்று சொன்னார். இவையெல்லாம் உண்மையா என்பதைத் தாங்களே அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்."

"கேட்க வேண்டியதே இல்லை! அவ்விதமே இருக்கும். ஆனாலும் நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து எனக்கு எதிராகச் சதி செய்கிறீர்கள் என்று நான் கூறியதிலே தவறு ஒன்றுமில்லை அல்லவா?" என்றார் சுந்தர சோழர்.

"நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு இல்லைதான்; மன்னிப்பு நான் கோரவும் இல்லை. ஆனாலும் பல வருஷ காலமாக என் மனத்திலிருந்த பாரம் இன்றைக்கு நீங்கிவிட்டது. இனி எனக்கு விடை கொடுங்கள். திருவரங்கம் சென்று ஸ்ரீ ரங்கநாதருக்குச் சேவை செய்து என் நாட்களைக் கழிக்க அனுமதியுங்கள்."

"அது முடியாத காரியம், பிரம்மராயரே! நீ அன்று செய்த குற்றத்தினால் இன்று எத்தனையோ குழப்பங்கள் நேர்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் தீர்த்து வைத்து விட்டல்லவா நீர் ரங்கநாதருக்குச் சேவை செய்யப் போக வேண்டும்?" என்றார் சக்கரவர்த்தி.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 34

இராவணனுக்கு ஆபத்து!

சுந்தர சோழர் தமது செல்வக் குமாரியைப் பார்த்துக் "குந்தவை! நான் முதன்மந்திரியோடு இராஜ்ய காரியங்களைப் பற்றிக் கொஞ்சம் பேச வேண்டும். நீங்கள் போய் உங்கள் காரியங்களைப் பாருங்கள். போகும்போது இதையும் அழைத்துக் கொண்டு போங்கள்! உன் தாயார் மட்டும் இங்கே சிறிது நேரம் இருக்கட்டும்!" என்றார்.

சக்கரவர்த்தி "இதையும்" என்று குறிப்பிட்டது மந்தாகினியைத்தான். அப்படிக் குறிப்பிட்டதிலிருந்து அவள் விஷயத்தில் அவருடைய அருவருப்பு வெளியாயிற்று.

குந்தவை சிறிது ஏமாற்றத்துடன் தந்தையை நோக்கினாள். அதைக் கவனித்த சக்கரவர்த்தி, "ஆமாம், இவள் முட்டிக் கொண்டது சிற்ப மண்டபத்திலுள்ள கைலாச மலைதானா என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது! இவளை அங்கேயே அழைத்துக் கொண்டு போய்க் காட்டித் தெரிந்து கொள்ளுங்கள்! இவள் இங்கே நிற்பதை என்னால் சகிக்க முடியவில்லை" என்றார்.

குந்தவை ஏமாற்றம் நிறைந்த முகத்தோடு மந்தாகினியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். அப்போது மலையமான் மகள் குந்தவையின் அருகில் வந்து, அவள் காதில் மட்டும் கேட்கும்படியாக, "குழந்தாய்! இவள் இப்போது பார்க்கச் சகிக்காமல்தானே இருக்கிறாள்? அப்பாவிடம் வருத்தப்படுவதில் என்ன பயன்? உன்னுடைய அலங்காரக் கலைத் திறமையையெல்லாம் இவளிடம் காட்டு பார்க்கலாம்!" என்றாள். குந்தவை புன்னகை மூலம் தன் சம்மதத்தைத் தெரிந்துவிட்டு அங்கிருந்து மந்தாகினியை அழைத்துச் சென்றாள். அவர்களுடன் வானதியும் பூங்குழலியும் வெளியேறினார்கள்.

பிறகு சுந்தர சோழர் முதன்மந்திரியையும் மலையமான் மகளையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம், "நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இந்தக் காரியத்தை எதற்காகச் செய்தீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு இதனால் சந்தோஷம் உண்டாகும் என்று நீங்கள் எண்ணியிருந்தால் அது பெரும் தவறு! முதன்மந்திரி! எதற்காக நீர் இவ்வளவு பிரயத்தனப்பட்டுக் கோடிக்கரையிலிருந்து இந்தக் காட்டுமிராண்டி ஜன்மத்தைப் பிடித்துக் கொண்டு வரச் செய்தீர்? இப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள்! இனிமேலாவது என்னிடம் எதையும் மறைத்து வைக்க முயல வேண்டாம்!" என்றார்.

அப்போது முதன்மந்திரி அநிருத்தர் உணர்ச்சி ததும்பக் கூறினார்: "ஒரு தடவை செய்த பிழையை மறுபடியும் செய்ய மாட்டேன், இனி எந்தக் காரியத்தையும் தங்களிடமிருந்து மறைத்து வைக்கவும் உடன்படேன். உண்மை வெளிப்பட வேண்டுமென்பதற்காகவே இப்போது இவ்வளவு பிரயத்தனம் எடுத்துக் கொண்டேன். தங்களால் ஒரு பெண்மணி கடலில் விழுந்து இறந்ததாகத் தங்கள் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சம்பவத்தைத் தாங்கள் மறந்து விட்டதாக வெகுகாலம் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நாளாக ஆக அந்த நினைவு தங்கள் உள்ளத்தின் உள்ளே பதிந்து வேதனையை அதிகப்படுத்திக் கொண்டிருந்ததாக அறிந்தேன். தூக்கத்தில் தாங்கள் அதைப் பற்றிய கனவு கண்டு பல முறை ஓலமிட்டதாக மகாராணி சொன்னார்கள். அதனால் தங்களைக் காட்டிலும் மலையமான் மகளார் அதிக வேதனை அடைந்தார்கள். சில காலத்துக்கு முன்பு என்னிடம் யோசனை கேட்டார்கள். அதன் பேரில் நாங்கள் இந்தப் பிரயத்தனம் செய்யத் தீர்மானித்தோம். தங்கள் காரணமாக இறந்து விட்டதாக தாங்கள் நினைத்து வருந்திய பெண்மணியைத் தங்கள் முன்னாலேயே கொண்டு வந்து நிறுத்தி அந்த எண்ணத்தைப் போக்க உத்தேசித்தோம். நேரில் கொண்டு வந்து நிறுத்தினால்தான் தாங்கள் நம்புவீர்கள் என்று எண்ணினோம். இது குற்றமாயிருந்தால் கருணை கூர்ந்து மன்னிக்க வேண்டும்!"

இதைக் கேட்ட சக்கரவர்த்தி ஆத்திரம் பொங்கக் கூறியதாவது: "குற்றந்தான்! பெருங்குற்றம்! இத்தனை நாளும் இவள் பேயாக என்னைச் சுற்றிக் கொண்டிருந்தாள். கனவிலே வந்து கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தாள். பேய்க்குப் பதிலாகப் பிச்சியைக் கொண்டு வந்து என் முன்னால் நிறுத்தியிருக்கிறீர்கள். இது எனக்கு மகிழ்ச்சி தரும் என்று நினைத்தீர்களா? ஒரு நாளும் இல்லை. என்னிடம் முன்னதாக உண்மையைத் தெரிவித்திருந்தால் இவளை இங்கே அழைத்து வரும் யோசனையைக் கண்டிப்பாக நிராகரித்திருப்பேன். போனது போகட்டும் ஏதோ செய்தது செய்து விட்டீர்கள். வெகு கஷ்டப்பட்டு இங்கே இந்த ஊமைப் பைத்தியக்காரியை அழைத்து வந்து சேர்த்தீர்களே? திரும்பி அவளை எப்போது எப்படிப் போகச் செய்வதாக உத்தேசம்?" இவ்வாறு சுந்தர சோழர் கேட்டதும், அநிருத்தர் உண்மையிலேயே பேச்சிழந்து நின்றார்.

அப்போது சக்கரவர்த்தினி, "சுவாமி! இங்கிருந்து என் சகோதரியைத் திரும்பிப் போகச் செய்வதாகவே எனக்கு உத்தேசமில்லை. இந்த அரண்மனையில் என்னுடனேயே அவர் தங்கியிருப்பார். எனக்கு முன் பிறந்த தமக்கையைப் போல் பாவித்து இவரை நான் போற்றிப் பூசித்து வருவேன்!" என்றாள்.

"தேவி! என்னிடம் உனக்குள்ள பக்தியை இந்த மாதிரி மெய்ப்பிக்க நீ பிரயத்தனப்பட வேண்டியதில்லை. கண்ணகியைக் காட்டிலும் மேலான கற்பின் அரசி என்பதை இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நான் கண்டிருக்கிறேன். நான் நோய்ப்பட்டது முதல் நீ உன் செல்வக் குழந்தைகளையும் மறந்து எனக்குப் பணிவிடைகள் செய்து வருவதையும் எனக்காக நோன்பு நோற்று வருவதையும் அறிந்துதானிருக்கிறேன். காட்டிலே திரிந்த ஊமைப் பிச்சியை அரண்மனையிலே அழைத்து வைத்து என்னிடம் உனக்குள்ள பக்தியைக் காட்ட வேண்டியதில்லை. மலையமான் மகளே! இதைக்கேள்! முதன்மந்திரி! நீங்களும் நன்றாய்க் கேட்டுக் கொள்ளுங்கள். எப்போதோ ஒரு காலத்தில் மனித சஞ்சாரமற்ற தீவாந்தரத்தில் நான் தன்னந்தனியே தங்கியிருந்தபோது இந்த ஊமைப் பிச்சியைப் பார்த்தேன். அச்சமயம் இவளிடத்தில் பிரியம் கொண்டதும் உண்மைதான் இல்லை என்று சொல்லவில்லை. அதனாலேயே இன்னமும் நான் இவளை நினைத்து ஏங்கித் தவிப்பதாக நீங்கள் எண்ணினால் அதைவிடப் பெரிய தவறு செய்ய முடியாது. அப்போது இவள் பேரில் எனக்கு ஏற்பட்டிருந்த பிரியத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. அந்தப் பிரியம் இந்த இருபத்தைந்து வருஷ காலத்தில் முற்றும் மாறித் துவேஷமாகவும் அருவருப்பாகவும் உருவெடுத்திருக்கிறது. கனவிலும் நினைவிலும் என்னை அவ்வளவாக இவள் கஷ்டப்படுத்தி இருக்கிறாள். இவள் இந்த அரண்மனையில் இருக்கிறாள் என்னும் எண்ணத்தையே என்னால் சகிக்க முடியவில்லை. உடனே இவளை இங்கிருந்து அனுப்பி விட்டு மறுகாரியம் பாருங்கள். இவளைப் பேய் என்று நினைத்தபடியால் இவள் பேரில் விளக்கை எடுத்து எறிந்தேன். உயிரோடும் உடம்போடும் இருப்பவள் என்று அறிந்திருந்தால், என்ன செய்திருப்பேனோ, தெரியாது!"

இவ்வாறு சுந்தர சோழர் குரோதம் ததும்பிய குரலில் கூறிய குரூரமான வார்த்தைகளைக் கேட்டுச் சக்கரவர்த்தினியும் முதன்மந்திரியும் கதிகலங்கிப் போனார்கள். சக்கரவர்த்தி இவ்விதம் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அநிருத்தர் தாம் செய்த பழைய குற்றத்துக்காக மட்டுமே தம்மைச் சக்கரவர்த்தி கண்டனம் செய்வார் என்று கருதியிருந்தார். மகாராணியோ சக்கரவர்த்தி வாய்விட்டு வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனத்திற்குள் மகிழ்ந்து பூரித்துத் தன்னுடைய பெருந்தன்மையான செயலை ரொம்பவும் பாராட்டுவார் என்று எதிர்பார்த்தாள்.

சுந்தர சோழரின் கொடிய வார்த்தைகள் அவர்களுக்கு ஏமாற்றமளித்ததோடு ஓரளவு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின. சக்கரவர்த்தி இத்தனை நேரம் பேசியதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், "சீச்சீ, இந்த ஊமைப் பைத்தியக்காரி உலகில் உயிரோடு வாழ்ந்திராவிட்டால் என்ன நஷ்டம் நேர்ந்து விடும்? இவள் கடலில் விழுந்த போது உண்மையாகவே செத்துத் தொலைந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! எந்தப் பரம முட்டாள் மெனக்கட்டு இவளை எடுத்துக் காப்பாற்றினான்?" என்றார்.

இதற்குப் பிறகு மலையமான் மகளால் பொறுக்க முடியாமல் போயிற்று. உருக்கம் ததும்பிய ஆவேசத்துடன் அவள், "சுவாமி! தங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள்! மகாபாவம்! நன்றி மறத்தல் எவ்வளவு கொடிய பாதகம் என்று பெரியோர்கள் எத்தனையோ பேர் சொல்லியிருக்கிறார்களே? தங்கள் உயிரை இந்த மாதரசி காப்பாற்றியதை வேணுமானாலும் மறந்து விடுங்கள். ஆனால் நம் அருமைக் குமாரன் அருள்மொழிவர்மனை இவர் காப்பாற்றியதை மறக்கலாமா? தாங்கள் மறந்தாலும் நான் மறக்க முடியாது. பதினாலு ஜன்மத்துக்கும் இந்தத் தெய்வ மகளுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருப்பேன்!" என்று சொன்னாள்.

"தேவி அந்தக் கதையை மறுபடியுமா சொல்லுகிறாய்..?" என்று சுந்தர சோழர் மேலும் பேசுவதற்குள் மலையமான் மகள் குறுக்கிட்டுக் கூறினாள்: "கதை அல்ல, சுவாமி! அருள்மொழியே என்னிடம் சொன்னான். காவேரி வெள்ளத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய தேவிதான் ஈழத் தீவிலும் பலமுறை தன்னைக் காப்பாற்றியதாகச் சொன்னான். நல்ல வேளையாக, அவன் நாகப்பட்டினத்திற்கு வந்து சுகமாயிருக்கிறான். அவனை அழைத்து வரச் செய்யுங்கள். தாங்களே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!"

"ஆமாம், ஆமாம்! அருள்மொழி நாகப்பட்டினத்தில் இருக்கிறான். ஆனால் அவன் சுகமாயிருக்கிறான் என்பது என்ன நிச்சயம்? நேற்று அடித்த பெரும் புயலில் அவனுக்கு ஆபத்து நேர்ந்ததோ என்னமோ? முதன்மந்திரி! என் உள்ளத்தில் நிம்மதி இல்லை! இனந் தெரியாத அபாயம் ஏதோ என் குலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் சமயத்தில் இந்த ஊமைப் பிச்சி இங்கு வந்திருப்பதும் ஓர் அபசகுனமாகவே தோன்றுகிறது..."

"சுவாமி! கரையர் குலமகள் இங்கே இச்சமயம் வந்திருப்பது அபசகுனம் இல்லை; நல்ல சகுனம். இவர் இங்கிருப்பது நம்முடைய குலத்துக்கே ஒரு பாதுகாப்பு. நான் இடைவிடாமல் பிரார்த்தனை செய்யும் துர்க்கா பரமேசுவரியே என் மீது அருள் புரிந்து இந்தத் தேவியை அனுப்பி வைத்திருக்கிறாள்..."

"இல்லவே இல்லை; துர்க்கா பரமேசுவரி அனுப்பவில்லை, சனீசுவரன் அனுப்பியிருக்கிறான். அந்தப் பிச்சியை உடனே திரும்பிப் போகச் சொல்லிவிட்டு மறுகாரியம் பாருங்கள். நீங்கள் முடியாது என்றால், நானே அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியது தான்.."

"சுவாமி! ரொம்பவும் கருணைகூர்ந்து எனக்கு இந்த வரத்தைக் கொடுங்கள். அருள்மொழி வந்து சேருகிற வரையில் அவர் இந்த அரண்மனையில் இருப்பதற்கு அனுமதி அளியுங்கள்!" என்று சக்கரவர்த்தினி உருக்கமான குரலில் கேட்டு விட்டு சுந்தர சோழரின் பாதங்களைத் தொட்டுப் பணிந்தாள்.

"முதன்மந்திரி! கேட்டீரா? வெளுத்ததெல்லாம் பால் என்று கருதும் மலையமான் மகளின் கோரிக்கையைக் கேட்டீரா? கடவுளே! இப்படியும் ஒரு கபடமற்ற சாது உலகத்தில் இருக்க முடியுமா? இவள் என்னிடம் எதுவுமே கோருவதில்லை. போயும் போயும் இப்படிப்பட்ட வரத்தைக் கேட்கிறாள். அதை மறுக்க மனம் வரவில்லை. ஆனால் அந்த ஊமைப் பைத்தியக்காரி இங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரக வேதனையாக இருக்கும். ஆகையால், நாகையிலிருந்து இளவரசனை அழைத்துவர உடனே ஏற்பாடு செய்யுங்கள்!"

"அப்படியே செய்கிறேன் ஐயா! யானைப் படைகளும் குதிரைப் படைகளும் அனுப்பிப் பகிரங்கமாக இளவரசரை அழைத்து வரச் செய்யலாமா? அல்லது..."

"மாறு வேடம் பூணச் செய்து இரகசியமாக அழைத்து வரலாமா, என்றுதானே கேட்கிறீர்? பகிரங்கமாக இளவரசன் வந்தால் சோழ நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா?"

"நான் எண்ணுவது மட்டும் அல்ல, பிரபு! நிச்சயமாக அறிந்திருக்கிறேன். மக்கள் பல காரணங்களினால் கொதிப்பு அடைந்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு வியாஜம் ஏற்பட வேண்டியதுதான்; உடனே மக்களின் உள்ளக் கொதிப்பு வெளியே பீறிக் கொண்டு வரும். பழுவேட்டரையர்களும் மதுராந்தகத் தேவரும் என்ன கதி அடைவார்கள் என்று சொல்ல முடியாது..."

"இது என்ன பேச்சு, முதன்மந்திரி! குடிமக்கள் அப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், சோழ நாட்டு வீர சைன்யங்கள் எங்கே போயின?"

"சைன்யங்களிடையேதான் கொதிப்பு அதிகம், பிரபு! மக்களாவது வெறுங் கூச்சல் குழப்பத்துடன் அடங்கி விடுவார்கள். சேனா வீரர்களோ, தஞ்சைக் கோட்டையை சின்னா பின்னமாக்கி, பழுவேட்டரையர்களையும் மதுராந்தகத் தேவரையும் சிறையில் அடைத்துவிட்டு, ஈழங் கொண்ட வீராதி வீரராகிய அருள்மொழிவர்மரைச் சிங்காதனத்தில் ஏற்றிவிட்டே மறுகாரியம் பார்ப்பார்கள்..."

"அப்படி நடக்க வேண்டுமென்று நீங்களும் மனத்திற்குள் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முட்டாள் ஜோதிடர்கள் கட்டி விட்ட கதைகளை நம்பிக் கொண்டு குடிமக்களும் புத்தி தடுமாறி அலைகிறார்கள். ஆனால் உங்கள் மனத்தில் ஒன்று நிச்சயமாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். என் பெரிய பாட்டனார் கண்டராதித்த அடிகளின் குமாரன் மதுராந்தகனே இந்தச் சோழ சிம்மாசனத்துக்கு உரிமை உடையவன். அவனுக்கே பட்டம் கட்டி வைப்பதென்று தீர்மானித்து விட்டேன். மக்கள் அதற்குத் தடை சொன்னாலும் சரி, தேவர்களும் மூவர்களும் வந்து தடுத்தாலும் சரி, நான் கேட்கப் போவதில்லை. என்னுடைய குமாரர்கள் அதற்குக் குறுக்கே நின்றால்..."

"சுவாமி! அப்படி ஒரு நாளும் நேராது. தங்கள் விருப்பத்துக்கு மாறாகத் தங்கள் குமாரர்கள் ஒரு நாளும் தடை சொல்ல மாட்டார்கள். அருள்மொழிக்கு இராஜ்ய ஆசையே கிடையாது. இலங்கை மணிமகுடத்தை அவனுக்குக் கொடுத்தார்கள். அதை அவன் வேண்டாம் என்று மறுதளித்து விட்டான். அப்படிப்பட்டவனா தங்கள் வார்த்தைக்கு மறுவார்த்தை கூறப் போகிறான்? கரிகாலன் மட்டும் என்ன? அவனுக்குத் தாங்களே யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைத்தீர்கள் அதனால் ஒப்புக் கொண்டான். அவனுடைய வீர பராக்கிரமத்தைப் பற்றி நான் சொல்லவேணுமா? அவன் ஆசைப்பட்டால் தானாகவே அவனுடைய வீரவாளின் உதவியைக் கொண்டு பெரிய இராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொள்ளக் கூடியவன் அல்லவா? ஆனால் அவனுக்கும் இராஜ்யம் ஆளுகிற ஆசை இல்லை. தாங்கள் அவனிடம் தங்கள் விருப்பம் இன்னதென்பது பற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதான்..."

"அந்த வார்த்தை நான் சொல்லிவிடப்போகிறேனே, அவன் காதில் விழுந்துவிடப் போகிறதே என்பதற்காகத்தானே, எத்தனை சொல்லி அனுப்பியும் இங்கே வராமல் ஆட்டம் போடுகிறான்?"

"சக்கரவர்த்தி! பட்டத்து இளவரசர் காஞ்சியில் அற்புதமான பொன் மாளிகை நிர்மாணித்துவிட்டுத் தங்களின் வருகைக்காகக் காத்திருக்கிறார்..."

"எதற்காகக் காத்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். கம்ஸன் அவனுடைய பெற்றோர்களைச் சிறை வைத்தது போல் எங்களைச் சிறை வைத்துவிட்டுச் சோழ சிம்மாசனம் ஏறக் காத்திருக்கிறான். அவன் கட்டியிருப்பது பொன் மாளிகையோ, அல்லது அரக்கு மாளிகைதானோ, யாருக்குத் தெரியும்?"

"சுவாமி! கரிகாலனைப் பற்றித் தாங்கள் இவ்வாறு சொல்வது கொடுமை!" என்றாள் மலையமான் மகள்.

"சக்கரவர்த்தியின் உள்ளத்தை அவ்வளவு தூரம் விஷமாக்கி வைத்திருக்கிறார்கள்!" என்றார் முதன்மந்திரி.

"வேறு யாரும் இல்லை; என் மனத்தில் விஷம் ஏற்றியவன் கரிகாலனேதான்! அவன் எனக்கு உண்மையான மகனாயிருந்தால் எத்தனை தடவை சொல்லி அனுப்பியும் ஏன் வரவில்லை?" என்று சுந்தர சோழர் கேட்டார்.

"அதற்கு வேறு சரியான காரணங்களும் இருக்கலாம் அல்லவா?"

"நீங்கள்தான் ஒரு காரணத்தை ஊகித்துச் சொல்லுவது தானே?"

"கரிகாலன் கொள்ளிடத்துக்கு இப்பால் வந்தால் பழுவேட்டரையர்கள் அவனைச் சிறைப்படுத்தி விடுவார்கள் என்று நாடெல்லாம் பேச்சாயிருக்கிறது.."

"அம்மாதிரி சொல்லி என் மகனுடைய மனத்தை யாரோ கெடுத்திருக்கிறார்கள்! இவளுடைய தகப்பன் திருக்கோவலூர் மலையமான் ஒருவன், கொடும்பாளூர் வேளான் ஒருவன். நீங்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டீர்களோ, என்னவோ தெரியவில்லை."

"சுவாமி! நான் யாரைப் பற்றியும் அவர்களுக்குப் பின்னால் பேசும் வழக்கமில்லை. சற்று முன் தாங்களே அபாயத்தைப் பற்றிப் பேசினீர்கள். தங்கள் உள்ளத்தில் அவ்விதம் தோன்றுவதாகச் சொன்னீர்கள். தங்கள் உள்ளத்தில் தோன்றுவது முற்றிலும் உண்மை. சோழர் குலத்துக்கு அபாயம் நெருங்கிக் கொண்டுதானிருக்கிறது. அது இரண்டு வழியாக வருகிறது. இந்த நாட்டில் இப்போது இரண்டுவிதமான சதிகள் நடைபெற்று வருகின்றன. பழுவேட்டரையர்களும், சம்புவரையர்களும்..."

"முதன்மந்திரி அநிருத்தரே! நிறுத்துங்கள்; பழுவூர் வம்சத்தார் நூறு ஆண்டு காலமாகச் சோழ குலத்துக்குத் தொண்டு செய்து வந்தவர்கள். பெரிய பழுவேட்டரையர் இருபத்துநாலு போர் முனையிலும் போரிட்டுத் தமது மேனியில் அறுபத்துநாலு புண்களைச் சுமந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் இன்று சோழ குலத்துக்கு எதிராகச் சதி செய்கிறார் என்று சொல்வதைக் காட்டிலும், சூரியன் இருட்டாகி விட்டது என்றும், கடல் நீரில் தீப்பிடித்துக் கொண்டுவிட்டது என்றும் சொல்லுவதை நம்பலாம்.."

"சக்கரவர்த்தி! சூரியனையும் கிரஹணம் பிடிக்கிறது. கடல் நீரில் வடவாமுகாக்கினி கொழுந்துவிட்டெரிகிறது. ஆனால் அதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. பழுவேட்டரையர்கள் சோழ குலத்துக்கு எதிராக சதி செய்வதாக நான் கூறவே இல்லை. மதுராந்தகருக்குப் பட்டம் கட்டுவதற்காக அவர்கள் மிகுந்த பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.."

"மகா சிவபக்தராகிய கண்டராதித்தருடைய புதல்வருக்குப் பட்டம் கட்ட எண்ணுவதில் என்ன தவறு? சிம்மாசன உரிமை நியாயமாக மதுராந்தகனுக்குத் தானே உரியது?" என்றார் சக்கரவர்த்தி.

"நானும் அதையேதான் சொல்லுகிறேன் மேலும் தாங்களே மனமுவந்து மதுராந்தகத் தேவருக்குச் சோழர் குலத்து மணிமகுடத்தை அளிக்கத் தீர்மானித்து விட்டீர்கள். அப்படியிருக்கும்போது பழுவேட்டரையர் மீது குற்றம் என்ன? தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவே அவர்கள் பிரயத்தனப்படுகிறார்கள்.."

"ஆகையினால் என்னுடைய நன்றியறிதலுக்கு மேலும் அவர்கள் பாத்திரமாகியிருக்கிறார்கள்."

"ஆனால், சக்கரவர்த்தி, தங்களுடைய சம்மதம் பெறாத சில காரியங்களும் செய்கிறார்கள். சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பங்கு போட்டுக் காவேரிக்குத் தெற்கேயுள்ளதை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கே உள்ள பகுதியைக் கரிகாலருக்கும் கொடுத்து விடுவதென்று யோசனை செய்து வருகிறார்கள். சம்புவரையர் மாளிகையில் இன்றைய தினம் அந்தப் பேச்சு நடந்து வருகிறது. சக்கரவர்த்தி! நூறு வருஷ காலமாகத் தங்கள் முன்னோர்கள் பாடுபட்டு விஸ்தரித்த ராஜ்யத்தை விஜயாலய சோழரும் ஆதித்த சோழரும் மகாபராந்தக சக்கரவர்த்தியும் ஈழம் முதல் கோதாவரி வரையில் நிலைநாட்டிய சோழ மகாராஜ்யத்தை இரண்டாகப் பிளந்து பங்கு போடுவது தங்களுக்குச் சம்மதமா?"

"முதன்மந்திரி! ஒரு நாளும் அதற்கு நான் சம்மதம் கொடேன். சோழ இராஜ்யத்தைப் பிளப்பதற்கு முன்னால் என்னை வெட்டிப் பிளந்து விடுங்கள் என்று சொல்லுவேன் பழுவேட்டரையர் அத்தகைய முயற்சியில் இறங்கியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஒருவேளை எனக்கு அது பிரியமாயிருக்கலாம். என் மகனுக்குப் பாதி இராஜ்யமாவது கொடுக்க நான் ஆசைப்படலாம் என்ற எண்ணத்தினால் அவர் இந்த யோசனைக்கு இணங்கியிருப்பார். அது எனக்கு விருப்பமில்லையென்று தெரிந்தால் கைவிட்டு விடுவார். முதன்மந்திரி! இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் ஓர் அங்குல விஸ்தீரணம் கூடக் குறையாமல் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டி வைப்பேன். அதை என் மக்கள் எதிர்த்தாலும் சரி, பழுவேட்டரையரே எதிர்த்தாலும் சரி, நான் கேட்கப் போவதில்லை."

"சக்கரவர்த்தி! பழுவேட்டரையர் எதிர்த்தால் பொருட்படுத்த வேண்டியதில்லை. தங்கள் புதல்வர்களோ எதிர்க்கப் போவதில்லை. ஆனால் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டுவதற்குத் தடை இவையெல்லாம் அல்ல. அந்தத் தடை இன்னும் பெரிய இடத்திலிருந்து வருகிறது. தாங்களும் நானும் இந்தச் சோழ நாட்டு மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் தெய்வப் பெண்மணியிடமிருந்து அந்தத் தடை வருகிறது. சில நாளைக்கு முன்பு கூட அவரிடம் பேசிப் பார்த்தேன்..."

"செம்பியன் மாதேவியை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அந்த மாதரசியின் மனத்தையும் யாரோ கெடுத்திருக்கிறார்கள். நான் என் புதல்வர்களுக்குப் பட்டம் கட்ட ஆசைப்படுவதாக பெரிய பிராட்டி கருதி வருகிறார். முதன்மந்திரி! அவரை உடனே இங்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் அவருடைய மனதை மாற்றி விடுகிறேன்.."

"சக்கரவர்த்தி! அது அவ்வளவு சுலபம் அல்ல. மகான் கண்டராதித்தர் தமது தர்மபத்தினிக்கு அவ்விதம் கட்டளை இட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய மரண தறுவாயில் நான் அவர் அருகில் இருந்தேன். 'மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டக் கூடாது என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது; அது என் துணைவிக்குத் தெரியும்' என்று தங்கள் பெரிய பாட்டனார் சொன்னார்..."

"முதன்மந்திரி! அப்படிப்பட்ட தடை உண்மையில் இருக்கிறதா? அது இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா?"

"தெரிந்திருந்தால், தாங்கள் கேட்கும் வரையில் காத்துக் கொண்டிருப்பேனா? பெரிய பிராட்டியை அழைத்து வரச் செய்து தாங்கள்தான் அதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்..."

"ஆமாம்; அந்த ஒரு விஷயந்தான் எனக்கும் தொல்லை கொடுத்து வருகிறது. பெரிய பிராட்டியை உடனே அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். எப்பேர்ப்பட்ட தடையாயிருந்தாலும் அதை நான் நிவர்த்தி செய்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு யாரை அனுப்பலாம்? ஏன் என் குமாரியையே அனுப்புகிறேன். தேவி! குந்தவையை உடனே இங்கு அழைத்து வா!" என்று சுந்தர சோழர் மலையமான் மகளைப் பார்த்துக் கூறினார்.

சக்கரவர்த்திக்கும் முதன்மந்திரிக்கும் நடந்த சம்பாஷணையை வானமா தேவி ஒரு காதினால் கேட்டுக் கொண்டிருந்தாலும், அவளுடைய கவனமெல்லாம் சற்று முன் அருகிருந்து சென்ற ஊமை ராணியின் பேரிலேயே இருந்தது. ஆதலின் சக்கரவர்த்தி குந்தவையை அழைத்து வரும்படி சொன்னதும் மலையமான் மகள் அங்கிருந்து அந்தப்புரத்துக்கு விரைந்து சென்றாள். அவள் அந்தப்புரத்தை அடைந்த போது குந்தவை, வானதி, பூங்குழலி ஆகியவர்கள் பெருங்கலக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அதற்குக் காரணத்தையும் மகாராணி உடனே தெரிந்து கொண்டாள். ஊமை ராணியை அங்கே காணவில்லை. எங்கே என்று கவலையுடன் கேட்ட போது குந்தவை கூறியதாவது: "அம்மா! தங்கள் கட்டளையை நிறைவேற்றுவது சுலபமான காரியமாக இல்லை. ஆயினும் நாங்கள் மூன்று பேருமாகச் சேர்ந்து வற்புறுத்தி மந்தாகினி தேவியைக் குளிப்பாட்டினோம். பிறகு புதிய ஆடைகள் அணிவித்தோம். வானதி அவருடைய கூந்தலை வாரி முடிந்து கொண்டிருந்தாள். பூங்குழலி பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். ஆபரணங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோதே, இவளுடைய கூச்சல் கேட்டது. திரும்பி வந்து பார்த்தால் மந்தாகினி தேவியைக் காணவில்லை. கூந்தலை வாரி முடி போட்டவுடனே திடீரென்று அவர் திமிறிக் கொண்டு ஓடிப்போனாராம். அக்கம் பக்கத்து அறைகளில் எங்கேயும் காணவில்லை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறோம்!"

இதைக் கேட்டு மலையமான் மகள் புன்னகை புரிந்தார். "அவருக்கு அலங்காரம் செய்தபோது எதிரில் கண்ணாடி இருந்ததா?" என்று கேட்டாள். "இருந்தது; சற்றுத் தூரத்தில் இருந்தது" என்றாள் வானதி.

"அவருடைய அலங்கரித்த உருவத்தைத் தற்செயலாகக் கண்ணாடியில் பார்த்திருப்பார். அது அவருக்கு வெட்கத்தை உண்டாக்கியிருக்கும். அதனால் ஓடி எங்கேயாவது மறைந்து கொண்டிருப்பார். இன்னும் நன்றாகத் தேடிப் பாருங்கள். ஒருவேளை அந்தப்புரத்துப் பூங்காவிற்குச் சென்று ஒளிந்து கொண்டிருந்தாலும் இருப்பார். மதிள் ஏறிக் குதிப்பது, பலகணி வழியாகக் குதிப்பது போன்ற காரியங்கள்தான் அவருக்கு வழக்கமானவை ஆயிற்றே?" என்றாள் சக்கரவர்த்தினி.

பிறகு எல்லோருமாக நந்தவனத்துக்குச் சென்று தேடினார்கள். அங்கு ஊமை ராணி அகப்படவில்லை; அவர்களுடைய கவலை அதிகமாயிற்று. முதன்மந்திரியிடமும் சக்கரவர்த்தியிடமும் போய்த் தெரிவிக்கலாமா என்று அவர்கள் எண்ணத் தொடங்கியபோது எங்கிருந்தோ 'டணார் டணார்' என்று ஒரு சத்தம் வந்தது. கருங்கல்லில் இரும்பு உளியினால் ஓங்கி அடிப்பது போன்ற ஓசை. அது எங்கிருந்து அந்த ஓசை வருகிறது என்று காது கொடுத்துக் கவனமாகக் கேட்டார்கள். சிற்ப மண்டபத்திலிருந்து வருகிறதென்று தெரிந்தது. உடனே ஒரு தாதிப் பெண்ணைத் தீபம் எடுத்துக் கொண்டு வரும்படி சொல்லி விட்டு எல்லாரும் சிற்ப மண்டபத்துக்குச் சென்றார்கள். சிற்ப மண்டபத்துக்குள்ளே அவர்கள் ஒரு விந்தையான காட்சியைக் கண்டார்கள். ஓரளவு ஆடை அலங்காரங்கள் அணிந்து விளங்கிய மந்தாகினி கையில் ஒரு நீண்ட பிடியுள்ள சுத்தியை வைத்துக் கொண்டு கைலாச மலையைத் தாங்கிக் கொண்டிருந்த இராவணேசுவரனுடைய கரங்களை ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தாள். மிக உறுதியான கல்லினால் செய்யப்பட்ட சிற்பமாதலால் அந்தத் தாக்குதலுக்கு இராவணன் அது வரையில் அசைந்து கொடுக்கவில்லை. ஆனாலும் சீக்கிரத்தில் அவனுக்கு ஆபத்து வந்துவிடலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. கைலாச மலையைத் தாங்கி கொண்டிருந்த இராவணனுடைய கரங்களில் இரண்டு மூன்று கைகள் ஒடிந்து விட்டால் மலையே இடம் பெயர்ந்து அவன் தலைகளின் மீது இன்னும் நன்றாக உட்கார்ந்து விடக்கூடும்! தலைகள் சுக்குநூறாக நொறுங்கி விடக்கூடும்! அத்தகைய ஆபத்தான நெருக்கடியிலேதான் குந்தவை முதலியவர்கள் சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள்.

அவர்களுடைய வரவைப் பார்த்ததும் மந்தாகினி தன்னுடைய கையில் பிடித்திருந்த சுத்தியைக் கீழே போட்டு விட்டு வந்தவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டு நின்றாள். மண்டபத்துக்குள் பிரவேசித்தவர்களில் பூங்குழலியைத் தவிர மற்றவர்களின் உள்ளங்களில் "இவள் ஒரு பைத்தியக்காரப் பிச்சிதான்! சக்கரவர்த்தி இவளைக் கண்டு அருவருப்பு அடைவதில் வியப்பு ஒன்றுமில்லை!" என்ற எண்ணம் தோன்றியது.

மலையமான் மகள் மற்றவர்களைப் பார்த்து, "பெண்களே, இதைப்பற்றிச் சக்கரவர்த்தியின் முன்னிலையில் யாரும் பிரஸ்தாபிக்க வேண்டாம்!" என்று எச்சரிக்கை செய்தாள்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மணிமகுடம் - அத்தியாயம் 35

சக்கரவர்த்தியின் கோபம்

மந்தாகினியை மற்ற அரண்மனைப் பெண்டிர் சிற்ப மண்டபத்தில் கண்டுபிடித்த சமயத்தில் சக்கரவர்த்திக்கும் முதன்மந்திரிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

மலையமான் மகள் அங்கிருந்து சென்றவுடனேயே முதன்மந்திரி அநிருத்தர், "மன்னர் பெரும! பெண்மணிகள் இருக்கும் போது சில விஷயங்கள் சொல்லக்கூடாது என்றிருந்தேன். இப்போது அவற்றைச் சொல்லித் தீர வேண்டியதாயிருக்கிறது. வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகள் இன்னமும் இந்த நாட்டில் மறைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கொடுமையான சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

"இது ஒன்றும் புதிதில்லையே? எனக்குத் தெரிந்த செய்திதானே? பழுவேட்டரையர்கள் அந்தக் காரணத்தைக் கொண்டே எனக்கு இத்தனை பலமான பாதுகாப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள் அல்லவா?" என்று சக்கரவர்த்தி ஏளனச் சிரிப்புடன் கூறினார்.

"ஆபத்துதவிகளின் விஷயம் தங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அந்தச் சதிகாரர்களுக்குச் சோழ ராஜ்யத்தின் பொக்கிஷத்திலிருந்தே பொருள் உதவி கிடைத்து வருகிறது என்பது தங்களுக்குத் தெரிந்திருக்க முடியாது!" என்றார் முதன்மந்திரி.

"ஆகா! இது என்ன கட்டுக் கதை!" என்றார் சுந்தர சோழர்.

"இதைக் காட்டிலும் பிரமிப்பான கட்டுக் கதைகள் சிலவற்றையும் தங்களுக்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து புதிய பொற்காசுகள் ஆபத்துதவிகள் கூட்டத்தின் மத்தியில் குவியலாகக் கொட்டப்பட்டிருந்தன. கண்ணால் பார்த்தவனாகிய சீடன் திருமலை இதோ இருக்கிறான். தாங்கள் பணித்தால் அதைப் பற்றி விவரமாகச் சொல்லுவான்..."

"வேண்டியதில்லை, தலைமுறை தலைமுறையாகச் சோழ குலத்துக்காக உயிரைக் கொடுத்து இரத்தம் சிந்தி வந்தவர்கள் பழுவேட்டரையர்கள். அவர்கள் என்னைக் கொல்லுவதற்காகச் சதி செய்யும் கூட்டத்திற்கு என் பொக்கிஷத்திலிருந்து பொற்காசு கொடுக்கிறார்கள் என்று அரிச்சந்திரனே வந்து சொன்னாலும் நான் நம்பமாட்டேன்."

"மன்னிக்க வேண்டும், பழுவேட்டரையர்கள் மீது அத்தகைய துரோகக் குற்றத்தை நான் சுமத்தவில்லை. அவர்களுக்குத் தெரியாமலே சதிகாரர்களுக்கு நம் பொக்கிஷத்திலிருந்து பொற்காசுகள் போகலாம் அல்லவா?"

"அது எப்படி முடியும்? யமன் அறியாமல் உயிர் போகக் கூடுமா, என்ன?"

"யமன் ஒருவேளை கிழப் பருவத்தில் இளமங்கை ஒருத்தியை மணம் செய்து கொண்டிருந்தால் அதுவும் சாத்யமாகலாம் அரசே!"

"பெரிய பழுவேட்டரையர் இந்தப் பிராயத்தில் கலியாணம் செய்து கொண்டது எனக்கும் பிடிக்கவில்லைதான். அதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். அதற்காக இம்மாதிரியெல்லாம் அவர் மீது துரோகக் குற்றம் சுமத்துவதை என்னால் சகிக்க முடியாது."

"சக்கரவர்த்தி! பழுவேட்டரையர் மீது நான் துரோகக் குற்றம் சுமத்தவில்லை. அவர் மணந்து கொண்ட இளைய ராணி மீதுதான் சுமத்துகிறேன்."

"ஆண்பிள்ளைகள் மீது குற்றம் சுமத்துவதையாவது பொறுத்துக் கொள்ளலாம். துர்பாக்கியவதியான அபலைப் பெண் ஒருத்தியின் மீது நீர் குற்றம் சுமத்துவது எனக்கு நாராசமாயிருக்கிறது."

"எவ்வளவு நாராசமாக இருந்தாலும் பழுவூர் இளைய ராணியைப் பற்றிய சில உண்மைகளைத் தங்களுக்கு நான் சொல்லியே தீர வேண்டும். ஒரு தடவை தங்களுக்கு நான் ஓர் உண்மையைச் சரியான சமயத்தில் சொல்லாதது பற்றி எவ்வளவோ வருத்தப்பட நேர்ந்தது. சற்று முன் தாங்களும் கோபித்துக் கொண்டீர்கள். ஆகையினால் சிறிது பொறுமையாகக் கேட்க வேண்டும்."

முதன்மந்திரியின் இந்தச் சாமர்த்தியமான வார்த்தைகளைக் கேட்டுச் சக்கரவர்த்தி புன்னகை புரிந்தார். "என் வார்த்தையைக் கொண்டே என்னை மடக்குகிறீர்கள். அது என் சொந்தக் காரியம். அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. ஆயினும் சொல்லுங்கள், கேட்கிறேன்" என்றார்.

"பழுவூர் பெரிய அரண்மனைக்கு மூன்று வருஷங்களுக்கு முன்னால் இளைய ராணி நந்தினி தேவி வந்து சேர்ந்தாள். அது முதல் பழுவூர் அரண்மனைக்குச் சில மந்திரவாதிகள் அடிக்கடி வந்து போகிறார்கள். இது சின்னப் பழுவேட்டரையருக்கும் தெரியும். அவருக்கும் மந்திரவாதிகள் வருவது பிடிக்கவில்லை. ஆனாலும் தமையனாரை எதிர்த்துப் பேசத் தைரியமில்லாமல் சும்மா இருந்து வருகிறார்."

"சகோதரர்கள் என்றால், இப்படியல்லவா இருக்க வேண்டும்!"

"சகோதர விசுவாசத்தினால் இராஜ்யத்துக்குக் கேடு வரக்கூடாதல்லவா?"

"இப்போது இராஜ்யத்துக்கு என்ன கேடு வந்துவிட்டது? ஒரு பேதைப் பெண் யாரோ மந்திரவாதிகளைக் கூப்பிட்டு மந்திரம் போடச் சொல்வதினால் இராஜ்யம் கெட்டுப் போய் விடுமா? பழுவூர் இளைய ராணி மந்திரம் போட்டுத்தான் எனக்கு நோய் வந்துவிட்டதென்று சொல்லுகிறீர்களா?"

"சக்கரவர்த்தி! பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வருகிறவர்கள் உண்மையில் மந்திரவாதிகள் அல்ல. மந்திரவாதிகள் என்று சொல்லிக் கொண்டு வரும் சதிகாரர்கள் என்று சந்தேகிக்கிறேன். அவர்கள் மூலமாக நம் பொக்கிஷத்திலிருந்து பொருள் போய்க் கொண்டிருக்கிறதென்றும் சந்தேகிக்கிறேன்."

"எதைப் பற்றி வேணுமானாலும் யாரைப் பற்றி வேணுமானாலும் சந்தேகிக்கலாம் ருசு ஏதேனும் உண்டா?"

"மன்னர் மன்னா! இன்றைய தினம் பெரிய பழுவேட்டரையரின் அரண்மனையையும், பொக்கிஷ நிலவறையையும் சோதனை போட்டால் ஒருவேளை ருசுக் கிடைக்கலாம்."

"இதைக் காட்டிலும் எனக்குப் பிரியமில்லாத காரியத்தை இதுவரை யாரும் சொன்னது கிடையாது. அநிருத்தரே! நீர் எனக்கு மட்டும் நண்பர். பழுவேட்டரையர் எனக்கு முன் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சோழ சக்கரவர்த்திகளுக்கு உயிருக்குயிரான நண்பர். சோழ குலத்துக்கு இரும்புக் கவசம் போன்றவர். சோழர்களின் பகைவர்களுக்கு இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்றவர். அப்படிப்பட்டவருடைய மாளிகையை அவர் இல்லாதபோது சோதனை போடுவதா? பழுவேட்டரையர் தம் அரண்மனையில் சதிகாரர்களுக்கு இடம் கொடுக்கிறார் என்று நம்புவதைக் காட்டிலும், மலையமான் மகள் மருந்து என்று சொல்லி எனக்கு நஞ்சைக் கொடுக்கிறாள் என்று நம்புவேன்...."

"சக்கரவர்த்தி! பழுவேட்டரையருக்குத் தெரிந்து இது நடைபெறவில்லை. மோகத்தினால் கண்ணிழந்திருக்கும் பழுவேட்டரையருக்குத் தம் எதிரில் நடப்பது தெரியவில்லை. அவர் அறியாமலே அவருடைய மாளிகை சதிகாரர்களின் தலைமை ஸ்தலமாக இருந்து வருகிறது. பழுவூர் இளைய ராணியே சதிகாரர்களோடு சேர்ந்தவள் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது."

"அந்தப் பேதைப் பெண்ணைக் குறித்து இன்னும் என்ன அவதூறு சொல்லப் போகிறீர்கள்?"

"சில நாளைக்கு முன்பு திருப்புறம்பயம் காட்டில் பிருதிவீபதியின் பள்ளிப்படைக்கு அருகில் நள்ளிரவு வேளையில் மகுடாபிஷேக வைபவம் ஒன்று நடந்தது. ஒரு ஐந்து வயதுப் பிள்ளைச் சிங்காதனத்தில் உட்கார வைத்துப் பாண்டிய மன்னன் என்றும் பட்டம் சூட்டினார்கள். இந்த மகுடாபிஷேக வைபவத்தில் கலந்து கொண்டவர்கள் சோழ குலத்தை அடியோடு நிர்மூலம் செய்வதாகவும் சபதம் எடுத்துக் கொண்டார்கள்.."

"முதன்மந்திரி! இந்தச் செய்தியைச் சொல்லி என்னைப் பயப்படுத்தலாம் என்று உத்தேசமா? என் கைகால்கள் நடுங்குமென்று எதிர்பார்த்தீரா?"

"இல்லை, சக்கரவர்த்தி, இல்லை! அந்தக் கேலிக்கூத்தை நான் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அப்படி சபதம் எடுத்துக் கொண்ட சதிகாரர் கூட்டத்தில் பழுவூர் இளைய ராணியும் இருந்தாள் என்பதைத் தங்களிடம் சொல்ல விரும்பினேன்."

"அதையெல்லாம் அருகில் இருந்து பார்த்துவிட்டு வந்து தங்களுக்குத் தெரிவித்த புத்திசாலி யார்? அதோ நிற்கிறானே, தங்களுடைய அருமைச் சீடன், அவன் தானே?"

"எல்லாம் நடந்து முடிந்த பிறகு இவன் அங்கே போய்ச் சேர்ந்தான். நேரில் பார்த்தவன் வாணர் குலத்து வந்தியத்தேவன்..."

"இங்கே ஒரு தடவை வந்துவிட்டுத் தப்பி ஓடிப் போனானே அந்த ஒற்றனையா சொல்லுகிறீர்?"

"அவன் ஒற்றன் அல்ல, பிரபு! தங்கள் திருக்குமரன் ஆதித்த கரிகாலரின் அந்தரங்கத்துக்குரிய நண்பன்."

"கரிகாலனுக்கு இப்படிப்பட்ட அந்தரங்க நண்பர்கள் எத்தனையோ பேர். ஒருவர் சொன்னதுபோல் இன்னொருவர் சொல்லமாட்டார்கள். அவன் கூறியது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக இப்போது செய்யக் கூடியது ஒன்றுமில்லை. பெரிய பழுவேட்டரையரும் இங்கே இல்லை; அவருடைய இளைய ராணியும் இல்லை. அவர்கள் திரும்பி வந்த பிறகு விசாரித்துக் கொள்ளலாம். முதன்மந்திரி! பழுவூர் இளைய ராணியைப் பற்றி நீங்கள் சொல்லச் சொல்ல, அத்தகைய அதிசயமான பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆர்வமுண்டாகிவிட்டது. பழுவேட்டரையர் கலியாணம் செய்து கொண்டு வந்தபோது எனக்கு ஏற்பட்ட அருவருப்பினால் அந்தப் பெண்ணை என் முன்னால் அழைத்து வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அதனாலேயே அவளுக்கு ஒருவேளை என் பேரில் கோபம் உண்டாகி விட்டதோ என்னமோ தெரியவில்லை. பெரிய பழுவேட்டரையர் இம்முறை திரும்பி வந்ததும் அவருடைய இளைய ராணியை அழைத்து வரச் செய்து அவளுடைய கோபத்தைத் தீர்க்கப் போகிறேன்..."

"சக்கரவர்த்தி! நான் விரும்புவதும் அதுதான். நந்தினி தேவியின் கோபத்தைத் தணிப்பதற்கு இன்னும் முக்கியமான காரணங்களும் இருக்கின்றன. நந்தினி வந்து சேரும் வரையில் ஈழத்து அரசி நமது அரண்மனையில் இருப்பதற்கு அனுமதி தரவேண்டும்..."

"ஆகா; அவளை ஈழத்து அரசியாக முடிசூட்டிவிட்டீர்கள் அல்லவா? போகட்டும்; அவளுக்கும் பழுவூர் ராணிக்கும் என்ன சம்பந்தம்?"

"அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும், பிரபு! இருவரும் நேருக்கு நேர் சந்தித்தால் ஒருவேளை அந்தச் சம்பந்தம் தெரிய வரலாம். நந்தினிதேவி சோழ குலத்தின் மீது கொண்டிருக்கும் பகையும் ஒருவேளை மாறலாம்..."

"மந்திரி! ஒரு பெண்ணின் பகையைக் குறித்து நீங்கள் இவ்வளவு கவலைப்படுவது ஆச்சரியமாயிருக்கிறது..."

"நந்தினி தேவியின் பகையைக் குறித்து கவலைப்படக் காரணம் இருக்கிறது. அதை நான் சொல்வது உசிதமாயிருக்குமா என்று அஞ்சுகிறேன்.."

"தாங்கள் சொல்லத் தயங்குவதை வேறு யார் என்னிடம் சொல்ல முடியும்? மிச்சம் வைக்காமல் சொல்லிவிடுங்கள்" என்றார் சக்கரவர்த்தி.

முதன்மந்திரி சிறிது யோசனை செய்துவிட்டுக் கூறினார். "மன்னர் பெருமானே! இப்போது நான் கூறப்போவது மிகச் சிக்கலான விஷயம். தங்களுக்கு அது உகந்ததாயிருக்க முடியாது. ஆயினும் பொறுமையுடன் கேட்க வேண்டும். நந்தினி தேவியையும், மந்தாகினி தேவியையும் பார்த்தவர்கள் அனைவரும் அவர்களுடைய தோற்றத்தின் ஒற்றுமையைக் குறித்து அதிசயிக்கிறார்கள்..."

"உலகத்தில் இப்படி எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன. ஒரு மரத்தைப் போலவே இன்னொரு மரம் இருக்கிறது. ஒரு பைத்தியம் போல் இன்னொரு பைத்தியம் இருக்கிறது..."

"ஆனால் ஒரு மரம் இன்னொரு மரத்தைப்போல் வேஷம் போட்டு நடப்பதில்லை. ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்தின் ஆவியைப்போல் வந்து சக்கரவர்த்தியை இம்சிப்பதில்லை.."

"என்ன சொல்கிறீர், முதன்மந்திரி?"

"மந்தாகினி தேவியின் ஆவி தங்களை இரவு நேரங்களில் வந்து இம்சிப்பதாக எண்ணித் தாங்கள் வேதனைப்பட்டு வந்தீர்கள்..."

அவளுடைய ஆவி வரவில்லை, அவளே வந்தாள் என்று சொல்கிறீரா?"

"இல்லை, இல்லை பழுவூர் இளைய ராணி, மந்தாகினியின் ஆவியாக நடித்துத் தங்களை இம்சித்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்."

சுந்தர சோழர் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கோப வெறி பொங்க, "நீங்கள் இப்போது சொல்வது மட்டும் உண்மை என்று ஏற்பட்டால், அந்த ராட்சஸியை என் கையினாலேயே கழுத்தை நெரித்து..." என்று கூறுவதற்குள், முதன்மந்திரி குறுக்கிட்டு, "வேண்டாம், சக்கரவர்த்தி! தங்கள் வாயால் அப்படியொன்றும் சபதம் கூற வேண்டாம்!" என்று பரபரப்புடன் சொன்னார்.

"ஏன்? அவள் பேரில் என்ன தங்களுக்கு அவ்வளவு இரக்கம்? என்னை அவ்வளவு தூரம் வேதனைப் படுத்தியவளை என்ன செய்தால்தான் என்ன?" என்று சுந்தர சோழர் பொங்கினார்.

"எவ்வளவு கஷ்டப்படுத்தியிருந்தாலும், கஷ்டப்படுத்தியவர் நெருங்கிய பந்துவாயிருக்கும் பட்சத்தில்... ஒருவேளை சொந்தப் புதல்வியாயிருக்கும் பட்சத்தில்..."என்று முதன்மந்திரி கூறித் தயங்கி நின்றார்.

"முதன்மந்திரி! இது என்ன பிதற்றல்?" என்றார் சுந்தர சோழர்.

"சக்கரவர்த்தி! தங்களுடைய பொறுமையை உண்மையில் சோதித்துவிட்டேன். அதற்காக எனக்கு உசிதமான தண்டனையைக் கொடுங்கள். ஆனால் நந்தினி தேவியைத் தண்டிப்பது பற்றிப் பேச வேண்டாம். நந்தினிதேவி தனாதிகாரி பழுவேட்டரையரின் இளைய ராணி மட்டும் அல்ல; மூன்று உலகமும் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வி. அவரை எந்தக் குற்றத்துக்காக யார்தான் தண்டிக்க முடியும்?" என்றார் அநிருத்தப்பிரம்மராயர்.

இதைக் கேட்ட சக்கரவர்த்தி சிறிது நேரம் முதன்மந்திரியை அளவில்லாத வியப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு 'கலீர்' என்று சிரித்தார்.

"சக்கரவர்த்தி! இன்றைக்கு மிகவும் ஸுபதினம். இரண்டு தடவை தாங்கள் சிரிக்கக் கேட்டேன்" என்றார் அநிருத்தர்.

"பிரம்மராயரே! இந்த அரண்மனையில் இப்போது ஒரு பெண் பைத்தியந்தான் இருக்கிறது என்று நினைத்தேன். நீர் அவளை விடப் பெரிய பைத்தியம் என்று இப்போது அறிந்தேன். அவள் பேசாத ஊமைப் பைத்தியம்; நீர் பேசிப் பிதற்றும் பைத்தியம்!" என்று கூறிவிட்டுச் சுந்தர சோழர் மறுபடியும் நினைத்து நினைத்துச் சிரித்தார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்