அண்டத்தில் மிதக்கும் கோளத்தில்
ஒட்டியிருக்கும் ஒட்டடைப் பூச்சிகள்
எல்லாம் என்னுடையதென
மார்தட்டிக் கொள்ளும் மாயை !
எல்லாம் நிலையற்றது என்பதில்
நானும் சேர்த்தி என்பதை
ஒப்பத் தயங்கும் உள்ளம்...
இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!
இதுவும் கடந்து போகும்
என்று சொல்லி
கடந்து போவது எது?
கிணற்று நீரில்
ஒரு கணம் எட்டிப் பார்த்துவிட்டு
நகர்கிறது வாழ்க்கை,
உறக்கத்தில் எழுப்பப்பட்ட
குழந்தை போல
மனநீர்
ஆறாது அலைகிறது.
எழுத்துக்களில்லா தாள்கள்
கற்பனை இருந்தும்
எழுத இயலா கவிதைகள்,
பிணமாகி வெகு நாட்களாயிற்று
இயலாமையுடன்!