வெண்துகில்..... விதவைச் சுமங்கலி.....
விடியாக் காலையில் நீராடி.....
தெரு உறங்கையில் தாள்நீக்கி.....
கோலமிடையில் இதயம் திருடும்
கொள்ளையன் ஒருவன் ஒளியென.....
கண்களை ஏறெடுக்க தகுதியில்லா
முண்டச்சி நான்.....
உள்ளம் கேட்கவில்லை..... நிமிர்ந்து
பாரென்கிறது என்றுமில்லா உணர்வு.....
முண்டச்சி நான்..... என்றியம்பி.....
தலைகுனிந்தே உள்நுழைய.....
கொடுப்பனை தனக்கென்றான்......
உள்ளம் சொல்வதை கேட்டு நிமிர்ந்தேன்.....
என் வாழ்வின் ஒளியென பட்டான்.....
மீண்டும் பிறக்கின்றேன்.....
மகிழ்ச்சி..... அச்சம்..... இளமை அன்பு.....
பிள்ளையின் வாழ்வை எண்ணி
வருந்துவதிலும்.....
பகுத்தறிவில்லா மதச்சடங்கில் மூழ்கி
அடக்கி ஆழும் குலத்தில் பிறந்தவள்..... நான்
இல்லை..... நான் ஒரு முழிவியளத்துக்கு
ஆகா மூதேவி..... வீட்டில் சொல்வதுதான்.....
என் வீட்டில் வாழவந்த பெண்கள் சொல்வது.....
உங்களுக்கு ஏன் கவலை.....
கோலம் முடிக்க விரைந்து கடவுங்கள்.....
இல்லையேல் பொழுது புலர்ந்துவிடும்.....
வீட்டிலே கேள்விகள் எழும்... சுணக்கமேனென.....
வருவோர் போவோர் அபசகுனம் என்பர்.....
கண்ணீரே வாழ்வானது.....
தாலி அறுந்து வாழ்வதிலும்.....
உடன் கட்டை..... உயர்வென்பேன்.....
பிறந்தது குற்றமா.....? இல்லை.....
நீங்கள் தேடித்தந்த பத்து பொருத்தமும்
பொருந்திய சாத்திர குற்றமா.....?
எனவே கோலம் முடிக்க விரைந்து கடவுங்கள்.....
என்றேன்..... கடந்தவர் மீண்டும் வந்தார்.....
உன் வெண்துயில் போலே... உள்ளம் உனக்கு.....
தலையில் மலரும்... நுதலில் குங்குமமும்.....
வாழ்வில் மீண்டும் விரைந்துவர.....
வாழ்த்துகிறேன் என்றார்.....
ஆசை மனதில் புன்னகை பூக்கிறது......
பிறந்த குலத்தில்..... உதிர்ந்த பூ... நான்!
மறுமுறை மலர வகையில்லை என்றேன்......
என் குலத்தில்.
நினைவலைகள் ஏங்குகிறது.....
மலராதோ வாழ்வென.....
நானும் இளமை ஓய்ந்திடா பெண்தானே.....
சதையும் குருதியும் கொண்ட உடல்தானே.....
குங்குமம் சாற்ற நுதலும்.....
மலர் சூட கார்குழலும்..... நான் கொடுத்தால்
சாற்றுவதும்...... சூடுவதும்.....
தன் உரிமை என்றார்.....
மெட்டிமுதல் சீப்புவரை எதுவும் வேண்டாம்
அனைத்தும் உனக்காய் வாங்கிவிட்டேன்.....
மாங்கல்யமும் மார்பில் உண்டென்றார்.....
மீண்டும் பிறந்தது போல் அக்கழிப்பு.....
ஆனாலும் உயிர் பறிப்பர்... பாவம் அவர்.....
நான் மலர்ந்த குலமதில்.....
வாடாமலேயே..... வீழ்ந்த மலர்களை..... வாடியதாய்...
வாழும் தகமை இழந்தவையாய்.....
உயிரோடு பிணமாய்.....
வீட்டிலே சிறைவைத்து மகிழும் குலம்.....
தாலியை மார்பில் கண்டேன்.....
கையிலே வாங்கி பார்த்தேன்.....
கழுத்திலே கட்டச் சொன்னேன்.....
கட்டிவிட்டார் கணவரென.....
அவர் சொன்னதுபோல்..... தினமும்.....
விடியாக் காலையில் நீராடி.....
தெரு உறங்கையில் தாள்நீக்கி.....
கோலமிடையில் பேசிக்கொள்வோம்.....
தாலி... கோலமிடையில் கழுத்தில்.....
தாலி... உள் நுழைகையில் மார்பில்.....
தாலி... வீட்டுச் சிறை இருக்கையில்..... "இடையில்"
விடியலுக்காய்..... சமூக விழிப்புனர்வுக்காய்.....
ஏக்கத்தோடு காத்திருக்கும்.....
விதவைச் சுமங்கலி.....
நினைவலைகள் தொடங்கியது 2001ஆம் ஆண்டு
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே