பிறந்த குழந்தைகள் தாய் பால் அருந்திய நேரம் போக மீதி நேரத்தில் கை விரலை சப்பியவாறே உறங்கிப் போகும். இது குழந்தைகளின் இயல்பு. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விரல் சப்புவது ஒரு தகாத செயல் போல நடந்து கொள்கின்றனர். இது தவறு என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பசி உணர்வு ஏற்படும் போது குழந்தைகள் விரல் சப்புகின்றன. இதனால் அக்குழந்தையின் பற்களுக்கு பாதிப்பு வருமோ என்று அஞ்சும் பெற்றோர் அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கின்றனர்.
விரல் சப்பும் குழந்தைகளின் பெற்றோர் மனநிலை குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.
கண்டிப்பு தேவையில்லை
ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். குழந்தைகள் விரல் சப்பினால் அது மிகப்பெரிய தவறு போல தண்டனை கொடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக விளையாட்டுப் பொருட்களை கொடுத்து கவனத்தை திசை திருப்பலாம். உற்சாகப்படுத்தும் வகையில் பேசி குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்தை மாற்றலாம்.
அடிப்பது ஆபத்து
3 வயதுக்குமேல் ஒரு குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். விபரம் தெரிந்த பின்னரும் விரல் சப்பும் குழந்தைகளிடம் சரியான முறையில் பேசி புரிய வைக்க வேண்டியது அவசியம். விரல் சப்புகிறது என்பதற்காக அடித்து, கண்டித்து திருத்த நினைப்பது குழந்தைகளின் மன நிலையை பாதிக்கும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.