Author Topic: ~ அதிக உப்பு ஆபத்தா? ~  (Read 372 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226674
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ அதிக உப்பு ஆபத்தா? ~
« on: February 28, 2017, 07:34:40 PM »
ஹெல்த்முருகேஷ், பொதுநல மருத்துவர்



`உப்பு இல்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். நாம் உண்ணும் உணவை ருசியாக்குவதில் உப்புக்கு பிரதான பங்கு உள்ளது. ஆனால், ருசி என்பது நாக்கோடு மட்டும் முடிந்துவிடும் சமாச்சாரம் அல்ல. நாக்குக்கு உகந்த ருசியான உணவுப்பொருள் வயிற்றுக்குள் இறங்கி என்ன செய்கிறது என்றும் பார்க்க வேண்டும். கழுத்துக்குக் கீழே செல்வதைப் பற்றிக் கவலை இல்லை என்று இருந்தால், அதிக உப்பு ஆபத்தை அழைத்து வந்துவிடும்.
எது உப்பு?

உடலுக்கு அத்தியாவசியத் தேவையான இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவற்றை தாது உப்புகள் என்கிறோம். இவை நாம் உட்கொள்ளும் காய்கறி, பழங்கள், தானியங்கள் போன்ற உணவுகளில் இருந்து கிடைத்துவிடுகிறது. இவைத் தவிர கடலில் இருந்து பெறப்படும் உப்பை ‘சோடியம் குளோரைடு’ என்கிறோம். பொதுவாக, இதைத்தான் நாம் சமையல் உப்பு என்று சொல்கிறோம்.

உப்பு எப்படிக் கிடைக்கிறது?

பொதுவாக, நாம் உண்ணும் எல்லா உணவுப் பொருள்களிலும் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தாது உப்புகள் நிறைந்துள்ளன. எனவே, இவை உணவின் மூலமாகவே நமக்குக் கிடைத்துவிடுகின்றன. இதைத் தவிர சோடியம் குளோரைடு உப்பை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்கிறோம்.

உப்பு ஏன் தேவை?

 உப்பு, மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது. ஓய்வு இன்றி உழைக்க, ஓடியாடி நடமாட உதவியாக இருக்கிறது. உடல் தசைகள் சீராக இயங்க உப்பு இன்றியமையாத ஒன்று. சோடியம் குளோரைடு, இதயம் சீராக இயங்க உதவுகிறது. இதயத்தசைகள் சுருங்கி விரிய இது அவசியம் தேவை.

யாருக்கு எவ்வளவு உப்பு?

ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு உப்பை உணவு மூலமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவு ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும்.

வளரும் குழந்தைகள் ஆறு முதல் ஏழு கிராம் அளவு சோடியம் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், உப்பு அவர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கே உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.வயதானவர்களுக்கு, அவர்களின் உடல் நிலையைப் பொறுத்து, உப்பின் அளவு மாறுபடும். அதிகபட்சம் மூன்று கிராம் வரை எடுத்துக்கொள்ளலாம்.

உப்பு அதிகமாவதால் ஏற்படும் பிரச்னைகள்!

உப்பு அதிகமாவதால் முதலில் பாதிக்கப்படுவது சிறுநீரகம்தான். சிறுநீர்ப்போக்குக் குறையும். சிறுநீரகக் கோளாறுகள் உண்டாகும்.

மூளை வளர்ச்சியில் பாதிப்புகள் ஏற்படும். மூளை செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வலிப்பு வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.

சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும்; படபடப்பு, நெஞ்சு வலி போன்ற இதய நோய்கள் உண்டாகும்.

அடுத்தகட்டமாக, நுரையீரலில் நீர் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

சிறுநீரகக் நோயாளிகள் கவனம்!

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், உப்பின் அளவை மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமானவர்கள் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவில் பாதியைத்தான் இவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறைச்சி, பச்சைக் காய்கறிகள், கிழங்கு வகைகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றில் உப்புச்சத்து அதிகமாக இருக்கும். இவற்றை முற்றிலுமாகத் தவிர்க்காமல், சற்றுக் குறைத்துக்கொள்ளலாம்.
உப்புச்சத்தின் அறிகுறிகள்!

கை-கால் வீக்கம், வாந்தி, ஈறுகளில் வீக்கம், தொடர் காய்ச்சல், சிறுநீரின் அளவு குறைதல், செரிமானக் கோளாறு, சீரற்ற இதயத்துடிப்பு, நாக்கு குழறுதல், வலிப்பு, நிலைத் தடுமாற்றம் ஏற்படும்.

மேலும் யூரியா, கிரியாட்டினின் (creatinine), சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கார்பனேட் (carbonate) போன்றவற்றின் அளவைக் கண்டறிவதன் மூலம் உடலில் உள்ள உப்பின் தன்மையை அறிந்துகொள்ளலாம்.

உப்பைக் குறைக்க என்னென்ன வழிகள்?

சமைக்கும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து சமைத்துவிடுங்கள். சிலர் சுவைக்காக, கூடுதல் உப்பு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், டேபிள் சால்டை பயன்படுத்து வார்கள். இதைத் தவிர்க்கவும்.

முட்டை, காய்கறி, கீரைகள் போன்றவற்றில் இயற்கையாகவே உப்பு இருக்கும். ஆதலால், இவற்றை சமைக்கும்போது பாதி உப்பு சேர்த்தாலே போதும். தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும், பழகபழகச் சரியாகிவிடும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.

உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் சுவைக்காக அதிக உப்பு மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஊறுகாய், அப்பளம், கருவாடு, சாஸ், சிப்ஸ், ரெடிமேட் குழம்பு வகைகள் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால், இவற்றையும் தவிர்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226674
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ அதிக உப்பு ஆபத்தா? ~
« Reply #1 on: February 28, 2017, 07:37:16 PM »


உப்பின் வகைகள்...

இந்து உப்பு: அயோடின், மங்கனீசு, துத்தநாகம், கால்சியம் போன்ற தாது உப்புக்கள் உள்ளன. மேலும், இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. இந்த வகை உப்பை, ரத்தசோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அயோடின் உப்பு: இந்த வகை உப்பில் அயோடின் அளவு அதிகமாக இருக்கும். இதை குழந்தைகள் எடுத்துக்கொள்ளலாம். அயோடின் உப்பு, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், தசை இயக்கத்துக்கும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை சமன்படுத்துகிறது. நாளமில்லா சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

பொடி உப்பு: பொடி உப்பை ரத்த சோகை மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். வளரும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எடுத்துக்கொள்ளலாம்.

கல்லுப்பு: கல்லுப்பை ஊறுகாய் மற்றும் கார உணவுகளுக்குப் பயன்படுத்தலாம். மேலும், இதை இதயநோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

உப்பு (அயோடின்) உள்ள உணவுப் பொருட்கள்: முட்டை, கடல் மீன், பிரெட், ஊறுகாய், வெண்ணெய், ஸ்பைசி உணவுகள், சூப், சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, பால், யோகர்ட், சோயா பால், வாழைப்பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் வெங்காயம்.